Store
  Store
  Store
  Store
  Store
  Store

வந்தது கோபம், பிடி சாபம் !




      யா நான் புதியதாக ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன் இங்கு ஆண்களும் பெண்களுமாக பலர் பணிபுரிகிறார்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் கூட அவைகளை மறந்து பணிநேரத்திலும் மற்றநேரத்திலும் சகஜமாக பேசி உறவாடுகிறார்கள். இதில் ஒருவர் மட்டும் யாரோடும் அதிகமாக பேசுவது இல்லை உறவு பாராட்டுவதும் இல்லை. அவருக்கு இவைகள் பிடிக்காதோ என்ற எண்ணத்தில் நானும் இருந்தேன் ஒருநாள் ஒரு நண்பர் நீ இங்கு யாரிடம் வேண்டுமானாலும் பேசி பழகிகொள் இந்த நபரிடம் மட்டும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாதே என்று கூறினார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் அவர் அவ்வளவு கொடியவரா? என்று நண்பரிடம் திருப்பி கேட்டேன் காரணம் நண்பரால் உறவு வைக்காதே என்று கூறப்பட்ட நபர் பார்ப்பதற்கு ஒன்றும் கெட்டவராக தெரியவில்லை. எல்லோரையும் போல சராசரியாகத்தான் அவர் தோற்றம் அளித்தார். ஒருவேளை பழகும் பழக்கத்தை வைத்து கொண்டு கொடுக்கல் வாங்கல் எதாவது செய்து மனிதர் நம்மை சிக்கலில் மாட்டி விட்டுவிடுவார் என்பதற்காக நண்பர் எச்சரிக்கிறாரோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது ஆனால் நண்பர் அவரை பற்றி சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அவர் ஒன்றும் கெட்ட மனிதர் அல்ல பணம் கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ள மாட்டார் தன் வேலையை சரிவர செய்வதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை இன்னும் சொல்ல போனால் உதவி தேவை படுபவர்களுக்கு கேட்காமலே வலிய சென்று உதவுவதில் ஆர்வம் உள்ளவர். அவைகளில் எதுவும் சிக்கல் இல்லை ஆனால் இவர் பிரச்சனையே வேறு தப்பி தவறி இவரிடம் அன்யோன்யமாக பழகி விட்டால் அவர் வாயிலிருந்து அதை செய்யாதே இதை செய்யாதே அப்படி பிரச்சனை வந்துவிடும். இப்படி சிக்கல் வந்துவிடும் எல்லாமே கெட்டுவிடும் என்று பேசுவார்.

பொதுவாக நண்பர்களுக்கு தவறான விஷயங்களை செய்யும் போது எச்சரிக்க வேண்டியது அவசியம் ஆனால் இவர் அனாவசியமாக எல்லா விஷயத்தையுமே எச்சரிப்பார். அது ஏனோ தெரியாது இவர் அப்படி எதையாவது சொல்லி விட்டால் அது அப்படியே பலித்துவிடும். கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் நடந்துவிடும் அதனால் தான் இவரிடம் அனைவரும் ஒதுங்கி இருப்பது என்று விளக்கம் சொன்னார்.

நண்பர் சொன்னதில் அடிப்படையான சந்தேகம் ஒன்று எனக்கு வந்துவிட்டது. எந்தவித ஆன்மீக பயிற்சியும் இல்லாத ஒரு சாதாரண மனிதர் சொல்லுகின்ற வார்த்தை பலிக்குமா? அப்படி பலிக்கிறது என்றால் அவரிடம் அமானுஷ்ய சக்திகள் எதுவும் இருக்குமா? அவன் கரு நாக்கு அவனிடம் வைத்து கொள்ளாதே என்று பெரியவர்கள் சொல்வார்களே நாக்கில் கருப்பு மச்சம் இருப்பவர்களில் வாக்கு கண்டிப்பாக நடக்குமா? என்ற கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றிவிட்டது. அதை உங்களிடம் மறைக்காமல் கேட்டுவிட்டேன் தெளிவான பதிலை தருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
அன்புடன்

சாம்பசிவன்

மதுரை


    புராணங்களை படித்திருப்பவர்கள் துர்வாசக மகரிஷியை நன்கு அறிவார்கள். துர்வாசகருக்கு எடுத்தவுடன் கோபம் வந்துவிடும் வந்தது கோபம் பிடி சாபம் என்று யாரை பார்த்தாலும் சாபம் கொடுத்துவிடுவார் என்ற தகவல் எல்லாம் புராணங்களில் நிறையவே சொல்லபட்டிருக்கிறது. நாரதர் என்றால் எப்படி கலகக்காரர் என்ற கருத்து இருக்கிறதோ அதே போலவே துர்வாசகர் என்றால் கோபக்காரர் என்ற கருத்தும் இருந்து வருகிறது. துர்வாசகர் என்றாலே தீமையான சொற்களை பேசுபவர் என்பது தான் பொருள் எனவே அவரும் அப்படி தான் அவரை போன்ற தீய சொற்களை  பயன்படுத்துகிற மனிதர்களும் அப்படிதான் என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள்.

நாரதரின் கலகம் நன்மையில் முடிவது எப்படி இயற்க்கையானதோ அதே போலவே துர்வாசகரின் சாபம் கூட  நன்மைக்காகத்தான் இடப்படுவதாக இருக்கும். இராமாயணத்தின் கடேசி பகுதியான உத்திர இராமயணத்தில் இராமனை சந்திக்க வருகின்ற துர்வாசகரின் சாபத்திற்கு பயந்து அரசகட்டளையை மீறுகின்ற லஷ்மணனுக்கு மரணதண்டனை கொடுக்கபடுவதாக தகவல் இருக்கிறது. உண்மையாக துர்வாசகரின் வரவு என்பது இராம லஷ்மண அவதாரத்தின் நிறைவை சுட்டிகாட்டுவதற்கே  என்பதை பலரும் மறந்துவிடுகிறோம்.

அரசனான பரதனை சகுந்தலையை மறந்துபோகும் படி துர்வாசகர் சபித்தது கூட இராஜ ரிஷியாக இருந்த விஷ்வாமித்திரரை பிரம ரிஷியாக மாற்றுவதற்காகத்தான். எனவே வாக்குபலிதம் சாபம் கொடுத்தல் என்பவைகள் எல்லாம் நபர்களை பொருத்தவரை மாறி அமைந்து நன்மை தீமைகளை செய்கிறது. எல்லாவிதமான சாபங்களும் தீமைகளை மட்டுமே செய்கிறது என்பது சரியான கருத்து அல்ல.

நீ ஒரு காரியத்தில் இறங்கி துன்பபட போகிறாய் துயரப்பட போகிறாய் எனவே அதில் இறங்காதே வீணாக மாட்டிகொள்ளதே என்று எச்சரிக்கை குரலாக கூட இப்படிப்பட்டவர்களை கருதலாம். சகுனங்கள் நிமித்தங்கள் என்பவைகள் கூட இப்படி நிகழபோவதை முன்கூட்டியே கூருகின்றவைகள் தானே? எனவே இத்தைகையவர்களை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்பதே எனது கருத்து.

என்றாலும் கூட சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எதற்கெடுத்தாலும் இது நடக்காது முடியாது தோல்விதான் ஏற்படும் விபரீதமாகவே போகும் என்று எதிர்மறையாகவே பேசிவருவார்கள் இப்படி பட்டவர்களை அருகில் வைத்து கொண்டு செயல்படுவதை விட பாராங்கல்லில் தலையை முட்டி கொள்வது மேல் என்று தோன்றும். எதையும் எப்போதும் தடுத்து கொண்டே இருப்பவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை.

பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாவது இடத்தில் புதன் இருந்தால் அவர்கள் கூறுவது அப்படியே நடக்கும் நல்ல வாக்கு பலிதம் அவர்களுக்கு இருக்கும் என்று சொல்லபட்டிருக்கிறது. எனவே நம்மை தடுப்பவர்கள் ஒருவேளை அப்படிப்பட்ட ஜாதக அம்சம் உடையவர்களாக இருந்தால் அவர்கள் பேச்சை கேட்பது தவறு அல்ல. அப்படி இல்லாமல் இருந்தால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் நம் வேலையை கவனிப்பதே புத்திசாலித்தனமாகும் .
  



Contact Form

Name

Email *

Message *