Store
  Store
  Store
  Store
  Store
  Store

இடுகாட்டு மாடனும் ஈசனின் வடிவே !

இந்து மத வரலாற்று தொடர் 54      ரணம் என்பது முடிவல்ல ஒரு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயமே அதாவது இன்னொரு பகுதியின் துவக்கமே என்பது தான் மரணத்தை பற்றிய இந்திய ஞானிகளின் முடிவு இதை மிக அழகாக ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணத்தின் மூலம் சொல்வார். ஓங்கி வளர்ந்த மரத்தின் உச்சாணி கொம்பு மீது ஒரு பறவை அமர்ந்திருக்கிறது சிறிது நேரம் அந்த கிளையின் மீது அமர்ந்திருக்கும் பறவை திடீரென்று வேறொரு கிளையில் சென்று உட்காருகிறது. இது தான் மரணம் என்பதும் இந்த உடம்பில் இருக்கும் உயிர் என்ற பறவை வேறொரு கிளையில் அல்லது உடம்பில் உட்காரும் நிகழ்வை முடிவு என்று கருத கூடாது என்பது அவரின் கருத்து. பல்லாண்டுகாலமாக உயிர்களின் வாழ்க்கை தொகுதியை பகுத்து ஆராய்ந்தால் இதுவே அனுபவ உண்மை என்பது தெரியவரும். ஆனால் ஏனோ சிலர் இதை ஏற்பது இல்லை. மரணம் என்பது இன்னொரு துவக்கத்தின் வடிவமல்ல அது முடிவு முற்றிலுமாக அழிந்து போவது என்கிறார்கள். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவை எவற்றிலும் சிவப்பு வண்ணம் இருப்பது இல்லை. சரியான விகிதத்தில் இவைகள் கலக்கும் போது தானாகவே சிவப்பு வண்ணம் தோன்றுகிறது அதை போலவே பஞ்ச பூதங்களின் செயற்கையால் உடல் ஏற்படுகிறது உடலில் உயிரும் தோன்றி இயங்குகிறது. சேர்ந்த பூதத்தில் ஒன்று குறைந்து விட்டால் உயிர் என்பது உடலை விட்டு வெளியேறாமல் அந்த உடம்பிற்குள்ளேயே அழிந்து போகிறது என்கிறார்கள்.

மரணத்திற்கு பிறகு ஒரு உயிர் அடைகின்ற நிலைமை என்ன? என்பதை முற்றிலுமாக தெரிந்து கொள்ளும் காலம் வரையும் இந்த சர்ச்சை நீடித்து கொண்டே இருக்கும் என்பது உண்மை. உடம்பு இல்லை என்றாலும் உயிர் வேறொரு உடம்பில் புகுந்து புதிய பிறப்பை எடுக்கின்ற வரை வேறொரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நம்புவோரும் உடல் அழியும் போதே உயிரும் அழிந்து விடுகிறது என்று நம்புவோரும் பரஸ்பரம் ஒரு முடிவிற்கு வந்து விட்டால் உலகில் உள்ள எத்தனையோ சர்ச்சைகள் ஓய்ந்து விடும். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? ஏழையாக இருப்பதும் செல்வனாக இருப்பதும் இயற்கையின் சட்டமா? பொருளாதார திட்டமா? என்பது போன்ற கேள்விகளுக்கும் முழுமையான விடைகள் கிடைத்துவிடும். மரணத்திற்கு பிந்தைய மனித வாழ்வின் நிலையறியாத வரை மரணத்தை பற்றிய சிந்தனைகளை தவிர்க்க முடியாது. மனிதன் எப்போது சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போதே மரணத்தை பற்றிய ஆராய்வை துவங்கி விட்டான் எனலாம்.மரணத்தை பற்றிய ஆய்வு என்றவுடன் அந்த ஆய்வுக்கு மூலமாக எது இருந்திருக்க வேண்டும்? என்பதை சிந்திக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மரணம் என்பது முற்றும் முதலுமான முடிவு என்று ஆதி மனிதன் கருதி இருந்தால் அதை பற்றிய சிந்தனையை அவன் வளர்த்திருக்க மாட்டான். எனவே அவன் மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது பூமியில் வாழ்ந்த உயிர்கள் பூமியை விட்டு உடலை விட்டு போய்விட்டாலும் மீண்டும் அது பூமியோடு தான் வாழ்ந்த பகுதியோடு தன்னை சார்ந்த மனிதர்களோடு உறவு வைத்து கொள்ள விரும்புகிறது அதற்காக போராடுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஆழமாக இருந்தது. அதே நேரம் இறந்து போன ஆத்மா தான் நினைத்தால் நமக்கு ஆபத்தையும் விளைவிக்க முடியும் அரவணைப்பையும் தர இயலும் என்று கருதினான். இதன் விளைவாக தனக்கு பிரியமான ஆத்மாக்களுக்கும் சரி தன்னை பிரியம் கொள்ளாத ஆத்மாவாக இருந்தாலும் சரி அவைகளுக்கு திருப்தி ஏற்படுத்துகின்ற சடங்கு முறைகளை வழிபாடுகளை செய்தான். மனிதர்களின் இத்தகைய வழிபாடு அதாவது இறந்தவர்களை வழிபடுவது அச்சத்தாலும் மரண பயத்தாலும் வந்தது எனவே அந்த வழிபாடு தாழ்மையானது கடைபிடிக்க வேண்டிய அளவு தகுதி இல்லாத கீழ்மையானது என்று சில அறிவாளிகள் முடிவெடுத்து விட்டார்கள்.

முன்னோர்களை வழிபடுவது ஆவிகளை வழிபடுவதாகும் எனவே அது நாகரீகமான வழிபாட்டு முறையல்ல என்று சில அறிவாளிகள் சொன்னவுடன் நமது நாட்டில் இருக்கும் சிலர் இந்து மதத்தின் மீது வசைமாரி பொழிகிறார்கள். பேய்களை வழிபடுவதும் நாய்களை வழிபடுவதும் இந்து மதத்தில் மட்டுமே உள்ள வியாதி உலகத்தில் உள்ள அனைத்து அநாகரீகங்களும் இந்தியாவிலிருந்தே உற்பத்தியாகி இருக்கிறது என்று கூச்சல் போடுகிறார்கள். இவர்களின் கூச்சல் முற்றிலும் தவறானது என்று சொவ்லத்தை விட அறியாமை மயமானது என்று சொன்னால் சரியாக இருக்கும். இறந்தவர்களை வழிபடும் முறை இந்தியாவில் மட்டுமல்ல இந்து மதத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். பல ஐரோப்பிய அறிஞர்களால் நாகரீக தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதி ரோமாபுரியில் வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வின் லட்சியமே தாய்நாட்டிற்காகவும் இறந்து போன தங்களது மூதாதையரை புதைத்த கல்லறைகளை காப்பதற்காகவும் மட்டுமே என்று கருதினார்கள். இறைவனை வழிபடுவதற்கு முன்னால் இறந்தவர்களை வழிபடுவது கிரேக்கர்களின் மரபாகவும் இருந்தது.பீஜி தீவு என்ற சின்னஞ்சிறிய தீவுநாட்டு மக்கள் தம்மை ஆளுகின்ற மன்னர்களை ஏறக்குறைய இறைவனின் அந்தஸ்திலே கண்டார்கள். இதனால் மன்னன் இறந்தபிறகும் வழிபாட்டுக்குறியவனாக இருந்தான். ஆப்பிரிக்காவில் மேற்கு கடற்கரை பக்கமாக வாழுகின்ற தகோமியர் என்ற இன மக்கள் தங்களது அரசர் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட தூதர் என்று கருதினர். சில வேளைகளில் அரசருக்கும் கடவுளுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது என்பதும் அவர்களின் நம்க்கையாக இருந்தது. அதே ஆப்பிரிக்காவில் லோகோஷ்கோ என்ற இனத்தினர் அரசனை சாட்சாத் கடவுளாகவே வணங்கினர். அமெரிக்காவில் வாழ்ந்த குயான ஷியாம்பக் என்ற செவ்விந்திய இனத்தார் அரசனின் கட்டளையை இறைவனின் கட்டளையாக கருதி கடவுளுக்கு கட்டுபடுவது போல் மன்னனுக்கும் கட்டு பட்டு  வாழ்ந்தனர். பெரு நாட்டிலும் நியூசிலாந் நாட்டிலும் அரசனும் தேவனும் ஒன்றாகவே கருதபாட்டனர். இப்படி அரசனை தெய்வமாக கருதிய அனைவருமே அரசனின் மரணத்திற்கு பிறகு அவனை வழிபாடு நடத்தி மகிழ்விப்பதில் முனைப்பு காட்டினார்கள்.

சீனாவில் முன்னோர்களை வழிபடுவதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த ஆர்வம் இருந்தது. அவர்களின் முன்னோர் வழிபாட்டின் காலம்  நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்குகிறது எனலாம் அந்த நாட்டில் கன்பூசியஸ் மதம் தோன்றுவதற்கு முன்பே புத்தமதம் வருவதற்கு முன்பே டிராகன் வழிபாடு என்ற நாக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே முன்னோர் வழிபாடு வந்துவிட்டது என்று சொல்லலாம். இன்னும் சொல்ல போனால் சீனர்களின் முதல் வழிபாடே ஆவி வழிபாட்டிலிருந்து துவங்குகிறது என்று சொல்லவேண்டும். இவர்களும் அரசனை மக்கள் தலைவர்களை இறையம்சம் பொருந்தியவர்களாகவே நினைத்தார்கள் அதனால் அவர்களின் மரணத்திற்கு பிறகும் வழிபட கூடிய மூர்த்திகளாக திகழ்ந்தார்கள்.
கிரேக்க மதத்தை போலவே எகிப்து நாட்டு மதத்திலும் முன்னோர் வழிபாடு என்பதே அடித்தளமாக இருந்தது எகிப்து மக்கள் மற்றவர்களை விட ஒருபடி மேலே சென்று இறந்து போன முன்னோர்கள் மீண்டும் ஒரு காலத்தில் பூமிக்கு வருவார்கள் அப்போது அவர்கள் வாழ்வதற்காக அவர்களின் உடம்பு கண்டிப்பாக தேவைப்படும் உடம்பு இல்லை என்றால் மிகவும் சிரமபடுவார்கள் அதனால் அவர்களது உடலையும் கெட்டு போகாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டியது வாழ்பவர்களின் கடமை என்று நினைத்தார்கள். இதன் விளைவாகவே இறந்த உடலை பதபடுத்தி காப்பாற்றுகின்ற மம்மி பழக்கமும் உடம்பு கெட்டு போகாமல் இருக்க செய்யும் பிரம்மீடு உருவாக்கமும் ஏற்பட்டது எனலாம். இப்படி உலகம் தழுவியதாக இருக்கும் முன்னோர் வழிபாட்டிற்கு இந்து மதம் மட்டுமே காரணம் என்று சொல்லுவது எந்த வகையிலும் பொருந்தி வராது.

உலக மக்கள் பலரும் கருதியது போலவே பண்டையகால பாரத மக்கள் அரசனையும் இறைவனாக கருதினார்கள் என்று துணிந்து சொல்லலாம். இதனால் தான் நாடாளும் மன்னனை கண்டேன் நாராயணனை கண்டேன் என்று அடியவர்கள் பாடினார்கள். மன்னனும் இறைவனும் ஒன்று என்ற நம்பிக்கைக்கு இந்த பாடல் மட்டும் ஆதாரம் அல்ல இதையும் தாண்டிய பல ஆதாரங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுடலைமாடன் வழிபாடு என்பது புகழ்பெற்றதாகும் சுடலை மாடனை அப்பகுதி மக்கள் சிறு தெய்வமாக கருதுவது இல்லை பரமசிவனின் புத்திரனாக சுடலைமாடன் கருதபட்டாலும் பல இடங்களில் சுடலைமாடனே சிவபெருமான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சுடலை மாடன் கழுத்தில் மண்டை ஓடு மாலையும் அவர் உடல் முழுவதும் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பதும் சுடலை மாடனுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. மஹாபாரதத்தில் அனுசான பர்வம் என்ற பகுதியில் பிணம் எரிக்கும் இடம் அனைத்தும் என்னுடைய இடம் என்று சிவபெருமான் கூற்றாக வரும் பகுதியை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. தென்னகத்தில் சுடலை மாடன் கோவில் அமைப்பு எப்படி உள்ளதோ அதே போலவே நீலகிரி பகுதில் உள்ள தோடர்களின் வழிபாட்டு கூடங்களும் அமைந்துள்ளன எனவே ஆதிகால முறைப்படி சுடலையாண்டி, சுடலைமாடன், சுடலை ஆண்டவர் என்பதெல்லாம் சிவபெருமானே என்று எண்ணத் தோன்றுகிறது.வைதீக முறைப்படி சிந்தனை செய்பவர்களுக்கு பிணம் எரிக்கின்ற இடுகாட்டு பகுதிகளில் ஆலயம் அமைந்துள்ள சுடலை மாடனும் சிவபெருமானும் எப்படி ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும். இந்த சந்தேகத்திற்கு மிக தெளிவான பதில் சிற்ப சாஸ்திர நூல்களில் கிடைக்கிறது. புதியதாக ஒரு ஊரை நிர்மாணம் செய்கின்ற போது ஊருக்கு வெளியே தான் இடுகாட்டையும் கோவிலையும் அமைக்க வேண்டுமென்ற குறிப்பு உள்ளது. இந்த குறிப்பை அடியொற்றியே புகழ் பெற்ற சிவாலயங்கள் சமாதிகளின் மீது கட்டப்பட்டு இருப்பதாக பல கல்வெட்டு ஆதாரங்கள் கூறுவதை கவனிக்க வேண்டும். பழைய வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள சோழபுரம் என்ற ஊரில் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது அதில் ஆதித்த சோழன் என்ற மன்னன் கட்டிய சிவன் கோவில் அவனது தந்தை புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாக குறிப்பு இருக்கிறது. இதே போலவே சித்தூர் மாவட்டத்தில் தொண்டமான் நாடு என்ற இடத்தில் ஆதித்த கரிகாலன் புதைக்கப்பட்ட பள்ளிபடையிளிருந்து கோவில் எழுப்ப பட்டதாக தகவல் தரும் கல்வெட்டும் இருக்கிறது. மேல்பாடி என்ற ஊரில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் ஒன்று உண்டு இதை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டியதாகவும் அக்கோவில் ஆற்றூரில் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் சமாதியின் மீது உள்ளதாகவும் கல்வெட்டு தகவல்கள் சொல்கின்றன. இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது இறந்து போன அரசர்களை தெய்வமாக கருதுவதில் மக்களுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை என்பது புரிகிறது.

மன்னர்களை மட்டுமல்ல மகான்களையும் கூட இந்திய மக்கள் தெய்வமாகவே கருதினார்கள். நடமாடும் தெய்வமாக இருந்த முனிவர்கள் ஞானிகள் சித்தர்கள் ஆகியோரின் சமாதிகளின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடுவதில் மக்களுக்கு பெருத்த ஆர்வம் இருந்தது. உதாரணமாக தஞ்சாவூர் பெரிய கோவிலில் கரூர் சித்தர் சமாதி இருப்பதும், விருதாச்சலம் விருத்தக்ரீஸ்வரர் ஆலயத்தில் பாம்பாட்டி சித்தர் சமாதியும், பழனியில் போகர் சமாதியும் சித்தர்களின் தலைவர் என்று அழைக்கபடுகின்ற திருமூலரின் சமாதி சிதம்பரம் நடராஜ பெருமாள் ஆலயத்திலும் இருப்பதை குறிப்பிட்ட வேண்டும். தமிழ் நாட்டில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களுக்கான சமாதிகள் பதினெட்டு சிவாலயங்களாக இருப்பதை நாம் அறிவோம். சித்தர்களின் சமாதிகளின் மேல் அமைந்துள்ள கோவில்களிலேயே இறைவனின் ஆகர்சனம் அதிகம் இருப்பதாக பல மக்கள் நம்புகிறார்கள் பல நேரங்களில் அது உண்மையாகவும் இருக்கிறது. இதை தெளிவான நேரடியான உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் திருக்கோவிலூர் மணபூண்டியில் அமைந்துள்ள ராகவேந்திரரின் குருவுக்கும் குருவான ஸ்ரீ ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தா வனத்தை காட்டலாம் ஆயிரம் ஆயிரம் மன கலக்கத்தோடு அந்த பிருந்தவனத்திற்குள் நுழைந்தாலும் அத்தனை கலக்கமும் ஒரு நொடியில் மறைந்து விடுவதை நேரடியாக பார்க்கலாம்.உலகில் பல நாடுகளிலும் இறந்தவர்களை வழிபடுகின்ற முறை இருந்தாலும் இந்திய மக்கள் இறந்தவர்களை வழிபடுகின்ற முறை மிகவும் வித்தியாசமானது இவர்கள் இறந்தவர்கள் மீது மரியாதை மட்டுமே வைத்தோ அல்லது அச்சத்தை கொண்டோ வழிபடவில்லை மாறாக நன்றி விசுவாசத்தை அடிப்படையாக கொண்டு இந்திய வழிபாடு அமைந்துள்ளதை மறக்க கூடாது. எனக்காக என் உயர்வுக்காக என் நல்வாழ்விற்க்காக உழைத்த எனது முன்னோர்களை நன்றியோடு நினைத்து பார்ப்பது என் கடமை அவர்கள் எனக்கு நன்மை செய்கிறார்களா? தீமை செய்வார்களா? என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலை கிடையாது நான் அவர்களுக்கு நன்றியுடையவாக இருக்கிறேனா? என்பது மட்டும் தான் முக்கியம். என்று கருதுவதே இந்திய மரபு. இதன் அடிப்படையிலேயே இறந்தவர்களை மறக்காமல் நினைத்து பார்க்கும் சிரார்த்தம் என்ற சடங்கு இந்து மதத்தில் அர்த்தத்தோடு அமைந்துள்ளது. அந்த சிரார்த்த சடங்கின் தத்துவத்தை புரிந்து கொண்டால் இந்து மதத்தில் உள்ள முன்னோர்களை வழிபடும் முறையை தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.Contact Form

Name

Email *

Message *