Store
  Store
  Store
  Store
  Store
  Store

முருகக் கடவுளை மதமாற்ற சதி !

இந்து மத வரலாற்று தொடர் 56

    முன்னோர்களை வழிபடும் இந்து மதத்தவரின் நம்பிக்கை பயத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல நன்றி உணர்ச்சியின் காரணமாகவே உதையமனது என்று இந்து மத வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று பதிவுகளை நான் வெளியிட்ட போது அதில் மூன்றாவது பதிவுக்கு அன்பான வாசகர் ஒருவர் பெற்றோர்கள் பெற்றோர்களாக நடக்காத போது அவர்களுக்காக திதி திவசம் என்று கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது எனவே கொடுமையான பெற்றோர்களை நினைத்து பார்ப்பதை விட மறந்துவிடுவது நல்லது என்ற வகையில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார் அவரது எழுத்தை முழுமையாக படித்த போது மிருகங்கள் கூட செய்ய தயங்குகின்ற செயல்களை மனிதனாக பிறந்தவன் செய்கிறான் அவனை திருத்துவதற்கு அல்லது அவனிடமிருந்து விடுதலை பெறுவதற்கு வேறு வழியே இல்லையா? என்ற அடிப்படையான கருணை உணர்ச்சி மேலோங்கி இருந்ததை உணர முடிகிறது. ஆனாலும் கூட அந்த வாசகரின் கருத்துக்களோடு என்னால் முழுமையாக உடன்பட்டு போக முடியவில்லை.

சொந்த மகளையே காம பசிக்கு இரையாக்கும் தந்தையும் தனது உணர்சிகளுக்கு பெற்ற பிள்ளைகளை பலிகொடுக்கின்ற தாயும் அறிவை வளர்க்க தனது அண்டையில் வருகின்ற மாணவ மணிகளை பெண்டாள நினைக்கின்ற ஆசிரியர்களும் ஆன்மீக வழியை காட்ட வேண்டிய குருமார்கள் காம கொடூரர்களாக மாறிவிடுவதும் இந்த சமூதாயத்தில் நடக்கவில்லை என்று யாரும் மறுக்க முடியாது. அதற்காக விதிவிலக்கான ஒருசிலரை காரணமாக கொண்டு அனைவருமே அப்படிதான் எனவே அப்படிப்பட்ட உறவு முறைகளே தேவையில்லை என்று ஒரு மனிதன் முடிவுக்கு வந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதாக இருக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை நமது சமூதாயத்தை பொருத்தவரை சில விதிவிலக்குகளை முன்னுதாரணமாக வைத்து கொண்டு விதி என்ற ஒழுங்கையே விமர்சனம் செய்ய துவங்கி விடுவது அதிகரித்து வருகிறது. இதை இங்கே நான் சொல்வதற்கு மிக முக்கியமான கரணம் இருக்கவே செய்கிறது.

இந்த உலகில் பல நாடுகள் இருக்கின்றன ஒவ்வொரு நாட்டிலும் அதனதன் பண்பாட்டை சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன கிறிஸ்தவ மக்களும் இஸ்லாமிய மக்களும் உலகில் பல பகுதிகளில் பரவலாக வாழ்வதனால் அந்த சமயங்களை சார்ந்த பண்டிகைகள் உலக சமய திருவிழாவாகவே கடைபிடிக்க படுகிறது. அந்த சமய திருவிழாக்களாக இருக்கட்டும் அல்லது இந்துசமயம் சாராத எந்த திருவிழாவாக இருந்தாலும் அவைகள் தொன்றுதொட்டு வருகின்ற சமய விழாக்கள் என்றே பலரும் கருதுவார்கள் ஆனால் இந்துசமய பண்டிகைகள் என்று வரும்போது மட்டும் தேவையில்லாத பல விமர்சனங்கள் எழுவதை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா மூலைகளிலும் எதிரொலிப்பதை காணலாம்.

உதாரணமாக வல்லரசு நாடுகளும் மற்றும் சில குட்டி நாடுகளும் தங்களுக்கு எதிரான குழுக்களின் மீது ஆயுத பிரயோகம் செய்யும் போது பயன்படுத்தும் நச்சு இரசாயண பொருள்களை பற்றி அதிகமான வியாக்கியானங்களை காணமுடியாது. அதே போல பெரிய தொழில்சாலைகளிலிருந்து வெளியில் வருகின்ற இரசாயன கழிவுகளை பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது ஆனால் சில நாட்கள் மட்டுமே கொண்டாடபடுகின்ற தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதை பற்றி மனிதாபிமானத்தோடு பேசுவதாக பாசாங்கு செய்து பலரும் கருத்துக்களை பதிவு செய்வார்கள். விஜயதசமி காலங்களில் காளிமாதா சிலைகளையும் விநாயகர் சதுர்த்தி காலங்களில் பிள்ளையார் சிலைகளையும் நீரில் கலக்கும் போது மட்டுமே சிலர் சுற்று சூழலை பற்றி கவலை படுவார்கள். ஆனால் அவர்களுக்கு ஆலைகளிலிருந்து வெளிவருகின்ற கழிவுநீர் தினசரி நீர்நிலைகளை விஷமாக்குவதை எதிர்த்து பேசுவதற்கு துணிச்சல் வராது. இதெற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஒருசமயம் தலித் அமைப்பைசார்ந்த தலைவர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இந்துமதத்தில் மட்டுமே ஜாதி பிரிவுகளும் ஜாதி வன்கொடுமைகளும் இருக்கிறது எனவே இந்து மதத்தை இல்லாமல் செய்துவிட்டால் சமூகத்தில் உள்ள ஜாதி  மோதல்களை ஏற்ற தாழ்வுகளை நிறுத்திவிடலாம் என்று கருத்து சொன்னார். அவர் மட்டுமல்ல அவரை போன்ற கருத்துடைய பலரையும் நாம் அன்றாடம் காணமுடியும். இவர்கள் அனைவருமே தங்களது மனிதாபிமானத்தையும் மனித சேவையையும் விளம்பர படுத்திக்கொள்ள தாக்குவதற்கு மிக சுலபமான இலக்காக இந்து மதத்தை எடுத்து கொள்கிறார்கள்.  இவர்களது கருத்துக்களை உன்னிப்பாக பார்க்கும் போது உலகத்தில் நடக்கின்ற அனைத்து கொடுமைகளுக்கும் ஒரே கூடாரமாக இருப்பது இந்து மதம் மட்டுமே என்ற மாய தோற்றம் நிஜமானது போல பலருக்கும் தெரியும்.

நம் நாட்டில் உள்ள பல அறிவு ஜீவிகள் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதிலேயே அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவு ஜீவிகளுக்கே அதிக முக்கியத்துவம் வெகுஜன ஊடகங்களால் கொடுக்க படுகிறது. விளம்பர வெளிச்சம் இவர்கள் மீதே அதிகமாக படுகிறது. இதற்கு காரணம் என்ன? இந்தியாவை பற்றி இந்திய பண்பாட்டை பற்றி இந்திய வரலாற்று சுய சிறப்புகளை பற்றி எடுத்து கூறுபவர்களை பின்னுக்கு தள்ளி எதிர்மறையான கருத்தாளர்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் நமக்கு அவ்வபோது தோன்றினாலும் அதற்க்கான சரியான  விடைகள் பலநேரம் கிடைப்பது இல்லை நாமும் அதை பற்றி கவலைபடுவதும் இல்லை. அத்தகைய கவலை இல்லாமையே நம்முடைய தாழ்மைகள் பலவற்றுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சென்ற சில நூற்றாண்டுகளில் பலம்பொருந்திய நாடுகள் பலவீனமான நாடுகளையும் குழப்பங்கள் மிகுந்த நாடுகளையும் அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் அடிமைபடுத்தி தங்களது ஆட்சிக்கு உட்படுத்தி கொள்வது வழக்கமாக இருந்தது தன் சொந்த நாட்டை திறம்பட நிர்வாக செய்வதில் காட்டாத அக்கறையை மற்ற நாடுகளை பிடிப்பதில் வல்லரசு நாடுகள் காட்டியதற்கு மிக முக்கிய காரணம் பொருளாதார சுரண்டலே ஆகும். அடிமைப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும் தங்களது நாட்டுக்கு கொள்ளையடித்து எடுத்து செல்வதை சட்டபூர்வமாகவே அவர்கள் செய்தார்கள். பல நேரங்களில் இத்தகைய இராணுவ நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பொருள் சேதமும் உயிர் சேதமும் ஏற்படுவதாலும் வெற்றி தோல்வி என்பது மதில் மேல் பூனையாக இருப்பதாலும் அதற்கு மாற்று வழிகளை அந்த அரசுகள் யோசனை செய்தன.

அந்த யோசனையின் விளைவாக அவர்கள் செய்த முடிவின் அடிப்படையில் தங்களை ஜனநாயக பாதுகாவலர்களாக காட்டி கொண்டு அடிமை நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறினார்கள். தாங்கள் வெளியேறிவிட்டாலும் தங்களுக்கு வருகின்ற லாபம் குறைவில்லாமல் வரவேண்டும் அதற்காக அடிமை நாடுகள் எப்போதுமே தங்களது நாட்டாண்மைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்பதற்காக உள்நாடுகளில் பல பிரிவினைகளை விதைத்து தீராத மோதல்களை உருவாக்கி விட்டு சென்றார்கள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கணக்கே அவர்களது அரசியல் கணக்காக இருந்தது. இதனால் அடிமை நாடுகளில் இல்லாத பொய்களை இருப்பது போலவும் ஆதார பூர்வமானது வரலாற்று ரீதியிலானது  என்பது போலவும் சித்திகரிக்க சில கருத்துக்களை திட்டமிட்டே மிக ஆழமாக விதைத்தார்கள். அந்த கருத்து மோதல்களே மனமோதல்களாக வளர்ந்து தீராத சச்சரவுகளை இன்றும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்வது என்றால் இன்று இலங்கையில் வாழுகின்ற சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மோதி கொள்வதை சொல்லலாம். சிங்கள தமிழ் இனவாதிகளின் உற்பர்த்திக்கு மூலகாரணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கம் சாராத வரலாற்று சிந்தனையோடு இலங்கையின் அரசியல் ஏடுகளை புரட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆயிரம் மனகசப்புகள் இருந்தாலும் கூட பெருவாரியான பொதுஜனங்கள் எப்படி ஒற்றுமையோடு சகஜமாக வாழ்கிறார்களோ அப்படியே தான் ஒருகாலத்தில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் வாழ்ந்தார்கள் இவர்களுக்கிடையில் தீராத பகைமையை உருவாக்க திட்டமிட்டே பிரிட்டிஷ் அரசாங்கம் சில காய்களை நகர்த்தியது இதன் காரணமாக ஆள்வதற்கான  தகுதி தனக்கு மட்டுமே உள்ளதென்று சிங்களவர்களும் தாங்கள் புறக்கணிக்க படுவதாக தமிழர்களும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் விரிவாக்கமே இன்று அந்த நாடு கொதித்து போன  அணுவுலையாக  கிடக்கிறது.

இந்தியாவிலும் மறைந்து கிடந்த இந்து முஸ்லிம் மோதல்களுக்கு தூபம் போட்டு தூண்டியது வெள்ளைக்காரர்களின் ஆட்சியே அதுமட்டும் அல்ல தென்னிந்தியாவில் திட்டமிட்டு ஆரிய திராவிட மாயையை ஏற்படுத்தி வடக்கிற்கும் தெற்கிற்கும் மனரீதியான பிளவுகளை ஏற்படுத்தி வைத்தார்கள். இதன் காரணமாக தென்னிந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் திராவிடர்கள் என்ற போலியான வரலாற்று ஆதாரம் உண்மையானதாக உருபெற்று விட்டது. இந்த போலி சங்கதியை முன்னிறுத்தி பல அரசியல் சக்திகளும் வளர்ந்து விட்டன. இவர்கள் தங்களை வளர்த்தி கொள்ள பல வகையிலும் பேதங்களை உருவாக்கி கூர்மை படுத்தினார்கள். அதன் விளைவாக இந்து மதத்திற்கும் திராவிடர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது இந்து மதம் வேறு திராவிட மதம் வேறு என்ற கருத்து பரவலாக நம்பபட துவங்கி விட்டது. இந்தியாவை பிளவுபடுத்த வேண்டுமென்றால் மதத்தை கைவைத்தால் தான் முடியுமென்று ஆதிக்க சக்திகளுக்கு நன்றாக தெரியும். பிளவுபட்ட இந்திய சமூகம் தனக்குள் மோதிகொள்கிற காலம்வரையில் தங்களது அரசியல் பொருளாதார அறுவடைகளை நன்றாகவே செய்யலாம் என்ற கணக்கும் பலித்துவிட்டது. இந்தியாவை பிரித்தாளுவதில் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு லாபம் இருந்தது என்றால் இன்றைய அமெரிக்க சீன அரசுகளுக்கும் அதே ஆதாயம் இருக்கிறது. இந்திய மக்கள் ஒருமைப்பட்டு விட்டால் தங்களது  மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் நமக்குள் இருக்கும் பிரிவினை எண்ணத்தை  நெய்வார்த்து வளர்த்து கொண்டிருக்கின்றன அந்நிய சக்திகள்.

பிரிவினை சக்திகளை ஊக்குவித்தல் என்றவுடன் தீவிரவாத சிந்தனை உடைய இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் கையில் ஆயுதமும் பணமும் கொடுத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றுதல் என்று மட்டுமே நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம் பிரிவினை என்பது பெளதிகமாக மட்டுமே இருப்பது அல்ல கண்ணுக்கு தெரியாத வகையிலும் பிரிவினையை உருவாக்கலாம் நேற்றுவரை அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் மத்தியில் திட்டமிட்டு வேற்றுமையை உருவாக்குவது கண்ணுக்கு தெரியாத ஒருவித பிரிவினை செயல் என்றால் இன்று காலை வரையிலும் நான் இந்த சொத்து என்னுடையது எனக்கே பாத்தியதை பட்டது எனது முன்னோர்கள் காலகாலமாக கடும்பாடு பட்டு உழைத்து எனக்கென்று விட்டு சென்றது என்று நம்பிகொண்டிருந்ததை இது உனது முன்னோர்கள் சொத்து அல்ல நாங்கள் அவர்களுக்கு கொடுத்தது அந்த சொத்தின் உண்மை சொந்தகாரார்கள் நாங்களே எனவே நீ அனுபவிப்பது முழுமையாக எங்களுடையது என்ற ஒரு அவநம்பிக்கையை யாரவது ஏற்படுத்தினால் என் மனநிலை என்னவாகும்? நாளாவட்டத்தில் எனது சுயத்திலிருந்த நம்பிக்கையும் கெளரவமும் தளர்ந்து போய் சிறுது சிறிதாக அந்நியர் வசம் என்னை இழந்துவிடுவேன். இத்தகைய வேலை நமது நாட்டில் வெகு நாட்களாகவே நடந்து வருகிறது.

சிறிது நாட்களுக்கு முன்பு கிருஸ்தவ பாதிரிமார்களால் இந்து மத சடங்குகள் சிறிது சிறிதாக கிருஸ்தவ சாயம் பூசப்பட்டு உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. என்று எழுதியிருந்தேன் அதை படித்து விட்டு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிறைய வாசகர்கள் இதை போன்ற விஷயங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வாருங்கள் என்று என்னிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அந்த பணியை வேறொரு நேரத்தில் செய்யலாம் என்றாலும் அது சம்மந்தமான சில கருத்துக்களை இந்த இடத்தில் தொட்டு காட்டினால் நன்றாக இருக்குமென்று  நினைக்கிறேன். தமிழ் கடவுளான முருகபெருமானை இந்தியாவில் உள்ள பலதரப்பு மக்களும் பலகாலமாக இஷ்ட தெய்வமாக வழிபட்டு வருவதை நாம் அறிவோம் முருக வழிபாடு என்பது இந்து மதத்தின் பெருமைமிக்க தனிசொத்து என்று நாமும் நம்பி கொண்டு இருக்கிறோம் ஆனால் ஆய்வாளர்கள் என தங்களுக்கு தாங்களே பெயர் சூட்டி கொண்ட சில நச்சு அறிவாளிகள் முருக வழிபாடு இந்து மதத்திற்குரியது அல்ல அது முற்றிலுமாக கிருஸ்தவ மதத்திற்குரியது என்ற விஷம பிரச்சாரத்தை பரப்பி வருவதை நம்மில் பலர் அறிய மாட்டோம். அப்படியே அறிய வந்தால் கூட அட அதிசயமாக இருக்கிறதே என்று வியப்படைவோமே தவிர அதனுள் மறைந்திருக்கும் ஆபத்தை அறிய மாட்டோம்.

முருகன் பரமசிவனின் புத்திரன் என்று நமக்கு தெரியும் இதை கிருஸ்தவர்கள் தங்களுக்கு  சாதகமாக பிதாவின் குமாரன் என்ற கருத்துக்குள் கொண்டு வருகிறார்கள். மேலும் பெருவாரியான முருகன் ஆலயங்கள் மலைமீது இருப்பதை ஏசுநாதர் கல்வாரி மலைமீது சிலுவையில் அறையபட்டதோடு ஒப்பிடுகிறார்கள். முருகனுக்கு காவடி எடுக்கின்ற பண்பாட்டை கூட ஏசுநாதர் சிலுவை  சுமந்ததை நினைவூட்டுவதாக கருதுகிறார்கள். இந்துமத கடவுள்களை மட்டுமல்ல இந்து மதத்திற்கே தனிசொத்தாக திகழ்கின்ற பல நூல்களையும் கிருஸ்தவ மத கருத்துக்களை பரப்பும் நூல்களாக காட்டுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அப்படி அவர்கள் காட்டுவதில் அதிக ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நூல் திருக்குறளாகும். திருக்குறளில் சொல்லபடாத விஷயங்களே இல்லை என்பது உலகோர் அறிந்த ஒன்று அந்த பொது தன்மையை தங்களுக்கு சாதகமானதாக வைத்துகொண்டு ஒரு போலியான வரலாற்று ஆதாரம் ஒன்றை உருவாக்கினார்கள்.

அதாவது கிபி.52-53 காலகட்டங்களில் வாழ்ந்த புனித தோமா என்ற அப்போஸ்தலர் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வந்தாராம் அவரை இந்து மதத்தை சார்ந்த சிலர் வஞ்சகமான முறையில் சூழ்ச்சி செய்து கொலை செய்துவிட்டார்களாம் அந்த புனித தோமாவும் நமது திருவள்ளுவரும் இணைபிரியாத தோழர்களாக இருந்தார்களாம் தோமாவிடமிருந்து ஏசுநாதரின் கருத்துக்களை திருவள்ளுவர் கேட்டு அறிந்து மனதை பறிகொடுத்து அதை தமது திருக்குறள் என்ற ஈடு இணையற்ற நூலில் விளக்கமாக எடுத்து சொன்னாராம். எனவே திருக்குறள் என்பதே கிறிஸ்தவ மத நூல்தான் என்ற ஒரு புதிய கதையை உருவாக்கி அதற்கு இல்லாத ஆதாரங்களை இருப்பதாக சுட்டி காட்டி தெய்வநாயகம் என்ற கிருஸ்தவ அறிஞர் 1969 ஆம் வருடம் திருவள்ளுவர் கிருஸ்தவரா? என்ற நூலை வெளியிட்டார் அது அப்போது அறிஞர்கள் மத்தியில் சசலப்பை ஏற்படுத்தியது சில கிறிஸ்தவர்களே இந்த நூல் முழுமையான கற்பனை காரணம் கிருஸ்தவ மத கருத்துக்கள் எதுவும் திருக்குறளில் இல்லை திருக்குறளில் மறுபிறப்பு விதி போன்ற விஷயங்கள் பேசபடுகின்றன அவைகள் ஏசுநாதரின் உபதேசங்களுக்கு விரோதமனவைகள் என்று மு.தெய்வநாயகத்தை கண்டித்தார்கள் கிறிஸ்தவர்களே கண்டித்த அந்த நூலுக்கு ஆதரவு தெரிவித்து முன்னுரை எழுதியது யார் தெரியுமா? யாரும் அதிசயம் அடைய வேண்டாம் வள்ளுவருக்கு குமரிமுனையில் வானளாவிய சிலை வைத்து வள்ளுவர் கோட்டம் எழுப்பி குறளோவியம் எழுதிய டாக்டர் மு.கருணாநிதி அவர்களே   பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியர்களை பலியாக்கும் போலியான வரலாற்று புனைவுகளுக்கு இதைவிட ஆதாரம் அதிகம் தேவையில்லை. என்று நினைக்கிறேன்.

அந்நிய சக்திகளின் ஏகபோக பதாதைகளை தூக்கி செல்லுகின்ற கருவிகளாக பல பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் மத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் செயல்படுகிறார்கள். இவர்கள் அனைவருமே கூட்டு சேர்ந்து அனைத்து சமூகங்களிலும் விதிவிலக்காக நிகழ்கின்ற கொடுமைகளை பிராதானபடுத்தி அவைகளுக்கு இந்துமதமே மூலகாரணம் என்ற பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்து மதத்தை அழிப்பதனால் அவர்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்? என்று பலருக்கு தோன்றும் இந்து மதம் என்பது வெறும் வழிபாடுகள் நிறைந்த மதமல்ல அது ஒரு மக்கள்  கூட்டத்தின் சமூக வாழ்வாகவும் இருக்கிறது. சமூகவாழ்வில் அடிப்படையாக இருப்பது பண்பாடு பண்பாட்டை தாங்கி பிடிப்பதில் பல முக்கிய தூண்களில் ஒன்றாக் இருப்பது பொருளாதாரம் எனவே பண்பாட்டை சிதைத்து விட்டால் சுயம் சார்ந்ததாக இருக்கின்ற பொருளாதார ஆதாரத்தையும் சிதைத்து சுயசார்பை தீர்த்து கட்டிவிடலாம். அதாவது இந்தியாவின்  தனிபண்பாடான இந்து பண்பாட்டை ஒழிப்பதன் மூலம் அதை முழுமையாக அந்நியம்  சார்ந்த நாடாக ஆக்குவதில் கஷ்டம் இருக்காது. இதற்க்கான முயற்சிகளே மதமாற்றம் கருத்து பிரச்சாரம் என்ற வகையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஆரியர்களால் தெற்கு பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மதமே இந்துமதம் திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் தனியான மதமென்ற ஒன்று இருந்தது அதை ஆரியம் முற்றிலுமாக அழித்துவிட்டது என்ற கருத்தில் ஓரளவு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் போலி புனைவை உண்மையாக ஆக்கிவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. இங்கே எப்படி இந்து மதத்தின் ஆதார வேறை அசைத்து பார்ப்பதற்கு ஆரிய திராவிட மாய்மால கதைகள் உருவாக்க பட்டதோ அதே போலவே  இப்போது குறிபார்த்து திட்டமிட்டு வனவாசிகளையும் அவர்களது பண்பாட்டையும் இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக பிரித்து எடுத்துவிட வேண்டும் என்ற திட்டம் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை அமெரிக்க ஏகபோக சக்திகளின் ஊது குழலாக இருக்கும் சில கிருஸ்தவ பாதிரியார்கள் மட்டுமல்ல நாத்திகம் பேசுகின்ற சீன அடிவருடிகளான மாவோ தீவிரவாதிகளும் செய்கிறார்கள்.

அதாவது வனவாசிகளின் வாழ்க்கை முறையானது நகரவாசிகளின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும் கூட அது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது அல்ல ஆனால் அவைகள் தொடர்பே அற்றது இரு துருவங்களானது என்ற நம்பிக்கையை இருதரப்பு மக்களும் உறுதியாக நம்பும் வண்ணம் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றது. இந்துமத   நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் வனவாசிகளின் மத நம்பிக்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது எனவே இந்திய வனவாசிகளின் மதம் என்பது வேறு நகரபுரத்து மதம் என்பது வேறு என்ற பிரித்தாளும் கருத்திலிருந்து அவர்களது பணி  துவங்குகிறது என்று சொல்லலாம். மேலோட்டமாக பார்க்கின்ற போது காட்டு வாசிகளின் பூஜை முறைகளில் இருக்கின்ற நடன முறைகள் பலி கொடுத்தல் நம்பிக்கைகள் போன்றவைகள் அனைத்தும் சாதாரண இந்து மக்களின் நமிக்கையிலிருந்து மாறுபட்டதாக தெரிகிறதே எனவே அவர்கள் மதம் வேறு நமது மதம் வேறாக இருக்க கூடுமோ என்ற எண்ணம் கூட பலருக்கு வரலாம்

ஆனால் இந்த எண்ணம் அடிப்படை ஆதாரம் இல்லாதது. உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வனவாசி மக்களின் முக்கிய பிரிவினராக இருக்கும் நரிகுறவ மக்களின் வழிபாட்டு முறையை ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அவைகளுக்கும் இந்துமத நம்பிக்கைகளுக்கும் வேற்றுமையை கிடையாது அனைத்தும் ஒற்றுமையானது என்ற தெளிவும் உண்மையும் நமக்கு ஏற்படும். எனவே அம்மக்களின் வழிபாட்டு முறையை சற்று ஆராய்ந்து பார்த்தால் தான் அந்நிய சக்திகளின் நிஜ முகமும் நமது மதத்தின் ஆழமான வேர் பதிவும் இன்னெதென்று நமக்கு தெரியும். எனவே இதுவரை மத சம்பிராதயங்களையும்  தத்துவங்களையும் ஆராய்ந்து பார்த்த நாம் அதே தத்துவங்கள் எளிய மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது  என்பதை அறிந்து கொள்ள நரிக்குறவர்களின் வழிபாட்டு முறையை சற்று ஆழ்ந்து பார்ப்போம்.
Contact Form

Name

Email *

Message *