இந்து மத வரலாற்று தொடர் 57
பாண்டியன் என்ற மதுரைக்காரர் எனக்கு மிக நெருங்கிய நண்பர் அவர் திறமையான கிரிமினல் லாயர் மட்டுமல்ல நல்ல சித்தவைத்தியர் மூலிகை பொருள்களை காடுமலை என்று தேடிசென்று சேகரிப்பதில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு அப்படி காடுகரையென்று சுற்றுவதனால் பலவித விந்தையான தொழில்களும் அவருக்கு தெரியும். ஆற்றில் வெள்ளம் வராதபோது ஆட்களை வைத்து ஆற்றுமணலை சலிக்க செய்வார். அப்படி சலிக்கும் போது பலவித சிறு பொருள்கள் கிடைக்கும் அவற்றில் அரசர்காலத்து நாணயங்களும் கிடைப்பது உண்டு இவர் அந்த நாணயங்களை தேர்ந்தெடுத்து நாணயத்தை சேகரிப்பதில் ஆர்வமுடியவர்களுக்கு நல்ல விலைக்கு விற்றும் விடுவார்.
இவர் ஒருமுறை கீரிமுடி நல்ல விலைக்கு போகிறது நீங்கள் இருக்கும் ஊரில் நரிகுறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்களே அவர்களிடம் சொன்னால் கொண்டுவருவார்கள் என்று ஐடியா கொடுத்தார். எனக்கும் அப்போது வியாபாரத்தில் அதிகமான நாட்டமுண்டு பலவிதமான தொழில்கள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு பெரிதாக தென்படவில்லை. எனவே நண்பர் சொன்ன கீரிமுடி வியாபாரத்தையும் செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். அந்த வகையில் எனக்கு ஏற்பட்டது தான் நரிகுறவர்களிடத்தில் நல்ல அறிமுகம்.
சாதாரணமாக அந்த மக்கள் நம்மோடு இணைந்து வாழ்கிறார்கள் என்றாலும் அவர்களை பற்றி நாம் கொண்டிருக்கின்ற கருத்துக்கள் மிக மோசமானதாக இருக்கிறது. கடைதெருவில் நரிகுறவர்கள் கும்பலாக வந்தாலே வியாபாரிகளுக்கு ஜுரம் வந்துவிடும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவில்லை என்றால் எதையாவது திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அச்சம் பலருக்கு உண்டு. அந்த அச்சத்திற்கு இசைந்த வண்ணமே சில நேரங்களில் குறவர்கள் நடந்து கொள்வது உண்டு என்றாலும் பெருவாரியான நரிகுறவர்கள் திருடுவதை கேவலமாகவே நினைக்கிறார்கள். காவல் துறையிலிருக்கும் சில நண்பர்களே என் காதுபட சொல்வார்கள் வழிப்பறி வீடுபுகுந்து திருடுவது போன்றவற்றில் குறவர்கள் பலே கில்லாடிகள் என்று.
ஒருவன் திருடனாக மாறுகிறான் என்றால் அதற்கு பல காரணங்களை சொல்லவேண்டும் வறுமை சுற்றுப்புற சூழல் போன்றவைகள் ஒருவனை திருடனாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விதிவிலக்காகவே மனிதர்களில் சிலர் திருடர்களாக மாறுகிறார்கள் இந்த விதி எப்படி மற்ற ஜாதியினருக்கு பொருந்துமோ அதே போலவே தான் நரிகுறவர்களுக்கும் பொருந்தும் ஒரு சில நரிகுறவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் அப்படி இருப்பது இல்லை. ஆனால் வறுமையிலேயே கிடக்கின்ற அந்த மக்களை திருடர்களாக பார்ப்பது மற்றவர்களுக்கு சுலமபமாக இருக்கிறது.
குறவர்கள் சுத்தம் இல்லாதவர்கள் சுகாதாரத்தை பற்றிய அறிவு இல்லாதவர்கள் என்று நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம் நாகரிகமான உடை அணிந்து நாசுக்காக வாழ முடியாதது அவர்களது குற்றம் அல்ல காடுகளில் சுற்றி திரிந்து வெயிலும் மழையும் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு இருக்கிறது உட்காராமல் ஓடினால் தான் ஒருபிடி கஞ்சி குடிக்க முடியும் பிள்ளை குட்டிகளுக்கு வயிறார ஆகாரம் கொடுக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது சுத்தம் சுகாதாரம் என்பவைகளை சிந்தித்து கொண்டிருக்க அவர்களால் முடியாது. பொதுவாக சுத்தம் சுகாதாரம் எதற்கு? ஆரோக்கியமாக வாழ்வதற்கு தானே நரிகுறவர்கள் தாங்கள் வாழுகின்ற முறைகளிலேயே ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் எனவே அவர்களது சுகாதாரம் அவர்களுக்கு போதும் மேலும் அவர்கள் அசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அசுத்தமாக இருப்பது இல்லை நம்மை போன்ற நாகரீக சமூகம் அவர்களை ஆக்கரமித்து அவர்களது அமைதியான வாழ்விற்கு குந்தகம் ஏற்படுத்த கூடாது என்பதற்காகவும் அவர்கள் அசுத்தமாக வாழ்கிறார்கள்.
உண்மையில் நரிகுறவர்கள் பழகுவதற்கு மிகவும் நல்லவர்கள் அவர்களை மதித்து பழகிவிட்டால் நமக்காக உயிரையும் கொடுப்பார்கள். நாட்டுபுற மக்களிடம் மிக குறைவாகவே இருக்கும் நன்றி உணர்ச்சியும் அன்பும் துரோகம் செய்யாத மனப்பான்மையும் நரிகுறவர்களிடத்தில் அதிகமாக இருப்பதை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன். நான் அவர்களோடு பழகிய அந்த காலத்தில் அவர்கள் என் மீது காட்டிய அன்பும் மரியாதையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்த கூடியது. தங்களது குடும்ப சண்டைகளுக்கு தீர்வு காண சொல்லி கூட என்னை அணுகுவார்கள் சினிமா நடிகர்கள் மீதும் அரசியல் தலைவர்கள் மீதும் தன்மீது அக்கறை செலுத்தும் ஊர் மனிதர்களின் மீதும் அவர்கள் காட்டுகிற அன்பு ராமாயணத்தில் இராமன் மீது குகன் வைத்திருந்தானே அந்த அன்புக்கு இணை என்று சொல்லலாம். எந்த பிரதி பலனும் இல்லாமல் அன்புகாட்ட முடியும் என்றால் அது அவர்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நரிக்குறவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன நம் வீடுகளில் பெண்குழந்தைகள் பிறந்துவிட்டால் எதோ நடக்க கூடாதது நடந்து விட்டது போல துக்கத்தை கடைபிடிக்கிறோம் மூன்று பெண் குழந்தைகளை பெற்றாள் நான்காவது பிறப்பதாவது ஆணாக இருக்குமென்று நினைத்தேன் அதுவும் பெண்ணாகவே பிறந்துவிட்டது எனவே இந்த மனைவி எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கின்ற ஆண்மகன்கள் நம்மில் பலருண்டு. ஆனால் குறவர்கள் மத்தியில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஆட்டமும் பாட்டமும் கட்டுக்கடங்காது இருக்கும். பெண்குழந்தை பிறந்த அன்று ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் குறவர் கூட்டம் எல்லா இடங்களிலும் உண்டு காரணம் குறவர் ஜாதியில் பெண் வரதச்சனை கொடுக்க வேண்டிய அவசியமில்லை ஆண் தான் பெண்ணுக்கு சீதனம் கொடுக்க வேண்டும்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவம் நரிகுறவர்கள் மத்தியில் தான் உயிர் வாழ்கிறது. குடும்பத்தை நடத்தி செல்வதற்கு தலைவனுக்கு எந்த அளவு உரிமையும் தகுதியும் உண்டோ அதே அளவு உரிமை நரிக்குறவர் குடும்பத்தில் தலைவிக்கும் உண்டு. சம்பாத்தியம் செய்வதில் செலவு செய்வதில் ஆணுக்கு நிகராகவே குறப்பெண் திகழ்கிறாள். பொதுவாக நமது குடும்பங்களில் இல்லற வாழ்விற்கு ஒரு பெண்ணை வேண்டும் என்று சொல்வதோ வேண்டாம் என்று தள்ளுவதோ ஆண்களுக்கு தான் அதிக உரிமை கொடுக்க பட்டிருக்கிறது. அதாவது விவாகரத்து கோருவதில் பெண்ணை விட ஆணே முன்னிற்கிறார் எவ்வளவு நியாயமான காரணங்கள் இருந்தாலும் விவாகரத்து விஷயங்களில் பெண்ணின் கருத்தை முக்கியமானதாக எடுத்து கொள்வதில் நமக்கு பலநேரம் தயக்கமுண்டு பெண்கள் சற்று பொறுமை பாராட்ட வேண்டும் என்ற அறிவுரையும் கூறுவோம். ஆனால் நரிக்குறவர் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த புருஷன் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கின்ற அதிகாரம் அதிகமாகவே கொடுக்க படுகிறது. இதனால் பல ஆண்கள் பெண்டாட்டி தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற அச்சத்தில் பொறுப்போடு குடும்பம் நடத்துவதை காண முடியும்.
நரிக்குறவர்களை பொதுவாக பல்வேறு ஜாதிகளாக நாம் பார்ப்பது இல்லை அவர்கள் அனைவருமே ஒரே ஜாதியினர் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு ஆனால் நாம் கருதுவது போல் ஜாதி வேறுபாடு நரிக்குறவர்களுக்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்குள்ளும் ஜாதி வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த வித்தியாசம் நம் சமூகத்தை போல பிறப்பை அடிப்படையாக கொண்டு அமையாமல் வழிபாட்டு முறையை அடிப்படையாக கொண்டு அமைந்திருப்பது தான் தனி விஷேசம் என்று சொல்லலாம். தாய் தெய்வ வழிபாடு என்ற பெண்தெய்வ வழிபாட்டில் காளி, மீனாட்சி, மாரியம்மன் போன்ற தெய்வங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது நமக்கு தெரியும் நரிக்குறவர்களும் இந்த தெய்வங்களையே தங்களது ஆதார தெய்வமாக வழிபடுகிறார்கள் இதில் காளி, மாரி ஆகிய தெய்வங்களை வழிபடுவபர்கள் ஒரு பிரிவினர் என்றும் மீனாட்சியை வழிபடுபவர்கள் வேறொரு பிரிவினர் என்றும் மாரியம்மன், மீனாட்சி ஆகியோரை வழிபடுபவர்கள் மற்றொரு பிரிவனர் என்றும் நரிகுறவர்கள் மத்தியில் ஜாதி அமைப்புகள் இருக்கின்றன.
ஜாதி என்பதன் மேலோட்டமான தோற்றம் தொழில் அமைப்பாக தெரிகிறது. உழைக்கும் மக்கள் ஒரு இனம் வியாபாரம் செய்கின்றவர் வேறொரு இனம் இவர்கள் இருவரையும் நிர்வாகம் செய்கின்றவர் மற்றொரு இனம் இவர்களிருந்து மாறுபட்டு மூவருக்கும் கல்வியையும் ஆன்ம ஞானத்தையும் வழங்குபவர்கள் பிறிதொரு இனம் என்ற வகையிலேயே ஜாதியின் மேல் தோற்றம் தென்படுகிறது. இந்த தோற்றம் உலகம் முழுவதும் உள்ள சமூக அமைப்பிற்கு பொதுவானது என்றாலும் இந்திய சமூகத்தை பொறுத்தவரையில் இவைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்க படுவதாகவே இருக்கிறது. பிறப்பை மையமாக வைத்து சமூக படித்தரங்களை ஆதிகால இந்திய சமூகம் கொண்டிருக்க வில்லை என்றாலும் இடைக்காலத்தில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்புகளும் கலாச்சார மாறுதல்களும் ஜாதிய தாக்கத்தை பிறப்பை ஒட்டி அமைத்து விட்டன.
ஆனாலும் இந்திய ஞானிகள் ஜாதிகள் என்பது அல்லது வர்ணங்கள் என்பது பிறப்பை காரணமாக கொண்டோ சமூக இருப்பை காரணமாக கொண்டோ அமையவில்லை மனிதனது குணநலத்தை ஆதாரமாக கொண்டே அமைகிறது என்று சொல்கிறார்கள். உதாரணமாக அரசன் ஒருவனுக்கு மகனாக பிறப்பவன் அரசியலை மட்டுமே விரும்புவான் என்று கூற இயலாது. அவன் அரசியலுக்கு புறம்பான கலை இலக்கியம் ஆன்மிகம் போன்றவற்றை நாடுபவனாக இருந்தால் அவனை எப்படி ஆளும் ஜாதியான சத்திரியன் என்று அழைக்க முடியும். அதே அரச குமாரன் வணிகத்தில் மட்டுமே நாட்டம் செலுத்தினால் அல்லது உடல் உழைப்பை மட்டுமே நாடுபவனாக இருந்தால் எப்படி சத்திரியனாவான்? எனவே ஜாதி என்பது பிறப்பை ஒத்தது அல்ல குணத்தை ஒத்ததே ஆகும் என்று சொல்கிறார்கள்.;
ஆயிரம் சமூக சிந்தனைகள் அரசியல் கண்ணோட்டங்கள் நமக்கு இருந்தாலும் அவைகளை விலக்கி வைத்து விட்டு அனுபவ பூர்வமாக சிந்தித்து பார்த்தால் ஜாதி என்பது குணத்தை சார்ந்ததே என்ற முடிவுக்கு வரமுடியும். பிராமணனாக இருப்பவன் இன்னின்ன மாதிரி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் இருக்கிறது அந்த இலக்கணத்தை சிறுது கூட கடைபிடிக்காதவன் ஒரு பிராமண தகப்பனுக்கு பிறந்திருந்தாலும் அவன் பிராமணன் ஆகமாட்டான். ( இந்து மதத்தில் உள்ள ஜாதி பிரிவுகளை பற்றியும் ஜாதியின் தோற்றங்களை பற்றியும் வேறொரு இடத்தில் நாம் சிந்திக்க போவதனால் இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்தி அடுத்ததை பற்றி ஆலோசிப்போம் )
ஒருவனது குணத்தை ஒட்டியே அவனது வழிபாடும் வழிபடும் தெய்வமும் அமைகிறது உலக வரலாற்றை எடுத்து பார்த்தோம் என்றால் போர்கடவுளை வழிபடும் சமூகம் யுத்தம் செய்வதிலேயே நாட்டம் உடையது என்றும் கல்வி கடவுளை வழிபடும் சமூகம் அறிவை வளர்ப்பதிலேயே ஆர்வம் உடையது என்றும் அறிய முடிகிறது. எனவே ஒருவனது வழிபாட்டிற்கும் அவனது குணத்திற்கும் தொடர்பு இருப்பது கண்ணுக்கு தெரியாத மெல்லிய இழையாக இருந்தாலும் கூட அதில் அசைக்க முடியாத உண்மை இருக்கிறது. இந்த தத்துவத்தை மையமாக வைத்தே நரிக்குறவர்களின் வழிபாட்டு முறையால் ஏற்பட்ட ஜாதி பிரிவுகளை நாம் அணுக வேண்டும்.
ஆதிகால சமூகம் பெண்மையை முதன்மையாக கொண்டே உருவானது ஆணாதிக்கம் என்பது பிற்காலத்தில் ஏற்பட்டதே ஆகும். பெண்ணே சமூகத்தின் தலைமகளாக கருதப்பட்டதனால் தான் இறைவழிபாட்டில் கூட கடவுளை பெண்ணாக பார்க்கும் தன்மை முதல் வழிபாடாக உருவானது. அதன் தொடர்ச்சியே குறவர் சமூகத்தில் பெண்தெய்வ வழிபாடு மட்டுமே இருப்பதை காட்டுகிறது. பெண்ணை வைத்தே சமூக பிரிவுகள் வளர்ச்சி அடைந்ததன் அடையாளமே அவர்கள் மத்தியில் நிலவும் வழிபாட்டு முறையானது ஜாதி முறையாக நிலை கொண்டிருக்கிறது. அதாவது நரிக்குறவர் மத்தியில் மூன்றுவிதமான ஜாதி பிரிவுகள் இருக்கின்றன ஒன்று மாரியம்மனை வழிபடும் மாரிமக்கள் சமூகம் இன்னொன்று காளியை வழிபடும் காளிமக்கள் சமூகம் மூன்றாவதாக மீனாட்சியை வழிபடும் ஆச்சி மக்கள் சமூகம் எனலாம்.
குறவர்கள் முருகனுக்கு பெண் கொடுத்தவர்கள் சிவபெருமானின் சம்மந்தியானவர்கள் அவர்கள் முருகனை வழிபடாமல் அம்மனை வழிபடுவது வியப்பாக இருக்கும் இதை பற்றி அவர்களிடம் கேட்டால் அம்மா தானே எல்லாவற்றையும் கொடுத்தவள் அவள் இல்லை என்றால் பிள்ளை ஏது? என்கிறார்கள். எதார்த்தமான அவர்கள் பேச்சை போலவே அவர்களது வழிபாடும் எதார்த்தமாகவே இருக்கிறது. அவைகளை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.