Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீ துக்கத்தின் மைந்தன் அல்ல !
யா,

நான் தற்பொழுது கல்லுரியில் முதுகலை தொழிற்க்கல்வியில்  படித்து வருகிறேன்.நான் இயல்பாகவே அமைதியானவன்.என் வாழ்க்கையே மிகவும் சோகமாகவும்,வறுமையாகவும் உள்ளது.எனது அப்பா என்னை மிகவும் கடினபட்டு படிக்கவைக்கிறார்.ஆனால் என் மனம் படிப்பில் ஈடுபாடு இல்லாமல் எப்பொழுதும் குழப்பத்திலேயே உள்ளது.அப்படியே படித்தாலும் படித்தது மனதில் தங்காமல் மறந்துவிடுகிறது.எனது மனதிற்க்குள்ளே எப்பொழுதும் எந்த ஒரு செயல் செய்தாலும் ஒருவித பயமும் பதட்டமும் இருந்து கொண்டே இருக்கிறது.அதனால் என்னால் எடுத்த எந்த ஒரு வேலையையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியவில்லை.

        இவ்வருடத்துடன் என்னுடய கல்லூரி  படிப்பு முடிகிறது்...முந்தைய தேர்வுகளில் நான் சிலவற்றில் நன்றாக செய்தும் ஃபெயில் ஆகிவிட்ட காரணத்தால் கல்லுரியில் நடந்த வேலைக்கான வளாகதேர்வில் என்னால் பங்கேற்க்க முடியவில்லை....

     என்னுடைய தேர்ச்சி பெறாத தாள்களில் தேர்ச்சியடைந்து எனக்கு என்னுடைய துறையில் இவ்வருடம் வேலை கிடைக்குமா..... என்னுடைய கஷ்டங்கள் மற்றும் வறுமை நிலை மாறுமா...மற்றும் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுங்கள் ஐயா...

என்னுடைய கிரக அமைப்பில் கோளாறுகளோ அல்லது முன் ஜென்ம பாவ உழ்வினைகளோ இருப்பின் அதிலிருந்து மீள்வதற்க்கு பரிகாரங்களையும் கூறவும்.....

எனக்கு இருக்கும் தீராத தலைவலி ,மன அழுத்தம் மற்றும் தாழ்வுமனப்பான்மை, மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் பயங்கள் நீங்கி நல்ல முடிவை எடுக்கும் திறன் உள்ளவனாக மாறுவதற்க்கும் ,என்னுடைய நினைவாற்றல் அபாரமான அளவில் பெருகுவதற்க்கும் ,குரலில் ஒரு கம்பீரம் உடையவனாக மாறுவதற்க்கு மூலிகைகள் அல்லது சித்தமருத்துவ முறைகள் இருப்பின் கூறுங்கள்....

  ஐயா மேற்கண்டவற்றுக்கு தயவுசெய்து பதில் கூறாமல்  ஒதுக்கி  அல்லது நிராகரித்து விடாதிர்கள்.... இதுவரை என்னுடைய வாழ்வு எவருக்கும் பயன் இல்லாமல் எதற்க்கும் லாயக்கற்றவனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...எதிலும் என்னால் ஒரளவு கூட சிறந்து விளங்க முடியவில்லை... என்னுடைய இந்த யாருக்கும் பயன் இல்லாத எதற்க்கு வாழ்கின்றோம் என்று தெரியாத இந்த வாழ்க்கை வாழவே பிடிக்கவில்லை....

 என்னுடைய இந்த வாழ்க்கையை எனக்கும் பிறருக்கும் பயனுள்ளவனாக மாற்ற வழி கூறுங்கள் என் எதிர்கால வாழ்கைக்கு வழி காட்டுங்கள்...


இப்படிக்கு
உங்கள் பதிலை எதிர் நோக்கி
அன்புடன்
பெயர் சொல்ல விரும்பாத வாசகன் 
பெங்களுர்

லர் நினைப்பது போல் வாழ்க்கை என்பது பூந்தோட்டம் அல்ல  இரத்தின கம்பளம் விரித்து வைத்திருக்கும் ராஜ பாட்டையும் அல்ல. கல்லும் முள்ளும் பள்ளமும் மேடும் நெருப்பும் பனியும் நிறைந்த மிக கடினமான பயணமே வாழ்க்கையாகும், இன்பமாக மட்டுமே அனைவரும் இருக்கிறார்கள் பிறர் யாரும் துன்பத்தில் இல்லை நான் மட்டுமே கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கிறேன் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள் இது முற்றிலும் தவறு. மனிதனாக பிறந்தவன் ஒவ்வொருவன் வாழ்விலும் கஷ்டநஷ்டங்கள் உண்டு அதை எடுத்து கொள்ளுகின்ற மனோ நிலையில் தான் அவரவர் வாழ்க்கையில் வெளிச்சமும் இருட்டும் வந்தமைகிறது.

படிக்கிற காலத்தில் படிப்பை ஆர்வத்தோடு நாடுவது கிடையாது அந்த காலம் முடிந்த பிறகு அதற்காக வருத்தபடுவதேஅதிகம் . தாடி நரைத்து முதுகு கூன் விழுந்து போன பிறகு படிக்கிற காலத்தை வீணாக்கி விட்டோமே என்று வருத்தபடுவது வடிகட்டிய முட்டாள் தனம் படிக்கும் போது படிப்பை மட்டுமே சிந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு தேவையில்லாதவைகளை நினைத்து கொண்டிருந்தால் இப்படி தான் குழப்பமடைய வேண்டிய நிலை இருக்கும்.

நம் வாழ்க்கையில் ஆயிரம் சோகங்கள் வரலாம் சங்கடங்கள் வரலாம் ஆனாலும் அதற்காக இளம் வயதில் மன தைரியத்தை கைவிட்டு விடகூடாது. இன்று வருகின்ற கஷ்டம் இன்று மட்டும் தான் நாளைக்கே ஒரு நல்ல வாழ்க்கை நமது வாசல் கதவை தட்டுமென்று நம்பிக்கையும் உறுதியும் கொண்டவனுக்கு வெற்றி என்பது அகப்படும் பொருளாக இருக்கிறது. பலருக்கு இந்த ரகசியம் தெரிவது இல்லை எதோ ஆயுள் முழுவதும் கஷ்டபடுவதற்கே பிறந்திருக்கிறோம்  என்ற எண்ணத்தில் நடைபிணம் போல வாழ்நாளை தள்ளி கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு நான் கஷ்டபடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் ஒரு சுகம் இருக்கும் போல் தெரிகிறது. மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதில் ஆறுதலை கேட்பதில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் இன்பமானவற்றை கூட துன்பமானதாக பார்க்கும்படி செய்கிறது. மிக நீண்ட நெடிய வாழ்க்கையில் மிக குறுகிய காலம் இளமைகாலம் இளமை என்பது இறைவன் கொடுத்த வரம். இந்த வயதில் மனதை செழுமைபடுத்த முடியாதவன் எந்த வயதிலும் செழுமையாக முடியாது. இரத்தவோட்டம் தளர்ந்த பிறகு உடலை சுமப்பதே பெரும்பாடாகிவிடும் அந்த நிலையில் கனமான மனதை சுமப்பது யார்? நாளையை பற்றிய எதிர்பார்ப்பும் நேற்றைய பற்றிய வருத்தமும் மனதில் இருக்கின்ற வரை இன்றைய பொழுதை அனுபவிக்க முடியாது. இந்த வயதில் எனக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று நீங்கள் சொல்வதை பார்க்கும் போது உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கு தெரியவில்லை.

மன அழுத்தம் உங்களுக்கு வருவதற்கு என்ன காரணம் இருக்கிறது? உங்கள் தேவைகளை கவனித்து கொள்ள பெற்றோர்கள் இருக்கிறார்கள் உற்ற நேரத்தில் ஆறுதலும் அறிவுரையும் தர நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் இதையெல்லாம் விட மேலாக பறந்து விரிந்த இந்த உலகில் இயற்க்கை அன்னை செழுமையான தனது மடியை விரித்து தனது அழகையெல்லாம் நமது கண்களுக்கு விருந்தாக்கி கொண்டிருக்கிறாள். அருகில் இருக்கும் இந்த சொர்க்கத்தை அனுபவிக்க தெரியாமல் அனுப்பவிக்க முடியாமல் நாளைய பொழுதை நினைத்து ஏங்குவது அறிவுடமையாகாது.

உங்கள் எதிர்காலம் என்பது கடவுளால் எப்போதோ தீர்மானிக்க பட்டுவிட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆகாயத்தின் கீழ் வீட்டை கட்டிவிட்டு வானம் இடிந்து விழும் என்று பயந்து எங்கேயும் ஓடி ஒழிய முடியாது என்பது போல் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையில் இருந்து நம்மால் தப்பித்து கொண்டுவிட முடியாது. பின் எதற்காக நாம் வருந்த வேண்டும். நடப்பது அனைத்தும் நாராயணன் செயல் எனும் போது பொறுப்பை அவனிடம் விட்டு விட்டு ஆகவேண்டிய காரியத்தை கவனிப்பதே புத்திசாலித்தனம்.

உங்கள் ஜாதகம் உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை மற்றவர்களை விட கூர்மையான அறிவு உங்களிடம் உண்டு ஆனால் நீங்கள் தகுதிக்கு மீறிய ஆசையை வளர்த்து கொண்டு வீணான மன குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறீர்கள் முதலில் அதிலிருந்து வெளியில் வாருங்கள் தோற்ற பாடம் அனைத்திலும் வெற்றிவாகை சூடலாம் நல்ல வேலையிலும் அமரலாம். ஆயிரம் தான் மூலிகைகளால் பரிகாரங்களால் விமோசனம் தேடினாலும் சொந்த நம்பிக்கை இல்லாவிட்டால் எவற்றிலும் வெற்றி பெற இயலாது.
Contact Form

Name

Email *

Message *