Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவின் மாநிலமா இலங்கை ?

    
தாடி பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்டானாம் ஒருவன் என்று கிராமபுறத்தில் பேசுவார்கள் அதாவது நிலைமை இன்னதென்று உணராமல் தான்தோன்றித்தனமாக செயல்படுபவர்களை இப்படி கூறுவது வழக்கம். கால நேரத்திற்கு ஒத்துவராத கருத்துக்களை கூறுகின்ற எவரையும் புத்திசாலி என யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை. அப்படிப்பட்ட நபர்களை சமூக இணக்கத்திற்கு ஒத்துவராதவர்கள் என்றே ஒதுக்கி வைப்பார்கள். அப்படி ஒதுக்கி வைக்க வேண்டிய நபர்களின் ஒருவராகத்தான் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசகத்தை எடுத்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. 

இந்திய அரசாங்கத்தின் அதிகார பீடத்தில் இருக்கிற ஒருசிலரை தவிர மற்ற அனைவருமே இலங்கையில் நடந்த மனித படுகொலையை அறிந்து கொதித்த நிலையில் இருக்கும் போது மரியாதையாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு தூதர் தனது மரியாதைக்கு சற்றும் ஒத்துவராத செய்ய கூடாத உண்மைக்கு புறம்பான வரலாற்று பின்புலம் எதுவும் இல்லாத ஒரு கருத்தை பிரச்சாரப்படுத்த ஆரம்பித்திருப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல அதனுள் மறைந்திருக்கும் இரகசியமான ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கை அடைய வேண்டிய விஷயமும் ஆகும். 

அந்த தூதர் சொல்கிறார் இலங்கையில் இருக்கின்ற சிங்களவர்கள் வேறு யாரும் அல்ல வடஇந்தியாவிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் எனவே அவர்களை மட்டுமே இந்திய அரசாங்கமும் இந்திய அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். அப்படி சொல்லும் போது வரலாற்று தகவல் போன்ற ஒரு பீடிகையும் உள்ளே வைக்கிறார். மாமன்னர் அசோகர் புத்த மதத்தை  பரப்புவதற்காக இலங்கைக்கு தனது குமாரன் மகேந்திரனையும் குமாரத்தி சங்கமித்திரையும்  அனுப்பி வைத்தார் அவர்களோடு வந்த சிலரும் இலங்கையில் தெற்கு பகுதியில் குடியேறினார்கள் அவர்களே இப்போதைய சிங்களர்கள் என்ற பச்சை பொய்யை கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அவிழ்த்து விடுகிறார். இந்த தகவல் கரியவாசகம் என்ற தனிமனிதனின் தகுதிக்கு ஏற்ற தகவலாக இருக்கலாம் ஆனால் அவர் வகிக்கும் தூதர் என்ற பதவிக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத தகவல் என்பதை உணர வேண்டும். 

இவர் கூற்றுப்படி பார்த்தால் மகேந்திரன் இலங்கைக்கு செல்லுகிற வரை அங்கே யாருமே இல்லை இவர்கள் வந்த பிறகே மனித சமுதாயம் உருவானது என்பதாகும். மனிதர்களே இல்லாத ஒரு பகுதிக்கு தனது மகனையும் மகளையும் அனுப்பி வைப்பதற்கு அரசர் அசோகருக்கு பித்து பிடித்திருந்ததா என்ன? எதையும் யோசித்து பேசவேண்டும் இலங்கையின் சரித்திரத்தை கூறுகிற "மகாவம்சம்" என்ற நூல் ஆதியில் வங்காள பகுதியில் பிறந்த போக்கிரித்தனமான ஒரு இளவரசன் பல திருட்டு வேலைகளை செய்து மக்களுக்கு சொல்ல முடியாத தொல்லைகளை கொடுத்ததாகவும் அவனது சேட்டைகளை பொறுக்க முடியாத அரசனும் அதிகாரிகளும் மக்களை காப்பாற்ற அந்த இளவரசனை திசை காட்டுகிற கருவி கூட இல்லாத கப்பலில் ஏற்றி நடுக்கடல் கொண்டு விட்டு விட்டதாகவும் காற்று போன திசையில் சென்ற கப்பல் இலங்கையில் கரை தட்டியதாகவும் அந்த இளவரசன் அதன்பிறகு அங்கிருந்த பூர்வகுடி மக்களோடு கலந்து விட்டதாகவும் கூறுகிறதே தவிர மகேந்திரனுக்கு பிறகு தான் சிங்கள இனம் உருவானது என்று கூறவில்லை. 

தூதரின் கருத்தை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம் அதாவது சிங்களவர்கள் இலங்கையின் பூர்வகுடி மக்கள் அல்ல அவர்களும் அவர்கள் கூறுவது போல் தமிழர்களை போல வந்தேறிகளே என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார் போலும். எந்த ஒரு நாட்டின் இன ரீதியான வரலாற்றை பார்க்கும் போது அந்த நாட்டு மக்கள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களாக இருப்பார்கள். அதற்காக அவர்களை அந்த நாட்டு பூர்வகுடிகள் என்று சொல்லாமல் இருக்க முடியாது. பனிரெண்டு வருடம் ஒருபகுதியில் வாழ்ந்துவிட்டால் அவன் அந்த பகுதியின் சொந்த மக்களாகவே கருதபடுவான் அவனை அந்நியன் வந்தேறி என்று சொல்வது எந்த வகையிலும் தர்மம் ஆகாது. 

தமிழர்களை அப்பாவிகளான சிங்கள மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் எந்த சூழலிலும்  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இணக்கம் வந்துவிடக்கூடாது தனக்கு போட்டி தமிழன் என்ற அச்சத்தை சிங்களவர் மத்தியில் இருந்து அகற்றி விட்டால் தங்களால் அரசியல் நடத்த முடியாது அதிகாரம் மிக்க பதவிகளை அனுபவிக்க முடியாது என்பதற்காகவே தமிழர்கள் இலங்கை நாட்டின் சொந்த மக்கள் அல்ல என்ற கருத்தை வலுவாக பரப்பி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் புத்தமத பிக்குகளும். இந்த மாயக்கருத்தை ஏறக்குறைய உண்மை என்றே சிங்கள மக்களில் பெருவாரியான மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். 

இலங்கையில் மட்டும் சிங்கள வெறியை வளர்த்தால் போதாது அதற்கு ஆதரவாக இந்தியாவில் வடக்கு தெற்கு என்று இருக்கும் பேதங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று குள்ளநரித்தனமாக பல சிங்கள இனவாதிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவது வெகு நாட்களாகவே நடந்து வருகிறது. அதன் அடையாளம் தான் கரியவாசகத்தின் இந்த மின்னஞ்சல் பிரச்சாரம். இத்தகைய பிரச்சாரத்தை ஆரம்ப கட்டத்திலேயே அடக்கி ஒடுக்கவில்லை என்றால் இந்தியாவில் தென்பகுதியில் வடஇந்தியர்களை ஆரியர்கள் என்றும் தனிதமிழ் தேசியமே திராவிடர்களின் விடிவு என்றும் கனவு கண்டு கொண்டிருப்பவர்களின் கரங்கள் வலுப்பட்டு விடும். 

சிங்கள மக்களை வடஇந்தியர்களின் வாரிசுகள் என்று கூறுகிற இவர்களே தமிழர்களையும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று தான் பேசுகிறார்கள் இவர்கள் கூற்றுப்படி சிங்களவர் தமிழர் இருவருமே இந்தியாவிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் என்றால் இலங்கைக்கென்று தனியாக ஜனாதிபதி எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? தனி தேசிய கீதம் தனி இராணுவம் என்பவைகள் தான் எதற்கு? பேசாமல் இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கையை அறிவித்து விடலாமே என்று யாரவது இந்தியாவில் பேசினால் அதை மக்கள் மத்தியில் ஆழமாக பரப்ப முயன்றால் சிங்களர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நிம்மதியாக உறங்கத்தான் முடியுமா? எதையும் பின்விளைவை எண்ணி பாராமல் பேசக்கூடாது.

முதலில் இப்போது உலகத்தவர் யாரும் சிங்களவர்களின் பூர்வ கோத்திரத்தை பற்றி அறிய ஆசைப்படவில்லை அது தேவையும் இல்லை இலங்கை என்ற ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் மனித சமூகமே அஞ்சி நடுங்கக்கூடிய கொடுமை ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது அதை மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே முன்னின்று செய்திருக்கிறது அதற்கு காரணமான அனைவரும் நீதியின் முன்னால் நிற்க வேண்டும் என்பது தான் உலகமக்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அதிக கடமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு இருக்கிறது மற்ற நாடுகளை விட இந்தியாவின் தேவை இந்த விஷயத்தில் மிக அதிகம். 

ஆனால் இந்தியாவின் தற்போதைய அரசாங்கத்தின் மனோநிலை தன்னை காப்பாற்றி கொள்வதிலும் தனது பெருமையை நிலை நிறுத்தி கொள்வதிலும் இல்லை ஒரு குடிகாரனின் மயக்கமான செயலை போலவே இப்போது இருந்து வருகிறது. ஆனால் இந்த நிலைமை அதிக காலம் நீடிக்காது வெகு விரைவிலே மாறும் என்று இலங்கைக்கு தெரியும். அப்படி மாறினால் நிலைமையின் விபரீதம் இலங்கைக்கு சாதகமாக அமையாது எனவே இந்தியாவில் வடபகுதி மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலையை உருவாக்கி விட்டால் இந்தியாவின் மயக்கம் தெளியாமலே தொடரும் என்று இலங்கையின் எதிர்பார்ப்பே இந்த பிரச்சாரத்தின் அஸ்திவாரம் எனலாம். 

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் ஆயிரமாயிரம் இலைதழைகளை கொண்டு புகைந்து கொண்டிருக்கின்ற நெருப்பை மறைக்க முயன்றாலும் சுடர்விட்டு எரிய ஆரம்பித்துவிட்ட நெருப்பை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது தன்னை மறைக்கவந்த இலைதழைகளை கூட எரிபொருளாக கொண்டு பற்றி எரியுமே தவிர அணைந்து விடாது. உலக வரலாற்றின் எந்த பக்கத்தை புரட்டினாலும் காலதாமதம்ஆனாலும் கூட நீதி வெல்லும் நீதி மட்டுமே வெல்லும் என்பதே உண்மையாக இருக்கிறது. அது இலங்கை விஷயத்திலும் கண்டிப்பாக நடக்கும். அப்போது இரத்தம் குடிக்கும் ஓநாய்களும் அதற்கு சாமரம் வீசிய குள்ளநரிகளும் மறைந்து கொள்ள இடமில்லாமல் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.

Contact Form

Name

Email *

Message *