Store
  Store
  Store
  Store
  Store
  Store

உணவு உடம்பை மட்டுமா வளர்க்கிறது ?


   குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் சமைத்த உணவை அடிக்கடி உண்ணக்கூடாது அப்படி உண்டால் மனதிற்கும் உடம்பிற்கும் பாதிப்பு வருமென்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா? அது உண்மை என்றால் உணவு விடுதிகளில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களில் கதி என்னாவது? அயல் நாட்டில் உள்ளவர்கள் குடும்பத்தாரின் சமையலை கற்பனையில் மட்டும் தானே காண முடியும் அவர்களின் நிலையும் என்னாவது?

கனகசபாபதி 
மதுரை 




     ணவு என்பது உடலை மட்டும் வளர்ப்பதாக மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. உண்மையில் உணவு என்பது உடலை மட்டும் வளர்க்கவில்லை மனிதனின் புத்தியையும் உணர்வையும் சுபாவத்தையும் வளர்க்கிறது என்றே சொல்ல வேண்டும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் காரசாரமான உணவுகள் மனிதனுக்கு கோபதாபங்களை கொடுப்பதாகவும், அழுகிய கெட்டுப்போன உணவுகள் சோம்பேறித்தனத்தையும், மனச்சோர்வையும் தருவதாகவும் உடனடியாக செரிக்க கூடிய காரம், புளி, உப்பு சுவைகள் கட்டுப்பட்டு இருக்க கூடிய புதிய உணவுகளே மனிதனுக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாக சொல்கிறார். அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் சமைத்தார்களோ இல்லாதவர்கள் சமைத்தார்களோ என்பது இரண்டாம் பட்சம். முதலாம் பட்சம் என்பது நல்ல உணவை உண்ண வேண்டும் அதுவே முக்கியம்..

அதேநேரம் அன்னையோடு அறுசுவைப்போம் என்று தமிழ் பெருமக்கள் கூறுவார்கள். ஆயிரம் நளபாகத்தோடு வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டாலும் அம்மாவின் கையில் ஒருபிடி சாதம் வாங்கி சாப்பிடுவதில் கிடைக்கும் சுவை வேறு எதிலும் கிடைப்பது இல்லை. மனைவி சமைக்கட்டும், சகோதரிகள் சமைக்கட்டும், யார் சமைத்தாலும் கிடைக்காத ஒரு சுவை அம்மா சமைத்தால் மட்டுமே இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நான் சிந்திப்பதுண்டு ஒருவேளை கைப்பக்குவமாக இருக்குமோ என்றால் ஊரில் உள்ள எல்லா அம்மாவும் சமைத்தாலும் எனக்கு ருசியாக இருக்க வேண்டுமே? அப்படி இருப்பது இல்லை என் அம்மா சமைத்தால் மட்டுமே எனக்கு சுவையாக இருக்கிறதே? அதற்கு என்ன காரணம்?

நான் பிறந்தவுடன் திடமான உணவுகளை உண்ண ஆரம்பித்தவுடன் எனக்கு முதல்முறையாக கிடைத்த உணவு எது? என் தாய் சமைத்து ஊட்டிய சாதம் தான் நான் முதல் முதலில் அருந்திய உணவு அந்த சுவை என் நாக்கில் ஒட்டி கொண்டது. அந்த முதல் சுவையே சுவை. மற்றவைகள் எல்லாம் இரண்டாம்பட்சமான சுவை என்ற எண்ணம் ஆழமாக என் மனதில் பதிந்து விடுகிறது. அதனால் தான் அம்மா கைப்பிடி பருப்பில் இரண்டு மிளகாயை கிள்ளிப்போட்டு வைத்த சாம்பார் கூட தேவாமிர்தமாக எனக்கு தெரிகிறது. என் அம்மா எனக்கு சாதம் ஊட்டும் போது வெறும் உணவை மட்டும் ஊட்டவில்லை கூடவே  தனது பாசத்தையும் ஊட்டினாள் அதனால் தான் என் நாக்கு வளர்ந்தது போலவே உடம்பும் மனதும் வளர்ந்தது.

இதிலிருந்து ஒருவிஷயம் தெளிவாக தெரிகிறது உணவு சமைக்கும் போது அந்த உணவு பதார்த்தங்களை கையாளுகின்ற மனிதர்களின் உணர்வுகளும் அவைகளுக்குள் ஊடுருவி செல்லும் என்பது. நல்ல எண்ணங்களால் சமைக்கப்பட்ட உணவு நல்ல பலனை தரும். கெட்ட எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணவு செரிமானம் ஆகாமல் இடைஞ்சலை தான் தரும். நீங்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்கு போனால் அங்கு பரிமாறப்படும் உணவு ஏனோதானோ என்று பரிமாறப்பட்டால் அது உங்களுக்கு சுவை மிகுந்ததாக இருக்காது. அல்லது வலுகட்டாயத்தோடு உண்ணுகிற உணவும்  எதிர்விளைவுகளையே தரும். 

உண்மையில் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களில் நம் அம்மையும், அப்பனும், மனைவியும்,  மக்களும் ஏன் நண்பர்களும் கூட முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் கையால் உணவருந்துவது என்பது வேறு மற்றவர்கள் கையால் உணவருந்துவது வேறு. ஆயிரம் வசதிகள் இருந்தாலும் விடுதிகளில் விற்கப்படும் உணவை தான் உண்ணவேண்டிய நிலை இருந்தால் நிச்சயம் அது பரிதாபத்திற்குரியது அவர்களை இறைவன் தான் ஆரோக்கியமாக வைக்க வேண்டும்.





Contact Form

Name

Email *

Message *