Store
  Store
  Store
  Store
  Store
  Store

காதலியை காத்திருக்க சொல்லுங்கள் !
     குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் ஒரு பெண்ணை பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வருகிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள் கல்லூரி வரையிலும் இருவரும் ஒன்றாகவே படித்தோம் அதன்பிறகு மேல்படிப்பிற்காக அவள் சென்று விட்டாள். என் குடும்ப சூழ்நிலை கட்டாயம் ஒரு வேலை தேடினால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் அவளை தற்காலிகமாக பிரிந்தேன். இதுவரையில் நான்கு வருட காலமாக எனக்கு சரியான வேலை அமையவில்லை அப்படியே அமைந்தாலும் அந்த வேலையில் ஐந்து மாதங்களுக்கு மேல் தொடர முடியவில்லை குடும்பத்தில் மூத்தவன் நான்  ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் உண்டு தம்பி அடுத்த  வருடம் தான் படிப்பை முடிக்கிறான் தங்கைகள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் அப்பா ஒருவரின் வருமானத்தை வைத்து சாப்பாடு நடத்துவதே பெரிய வேலை எனக்கும் சரியான வருமானம் கிடையாது.

இந்த நிலையில் அந்த பெண் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் உடனடியாக அவளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துகிறாள். நல்ல வேலை கூட இல்லாமல் எப்படி திருமணம் செய்து கொள்வது என்று எனக்கு தயக்கமாக இருக்கிறது என்னை கல்யாணம் செய்து கொள்ள முடியாவிட்டால் உயிரை விட்டு விடுவேன் என்று அழுகிறாள் நான் என்ன செய்வது என்றே தெரியாமல் திணறுகிறேன் வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும்  என்று திருமணத்தை செய்து கொண்டு குடும்பத்தாருக்கு இன்னும் அதிகமான கஷ்டத்தை கொடுத்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது தயவு செய்து எனக்கு சரியான பாதையை காட்டி உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு 
அஜித்குமார் 
நெய்வேலி
     த்தாம் வகுப்பில் துவங்கிய காதல் இதுவரையில் தொடருகிறது என்றால் நிச்சயம் அதை இனக்கவர்ச்சி என்று சொல்ல முடியாது இவ்வளவு நாட்கள் காதலித்து விட்டு எனக்கு வேலை இல்லை அதனால் நீ வேறொருவனை திருமணம் செய்துகொள் என்று ஒரு பெண்ணிடம் கூறுவது மகாபாவம். நம்பிய பெண்ணை கைவிடுவதற்கும் கொலை செய்வதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

அதே வேளை யதார்த்தமான வாழ்க்கை முறையையும் சிந்தனை செய்யவேண்டும். வயதான தகப்பனாரின் சம்பாத்தியத்தில் வாழுகிறீர்கள் வீட்டில் திருமண வயதில் இரண்டு  பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை கரையேற்ற வேண்டும் தம்பிக்கு நல்ல வாழ்வையும் அமைத்து கொடுக்க வேண்டும் இந்த நிலையில் எந்த கடமையுமே முற்றுப்பெறாத நிலையில் வீட்டிற்கு இன்னொரு பெண்ணை கொண்டு வருவது மிகப்பெரிய கஷ்டம் மட்டுமல்ல சவாலும் ஆகும். 

கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்யுங்கள் பானை பிடித்த பாக்கியசாலியின் அதிர்ஷ்டத்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று தைரியம் சொல்வதற்கும் உங்கள் ஜாதகப்படி வழி இல்லை காரணம் உங்கள் ஜாதகத்தில் உத்தியோகம் கொடுக்கும் ஒன்பதாவது இடமும் கிரகமும் நன்றாக இல்லை உண்மையை சொல்வதாக இருந்தால் உங்களுக்கு சரியான உத்தியோகம் கிடைப்பதற்கான சூழ்நிலை இல்லை என்றே சொல்லலாம்.  

கடவுள் ஒரு கதவை அடைத்தால் இன்னொரு கதவை விசாலமாகவே திறந்து விடுவார் என்ற விதிக்கு இணங்க ஒன்பதாம் இடம் சரியாக அமையாத உங்களுக்கு சுயதொழில் செய்து முன்னேற்றத்தை தருகின்ற பத்தாமிடம் மிக சிறப்பாக இருக்கிறது வேலை தேடி வீணாக்கிய காலத்தை சிறிதளவாவது சுய தொழில் செய்வதில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று உங்கள் வறுமைக்கு முற்றுப்புள்ளி அமைந்திருக்கும் இருந்தாலும் எதுவும் கெட்டுப்போகவில்லை வருகிற குரு பெயர்ச்சிக்கு பிறகு சொந்தமாக சிறிய முதலீட்டில் தொழிலை துவங்குங்கள் கூடியமானவரை தானியம் சம்மந்தப்பட்ட தொழில் உங்களுக்கு சிறப்பாக அமையும் ஒரு வருடத்திலேயே நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

இதுவரை பொறுமையாக காத்திருந்த காதலியை இன்னும் ஒரு வருடம் காத்திருக்க சொல்லுங்கள் கடவுள் அருளால் உங்கள் இருவர் வாழ்வும் நலமோடு அமைந்து வளமோடு வாழ்வீர்கள்.


Contact Form

Name

Email *

Message *