Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாசிமணியிலும் பகவான் உண்டு !

இந்து மத வரலாற்று தொடர் 58


     குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் சூட்டி அழைத்து பார்ப்பதில் தனி சந்தோசம் இருக்கிறது அதுவும் முதல் குழந்தைக்கு பெயர் சூட்டுகிற வைபவம் இருக்கிறதே அதற்கான எத்தனிப்பே அலாதியானது சிலர் குழந்தை கருவில் உருவாக துவங்கியவுடனேயே பெயர் வைப்பதை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இன்ன பெயர் தான் வைக்க வேண்டுமென்று கணவனும் அது கூடாது இன்னமாதிரிதான் பெயர் வைக்க வேண்டுமென்று மனைவியும் போட்டி போட்டு கொள்வது தனியான சுவை. சில வேளைகளில் இந்த போட்டியே முற்றி சண்டை சச்சரவுகளில் போய் முடிந்து உறவினர்கள் வந்து பஞ்சாயத்து பேச வேண்டிய நிலையம் ஏற்பட்டு விடுகிறது.

மனைவிக்கு ஆசை தனக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அதற்கு தனது தகப்பன் பெயரை வைக்க வேண்டும் மீசை முறுக்கி வேஷ்டியை இழுத்து கட்டி அவர் கம்பீரமாக நடப்பது போல் தனது மகனும் நடப்பான் அவர் நாலு பேருக்கு நியாயம் கூறுவது போல தன் மகனும் செய்வான் என்று அவள் கற்பனை செய்து கணவனிடம் தெரிவிப்பாள். அவள் சொன்னாளோ இல்லையோ கணவனின் கோபம் தலை மீது ஏறிவிடும். உன் அப்பன் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவன் கல்யாணம் முடிந்து மறுவீட்டுக்கு போகும் போது மயில் கண் போட்ட வேஷ்டி வாங்கி தருவதாக வலிய வந்து வாக்குறுதி கொடுத்தார் அரைமுழ துண்டு கூட வாங்கி கொடுக்காமல் அனுப்பி விட்டான் அப்படி பட்ட மோசக்காரன் பெயரையா என் மகனுக்கு வைக்க வேண்டும்? என் அப்பாவின் பெயரை தான் வைக்க வேண்டும் என்று கத்துவான்.

வேறொரு கணவனுக்கு இன்னொரு ஆசை தனக்கு பிறப்பது பெண் குழந்தையாக இருந்தால் மீசை முளைத்த பருவத்தில் எதிர்த்த வீட்டு மாடியில் நின்று முத்துப்பல் தெரிய சிரித்து விரல் ஜாடையில் ஆயிரம் கதை சொல்லிய தன் முதல் காதலியின் நினைவாகவும் பத்து பைசாவுக்கு துப்பு இல்லாத அந்த பய மகளோடு ஊர் சுற்றினால் கை காலை உடைத்து போடுவேன் என்று மிரட்டி தன் காதலுக்கு அப்பா கட்டிய சமாதியின் நினைவாகவும் மனதை விட்டு எவ்வளவு தான் சோப்பு போட்டு அழித்தாலும் போகவே போகாத இளம் பருவத்து காதலியின் நினைவாக அவளின் பெயரை சூட்டுவதற்கு ஆசை.

ஆனால் என்ன செய்வது? தான் காதலித்ததும் தனது அப்பாவின் உதைகளுக்கு பயந்து காதலை மனதிற்குள்ளையே குழி தோண்டி புதைத்தும் தனது மனைவிக்கு நன்றாக தெரியும். இந்த லட்சணத்தில் காதலியின் பெயரை குழந்தைக்கு வைத்தால் அடுத்த வேளை சோறு போட மாட்டாள். வீட்டுக்கு வெளியே நிற்கவைத்து விளக்குமாற்றால் பூஜை செய்தாலும் செய்துவிடுவாள். என்ற பயத்தில் மெளன சாமியாராக போவோர்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கு பெயர் வைப்பதிலேயும் பெற்றோர்களின் இனிமையான நினைவுகள் ஆழமாக பதிந்து கிடக்கும்.

மற்ற நாடுகளில் எப்படியோ எனக்கு தெரியாது நமது நாட்டில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் கூட ஆன்மீக சிந்தனை மலிந்து கிடக்கிறது மகனுக்கோ மகளுக்கோ இறைவனின் பெயரை வைப்பதனால் நம்மை அறியாமலையே தினசரி பலமுறை இறை நாமாக்களை பாராயணம் செய்கிறோம். கடவுளை பற்றி நினைப்பே இல்லாதவன் கூட சாகும் தருவாயில் சங்கரா என்று மகனை அழைத்தால் கூட அது சிவபெருமானின் நினைவோடு அவன் இறந்ததாக கொள்ள வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள்.

நம்மை போன்றவர்கள் குழந்தைகளுக்கு பெயர்களை இப்படிதான் இடுகிறோம் ஆனால் நம்மிடமே வாழுகின்ற நரிகுறவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிந்தனை போக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். தற்காலத்தில் சினிமா நடிகர்களின் மேல் அவர்கள் வைத்திருக்கின்ற ஈடுபாட்டால் நட்சத்திரங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டினாலும் கூட பல நரிகுறவர்கள் தங்களது பரம்பரை வழக்கத்தை இன்னும் விட்டுவிடவில்லை.

ஆற்காட்டான், விக்கிரவாண்டியான், நாமக்கல்லான், மெட்ராஸ் என்ற பெயர்கள் நரிகுறவர்கள் மத்தியில் மிக பிரபலமானது ஒரு நரிக்குறவர் கூட்டத்தில் இத்தகைய பெயர் பத்தில் ஐந்து பேருக்காவது கண்டிப்பாக இருக்கும். இந்த பெயர்கள் எதை சுட்டுகிறது என்றால் அவர்கள் தங்கள் தொழில் நிமித்தமாக பல ஊருக்கு சுற்றி அலையும் போது எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையே குழந்தையின் பெயராக வைத்து விடுவார்கள்.

இப்படி பெயர் வைப்பதிலும் விந்தையான போக்கை கொண்ட நரிகுறவ மக்கள் இறைவழிபாடு செய்வதிலும் பல புதுமைகளை வைத்திருக்கிறார்கள் பொதுவாக நாம் தெய்வங்களை ஆலயங்கள் அமைத்தோ அல்லது ஒரு பொது இடத்தில் வைத்தோ வழிபடுவோம். ஆனால் நரிகுறவர்கள் தங்கள் கூடாரங்கலையே வழிபாடும் இடங்களாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வவொரு நரிகுறவ கூடாரத்திலும் வழிபாட்டுக்குறிய பொருள்கள் கண்டிப்பாக இருக்கும் தங்களது தெய்வங்களை வைத்திருக்கும் பெட்டியை சாமி மூட்டை என்று நரிகுறவர்கள் அழைப்பார்கள் இந்த சாமி மூட்டை இல்லாத குடும்பங்களே அவர்கள் மத்தியில் இல்லை என்று சொல்லலாம்.

அவர்கள் சாமி பார்ப்பதற்கு எளிமையாகவும் அழகாகவும் இருப்பார்கள் வெள்ளியில் செய்யப்பட்ட பெண் தெய்வ உருவம் பத்து செ.மீ உயரத்தில் இருக்கும் அந்த உருவத்திற்கு நான்கு கைகள் இருக்கும் வழக்கமான சாமி உருவங்கள் அபயம், ஹஸ்தம் காட்டும் பாங்கிலேயே கைகள் அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம் ஆனால் இந்த சுவாமி உருவம் அப்படி இல்லாமல் தொங்கும் பாணியிலேயே அமைந்திருக்கும் முழங்கால் வரையில் உள்ள பாவாடையும் வளையல்களும் கைபட்டைகளும் கொண்ட அந்த பெண்  வடிவம் பெரிய வயிறு உடையதாக அமைந்திருக்கும் இந்த உருவம் முக்கோண  வடிவிலான துணியால் அமைந்த மெத்தையின் மேல் வைக்க பட்டிருக்கும் இதை மற்றவர்கள் கண்களில் படாதவாறு மூட்டை கட்டி வைத்திருப்பார்கள்.

ஆடிமாதம் பங்குனி மாதம் போன்ற நாட்களில் சில நேரம் மட்டும் பூஜைகள் நடத்தினாலும் புரட்டாசி மாதத்தில் மட்டுமே பரவலான நரிகுறவர்கள் சாமி கும்பிடும் சடங்கை நடத்துகிறார்கள். புரட்டாசி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை அன்று விரதம் துவங்கி கடைசி வெள்ளி கிழமை வரை விரதம் இருந்து பூஜைக்கு தங்களை ஆயத்தபடுத்தி கொள்கிறார்கள். மூட்டையில் கட்டி வைக்க பட்டிருக்கும் சாமியை வெளியில் எடுத்து கூடாரத்தில் நடுவில் வைத்து மஞ்சள் குங்குமம் மலர்களை சாற்றி தினசரி பூஜை செய்து கடைசி வெள்ளி அன்று இரவு முழுவதும் ஆடிபாடி ஒரு பைநிறைய பச்சை அரிசியும் பனிரெண்டு தேங்காயும் படையலிட்டு அரிசி மாவோடு பனைவெல்லம் கலந்து நெய்யோடு பிசைந்து ரொட்டி செய்து எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள்

சாராயம் அல்லது பிராந்தி சுவாமிக்கு படைக்கப்பட்டு ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மதுவருந்தி தன்னை மறந்த நிலையில் வெறிக்கூச்சல் போட்டு நடனமாடுவார்கள் அந்த நிலையில் நம்மை போன்ற மனிதர்களை அவர்கள் தனது கூட்டத்திற்குள் அனுமதிப்பது கிடையாது தப்பி தவறி யாரவது தெரியாமல் மாட்டி கொண்டால் கொடுக்கின்ற உதையை வாங்க முடியாது. நடனம் எல்லாம் முடிந்த பிறகே சுவாமிக்கு எருமை மாடு அல்லது ஆடு பலி கொடுக்கிறார்கள். பலிகொடுக்கப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை சுவாமியின் மேலேயே தெளித்த பிறகு கூட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும் பச்சை இரத்தத்தை குடிக்கிறார்கள். பெண்கள் இந்த இரத்தம் குடிக்கும் சடங்கில் கலந்து கொள்ள கூடாது  பலிகொடுத்த விலங்கின் மாமிசத்தை சமைத்து புசிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு.

இத்தகைய வழிபாடு தவிர எழுபானை பூஜை என்ற ஒரு இரகசியமான வழிபாட்டு முறையும் நரிக்குறவர் மத்தியில் இருக்கிறது இதில் அவர்கள் தப்பி தவறி கூட மற்ற இனத்து மக்களை அனுமதிப்பது இல்லை அறுவடை காலம் முடிந்த தை மாதத்தில் ஊருக்கு வெளியே அடர்ந்த காடுகளில் இந்த வழிபாட்டை அவர்கள் நடத்துகிறார்கள் மூன்று கற்களால் அடுப்பு அமைத்து ஒன்றைவிட ஒன்று சிறியதான ஏழு பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அடுப்பு மூட்டுகிறார்கள் ஏழாவதாக மேலிருக்கும்  பானையில் பச்சரிசி போட்டு பொங்கல் வைக்கிறார்கள் சாதம் பொங்கி வரும் போது வெறும் கைகளால் சாமி ஆடுகிறவர் பொங்கலை கிளருவாராம்.

ஏழாவது பானையில் பொங்கல் முடிந்தவுடன் ஆறாவது பானையில் பொங்கல் செய்வார்களாம் இப்படி ஏழு பானைகளிலும் பொங்கல் செய்து அதன் பிறகு அதனோடு பனைவெல்லம் கலந்து சாமிக்கு படைத்து அனைவரும் உண்பார்களாம். இந்த பூஜையில் மற்ற இனத்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பதோடு அவர்கள் இனத்து பெண்கள் சிறுவர் சிறுமிகளுக்கு கூட அனுமதி கொடுப்பது இல்லை =. அதற்கு காரணம் அந்த பொங்கல் நடத்துகிற போது காளி மாதாவே நேராக அங்கு வருவாளாம் அவளது வருகை பெண்களுக்கு குழந்தைகளுக்கு கிலியை கொடுத்துவிடுமாம் இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால் அச்சபடுபவன் ஆண்டவனை தரிசிக்க முடியாது என்பதாகும்.

இதுவரை நமது இந்துமத வரலாற்று தொடரில் வேத காலத்திற்கு முற்பட்ட இந்து மதம் வேதகாலம் செம்மைபடுத்திய இந்துமதம் துவங்கி அதனுள் இருக்கின்ற பல்வேறு வகையான தத்துவ பிரிவுகளையும் சம்பிரதாய கோட்பாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அறிந்துவந்தோம் கடினமான விஷயங்கள் துவங்கி மிக எளிமையான நரிகுறவர்கள் வழிபாடுகள் வரை நாம் வந்ததற்கு அடிப்படையான காரணம் இந்துமதம் என்பதே இறைவனை நேருக்கு நேரக தரிசனம் செய்து அல்லது உணர்ந்து அவனோடு  ஐக்கியமாவது ஒன்று மட்டுமே என்பதை நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காக... இதில் நாம் சொன்னவைகளும் சிந்தித்தவைகள் சிறிதளவே சொல்லாமல் விட்டவைகள் நிறைய அவைகளை வருங்காலத்தில் வேறொரு நல்ல சமையத்தில் கண்டிப்பாக சிந்திப்போம் அதுவரையில் தற்காலிகமாக விடைபெறுவோம் 


ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

முற்றும் 




Contact Form

Name

Email *

Message *