Store
  Store
  Store
  Store
  Store
  Store

தங்கம் செய்வதற்கான வழி !


    ம்மன் கோவில்கள் இல்லாத தமிழ்நாட்டு கிராமங்களே இல்லை என்று சொல்லலாம் தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற அப்பன் நடராஜ பெருமானையும் ஸ்ரீ ரங்கத்தில் அனந்தசயனத்தில் ஆழ்ந்திருக்கும் எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணனையும் அன்பு கொண்டு போற்றி வணங்குபவர்கள் நாடு முழுவதும் உண்டு என்றாலும் அப்பனை வழிபடுபவர்கள் அதிகமா? அம்மையை தொழுபவர்கள் அதிகமா? என்று ஒரு கேள்வியை கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு அம்மையின் அருளை நாடி நிற்பவர்களை அதிகம் என்று சொல்லலாம். அந்த அளவு அம்பிகையின் அருள் கடாட்சம் நமது ஊர்கள் தோறும் இல்லங்கள் தோறும் நிரம்பி வழிகிறது அப்படிப்பட்ட அம்மையின் ஆலயத்தை காணுகின்ற போதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றும் அன்னை வழிபாடு மட்டும் இந்த நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை என்றால் என்றோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற தான்தோன்றித்தனமான நாத்திக கூட்டம் பெருகி இருக்கும். 

இப்படி நான் கூறுவதில் சிலருக்கு திகைப்பு இருக்கலாம் சிலர் இது மிகைப்படுத்தப்பட்ட வாதம் என்றும் ஒதுக்க பார்க்கலாம் ஆனால் நான் சொல்வதின் உட்பொருளை நன்றாக உள்வாங்கி கொண்டால் உண்மை என்னவென்று தெளிவாக தெரியும். நமது நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள சில பெரிய மனிதர்கள் பதவியை பிடிக்க வேண்டும் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் மத்தியில் இல்லாத பிளவுகளை தங்களது கற்பனைத்திறத்தால் உருவாக்கி உலவ விட்டார்கள் தாங்கள் கண்டுபிடித்த போலியான வாதத்திற்கு எவரும் ஆதாரங்களை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆராயத்தெரியாத இளைய மனதுகளை சுலபமாக சுண்டி இழுக்கும் நாத்திக வாதத்தை மேடை தோறும் முழங்க ஆரம்பித்தார்கள் மேடையேறி பேசுவதில் கூட்டத்தை சேர்ப்பதும் சேர்த்த கூட்டத்தை ஒட்டுமொத்தமாக மூளைச்சலவை செய்வதும் சற்று கடினம் என்பதற்காக மக்கள் ஊடகங்களான திரைப்படம் நாடகம் பத்திரிக்கை போன்றவைகளிலும் ஆக்கிரமித்து மிக ஆரவாரமாக செயல்பட்டார்கள் அதன் விளைவாக அவர்களால் ஓட்டுக்களை அறுவடை செய்து பதவிகளை பிடிக்க முடிந்தது ஒரு சிறிய கூட்டத்தை பகுத்தறிவாதிகள் என்ற பெயரில் உருவாக்கி விடவும் முடிந்தது.

பதவிகளை பிடிக்க முடிந்த அவர்களால் மக்களின் ஆன்மீக நம்பிக்கையை அசைத்து கூட பார்க்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் ஆத்திகவாதிகள் ஆக்கப்பூர்வமாக செய்த காரியங்கள் அல்ல இன்னும் சொல்ல போனால் நாத்திக கூட்டத்தை முறியடிப்பதற்கு ஆத்திக மனங்கள் எதுவுமே செய்யவில்லை தாங்கள் எப்போதும் செய்வது போன்ற தங்களது பங்காளிச்சண்டைகளை நடத்தி கொண்டிருந்தார்களே தவிர தங்களை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணரக்கூட அவர்கள் தலைப்படவில்லை ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அம்மன் கோவில்களும் அந்த கோவில்களின் திருவிழாக்களும் செய்தன. வயதில் பெரியவர்களாக இருக்கட்டும் சிறியவர்களாக இருக்கட்டும் வருடா வருடம் வழக்கப்படி நடக்கின்ற ஊர் திருவிழாக்கள் நடக்கவில்லை என்றால் ஊரில் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தாலும் இறைவழிபாட்டின் மீது கொண்ட மிக தீவிரமான நம்பிக்கையாலும் பகட்டான பகுத்தறிவு வாதம் தங்களை அண்டாமல் காத்துக்கொண்டார்கள் என்று துணிந்து சொல்லலாம். 

இதயத்தில் உள்ளிருந்து பீறிட்டு வருகின்ற அன்பால் இறைவனை வணங்குவதற்கும் அச்சத்தால் வணங்குவதற்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு அன்பின் வெளிப்பாடாக பக்தி இருந்தால் அதில் மூடநம்பிக்கை முளையிடாது அச்சத்தால் வருகின்ற பக்தியாக இருந்தால் மிக கண்டிப்பாக தவறுதலான நம்பிக்கைகள் வளர ஆரம்பிக்கும் துரதிரஷ்டவசமாக அன்பை விட அச்சம் நமது மக்கள் மத்தியில் சற்று தூக்குதலாக இருந்ததனால் மூட நம்பிக்கைகளே பல இடங்களில் பளிச்சிட்டன அதன் விளைவாகவே ஆன்மீக வியாபாரிகளும் கபட வேடதாரிகளும் பல இடங்களில் கண்களுக்கு தென்பட்டனர் உண்மையான வழிகாட்டிகளை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள சிரமப்பட்டார்கள் ஆன்மீக சிந்தனை என்பது முழுமை பெற்ற செயல் வடிவமாக மாறவேண்டுமானால் ஆன்மாவின் உள்ளிருந்து உந்து சக்தி பெருக்கெடுப்பதும் அதை சரியான கோணத்தில் திசை திருப்பிவிட புறச்சூழலிருந்து நல்ல தூண்டுதலும் கண்டிப்பாக அவசியம் அதாவது ஒரு மனிதனின் உண்மையான ஆன்மிக நோக்கம் நிறைவு பெற வேண்டுமானால் குரு என்பவர் மிகவும் அவசியம் அதனால் தான் நமது முன்னோர்கள் குருவில்லா வித்தை பாழ் என்றார்கள். 

ஒவ்வொரு ஆன்மாவும் படைக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் அவைகள் பூரணத்துவத்தை எய்த வேண்டும் என்பதே ஆகும். பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் கடைசியில் பூரணத்தை அடைய வேண்டும் அப்படி அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும் என்பது நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமாகும். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கை முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கையின் எண்ணிய எண்ணங்களின் செய்த செயல்களின் தொகுப்பே ஆகும். இனி அடுத்ததாக பெறக்கூடிய வாழ்க்கை இப்போது நாம் செய்து கொண்டிருக்கின்ற செயல்களின் விளைவாக கிடைக்கப்போவதாகவும். எனவே கிடைக்கப்போவது நல்லவிதமாக கிடைப்பதற்கு இப்போதைய காரியங்கள் நற்காரியங்களாக இருக்க வேண்டும் அந்த செயல்களை நோக்கி நம்மை நகர்த்துவதற்கு புறசக்திகளும் நமக்கு துணை செய்ய வேண்டும். 

ஆன்மீக முன்னேற்றத்திற்காக கிடைக்கின்ற வெளித்தூண்டல் புத்தகங்களின் மூலமாக பெற்றுவிடலாம் என்று சிலர் தவிர்க்க நினைக்கிறார்கள் நூல்களின் மூலமாக அறிவை வளர்த்து கொள்ளலாமே தவிர அனுபவத்தை வளர்த்து கொள்ள இயலாது. ஒரு ஆன்மா வளர வேண்டுமானால் அதற்கு இன்னொரு ஆன்மாவால் நேரடியாக தூண்டப்பட வேண்டும் அதாவது பெளதீகமான வழிகாட்டுதல் இல்லாமல் எதுவும் நிகழாது சிலர் நினைக்கலாம் புத்தகங்களின் கிடைக்கும் அறிவையும் நமது உள்ளுணர்வையும் சரிவர பயன்படுத்தினால் இலக்கை அடைந்து விடலாம் என்று இதை தவறுதலான கருத்து என்று சொல்ல முடியாவிட்டாலும் யதார்த்தமான நிலைகளுக்கான வழி என்று ஏற்றுகொள்ள இயலாது. காரணம் நடைபழக தெரியாத குழந்தைக்கு நடைவண்டியை கொடுத்தால் மட்டும் போதாது நடைவண்டியை பயன்படுத்துவதற்கான முறைகளையும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும். வெறும் சூத்திரங்களை மட்டுமே வைத்து கொண்டு கணக்கு போடுவதை விட சூத்திரத்தை உருவாக்கியவர்களை நம்பி கணக்கு போட்டால் உடனடியான பலனை பெறலாம். இதை ஒவ்வொரு மனிதனுக்கும் குருதேவர் என்று ஒருவர் அவசியம் என்ற எனது வாதத்தை வலுப்படுத்துவதற்காக சொல்லவில்லை என் அனுபவத்தில் உணர்ந்ததால் சொல்கிறேன். 

இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கொரு ஆசை தோன்றியது ஏழை எளியவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டுமானால் பணம் அவசியம் தேவை அந்த பணத்தை உடனடியாக அளவுக்கு அதிகமாக பெற்றால் மட்டுமே உதவி செய்ய இயலும் என்று நம்பினேன் அதற்கு பணத்தை பெருவதற்காக என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்று மிகத்தீவிரமாக சிந்தித்தேன் அப்படி சிந்தனை செய்ததின் விளைவாக ஒரு வழிமுறை எனக்கு தென்பட்டது அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பலர் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கத்தை தாங்களாக உருவாக்கி அதன் மூலம் பணம் பெற்று பல காரியங்களை சாதித்திருக்கிறார்கள் நாமும் கூட அவர்கள் காட்டிய வழியில் சென்று இரசவாதம் செய்து தங்கத்தை உருவாக்கினால் என்ன? என்பதே அந்த வழிமுறையாகும்.

தங்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததோ இல்லையோ அதற்கான தேடுதல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டேன். சரஸ்வதி மகாலில் உள்ள மிக பழைய நூல்களில் தங்கம் செய்வதற்கான விளக்கங்கள் இருக்கிறது அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து படித்தால் கண்டிப்பாக தங்கம் செய்வதற்கான சூத்திரம் கிடைக்குமென்று ஒரு நண்பர் சொன்னார். பிறகு சும்மா இருக்க முடியுமா? தஞ்சாவூரில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல ஊர்களிலும் இரசவாத கலையை சொல்லுகின்ற நூல்களை அசுர வேகத்தில் தேடிப்படிக்க ஆரம்பித்தேன் படித்த படிப்பினால் பக்கங்கள் நகர்ந்தனவே ஒழிய உருப்படியான ஒரு விஷயத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மனதில் சோர்வு இருந்தாலும் தோல்வியை ஒத்து கொள்கின்ற ஜாதியாக நான் பிறக்கவில்லை எனவே ஆயிரம் தடைகள் இருந்தாலும் அத்தனையையும் பொறுத்து கொண்டு மீண்டும் மீண்டும் தேடத் துவங்கினேன் அப்படி தேடியதன் விளைவாக இரசவாதம் செய்வதற்கு தேவையான பல மூலப்பொருள்களின் பெயர்களை தெரிந்து கொண்டேன்.

அப்படி நான் அறிந்த பெயர்களில் ஏமப்பால் என்பது ஒன்றாகும் பசும்பால், ஆட்டுப்பால் என்பது தெரியும் ஏன் கள்ளிச்செடியில் கூட பால் வருவது தெரியும். ஏமப்பால் என்பது பற்றி கேள்விப்பட்டதே இல்லையே என்று குழம்பினேன், பல சித்த வைத்தியர்களிடம் மூலிகையை பற்றி விபரம் தெரிந்தவர்களிடம் நச்சரித்து கேட்டு பார்த்தேன் அவர்களும் கைவிரித்தார்களே தவிர பதிலை தரவில்லை. மூலிகை குண அகராதிகள் சித்தர்களின் பரிபாஷை அகராதிகள் தமிழ் நிகண்டுகள் என்று தேடித்தேடி சோர்வடைந்த போது சிந்தாமணி நிகண்டு என்ற ஒரு பழைய நூலில் ஏமப்பால் என்றால் பன்றியுடைய பால் என்பதை அறிந்தேன். அறிந்த மாத்திரத்தில் ஏதோ தங்கமே செய்து கைநிறைய பெற்று விட்டது போல கற்பனை சிறகடித்து பறந்து வானமண்டலத்தையும் தாண்டிச்சென்றது. பன்றியினுடைய பாலுக்கா அர்த்தம் புரியாமல் இவ்வளவு நாளும் ஏறக்குறைய ஒன்றரை வருடம் அலைந்தோம் என்று வெட்கம் கூட வந்தது.

சரி இனி பன்றியின் பாலை பெற்று இரசவாதத்தை துவங்கி விடலாம் என்ற எண்ணத்தில் பன்றி வளர்ப்பவர் ஒருவரை பார்த்து எனக்கொரு ஐந்து லிட்டர் பன்றி பால் தேவைப்படுகிறது உங்களால் தரமுடியுமா? என்று கேட்டேன். அவர் என்னை ஒரு விசித்திரமான பிராணியை பார்ப்பது போல மேலும் கீழும் பார்த்து விளையாடுகிறீர்களா என்று கேட்டார். எனக்கொன்றும் புரியவில்லை நான் ஒன்றும் தவறுதலாக கேட்கவில்லையே பன்றி வளர்ப்பவரிடம் தானே பன்றியின் பால் கேட்கிறோம் என்னவோ புலிப்பால் கேட்டது போல இவர் நம்மை முறைக்கிறாரே என்று எனக்கு தோன்றி விளையாடவில்லை நிஜமாகத்தான் கேட்கிறேன் எனக்கு பன்றியின் பால் அவசியம் தேவை என்று சொன்னேன் அதற்கு அவர் சிரித்து கொண்டே ஆடுமாடுகளில் பால் கறப்பதை போல பன்றியில் பால்கறக்க இயலாது பன்றிக்குட்டி மடுவில் வாய் வைத்து உறிஞ்சினால் தான் பால்வரும் கறந்தால் வராது என்று சொன்னார் அப்போது தான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது.

பன்றிக்குட்டியின் வாயிலிருந்து பாலை எடுப்பதாக இருந்தால் அதனுடைய எச்சிலும் சேர்ந்தே வரும் அப்படி வருகிற போது பாலினுடைய சுயத்தன்மை என்பது நிச்சயமாக மாறிவிடும். எனவே அது இரசவாதத்திற்கு உதவாது ஏமப்பால் என்பது நிச்சயம் பன்றியின் பாலாக இருக்காது என்ற முடிவிற்கு வந்து விட்டேன் இரசவாதத்தில் தேவைப்படுகிற பல பொருள்களில் ஒன்றை தேடி கண்டுபிடிப்பதற்கே இத்தனை சிரமமாக இருக்கிறதே அத்தனை பொருள்களையும் இனம்கண்டு சேகரிப்பது என்றால் அது நடக்ககூடிய விஷயமா? அதை நம்மால் செய்ய முடியுமா அவ்வளவு சிரமப்பட்டு அது நமக்கு தேவைதானா என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டேன். அதனால் இரண்டு வருடமாக எனக்குள் ஓடிய இரசவாதம் என்ற நெருப்பு ஆறு ஏறக்குறைய வற்ற ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். சிறிது காலத்தில் அவைகளை மறந்தும் போய்விட்டேன்.

ஒரு சமயத்தில் ராஜேந்திரன் ராஜு என்ற ஆந்திராவை சேர்ந்த ஒரு நண்பரிடம் நல்ல பழக்கம் இருந்தது அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை காடுகளில் கழித்தவர் அவர் இதனால் காடுகளின் இரகசியம் மூலிகைகளின் அதிசயம் போன்றவைகளை அவர் கூறுவதை வாய்பிளந்து கேட்டுகொண்டே இருப்பேன் வெளுத்த முடியை கறுப்பாக்கும் மூலிகை, சுருக்கம் விழுந்த தோல்களை பளபளப்பாக்கும் மூலிகை, இளமையை தரும் மூலிகை என்று அடுக்கடுக்காக சொல்வார். அவருக்கு மூலிகையை பற்றிய பல இரகசியங்களை காட்டுவாசிகளும் காடுகளில் வாழுகிற சில சாமியார்களும் சொல்லி கொடுத்திருந்தார்கள் அவருடைய அளப்பரிய மூலிகை ஞானத்தை கண்டு வியந்த நான் இவருக்கு ஏமப்பாலை பற்றிய விபரம் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ள அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் மிகத்தெளிவான பதிலை சில வினாடிகளில் சொல்லி என்னை அதிர வைத்தார். 

ஏமப்பால் என்பது மண் புழு இருக்கிறதே அவைகளை உயிரோடு பிடித்து தயிரில் ஊற வைக்க வேண்டும் அப்படி ஊற வைக்கும் போது மண்புழுவின் வயிற்றுக்குள் இருக்கின்ற மண்களை எல்லாம் வாந்தி எடுத்து விட்டு புழு செத்துவிடும் அப்படி செத்த புழுவை எடுத்து வெயிலில் காய வைத்தால் புழுக்கள் செப்பு கம்பிகள் போல விரைத்து விடும் ஏனென்றால் மண்புழுவின் உடல் முழுவதுமே செப்பு சக்திகளே அதிகம் அப்படி காய்ந்த மண்புழுவை வாணலில் போட்டு உருக்கினால் ஒருவித நெய் வரும் அந்த நெய்யின் பெயரே ஏமப்பால் என்று சொன்னார். உண்மையாகவே அதிர்ந்து விட்டேன் நமது சித்தர்களின் பரிபாஷைக்கு இவ்வளவு ஆழமான மறைமுகமான பொருள்கள் இருக்கிறதா? என்பதை சிந்தித்த போது மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது.

இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் ஆயிரமாயிரம் ரூபாய்களை கொட்டி எண்ணில் அடங்காத புத்தகங்களை வாங்கி கண்கள் பூத்து போகிற வரை படித்தாலும் கூட தெரியாத விஷயங்களை நுண்ணறிவை பயன்படுத்தி உள்ளுணர்வை தட்டி எழுப்பி குடைந்து குடைந்து பார்த்தாலும் அகப்படாத விஷயத்தை ஒரு நொடியில் தக்க குருமார்கள் தொட்டு காட்டி விடுகிறார்கள். இதனால் தான் பெரியவர்கள் குருவில்லா வித்தை பாழ் என்று சொன்னார்கள் என்பதை புரிந்து கொண்டேன் இப்படி நமது வாழ்க்கையில் ராஜேந்திர ராஜுவை போல எத்தனையோ குருமார்களை அடையாளம் தெரியாமல் அறியாமையால் தவற விட்டு விட்டு ஆன்மீக பாதையில் முன்னேறி செல்ல முடியாமல் மீண்டும் மீண்டும் பிறந்து அவதிப்படுகிறோம். எனவே தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது எனது வாழ்நாளில் இதுவரை பல குருமார்களை சந்தித்திருக்கிறேன் அவர்களிடமிருந்து நான் பல அபூர்வ விஷயங்களை பெற்றிருக்கிறேன் அவற்றை எல்லாம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டால் அவர்களும் தங்களின் குருமார்களை அடையாளம் தெரிந்து அடைக்கலம் அடைவதற்கு வசதியாக இருக்கும் அவர்களது பிறவிப்பயணம் சுலபமானதாக சுகமானதாக மிக நீண்ட நெடிய பயணமாக இல்லாமல் இருக்கும் என்பதை உணர்ந்து அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434

Contact Form

Name

Email *

Message *