Store
  Store
  Store
  Store
  Store
  Store

அத்வானியின் செயல் வரலாற்றுப் பிழையா...?


     சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் அது அவர்களின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும் குறைந்தபட்சம் அவர்களை மட்டுமாவது பாதிக்கும் ஆனால் தலைவர்கள் என்று அழைக்கப்படுகிற அசாதாரணமான மனிதர்கள் தவறு செய்தால் அது நிச்சயம் ஒரு நாட்டையே பாதிக்கும் அல்லது வரலாற்று போக்கையே திசைமாற்றி விட்டுவிடும்

பஞ்சசீலம் என்ற கொள்கையை உருவாக்கி அதை உலக முழுவதும் பரப்பி உலக தலைவர்களில் மிக உன்னதமானவர் என்று நிரந்தரமாக புகழப்படவேண்டும் என்று பண்டிதர் நேரு விரும்பினார் அவர் அப்படி விரும்பியதில் எந்த தவறும் கிடையாது உலக தலைவர்களுக்கான எல்லாவித தகுதிகளும் அவருக்கு இருந்தது ஆனால் அவர், தான் ஒருவர் மட்டும் பஞ்சசீல கொள்கையை முழுமையாக ஏற்று நடப்பதுபோல மற்றவர்களும் நடப்பார்கள் என்று நம்பியது பெரிய தவறு. நீங்கள் மட்டுமே பஞ்சசீலத்தை நம்பி நடக்கிறீர்கள் மற்றவர்கள் குறிப்பாக சீனர்கள் அந்த கொள்கையை நம்புவது போல பாசாங்கு செய்வது போலித்தனம் ஐ.நா மன்றத்தில் அங்கத்தினர் ஆவதற்கு இந்தியாவை பயன்படுத்த போடுகிற கபட நாடகம் என்று பலமுறை எடுத்து சொன்னபோதும் அதை நம்பாமல் போனது மிகப்பெரிய தவறு அந்த தவறின் விளைவு தான் இன்றுவரை சீனாவோடு இந்திய தேசம் மல்லுகட்டி நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

நேரு மட்டுமல்ல காந்தியும் கூட இதை மாதிரியான தவறுகளை சில நேரம் செய்திருக்கிறார் நேதாஜியோடு அவருக்கிருந்த கொள்கை ரீதியிலான முரண்பாட்டால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பட்டாபி சீத்தாராமையா அவர்களை நிறுத்தி தோற்று நிரந்தரமாக காங்கிரசுக்கும் நேதாஜி அவர்களுக்கும் பிரிவை உருவாக்க காரணமாகி விட்டார் காந்தி மட்டும் அந்த நேரத்தில் சற்று பொறுமை பாராட்டி இருந்தால் காங்கிரசின் தலையெழுத்தும் இந்தியாவின் தலையெழுத்தும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் இந்திய அரசியலில் தற்புகழ்ச்சிகளும் வீண் ஆடம்பரங்களும் கட்டாயம் இந்த அளவு வளர்ந்திருக்காது.

காந்தி, நேரு செய்தது போன்ற ஒரு மாபெரும் தவறை வி.வி.கிரி விஷயத்தில் இந்திராகாந்தி அம்மையார் செய்ததனால் இந்த நாடு மிக மோசமான சர்வாதிகார நிலை என்ற அவசர நிலையில் அகப்பட்டது. அது மட்டுமல்ல இந்திராகாந்தி அம்மையாரிடம் நல்ல இயல்புகள் பல இருந்தாலும் அவர்கள் ஒரு சர்வாதிகாரி என்ற ஒரு கருமைநிழல் மறையாமலே பதிந்து விட்டது நாட்டின் கடந்தகால வரலாற்றில் தலைவர்கள் செய்த அதே போன்ற தவறு ஒன்று தற்போது நடந்திருக்கிறது இது நிச்சயம் நல்ல அறிகுறி என்று நாட்டை நேசிக்கும் யாரும் சொல்ல மாட்டார்கள்


திரு.லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் செய்த ராஜினாமாவும் அதன் பிறகு அவர் அடைந்த சமரசமும் பழைய தவறுகளை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இன்று இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களில் மிக உயர்ந்தவர் அத்வானி. அவருக்கு இணையாக இன்றைய நிலையில் வேறு எந்த தலைவரையும் அடையாளம் காட்ட முடியாது. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தேச சேவைக்காக அர்பணித்தவர். அவர் ஒன்றுபட்ட இந்தியா பாகிஸ்தான் என்றும் பாரதம் என்றும் பிளவுபட்ட போது மக்கள் அடைந்த துயரத்தை கண்டு அரசியலுக்கு வந்தவர் அவர். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்பது போல அத்வானியின் பொது வாழ்க்கையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும்

கண்ணுக்கு தெரியாத கடுகு போன்ற அளவில் சிறுத்து கிடந்த பா.ஜ.க வை இந்தியாவின் அரியணையில் ஏற்றுவதற்கு அரும்பாடுபட்டு உழைத்து அதை சாதித்தும் காட்டியவர் நியாயப்படி வாஜ்பாய் அவர்களுக்கு பதிலாக அத்வானியே தலைமை அமைச்சராக வந்திருக்க வேண்டும் ஆனால் அப்போதைய அரசியல் சூழல் கருதி கூட்டணி கட்சிகளின் விருப்பபடி நாகரீகமான முறையில் வாஜ்பாய் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார். ஆனாலும் அவரது அறிவும், திறமையும் மந்திரி சபையில் மிக அற்புதமாக பரிணமித்து மக்களுக்கு பல நன்மைகளை செய்தது அதை யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் கூடாது.

இன்று காலத்தின் தேவை கருதி நரேந்திரமோடி பா.ஜ.க.வால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் திரு அத்வானி அவர்களே பலமுறை தனி மனிதர்களை விட கட்சி மேன்மையானது என்று சொல்லி இருக்கிறார். அவர் கூற்றுப்படி தான் இன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன நடந்த சம்பவங்கள் அவர் மனதிற்கு பிடிக்காததாக இருக்கலாம். சட்டத்தை வகுத்தவர்களே வகுக்கப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது போல அத்வானியின் கருத்துக்களுக்கு அவரே கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். இன்றைய நிஜமான உண்மை என்னவென்றால் காங்கிரசுக்கு மாற்றாக நரேந்திரமோடி வரவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்கிறார்களே தவிர பா.ஜ.க வரவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு கட்சி நடவடிக்கை எடுக்கும் போது அத்வானி போன்ற தேசிய தலைவர்கள் மக்களின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பக்கம் சாராது சிந்தித்து பார்த்தால் அத்வானியை விட நரேந்திரமோடி எந்த வகையிலும் சிறந்தவர் அல்ல. அத்வானியின் அனுபவமும், அறிவும் மோடியிடம் கிடையவே கிடையாது. ஆனால் அவர் குஜராத் மாநிலத்தை உருவாக்கி இருக்கும் விதத்தை பார்த்து இந்தியாவையும் இவர் மாற்ற மாட்டாரா என்று பல மக்கள் எதிர்பார்கிறார்கள் அந்த ஒன்று தான் நரேந்திரமோடியின் தகுதியே தவிர வேறு ஒன்றும் இல்லை இன்றைய இளைய தலைமுறையினர் மோடி போன்ற அசாதாரணமான தலைவர்களை விரும்புகிறார்கள்.மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திறமைசாலிகளை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டுமா? என்று சிலர் கேட்கிறார்கள் மோடி இளையவர் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் தவறுகள் இல்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இதில் எது சரி? எது தவறு? என்று ஆராய்வதை விட யதார்த்தமான நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும் காங்கிரஸ் என்ற பேரியக்கம் இன்று முழுமையான சுயநல கூடாரமாக ஆகிவிட்டது எங்கு பார்த்தாலும் ஊழல் அத்துமீறல் அதிகார துஷ்பிரயோகம் என்ற நிலை வந்துவிட்டது பிள்ளை பூச்சிகளான அண்டைநாடுகள் எதுவும் இந்தியாவை மதிப்பதில்லை இந்தியாவின் மரியாதையை பற்றி ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படவில்லை எனவே உடனடியாக நீக்க வேண்டியது சோனியா காந்தியின் அரசியல் பலத்தை அப்படி செய்வதற்கு மக்கள் எந்த சக்தியை விரும்புகிறார்களோ அந்த சக்தியை பயன்படுத்துவதில் தவறு இல்லை.

அத்வானிக்கும் மோடிக்கும் இருப்பது பதவி சண்டை தனக்கு வரவேண்டிய பதவி மோடிக்கு கிடைத்துவிட போகிறதே என்று அத்வானி பொறாமைப்பட்டு கலகம் செய்கிறார் என்று சிலர் பேசுவதை உண்மை என்று எடுத்துகொள்ள இயலாது. காரணம் அத்வானியிடம் அத்தகைய சில்லறை இயல்புகள் எப்போதுமே கிடையாது. பிறகு அவர் மோடியை எதிர்ப்பது எதற்காக என்று சிலருக்கு தோன்றும் அத்வானியின் பொருளாதார சித்தாந்தம் என்பது சுதேசியம் சம்மந்தப்பட்டது நாட்டிலுள்ள சுய தொழில்கள் மேம்பாடு அடைந்தால் தான் நாடு வளரும் என்பதில் அவர் முழுமையான நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் மோடி தாராளமயம், அந்நிய முதலீடு என்பவனவற்றில் ஆர்வம் உடையவர் அவர் பதவிக்கு வந்து நாடு முழுவதும் தாராளமயத்தை திறந்து விட்டு விட்டால் பெருவாரியான ஏழை மக்கள் பிழைக்க வழியின்றி போய்விடுவார்களே என்று அத்வானி அச்சப்படுகிறார் அதன் விளைவாகவே மோடியின் வரவிற்கு அவரால் முழுமையான வரவேற்பு கொடுக்க முடியவில்லை.

வருங்கால அரசானது கண்மூடித்தனமாக அந்நியமயத்தை அரவணைத்து விடக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவே தனது ராஜினாமாவை அத்வானி பயன்படுத்தி இருக்கிறார் என்பது சிலருக்கு தெரிந்தாலும் அவர் பயன்படுத்தி இருக்கும் நேரம் மிகவும் தவறானது. நரேந்திரமோடி மதவாதி, சிறுபான்மை மக்களுக்கு விரோதி, எனவே அவர் வரக்கூடாது என்று அத்வானியே விரும்பினார் என்று பலரும் விமர்சிக்க துவங்கி விடுவார்கள் இது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல சற்றேனும் அத்வானி அவர்கள் இதைப்பற்றி சிந்தித்திருந்தால் பா.ஜ.க. வின் மீது விழுந்திருக்கும் நையாண்டி கறை தவிர்க்கபட்டிருக்கலாம் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் பா.ஜ.க.வும் காங்கிரசை போன்ற சாதாரண கட்சி தான் என்று எண்ணாமல் இருந்திருப்பார்கள். என்ன செய்வது தலைவர்களின் தவறுகள் தேசத்தின் தலைமீது விழுவதை தவிர்க்கவா முடியும்?
Contact Form

Name

Email *

Message *