Store
  Store
  Store
  Store
  Store
  Store

எங்கே நல்ல தலைவன் ?

மினி தொடர் பாகம் 1


    ந்த உலகமும், உலகத்திலுள்ள உயிர்களும், மற்றைய பொருட்களும் இறைவனுக்கு சரீரமாக இருக்கிறது. இறைவன் என்பவன் அந்த சரீரத்தை இயக்குகிற உயிராக இருக்கிறான் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய பிரிவான ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கொள்கை. இந்த கொள்கை வழிபடுகிற மதத்திற்கு மட்டுமல்ல வாழ்கிற நாட்டிற்கும் பொருந்தும். இறைவனை தலைவன், அரசன் என்று கருதுவது நமது மரபு. இதை போலவே நாட்டினுடைய அரசனும் அல்லது தலைவனும் இறைவனின் வடிவாகவே கருதப்படுகிறான். அதாவது ஒரு நாட்டிற்கு ஜீவனாக இருப்பவன் தலைவன் என்று சொல்ல வருகிறேன். இதை இன்னொரு வகையிலும் எடுத்து கொள்ளலாம் ஜீவனாக இருப்பவன் மட்டுமே தலைவனாகும் தகுதி பெற்றவன் என்றும் கொள்ளலாம். 

நமது நாட்டில் பல நல்ல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் உண்மையாகவே நாட்டின் உயிராக இருந்துகாட்டியும் இருக்கிறார்கள். அமெரிக்கா போலவோ அல்லது சில ஐரோப்பிய நாடுகளை போலவோ நம் நாட்டு சரித்திரம் சில நூற்றாண்டுகளை கொண்டது அல்ல. பல ஆயிர வருடங்களை கொண்டதாகும் சுவாமி விவேகானந்தரின் மொழியில் சொல்வது என்றால் ஒரு இந்தியன் நடந்து வருகிறான் என்றால் அவனுக்கு பின்னால் பத்தாயிர வருடத்திய வரலாறும் வருகிறது எனலாம். அந்த அளவிற்கு நமது பின்புலம் செழுமையானது வளமையானது. மற்றவர்களால் வியந்து பார்க்க கூடியது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பாதையில் நாம் பெற்ற தலைவர்கள் பல ஆயிரம் அவர்களில் முத்துக்களும் உண்டு, வைரங்களும் உண்டு. கண்ணாடி கற்களும், மண்ணாங்கட்டியும் கூட உண்டு. 


இங்கு மண்ணாங்கட்டி தலைவர்களை பற்றி பேசப்போவதில்லை. வைரங்களை பற்றியே சிந்திக்க போகிறோம். விடுதலை போரட்ட காலத்திலும் விடுதலைக்கு பிறகும் காந்தி, நேரு போன்ற பிரம்மாண்டமான தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம். உலக வரலாற்றின் விந்தையாக போராட்டத்தின் தலைவனாக இருப்பவனே பதவிக்கு வரவேண்டும் என்ற வழக்கமான கொள்கையை தூக்கி போட்டுவிட்டு கம்பீரமாக நின்றவர் காந்தி. பதவிக்கு வந்தாலும் அந்த பதவிக்கே தனி அழகை சேர்த்தவர் நேரு. இன்று வரையில் இந்திய மக்கள் நேருவை மறக்கவில்லை நேருவின் வாரிசுகள் என்பதனால் தான் பலருக்கும் ஆளுகின்ற வாய்ப்பை தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார்கள்.

ஊருக்கு உழைத்த உத்தமர்களின் வாரிசுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் முன்னுரிமை கொடுக்க வேண்டியதும் தவறு அல்ல. ஆனால் அப்படி கொடுப்பதற்கு முன்னால் அந்த வாரிசுகள் தக்கவர்களா? தகுதியானவர்களா? என்பதை ஆய்வு செய்து கொடுக்க வேண்டும். நேருவின் சரித்திரத்தை அரசியல் வாழ்வை புரட்டி பார்த்தோம் என்றால் சில வேண்டாத நெருடல்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவரிடம் மறைக்கவே முடியாத ஜனநாயக மாண்பு என்பது எப்போதும் குறைவில்லாமல் ஒளிவீசி கொண்டிருந்தது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. தனது வாழ்நாள் முழுவதும் கடைகோடி இந்தியன் கூட சுதந்திரத்தின் சுவையை அறிய வேண்டுமென்று பாடுபட்டவர் அவர். ஜனநாயகத்திற்கு கருத்து சுதந்திரத்திற்கு ஊறு வரக்கூடிய நேரமெல்லாம் ஒரு சிறந்த பாதுகாவலனாக செயல்பட்டிருக்கிறார். 


அவரை போலத்தான் அவரது வாரிசும், அதாவது அவரது திருமகளும் இருப்பார் என்று காமராஜரை போலவே இந்திய மக்கள் அனைவரும் நம்பி இந்திராகாந்தி அம்மையாரை ஆட்சி பீடத்தில் ஏற்றி அழகு பார்த்தோம். திருமதி காந்தியிடம் நிறைய நற்பண்புகள் உண்டு. மலைபோன்ற அசைக்க முடியாத உறுதியும் உண்டு. சர்வேதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை தலைநிமிர செய்யவேண்டும் என்ற வேட்கையும் உண்டு. ஆனால் அவரிடமிருந்த ஒரே பலஹீனம் தன்னிடம் மட்டுமே ஆட்சியையும், அதிகாரமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த பதவி பறிபோகிவிடுமோ என்ற பயத்தில் தனது தகப்பனாருக்கு சம்மந்தமே இல்லாத சர்வாதிகாரத்தை கூட கையில் எடுக்க அவர் தவறவில்லை. இந்த இடத்தில் தான் இந்திய மக்களின் விசுவாசம் கெட்டு விட்டது. 

உயிராக இருக்க வேண்டிய தலைவர்கள் உயிரை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறிந்தும், அறியாமலும் தொடர்ந்து விசுவாசத்தை காட்டி வருவதனால் நமது தேசத்தை பீடித்துள்ள வியாதி புண்ணாக மாறி புரையோடி போய் கிடக்கிறது இந்த புண்ணை ஆற்றுவதற்கு மாற்று தலைவர்களை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம் இந்த நேரம் மிகவும் முக்கியமான நேரமாகும் உலக முழுவதும் பல நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்றாக சூழ்ந்து கிடக்கிறது வல்லரசு நாடுகள் துவங்கி சிற்றரசுகளின் பிரதேசங்கள் வரையிலும் வறுமை, வன்முறை என்ற கோர அரக்கனின் ருத்ர தாண்டவம் நடைபெற்று விடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. இப்போது நாம் சரியாக சிந்தித்து செயல்படவில்லை என்றால் பிறகு வருத்தப்பட்டு ஆகபோவது ஒன்றுமில்லை. 
ஓடுகிற குதிரையில் சரியான குதிரை எது? என்று தேர்ந்தெடுத்து பந்தயத்தில் ஈடுபடுபவன் தான் புத்திசாலி வானத்திலிருந்து சிறகுமுளைத்த குதிரை ஒன்று வந்து சேரும். அது நமக்கு வெற்றியை ஈட்டித்தரும் என்று நினைப்பது கற்பனை வாதமல்ல பொறுப்பற்றத்தனம். எனவே நம் முன்னால் இருக்கின்ற தலைவர்களில் சற்றேனும் செயல்பட கூடியவர்கள், நாட்டை நேசிப்பவர்கள் மக்கள் வளர்ச்சியில் அக்கறை செலுத்துபவர்கள் யார்? என்று பார்க்க வேண்டும். அனைத்து தகுதிகளும் இருக்கிறதோ இல்லையோ அடிப்படையில் சுய ஒழுக்கம் உள்ள தலைவராவது உண்டா? என்று பார்த்து அவரை முன்னுக்கு கொண்டுவரவேண்டும். காரணம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும் சுய ஒழுக்கம் இல்லாத மனிதன் சுயநலம் மிகுந்தவனாகவே இருப்பான் 

நமது தமிழ்நாட்டை அன்றும் இன்றும் பல தலைவர்கள் ஆண்டார்கள். ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள் இவர்களில் நிஜமாகவே நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் யார்? தன்னையே அர்பணித்து கொண்டவர் யார்? என்பதை தேடி பார்க்கும் போது நமது கண்களுக்கு காமராஜர் ஒருவரை தவிர வேறு யாரும் தென்படவில்லை. காமராஜர் நமது முதலமைச்சராக ஆன நேரத்தில் இந்தியா மட்டுமல்ல தமிழ்நாடும் கூட பிச்சைக்கார நிலையில் தான் இருந்தது. பசித்த வயிறுக்கு உணவில்லை, நோய்வந்தால் குணமாக்க மருந்தில்லை, வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்குவதற்கு பலருக்கு கூரை இல்லை, அம்மணத்தை மறைப்பதற்கு குழந்தைகளுக்கு ஆடைகள் இல்லை. இந்த நிலையில் தான் அவர் பதவி ஏற்றார். 
கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன்காரணம் இன்னெதென்று அறிவுமில்லார் என்று மகாகவி பாரதி சொல்லுவானே அதே போலதான் காமராஜருக்கு முன்பு பதவியில் இருந்த தலைவர்களில் பலர் மக்களின் வறுமைக்கு என்னகாரணம்? அதை நீக்குவதற்கு என்ன வழி? என்று சிந்திக்க கூட இல்லை. நோயின் மூலத்தை அறியாமல் நோயை குணமாக்குவது எப்படி? காமராஜர் யோசித்தார் அவர் படிக்காத மேதை என்பதனால் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு சிந்திக்க அவருக்கு தெரியவில்லை. சர்வசுதந்திரமாக சிந்தித்தார் கம்யூனிசம், சோசலிஷம் என்ற சித்தாந்தங்களை தாண்டி மக்களின் அறிவு குறைபாடே கல்லாமையே வறுமைக்கு காரணம் என்று தெளிவாக கண்டார். 

பிள்ளைகள் படிக்க வேண்டும் படித்து அறியாமையை போக்கிக்கொள்ள வேண்டும் என்று பதினைந்தாயிரம் பாடசாலைகளுக்கு மேல் புதியதாக திறந்து வைத்தார் அடியெடுத்து வைத்தால் ஆரம்ப பாடசாலை, நடந்து போனால் நடுநிலைபள்ளி, ஓடி சென்றால் உயர்நிலை பள்ளி என்ற கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். படித்தால் மட்டும் போதுமா? படிப்பவனுக்கு வேலை வேண்டாமா? இதனால் பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கினார் தொழில் நிறுவனங்கள் நடக்க மின்சாரம் வேண்டும் அதற்கு மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். ஓடுகிற ஆறுகளை இடைமறித்து அணைகள் எழுப்பி விவசாயத்தில் தன்னிறைவை அடைய செய்தார். ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம்? அவர் திறந்து வைத்த அரசு பாடசாலைகளை மூடி கொண்டு வருகிறோம். மின்சார உற்பத்தி கேந்திரங்களை முறைப்படி பராமரிப்பதற்கு துப்பு கெட்டு போய்விட்டோம். அணைகளை செப்பனிட கூட நமக்கு மனமில்லை யார் எப்படி போனால் என்ன என் வயிறு நிரம்புகிறதா? என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.  இப்படி ஆனதற்கு மூல காரணம் சுய ஒழுக்கம் இல்லாத தலைவர்களை தேர்ந்தெடுத்தது தான். காமராஜரின் பொது நலம் அவரது ஒழுக்கத்திலிருந்து இப்போதைய தலைவர்களின் சுயநலம் அவர்களின் ஒழுங்கீனத்தில் இருக்கிறது. எனவே நல்ல தலைவன் நிச்சயம் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் அப்படிப்பட்டவனை நாம் தேட வேண்டும்.


தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவே இன்று நிலைகுலைந்து போய் நிற்கிறது இந்திய வரலாற்றில் பத்தாண்டுக்கு ஒருமுறை தீர்க்கவே முடியாத அளவிற்கு சில பிரச்சனைகள் தலை தூக்குவதும், சர்வதேச அறிவாளிகள் இந்தியாவின் கதை முடிந்தது என்று ஆருடம் சொல்வதும், நெருப்பு வளையத்திற்குள் புகுந்து வெளியே வருகிற சர்க்கஸ் வீரனை போல் இந்தியா பிரச்சனைகளிலிருந்து மீண்டும் எழுந்து நிற்பதும் பலமுறை கண்ட வாடிக்கை நிகழ்வு. அதே போலவே ஒரு பரபரப்பான சூழ்நிலை தான் இது என்றாலும் பழைய பிரச்சனைகளை விட இப்போதைய பிரச்சனை முற்றிலும் மாறுபட்டது. மிகவும் அபாயகரமானது நோய் முற்றி விட்டால் அறுவை சிகிச்சை செய்து ஆகவேண்டும் என்ற நிலை இருப்பது போல இப்போதைய இந்தியாவின் நிலையும் என்று சொன்னால் அது மிகையில்லை.

நாடு விடுதலை அடைந்தவுடன் மதக்கலவரம் வெடித்தது. இனப்படுகொலைகள் தேசமெங்கும் நடந்தது. வெந்த புண்ணில் வேலைபாச்சுவது போல் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டது இந்தியாவின் உறுதியால் அந்த நிலைமையையும் கடந்தோம். அதன்பிறகு சமஸ்தான மகாராஜாக்கள் சண்டித்தனம் செய்தார்கள் நாகலாந்து நாகா  பழங்குடியினர் ஆயுதம் ஏந்தினார்கள். அதையும் வெற்றிகரமாக கடந்தோம். சீனாவின் துரோகம், பாகிஸ்தானின் அத்துமீறல் வங்காளத்து அகதிகள் வருகை இப்படி வந்த தொல்லைகளையும், அடக்குமுறை, அவசர நிலை பிரகடனம், வாரிசு அரசியல் போன்ற துயரங்களையும் லஞ்சம், ஊழல் என்ற அரக்கர்களையும் தாண்டி வந்துவிட்டோம். அதில் நமக்கு சிறிய காயங்கள் இருந்தாலும் கூட நல்ல அனுபவம் கிடைத்தது. ஆனால் இன்று நமது அனுபவங்களையும் தாண்டி அநியாயம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய அடக்க வேண்டிய நாட்டை நல்ல வழியில் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்புகள் நமக்கு உண்டு. இப்போதைய நமது அத்தியாவசிய தேவை நல்ல தலைவர். 

இந்த தலைவர்களை வானத்திலிருந்து இறக்குமதி செய்ய முடியாது பக்கத்து நாட்டிலிருந்து கூட்டிவரவும் இயலாது. இன்று நமக்குள் இருகின்ற நம்மோடு இருக்கின்ற தலைவர்களில் எவராவது ஒருவரை தான் நமது நாட்டின் ரட்சகராக தூக்கி நிறுத்த வேண்டும். ஓடுகிற குதிரையில் உருப்படியான குதிரை எது? பாடுகிற குயிலில் அட்சரம் பிசகாமல் பாடுகிற குயில் எது? தெளிவாக கேட்பது என்றால் இன்று நமக்கு சிறந்த தலைவன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருப்பான்? என்பது தான் கேள்வியாகும். அந்த கேள்விக்கு என்ன பதில்? Contact Form

Name

Email *

Message *