Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தி ஏந்திய கத்தி !

யார் ஞானி 1



    ன்று புதன்கிழமை ஏதோ ஒரு இலக்கிய கூட்டத்திற்கு சென்றுவந்த குருஜி, கவி காளமேகம் செருப்பையும், துடைப்ப கட்டையையும் உவமையாக பயன்படுத்தி அந்தகால அரசர்களின் போர்திறத்தையும் யுத்தகளத்தின் காட்சியையும் வர்ணித்ததை பற்றி விரிவாக சொல்லி கொண்டிருந்தார். குருஜியின் இலக்கிய சீடர்களில் சிலர் அவர் கூறுவதை கவனத்தோடு கேட்டுகொண்டிருந்தார்கள். தான் மட்டுமே வாழவேண்டும் என்ற தன்னலமும் அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற பொறாமையும் ஊர் உலகத்தில் உள்ள அனைத்து சொத்துக்களும் எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென்ற பேராசையும் மனிதனுக்கு இருப்பதனால் தான் போரும் போர்களமும் உருவாகின்றன. உலக அரங்கில் அரசியல் பூசல்களையும் போர்களையும் சந்திக்காத நாடுகளே இல்லை மனித சமுதாயமே இல்லை என்று மிக உறுதியாக கூறலாம். உலக வரலாற்றின் பக்கங்களை எடுத்து பார்த்தோம் என்றால் ஒவ்வொரு பக்கத்திலும் ஆயுதங்களின் உராய்வு ஓசையும், அடிபட்டவனின் வேதனை முணுகலும், பீறீட்டு கிளம்பிய இளம் குருதியின் சிவப்பு கறைகளும் இல்லாமல் இல்லை.

அன்றைய மனிதன் யுத்தம் செய்வதற்கு கத்திகளையும், ஈட்டிகளையும், வில்லம்புகளையும் பயன்படுத்தினான். சில பகுதியி ல் வாழ்ந்த மனிதன் கட்டைகளையும் மரக்கொம்புகளையும் கற்களையும் கூட யுத்தம் செய்யும் கருவியாக பயன்படுத்தி இருக்கிறான். இன்று காலம் மாறிவிட்டது, நாகரீகம் வளர்ந்துவிட்டது. கல்லையும் கத்தியையும் எடுத்து போராடிய மனிதன் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், ஏவுகணைகளையும், அணுகுண்டையும் பயன்படுத்தி சண்டைபோட துவங்கி விட்டான். மனிதன் கையில் உள்ள ஆயுதங்கள் மாறி இருக்கிறதே தவிர அவனது எண்ணமும் போரின் மேலே இருக்கிற ஈடுபாடும் இன்று வரையிலும் சிறிது கூட குறையவில்லை. அடுத்தவனை அடித்து வீழ்த்தி வெற்றி கூச்சல் போடுவதற்கு ஒவ்வொருவனும் தயாராக இருக்கிறான். தன் உயிரை மாய்த்துக்கொள்ள தயாராக இல்லாத மனிதன் அடுத்தவன் உயிரை பிடுங்கி எறிவதற்கு நேரம் பார்த்து கொண்டிருக்கிறான்.

நவீன விஞ்ஞானத்தின் காலக்கணிதம் சென்று பார்க்க முடியாத வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலும் வரலாற்று காலத்திலும் ஏன் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட போரும், போர்க்களமும் வீர மறவர்களின், வீர உணர்வை வெளிப் படுத்துகிற இடமாக இருந்தது. யுத்தத்திற்கு செல்பவனை இல்லத்து மங்கைகள் பொட்டு வைத்து வாழ்த்தி அனுப்புவதும், வெற்றி பெற்று வருபவரை வாழ்த்துபாடி வரவேற்பதும், பாராட்டி பரிசளிப்பதும், களத்தில் மாண்டோரை வீரமரணம் அடைந்தவர்கள், வீர சொர்க்கம் சென்றவர்கள் என்று நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வணங்குவதும் வழக்கமாக இருந்தது. நாட்டுக்காகவும் நாட்டு தலைவனுக்காகவும் உயிரை கொடுப்பது பெருமை மிகுந்த காரியங்களாக கருதப்பட்டது. யுத்த களத்தில் மாண்ட மகனை பெற்றெடுத்த தாய்மாரை வீரத்தாய் என்று போற்றி புகழ்வது வழக்கமாக இருந்தது. நோய்வாய்பட்டு இறந்தவனின் உடம்பை கூட கத்தியால் கிழித்து விழுப்புண்  தாங்கி இறந்தவனாக கருதி புதைப்பது பெருமையாக இருந்தது. 

போர் செய்வது பெருமை, போரில் உயிரை விடுவது அதைவிட பெருமை. ஒரு அரசன் எத்தனை போர்களத்தை சந்தித்தவனாக இருக்கிறானோ அத்தனை பெருமைவாய்ந்தவன் என்று கருதப்பட்ட அந்த காலத்தில் கூட போருக்கென்று தனியான நீதியும் தர்மமும் இருந்தது. சூரியன் மறைந்தபிறகு எந்த யுத்தமும் அன்று நடந்தது இல்லை, காயம் பட்டவனை யாரும் தாக்கியது இல்லை. புறமுதுகிட்டு ஓடுபவனை துரத்தி செல்வது கூட அவமானகரமாக கருதப்பட்டது. யுத்தம் செய்வதற்கென்றே தனியான ஒதுக்குப்புறமான மைதானங்கள் இருந்தன. போரில் சம்மந்தப்படாத சாதாரண பொதுமக்கள்,வயோதிகர்கள் பெண்கள், குழந்தைகள், அங்கஹீனர்கள் மற்றும் துறவிகள் போன்றோர்களை தாக்கும் வழக்கம் இல்லாமல் போரிலிருந்து காக்கும் வழக்கமே அன்று இருந்தது.பயிரை காப்பதற்கு வேலி இருப்பதை போல அழகான வார்த்தைகளை அணிவகுக்க செய்து அற்புதமான கவிதையை உருவாக்க இலக்கணம் இருப்பதை போல கொலை களத்தை நிகழ்த்துகிற யுத்த களத்திற்கு கூட வரன்முறையும் இலக்கணமும் அன்று இருந்தது.

ஆனால் இன்றைய யுத்த களங்கள் எப்படி இருக்கிறது? சிந்தித்து பார்க்கும் வினாடியே இதயங்கள் நின்றுவிடக் கூடிய அளவிற்கு கொடுமையும் கொடூரங்களும் இன்றைய நாளில் அணிவகுத்து நிற்கின்றன. போர்செய்வதற்கு என்று தனியான இடங்கள் இருந்த காலம் மலையேறி இன்று நாடு முழுவதுமே போர்க்களங்களாக காட்சி தருகின்றன. பேரழிவு ஆயுதங்களும் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களின் வக்கிரமான மன நிலையும் அழிவுகளுக்கு எல்லைகளே இல்லாமல் செய்துவிட்டன. பல்லாண்டுகால மனித உழைப்பால் கணக்கிட முடியாத பொருள் செலவாலும் உருவாக்கப்பட்ட நீர் தேக்கங்கள் அணைக்கட்டுகள் தொழில் கூடங்கள் மின்சார உற்பத்தி நிலையங்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் அடிசுவடுகூட இல்லாமல் அழிக்கப்படுகின்றன. நோயாளிகள் இருக்கிற மருத்துவமனைகளும், குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடங்களும் ஆயுத பிரயோகத்திலிருந்து தப்புவது இல்லை. மக்கள் குடியிருக்கும் கிராமப்புறங்கள் கூட குண்டுகள் வீசி தாக்கப்படுகிறது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக அரங்கில் நிகழ்த்தி காட்டியிருக்கும் யுத்த கொடூரங்கள் கணக்கிட முடியாதவைகள். சமீபகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்யம் ஈராக் போன்ற வளைகுடா நாடுகளிலும், ஆப்கானிஸ்தானத்திலும் செய்திருக்கிற கொடுமை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தனது சொந்த நாட்டு மக்களையே எதிரிகளை போல கருதி கொத்து கொத்தாக மனித உயிர்களை காவு கொண்ட இனப்படுகொலை இலங்கையில் நடந்ததையும், சீனாவில் சதுக்கத்தில் மாணவ உயிர்கள் நசுக்கப்பட்டதையும் யாராலும் மறக்க முடியாது. அரசியல் சதுரங்க விளையாட்டால் மட்டுமல்ல சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், மற்றும் மொழியின் பெயராலும் கசப்பையும், வெறுப்பையும் உருவாக்கி லட்சக் கணக்கான மக்கள் சண்டையிட்டு தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்வது நாடும் நாடும் மோதுகிற யுத்த களங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல. 

ஒரு சிக்கலிலிருந்து விடுபட, ஒரு பிரச்சனை முற்றிலுமாக தீர நிரந்தரமான வழி ஆயுத பிரயோகமே என்று அன்றும் இன்றும் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தவறு ஆயுதத்தால் பெறுகிற அமைதி நிலையானது அல்ல. அன்பாலும் அஹிம்சையாலும் பெறுகின்ற அமைதியே மிக சிறந்தது. காலத்தால் அழியாது நின்று நிலைத்திருக்கும் தன்மை உடையது என்று உலகிற்கு முதல் முறையாக எடுத்துக்காட்டி அதை நடைமுறையும் படுத்தி அஹிம்சை என்பது கனவு பூமியல்ல கண்ணுக்கு தெரியாத சொர்க்கம் அல்ல. நம் கைகளுக்குள் இருக்கின்ற அற்புதமான புதையலே என்பதை  தெளிவுபடுத்தியவர் அண்ணல் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி தமது அறவழி போராட்டத்தால் எந்த கட்டிடத்தையும் இடித்து தகர்த்ததில்லை யாரையும் வெட்டி கொன்றது இல்லை. ஒரு சிறிய பூனைக்குட்டியை கூட காயபடுத்தியது இல்லை நாடு, நகரங்களை வீடு மனைகளை நெருப்பில் எரித்து சாம்பலாக்கியது இல்லை. ஆயுதபாணியாக நின்ற எதிரிகளின் முன்னால் நிராயுதபாணியாக நின்று இந்தியாவுக்கு விடுதலையும் தென்னாப்பிரிக்க மக்களுக்கு சம உரிமையும் வாங்கி கொடுத்தவர்.

இப்படி போரையும், போர்களத்தை பற்றியும் பேசிக்கொண்டு வந்த குருஜி தீடிரென்று போருக்கு எதிர்பதமான அன்பின் வழியில் நின்ற காந்தியை பற்றி பேசிய போது உண்மையாகவே அனைவருக்கும் மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது. நமது சம காலத்தில் வாழ்ந்த காந்தி இறைவனின் அவதாரமும் இல்லை. கடவுளால் அனுப்பப்பட்ட தூதரும் இல்லை. அவர் தேவகுமாரனும் கிடையாது நம்மை போன்ற சாதாரண மனிதரே ஆவார். ஆனால் அவதாரமோ இறை தூதரோ, தேவகுமாரரோ, வேறு யாரோ செய்யாத, செய்ய முடியாத, செய்ய நினைத்து பார்த்திடாத அறுபெரும் சாதனையை காந்தி நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இன்று நாடெங்கும் பொறுப்பற்றத்தனமும் கொள்ளையடிப்பதும், சுயநலமும் கொடிகட்டி பறக்கிறது. முன்பு எப்போதும் தேவைப் பட்டிராத அளவிற்கு காந்தியும் அவரது கொள்கையும் இப்போது நமக்கு தேவையாக இருக்கிறது. எனவே காந்தி என்ற மஹாபுருஷனை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள விரும்பி குருஜியிடம் சில கேள்விகளை கேட்டோம். அதற்கு அவர் தந்த பதிலையும் எங்களது சந்தேகங்களையும் இனிவரும் பதிவுகளில் கேள்வி பதில்களாக வெளியிட விரும்புகிறோம்.



Contact Form

Name

Email *

Message *