Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆசை வைக்காதே அவதிபடாதே !



    சாதாரண மனிதர்கள் ஒன்றுக்கொன்று முரணாக பேசுவது போல, ஞானிகள் பேச மாட்டார்கள். ஆனால் சித்தர்களின் தலைவர் என்று சொல்லப்படுகிற திருமூலர் ஆசை அறுமீன் ஆசை அறுமீன் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமீன் என்று சொல்கிறார். உலக பொதுமறை தந்த வள்ளுவரோ மனிதன் இறை நிலையை அடைய வேண்டுமானால் இறைவனோடு இரண்டற கலக்க வேண்டுமானால் மனதிலுள்ள பற்றுகள் விடவேண்டும், உலக ஆசையின் விலங்குகளை உடைக்க வேண்டும். அப்படி உடைத்து விடுதலை பெறுவதற்கு ஒரே வழி பற்றுகளே இல்லாத, இறைவனின் திருவடிகளை பற்றி கொள்வது தான் என்று சொல்கிறார். இதில் குழப்பம் வருகிறது திருமூலரோ கடவுள் மீது ஆனாலும் கூட ஆசையை விடு என்கிறார். வள்ளுவரோ ஆசையை விடுவதற்கு கடவுள் மீது ஆசை படு என்கிறார் இதில் எதை எடுத்து கொள்வது? எதை சரி என்று நம்புவது? என்பது விளங்கவில்லை. இருவருமே சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆத்ம தெளிவு பெற்றவர்கள் இவர்களின் கருத்துக்களில் இத்தனை குழப்பங்கள் இருக்குமானால் இவர்களை நம்புகிற இவர்கள் வழியில் நடக்க விரும்புகிற சாதாரண மனிதனின் நிலை என்னாவது? எனவே இவர்கள் இருவரும் இப்படி கூறுவதன் காரணம் என்ன என்று விளக்க முடியுமா உங்களால்? இதற்கு விளக்கம் சொன்னால் என்னை போன்ற பலருக்கு உதவிகரமாக இருக்கும்.

இப்படிக்கு, 
கனகசபாபதி, 
கனடா.



     ஒரு கணவன் இருக்கிறான். அவன் தனது மனைவியின் மீது அளப்பரிய பற்றுதலோடு வாழ்கிறான். அவள் நின்றால், உட்கார்ந்தால், நடந்தால், படுத்தால் அருகிலேயே இருந்து தாங்கு தாங்கு என்று தாங்குவான். கணவன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் இவ்வளவு ஈடுபாடு கொண்ட கணவனை பெறுவதற்கு அந்த பெண் தவம் செய்திருக்க வேண்டும் என்று உற்றாரும் உறவினரும் ஊராரும் பேசிக்கொண்டனர். 

ஒருநாள் அந்த மனைவி ஊர் பொது மனிதர்களிடம் நீதி கேட்டு வந்தாள். பெரிய மனிதர்கள் உனக்கு என்னம்மா குறை என்று கேட்டார்கள். அதற்கு அவள் ஐயா என் கணவன் என்னோடு சரியாக வாழவில்லை. சில மாதங்களாக பாராமுகமாக இருக்கிறார் என்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார். வீட்டுக்கு வருவது கூட இல்லை கை குழந்தையை வைத்து கொண்டு அல்லாடுகிறேன். அவருக்கு புத்தி சொல்லி எனக்கு நல்ல தீர்ப்பு தாருங்கள் என்று கேட்டாள். 

ஊராருக்கு பெரிய வியப்பு அவன் எவ்வளவு ஆசையோடு மனைவி இடத்தில் நடந்து கொண்டான். அப்படி பட்டவனா வேறொரு பெண்ணை தேடி போவான். இந்த பெண் அவனை அறிந்து கொள்ளாமல், அறியாமையால் புகார் செய்கிறாள் என்று நினைத்து அவனையும் கூப்பிட்டு அப்பனே உன் மனைவி உன்மீது குறைபடுகிறாள். அவள் சொல்வது உண்மையா? நீ அவளிடம் பாராமுகமாக இருப்பது நிஜம் தானா? என்று கேட்டார்கள்.

அவனோ தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டி நெடுஞ்சான் கிடையாக விழுந்து ஊராரை வணங்கி ஐயா அவள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறேன் தவிர்க்க முடியாமல் நான் அப்படி போகிறேனே தவிர இவள் மீது வெறுப்படைந்து போகவில்லை என்று கூறுகிறான். 

ஊராரின் வியப்பிற்கு விடை கிடைக்கவில்லை மனைவி மீது வெறுப்பில்லை என்கிறான். ஆனால் மாற்று பெண்ணை தேடியது உண்மை என்கிறான். இவன் கதை பெரிய குழப்பமாக அல்லவா இருக்கிறது என்று நினைத்த ஊர் பெரிய மனிதர்கள் பூடகமாக பேசாதே! உன் மனதில் உள்ளதை தெளிவாக கூறு என்று அவனுக்கு கட்டளை போட்டார்கள்.

ஐயா நேற்று வரையிலும் என் மனைவியின் மீது தீராத ஈடுபாடு இருந்தது. அவளை விட்டு விட்டு ஒருநாள் கூட பிரிந்திருக்க நான் நினைத்தது இல்லை. அது முடியவும் முடியாது திடிரென்று என் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. வைத்தியரிடம் சென்று காண்பித்தோம். அவர் மருந்துகளையும் கொடுத்துவிட்டு, இனி நீ எக்காரணம் கொண்டும் இந்த பெண்ணோடு தாம்பத்திய உறவு வைத்து கொள்ளக்கூடாது. அந்த உறவை தாங்குகிற அளவிற்கு அவளிடம் வலு இல்லை எனவே நீ ஒதுங்கி தான் படுக்க வேண்டும் கண்டிப்பாக கூறிவிட்டார். 

ஐயா நான் சாதாரணமானவன். என் மனதையும், உடம்பையும் கட்டி போட்டு கொள்ளும் அளவிற்கு ஆற்றல் இல்லாதவன். தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க முடியாமல் மனதில் பெரிய கொந்தளிப்பை அடைந்தேன். அந்த நேரத்தில் தான் வேறு வழியே இல்லாமல் வெறும் உடம்பு சுகத்திற்காக வேறு பெண்ணை தேடி போகிறேன். இது தவறுதான் வேறு வழி இல்லாமல் இந்த தவறை தொடர்ந்து செய்கிறேன். என்னை மன்னியுங்கள் என்று மன்றாடி கேட்டான்.

அவன் செய்கின்ற காரியம் மாபெரும் தவறு ஒழுக்க கேடானது என்று ஊராருக்கு தெரியும் ஒழுங்கீனமான காரியத்தை அவன் செய்கிறான் என்று அனைவரும் வருத்தபட்டார்களே தவிர அவன் நிலைமையின் தன்மையை உணர்ந்து யாரும் கோபம் அடையவில்லை. காரணம் உயிராக உலகத்தில் பிறந்த எந்த ஜீவனுக்கும் பாலுணர்வு என்பது பொதுவானது. அதை தீர்த்து கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. அது கிடைக்காத போது அவன் தவறு செய்கிறான். அது சமுதாய கேடு என்றாலும், அவனை பொறுத்தவரை சரியானது. ஊராரின் நலம் கருதி அத்தகைய தீங்குகளை அவன் நிறுத்த வேண்டும். அதே வேளையில் அவனை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்பது பொதுவான கருத்தாகும். 

இங்கே மிக முக்கியமான ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த மனிதன் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஈடுபாடிற்கு பெயர் ஆசை என்பது. ஆசை இல்லாமல் அன்பை அவள் மீது வைத்திருந்தால் தனக்கு வருகின்ற காம உணர்ச்சியை பொருள்படுத்தாமல் அவளது மன உணர்ச்சியை கவனத்தில் கொண்டு நெறி தவறாமல் வாழ்ந்திருப்பான். ஆசை என்பது ஒரு மனிதனை சரியான பாதை, தவறான பாதை என்பதை சிந்தித்து பயணப்பட செய்யாது. எந்த வழியில் போனாலும், எனக்கான தீனியை போடு. என்று தான கேட்கும் அன்பு அப்படி அல்ல எனக்கான தீனி முக்கியமல்ல. அதை நீ பெறுகிற வழி முக்கியம். சரியான வழியில் பெற்று தந்த தீனியே என் வயிற்றையும் நிரப்பும் மனதையும் ஆற்றும் என்று கூறும். 

மனைவிக்கு நோய் வந்தால் விலக்கி விடுகிறான். அவனே தனது தாயாருக்கு நோய் வந்தால் அந்த அம்மையார் கடுமையான வேதனையை அனுபவித்தால் இந்த தாய் வேண்டாம் இவள் நோயாளி வேறொரு தாயை தேடி கொள்வோம் என்று போய்விடுவானா? நிச்சயம் போகமாட்டான் காரணம் அவன் மனைவியின் மீது வைத்து ஆசை தாயாரின் மீது வைத்திருப்பது அன்பு. நாம் அன்பு வைத்திருப்பவர் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு நோய்வாய் பட்டிருந்தாலும் அருவருப்பாக இருந்தாலும் அவரை ஒதுக்கி விட மாட்டோம் ஆரத்தழுவி கொண்டு ஆறுதல் சொல்வதற்கே விரும்வுவோம். 

எனவே ஆசை என்பது வெளிப்புறத்தோடு சம்மந்தபட்டது. வெளித்தோற்றத்தில் மட்டுமே மையல் கொள்வது எந்த வகையான ஆசையாக இருந்தாலும், அது கடவுள் மீது வைக்கின்ற ஆசையாக இருந்தாலும் கூட மனிதனை கீழ்நோக்கி தள்ளுமே தவிர மேல் நோக்கி கைதூக்கி விடவே விடாது. இது திருமூலருக்கு நன்றக தெரியும். இறைவன் மீது நீ ஆசை கொண்டவனாக இருந்தால் அவரிடம் எதையாவது ஒன்றை எதிர்பார்ப்பாய் அது கிடைக்காத போது பள்ளத்தை நோக்கி வழிந்தோடுகிற தண்ணீரை போல ஆசையும் வற்றிவிடும். எது மீது நீ ஈடுபாடு வைத்திருந்தாயோ அதுவே உனக்கு தாங்க முடியாத சுமையாகி விடும். எனவே தான் ஈசனோடு ஆயினும் ஆசையை அறுத்துவிடு என்று கூறுகிறார். 

வள்ளுவரும் இதற்கு மாற்றாக எதையும் கூறவில்லை. பற்று ஆசை என்பதெல்லாம் இரண்டு வார்த்தைகளாக தெரிந்தாலும் கூட ஒரே பொருளை காட்டுவது தான் மனதிலுள்ள ஆசைகளை அழிக்க வேண்டுமானால், ஆசைகளே இல்லாத ஆசைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் மீது பற்றுதல் வை என்கிறார். பற்று என்பது ஆசை. பற்றுதல் என்பது அன்பு அல்லது பக்தியாகும். பக்தியும் அன்பும் எப்போதுமே எதிர்பார்த்து இருப்பது அல்ல நீ தருகிறாயோ இல்லையோ? நான் பெருகிறேனோ இல்லையோ? உன்மீது அன்பு வைப்பது மட்டுமே என் நோக்கம். அதை மட்டும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்ற நிலையை ஒரு மனிதன் அடைந்து விட்டால் அவன் இறைவனுக்கு சமமானவனாக ஆகி விடுகிறான். மனிதனை இறைவனாக மாற்றுவது தான் திருமூலர், வள்ளுவர் போன்ற மகாத்மாக்களின் வேலை.



Contact Form

Name

Email *

Message *