( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இந்தியவின் இருண்ட காலம்


மினி தொடர் பாகம் 3


     நாடு விடுதலை அடைந்தவுடன் முதல் பிரதமராக பதவி ஏற்றவர் ஜவஹர்லால் நேரு. இவரிடம் சில குறைகள் இருக்கலாம் ஆனாலும், இவர் அப்பழுக்கற்ற ஜனநாயகவாதி கட்சியிலும், ஆட்சியிலும் ஜனநாயகம் செழிக்க ஜனநாயகம் வாழ கடைசி நிமிடம் வரை மனசாட்சிபடி பாடுபட்டவர். அவருக்கு பிறகு வந்த லால் பகதூர் சாஸ்திரி எளிமையானவர். நாட்டை நேசிப்பதில் முதன்மையானவர். நேரு மக்கள் அனைவரையும் பணக்காரர்களாக மாற்ற கனவு கண்டார் என்றால் சாஸ்திரி மக்கள் அனைவரும் முதலில் பசியில்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்தவர் அதற்காக உழைத்தவர். வலது, இடது என்ற கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஆத்மா எது என்பதை நிஜமாகவே கண்டறிந்து வேளாண்மை, கைத்தொழில் ஆகியவற்றை முன்னுக்கு கொண்டுவர பாடுபட்டவர்கள். 

சர்வதேச அரங்கில் அமெரிக்கா, இரஷ்யா என்ற இருவரும் வல்லரசுகளுக்கிடையில் ஆயுத போட்டி நிலவிய போது சந்தை பொருளாதாரமா? அல்லது சோஷலிச பொருளாதாரமா? இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்ற குழப்பங்கள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பொருளாதாரம் நல்லது செய்யும். எந்த அரசியல் சித்தாந்தம் உயர்வை தரும் என்பதை தீவிரமாக சிந்தித்து செயலுக்கு கொண்டுவந்தவர் சாஸ்திரி. இதனால் சோவியத் யூனியன் வல்லரசு சாஸ்திரியின் போக்கு தங்கள் சொந்த நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று நினைத்து கேஜிபி என்ற தனது உளவு அமைப்பு மூலம் அவரது உயிரை தாஷ்கண்ட் பறித்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. அது உண்மையோ பொய்யோ நமக்கு தெரியாது. மிக குறுகிய காலத்தில் சாஸ்திரியை பறிகொடுத்தது இந்தியாவின் துரதிருஷ்டம் என்று சொன்னால் அது மிகையில்லை. அவர் மட்டும் சற்று அதிகநாள் வாழ கூடிய வாய்ப்பை பெற்றிருந்தால் கர்மவீரர் காமராஜரால் தமிழ்நாடு எப்படி நிலையான பல நலத்திட்டங்களை கண்டதோ அதே போலவே இந்தியாவும் பல்வேறு வகையில் நிலையான வளர்ச்சியை அடைந்திருக்கும்.

சாஸ்திரிக்கு பிறகு வந்த திருமதி இந்திராகாந்தி அம்மையார் உறுதியானவர். நமது தேசத்தை வல்லரசு தேசமாக ஆக்க வேண்டும் என்பதில் உண்மையான ஈடுபாடு கொண்டவர். ஆனால் இவரிடம் பதவி பித்து இருந்தது தான் மட்டுமே அரசாள வேண்டும் என்ற சர்வதிகார மனபோக்கு இருந்தது. அதனாலேயே மக்கள் பல அவதிகளை அடைய வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தது. இவருக்கு பிறகு வந்த மொரார்ஜி தேசாய் நல்லாட்சியை தந்தாலும் அவரது கட்சி குழப்பம் அவரை ஆள விடவில்லை அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த சரண்சிங் கோமாளித்தனமான பிரதமராக கருதப்பட்டாரே தவிர மதிப்பு மிக்கவராக இல்லை.

இந்திய அரசியலில் சரன்சிங்கை போலவே சந்திரசேகர், தேவகவுடா போன்ற திறமையற்ற பிரதமர்களும் இருந்தார்கள். பிரதமராக ஆவதை தவிர வேறு எந்த லட்சியமும் சந்திரசேகரிடம் இல்லாததால் அவர் ஒரு நீர் குமிழி போல காணப்பட்டார். தேவகவுடாவுக்கு நல்லது செய்ய தெரியாது அதனால் அவர் நல்ல வாய்ப்பு கிடைத்தும் மேடையை உறங்கும் மெத்தையாக பயன்படுத்தி கொண்டாரே தவிர காரியங்கள் எதையும் கவனிக்கவில்லை. இந்திராகாந்திக்கு கூட கிடைக்காத அளவிற்கு பெரிய வாய்ப்பு ராஜீவ்காந்திக்கு கிடைத்தது ஆனால் தனது அனுபவம் இன்மையாலும், ஆடம்பர போக்காலும் நாட்டை வளப்படுத்துகிற அறிய வாய்ப்பை அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம். 

இந்தியாவிற்கு கிடைத்த மிக சிறந்த பிரதமர்களில் ஒருவராக பி.வி.நரசிம்மராவை சொன்னால் அது தவறில்லை காரணம் இன்று இந்தியா ஓரளவு வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றால் அது நரசிம்மராவ் அவர்களின் தீர்க்கமான பல முடிவுகளால் என்று அடித்து சொல்லலாம் தனக்கு முன்னால் பதவியிலிருந்த பிரதமர்களில் பலர் அடுத்த தேர்தலை கவனத்தில் வைத்து செய்ய தயங்கிய அல்லது தவறிய பல செயல்களை அடுத்த தலைமுறையை கவனத்தில் வைத்து செயல்படுத்தியவர் நரசிம்மராவ் ஆனாலும் அவரது நேர்மையான அரசியல்வாழ்வு அவர் பிள்ளைகள் செய்த சிறிய தவறுகளால் அல்லது காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்ப விசுவாசத்தால் மறைக்கப்பட்டு விட்டது என்று சொல்லலாம்.

அனைவராலும் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு பதவிக்கு வந்தவர் விசுவநாத் பிரதாப்சிங். ராஜீவ்காந்தியின் ஆடம்பர அரசியலால் வெறுப்படைந்த மக்கள் வி.பி.சிங்கை தங்களது இரட்சகராக நினைத்து பதவிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் அவர் மக்கள் எதிர்பார்ப்பை மறந்து தேவிலாலை எதிர்கொள்வதை மட்டுமே பிரதானமாக கருதி நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட காரணமானார். இன்றைய ஜாதி அரசியல், மத மோதல்கள் இவைகளுக்கு வித்திட்டவர் வி.பி.சிங் என்று சொல்லலாம். அல்லது உறங்கி கொண்டிருந்த இந்த பூதங்களை தனது சொந்த லாபங்களுக்காக விழிக்க வைத்தவர் என்றும் சொல்லலாம். 

இந்தர் குமார் குஜ்ரால் என்ற ஐ.கே குஜ்ரால் நல்ல நிர்வாகி, நல்ல பொருளாதார சீர்திருத்தவாதி, சர்வதேச விவகாரங்களை கையாள்வதில் இவர் கில்லாடி. ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் அவகாசம் கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அதனால் இவரால் சிறந்த பிரதமராக ஜொலிக்க முடியவில்லை. அடல் ஜி என்று அன்போடு அழைக்கப்படும் வாஜ்பாய் அவர்களுக்கும் இதே நிலைமைதான் என்றும் கூறலாம். முழுமையாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருந்தாலும் அவரது அந்தரங்க எண்ணப்படி, அறிவு தீட்சன்யத்தின் படி, ஆள முடியவில்லை. “தங்க நாற்கர சாலை”, கார்கில் யுத்தம், அணு ஆயுத பரிசோதனை என்று சில வெற்றிகளை சரித்திரத்தில் பதிவு செய்தாலும் முழுமையான திறமையை அவரால் காட்ட முடியவில்லை என்பதை ஒத்துகொள்ள வேண்டும். 

வாஜ்பாய் அவர்களுக்கு பிறகு வந்த மன்மோகன் சிங் மிகச்சிறந்த படிப்பாளி பொருளாதார மேதை தாழ்வுபட்டு கிடக்கும் தேசத்தை பொருளாதார ரீதியில் வாழ்விக்கும் மந்திர வித்தை தெரிந்தவர். வல்லரசு நாடுகளே வியந்து பாராட்டும் நிர்வாகி. இந்தியாவின் பொற்கால ஆட்சியை உலகமெல்லாம் எடுத்து காட்டும் தகுதி வாய்ந்தவர். ஆனால் பதவி ஆசையாலோ, இந்திய மக்களின் துரதிருஷ்டத்தாலோ சரண் சிங்கை விட, சந்திர சேகரை விட, தேவகவுடாவை விட கீழான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் எப்படி ஆளக்கூடாது என்பதற்கு இவரே சரியான உதாரணமாக திகழ்கிறார். தனது கட்சிக்காரர்களை கட்டுக்குள் வைக்கும் திறனற்றவர். உள்நாட்டு விவகாரங்களை கையாள்வதில் அக்கறை இல்லாதவர். சர்வதேச அரங்கில் இந்தியாவின் இறையாண்மையை கூட நிரூபிக்க முடியாதவர். எதையுமே சுயமாக செய்யும் தகுதி இல்லாதவர். இந்தியாவின் இருண்டகால ஜனநாயக ஆட்சியை தந்தவர் என்று எந்த காலத்திலும் பேச கூடிய அளவிற்கு சரித்திரத்தில் மிக ஆழமான பதிவை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

இப்போது மன்மோகன் சிங்கின் ஆட்சி அதிகாரத்தின் இறுதி அத்தியாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இனி வரப்போகிற தேர்தலில் மிக கண்டிப்பாக இவர் நிற்க மாட்டார். நின்றாலும் ஜெயிக்க மாட்டார். ஜெயித்தாலும் பதவிக்கு வரமாட்டார் என்பது தெளிவாகி விட்டது இதனாலேயே அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி இந்திய அரசியல் வானில் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது. ஒரு காலத்தில் நேருவுக்கு பிறகு ஆளும் தகுதி இந்தியாவில் யாருக்குமே இல்லை என்ற எண்ணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிக அதிகமாகவே இருந்தது. இன்று அப்படி இல்லை பிரதமர் என்ற அதிகாரமிக்க பதவிக்கு வரக்கூடிய தகுதி பெற்ற பலரை இந்திய அரசியலில் காணலாம். எனவே இவருக்கு பிறகு இந்தியா இல்லை என்று பேசியது எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் வெறும் கனவாய் மெல்ல போய் விட்டது.

இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி அடுத்த பிரதமர் யார்? என்பது மட்டுமே காங்கிரஸ் சார்புடையவர்களும், மதசார்பின்மையை பற்றி மிக அதிகமாக பேசுபவர்களும், ராகுல்காந்தி அடுத்த பிரதமராக வரலாம் என்கிறார்கள். காங்கிரசின் சித்தாந்தங்களை ஒருபோதும் ஒத்துகொள்ளாத பொதுவுடைமைவாதிகள் கூட ராகுலுக்கு எதிராக மூன்றாவது அணி அமைப்பதில் தயங்குகிறார்கள். காரணம் ராகுலை கண்டு அவர்களுக்கு பயம் இல்லை ராகுலை விட அபாயகரமான முலாயம் சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மாயாவதி போன்றோர்கள் ஆட்சிகட்டிலை பிடித்து கொண்டு இந்தியாவை அம்மணமாக விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினாலே ஆகும். 

மதச்சார்பின்மையை பற்றி மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் இந்திய பாரம்பரியத்தை நேசிப்பதாக கூறி கொள்பவர்களும் அடுத்த பிரதமர் நரேந்திர மோதி தான் என்கிறார்கள். ராகுலை கண்டு அச்சபடுவதற்கு எவ்வளவு காரணங்கள் உண்டோ அவ்வளவு காரணமும் மோதியை கண்டு அச்சபடுவதற்கும் உண்டு என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் நம்மை அடுத்து வரும் காலங்களில் ஆள வேண்டியது ராகுலா? மோதியா? என்பதை ஆலோசனை செய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இரண்டு குதிரைகளுமே சண்டி குதிரைகள், நொண்டி குதிரைகள் என்றாலும் நம் தலையெழுத்து இவற்றில் ஒன்றை தான் நாம் தேர்ந்தெடுத்தாக ஆகவேண்டும். எனவே இருப்பதில் நல்ல குதிரை எதுவென்று சிந்திப்போம்.

+ comments + 2 comments

சந்திரசேகரைப் பற்றிய தங்களின் கணிப்பு மிகவும் தவறானது.அவர் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் அயோத்திப் பிரச்சனையைத் தீர்த்துவைத்து இருப்பார். அவர் பிரச்சனையின் தீர்வினை எட்டுவதற்கு மிக அருகாமையில் இருந்தபோது ராஜிவ் அவருக்குப் பேர் வந்துவிடக்கூடாது என்று தன்னை வேவு பார்க்கிறார் என்று அவதூறு கூறி அவரைப் பதவியில் இருந்து இறக்கியவர் ராஜிவ் காந்தி. தான்னுடைய அரசுஒரு சிறுபாண்மை ஆட்சியாக இருந்தபோதும் துணிந்து அரசின் தங்கத்தை அடகு வைத்து நாட்டை திவாலாகும் நிலைமையிலிருந்து காத்தவர். மேலும் அமரிக்காவிற்கு அவர்களது ராணுவ தளவாடங்களுக்கு எரிபொருள் ஊட்டுவதற்கு இந்தியவைப் பயன்படுத்திக்கொள்ள உதவி அவர்களிடமிருந்து நாடு பலன்பெற ஏற்பாடு செய்தவர் அவர். உங்கள் தகவல்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சந்திரசேகரை பற்றிய குருஜியின் கணிப்பு மிக சரி என்றே நான் நினைக்கிறேன் காரணம் இளம் துருக்கியர் என்று வர்ணிக்கப்பட்ட அவர் பிரதமர் பதவியை பிடிக்க வேண்டுமென்ற ஒரே ஆசையில் ராஜீவ் காந்திக்கு சலாம் போட்டு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சீடர் என்று பெருமையோடு கூறிகொண்ட அவர் அரசுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனது அறக்கட்டளைக்கு சொந்தமாக்கினார் அதுவும் பிரதமராக பதவி ஏற்று பத்து நாட்களுக்குள்ளாகவே தங்கத்தை அடகு வைத்ததும் அமெரிக்க விமானங்களுக்கு எண்ணெய் போட இடமளித்ததும் அவரது சாதனை அல்ல வேறு வழியில்லமல் செய்த சோதனையாகும். எனவே உங்கள் சந்திரசேகர் விசுவாசத்தை சரித்திர பதிவாக்க முயற்சிக்க வேண்டாம். நன்றி

தண்டபாணி
காரைக்கால்


Next Post Next Post Home
 
Back to Top