ஐயா வணக்கம். நான் எதை செய்தாலும் தடை வருகிறது. மற்றவர்களின் கண்திருஷ்டிக்கு அடிக்கடி ஆளாகிறேன். இவைகளுக்கு என்ன பரிகாரம் செய்தால் நன்றாக இருக்கும்?
இப்படிக்கு,
ராஜஜெயசிம்மன்,
திருவனந்தபுரம்
முப்புரம் என்ற இடத்தில் ஆட்சி செய்த முப்பிடாதி என்ற மூன்று அசுரர்களை வதம் செய்வதற்காக சிவபெருமான் கிளம்பினார் .போருக்கு புறப்படும் வேகத்தில் விநாயகரை துதி செய்வதற்கு மறந்து விட்டார். ஆயிரம் தான் முதற்கடவுளாக இருந்தாலும் தனது பிள்ளை தானே பிறகு கவனித்து கொள்ளலாம் என்று சிவபெருமான் நினைத்திருக்க கூடும்.
உலகையே படைத்த கடவுள் என்றாலும் படைத்த பிறகு படைக்கப்பட்ட ஒழுக்க விதிக்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும். நான் தானே இந்த ஒழுக்க விதியை ஏற்படுத்தினேன் அதை நான் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசியல்வாதியை போல ஆண்டவன் நினைக்க முடியாது. அவர் வகுத்த விதிக்கு அவரே கட்டுப்பட வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்து காட்ட சிவன் புறப்பட்ட ரதத்தின் அச்சை முறித்து தன்னை நினைவுபடுத்தினாராம் விநாயகர்.
அதனால் தான் அருணகிரிநாத பெருமான் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா" என்று விக்னேச பெருமானை போற்றி வணங்குகிறார். விக்னேசர் என்றாலே விக்கினங்களை அதாவது தடைகளை போக்குபவர் என்பது பொருளாகும். விநாயகரால் நிவர்திக்கபடாத தடைகளே இல்லை என்று தடையில்லாமல் சொல்லலாம்.
அதனால் நீங்கள் தினசரி விநாயகரை கோவிலுக்கு சென்று வணங்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அவருக்கு அருகம்புல், செம்பருத்தி பூ, போன்றவற்றை அர்ப்பணம் செய்து வழிபட்டால் தீராத குறையெல்லாம் தீரும். மேலும் சதுர்த்தி அன்று அவருக்கு சாற்றப்படும் அருகம்புல் மாலையை வாங்கி வந்து வீட்டுக்கு முன்னால் தொங்க விடுங்கள் கண்திருஷ்டிகள் குறைந்து நல்லது ஏற்படும்.








