( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திட்டுவதும் வரமே !


     ஒரு தமிழ் பண்டிதருக்கு மெட்ராஸ் பாஷையின் மீது அளப்பரிய கோபம். என்ன மொழி ஐயா அது? அழகான தமிழை கழுத்தை பிடித்து திருகுவது போல இருக்கிறது. கேட்பதற்கே காதுகள் கூசுகிறது. பொருளே இல்லாத வார்த்தைகள் பொருத்தமே இல்லாத வாக்கியங்கள் என்று அலுத்துக்கொண்டார். 

அவர் அலுத்துக்கொள்வதில் காரணம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் தமிழ்மொழியின் அழகே அது பல்வேறுபட்ட இடங்களில் பல்வேறு விதமாக ஒலிப்பதில் தான் இருக்கிறது என்பது எனது எண்ணம். சிங்கப்பூர் தமிழர்களும், பெங்களூர் தமிழர்களும் தமிழை பேசுகின்ற விதம் ஒரு அழகு என்றால் யாழ்ப்பான தமிழர்கள் அதை கதைக்கிற விதமே தனி அழகு. நாற்காலியை கதிரை என்பதும், கொசுவை நுளம்பு என்பதும் அந்தந்த வட்டாரத்து சொல் என்றால் மெட்ராஸ் பாஷையும் ஒரு வட்டார மக்களின் இயல்பை பொறுத்து அமைந்திருக்கிறது என்பதை நாம் ஏன் ஒதுக்க வேண்டும். 

இதில் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு மொழியை பேசுகிற விதத்தை வைத்தே பெருமை பாராட்டுகிற புத்தி இருக்கிறதே அது ஆயிரம் கலவரத்திற்கு வித்திடக்கூடியது. பேசுகிற அமைப்பை வைத்தே இவன், இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று முடிவு கட்டி ஏற்றத்தாழ்வு காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். மொழியில் உள்ள பதங்களை வைத்து அந்தஸ்தை தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் ஒரு மொழியில் அதன் சொந்த வார்த்தைகள் மட்டுமே கலந்திருக்கவில்லை பல மொழிகளின் வார்த்தைகளும் கலந்திருக்கிறது. 

அந்த வகையில் மெட்ராஸ் பாஷையில் உள்ள வார்த்தைகளில் பலநாட்டு மொழிகளில் உள்ள சொற்கள் கலந்துள்ளன. அவைகளின் உண்மையான அர்த்தங்களை காணுகிற போது நமக்கு வியப்பு வருகிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் ஒருமுறை என்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் சூதானமாக என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்தினார். அதை கேட்டுகொண்டிருந்த இன்னொரு நண்பர் அவர் இன்ன ஜாதியை சேர்ந்தவரா? என்று கேட்டு அவரோடு ஏளனமாகவும் பழக ஆரம்பித்தார். அப்போது தான் வார்த்தைகளின் பொருளை சரிவர அறியாதது, எவ்வளவு பெரிய அறியாமை என்பது எனக்கு தெரிய துவங்கியது. 

மெட்ராஸ் பாஷையில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுவரும் முக்கியமான கெட்ட வார்த்தை பேமானி என்பதாகும். இந்த வார்த்தையை கேட்டவுடன் மிக அசிங்கமான பொருளை கொண்டது என்று நாம் முகம் சுளிக்கிறோம் இதுவொன்றும் அவ்வளவு அசிங்கமான வார்த்தை அல்ல. உண்மையில் இது தமிழ் வார்த்தையே இல்லை. பேயி இமானி என்ற அரபு வார்த்தையின் திரிபாகும். இது அப்படி என்றால் நம்பத்தகாதவன் என்பது பொருளாகும்.

யாரவது மாறுபட்ட காரியத்தை செய்தால், வார்த்தையை புரட்டி பேசினால் அவன் சரியான உட்டா லக்கடி என்கிறார்கள். இந்த வார்த்தையும் தமிழ் அல்ல, ஹிந்தி ஆகும். இதன் பொருள் கம்பை எடு அல்லது பிரம்பை எடு என்பதே! ஆனால் நாம் அதை அந்த பொருளில் பயன்படுத்தாமல் வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். இதே போலவே கஸ்மாலம் என்று யாரையாவது திட்டுவது வேலூர் மற்றும் சென்னையில் உள்ளவர்களின் வழக்கம். இந்த வார்த்தையை பயன்படுத்துபவரையே இதன் பொருள் என்னவென்று கேட்டால் திருதிருவென்று விழிப்பார்கள் காரணம் அவர்களுக்கு இது கெட்ட வார்த்தை கோபத்தில் பயன்படுத்துகிற வார்த்தை என்று தெரியுமே தவிர உண்மையில் இது தமிழா? வேறு பாஷையா? என்பது கூட தெரியாது. கஸ்மாலம் என்பது கஷ் மலம் என்ற சமஸ்கிருத சொல்லே ஆகும். அப்படி என்றால் மனதில் உள்ள கசடு என்ற அழகான பொருள் இதற்கு இருக்கிறது ஆனால் இதை கெட்ட வார்த்தையாக பயன்படுத்துவது தான் விந்தை.

அதே போலவே யாரையாவது அசிங்கமாக திட்ட வேண்டும் என்றால், வக்காலோளி என்று திட்டுகிறோம். உண்மையில் இது திட்டுதலே அல்ல. வக்கா என்றால் மூதேவி அதை ஒழி என்று சபிக்கிறோம். அதாவது திட்டுவதாக நினைத்து கொண்டு ஒருவனிடத்தில் இருக்கின்ற தீமை ஒழிய வேண்டுமென வரம் கொடுக்கிறோம். இது தான் நமது மொழியின் சிறப்பு. இது அந்தந்த வட்டாரத்தில் அப்படி, அப்படியே இருந்தால் தான் நன்றாக இருக்கும் அதையும் மாற்றி நாகரிகபடுத்துகிறேன் என்று கெடுக்க கூடாது என்பது என் ஆசை. 


+ comments + 3 comments

gopi
03:54

Arumaiyana vilakkam..thanks

தங்களின் கருத்துஒரளவிற்கு சரிதான். அப்படியானால் அடிப்படையில் ஒரு மொழியின் சிறப்புக்களை மக்கள் இழக்க வேண்டுமா ? சென்னை வாழ் மக்களுக்கு தமிழை சரியாகப் பேச கற்றுக் கொடுக்க வேண்டியது செம்மொழி ஆக்கத்திற்கு முதல் படி. சென்னை தமிழ் பாழாய் போன தமிழ். கொச்சை தமிழ்.தங்களின் கருத்து ஏற்க முடியாது.கோவை தமிழுக்கும் நெல்லை தமிழுக்கும் உள்ள வேறுபாடு ”அழகு” தமிழின் சிறப்பு எனலாம்.ஆனால் சென்னை ரிக்ஷாக்காரன் பாசை ...... அவசியம் திருத்தப்பட வேண்டும். அது அறியாமைத் தமிழ்.அவலட்சணப்படுத்தப்பட்ட அலங்கோலப்படுத்தப்பட்ட அசிங்கப்படுத்தப்பட்ட தமிழ்


Next Post Next Post Home
 
Back to Top