புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?
இப்படிக்கு,
வலம்புரிராஜகுமாரன்,
கனடா.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது. அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது. சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.
பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள்.
“உலகப்பொதுமறை” தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார். நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும்.
நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன. நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.