Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெள்ளைக்காரனுக்கு தீவெட்டி பிடி !


     க்னி நட்சத்திரம் முடிந்து ஆறு, ஏழு நாட்கள் ஓடியிருக்கும். இன்னும் வெயில் குறைந்த பாடில்லை. வெள்ளியை உருக்கி தங்க தகட்டில் ஊற்றியது போல தெருவெங்கும் சூரிய வெட்கை விம்மி கொண்டு கிடந்தது. லேசாக வீசுகின்ற காற்றில் கூட நெருப்பை பற்ற வைக்கும் சூடு இருக்குமோ என்று எண்ண தோன்றியது. வைகாசி மாதத்து மதியவேளை என்பது எல்லா உயிர்களுக்கும் பாலைவனத்து வாழ்க்கையே சொல்லி கொடுக்கிறது. இந்த நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்க போவதில்லை. ஆனாலும் வாசலில் யாரோ வந்தது போன்ற அரவம் கேட்டது யாராக இருக்குமென்று எட்டி பார்த்தேன். வேதாச்சல முதலியார் நின்றுகொண்டிருந்தார் என்ன முதலியார் இந்த நேரத்தில்... ? என்று கேட்டேன். 

ஒன்றுமில்லை, ரேசனில் அரிசி போடுவதாக சொன்னார்கள். வெயில் அடிக்கிறது என்பதற்காக அரிசி வாங்காமல் இருக்க முடியுமா? அதனால் தான் கிளம்பி வந்தேன் தாகம் தொண்டையை என்னவோ செய்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்றார். அப்படியா வெளியே எதற்காக நிற்கிறீர்கள் உள்ளே வந்து உட்காருங்களேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே போனேன். வெயிலில் வந்ததனால் பார்வை சரியாக தெரியவில்லை போலிருக்கு தட்டு தடுமாறி கூடத்தில் வந்து முதலியார் உட்காரவும் நான் தண்ணீரை அவரிடம் நீட்டவும் சரியாக இருந்தது தொண்டைகுழியில் இருக்கும் கோலி குண்டு மேலும் கீழும் இறங்க தண்ணீரை குடித்து முடித்தார் வேதாச்சலம். 

உச்சி வெயில் நேரத்தில் குளிர்ச்சியான தண்ணீர் எவ்வளவு இதமாக இருக்கிறது அதிலும் தண்ணீரில் வெட்டிவேர் போட்டிருக்கிறீர்களே! உண்மையில் தேவாமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறிய அவர் இப்போதெல்லாம் இந்த மாதிரி தண்ணீர் யார் குடிக்கிறார்? வீட்டுக்கு வீடு ஐஸ் பெட்டி வந்தாலும் வந்தது எல்லோரும் பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு அதை தான் குடிக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறவும் செய்தார். 

நம்ம வீடுகளுக்கு இப்போது ஐஸ் பெட்டி மட்டுமா வந்திருக்கிறது. கூடவே வியாதியும் அல்லாவா வந்திருக்கிறது. நம் நாட்டில் அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு தண்ணீர் குடித்தால் தொண்டை கட்டி கொள்ளும் தேவையில்லாத சீதளம் கிளம்பி ஜுரத்தை கொண்டுவரும். இது யாருக்கு தெரிகிறது எல்லாம் நாகரீக மயமாகி விட்டது ஆனால் நம்மால் பழைய பழக்கங்களை விட்டுவிட முடிவதில்லை புதையலை பூதம் காப்பது போல் பழமையை சுமந்து கொண்டு திரிகிறோம் என்று அவருக்கு பதில் சொன்னேன். 

அந்த விதத்தில் உங்களை பாராட்ட வேண்டும் மூத்தமகன் அமெரிக்காவில் இருக்கிறான். சின்னவன் உள்ளுரிலேயே நன்றாக சம்பாதிக்கிறான். உங்களுக்கும் கைநிறைய பென்சன் வருகிறது பணவசதிக்கு ஒன்றும் குறைவில்லை. செலவு செய்தால் யாரும் குறைபட்டு கொள்ள மாட்டார்கள். ஆனாலும் வீட்டுக் கூரையை இன்னும் பனை ஓலையிலிருந்து இன்னும் மாற்ற வில்லை இந்த கூரை இந்த வெயிலுக்கு எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இந்த சுகத்தை விட்டு விட்டு மனிதன் எப்படி கான்கிரிட் எரிச்சலில் வாழ விரும்புகிறானோ தெரியவில்லை என்று சொன்ன முதலியார் நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டார். நானும் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தேன். வீட்டில் யாரும் இல்லை சின்னவனும் அவன் பெண்டாட்டியும் ஊருக்கு போய்விட்டார்கள். மாலையில் வந்தாலும் வரலாம் அதுவரையிலும் தனிமையாக எப்படி இருப்பது என்று யோசித்தவனுக்கு முதலியாரின் வருகை சந்தோசமாக இருந்தது ஓரளவு வயதை கடந்து விட்டாலே பேசுவதில் மட்டும் தான் ஆர்வத்தோடு இறங்க முடிகிறது. அடுத்த காரியங்களை செய்வதற்கு உடம்பும் ஒத்துழைப்பதில்லை. மனதும் உடம்போடு மல்லுக்கு நிற்பதில்லை. ஆன வரையில் போனது போதும் போ என்று சலிப்பு வந்துவிடுகிறது. இது இளைய பிள்ளைகளுக்கு புரிவதில்லை. வயசு ஆனாலே கார்த்திகை மாதம் மழையை போல சள சளவென்று பெருசுகள் பேசுகின்றன என்று குறைபடுகிறார்கள் அவர்களுக்கும் வயதானால் தான் விஷயம் தெரியும்.

முதலியார் விட்ட இடத்திலிருந்து நான் உரையாடலை ஆரம்பித்தேன். பொத்தாம் பொதுவாக புதுசு எல்லாம் கெடுதி என்று சொல்லிவிட முடியாது. செல்போன் இருக்கிறதே அது எவ்வளவு உபயோகமாக இருக்கிறது மனிதனின் அலைச்சலை பாதியாக குறைத்து விட்டது. நேற்று ராத்திரி நானும், எனது மூத்த பையனும் இரண்டுமணி நேரம் நேருக்கு நேர் பார்த்தே இன்டர்நெட்டில் பேசிகொண்டோம். பத்து பைசா செலவு இல்லை. அது மட்டுமா பையனை பிரிந்து இருக்கிறோமே என்ற கஷ்டம் இப்படிப்பட்ட வசதிகளால் நன்றாகவே குறைந்து விடுகிறது என்று நான் சொல்லியதை கேட்ட அவர் முறுவலித்தார். 

நீங்க சொல்வது வாஸ்தவம் நான். அதை இல்லை என சொல்லல கடவுள் படைத்த ஒவ்வொரு பொருளிலும் எதோ ஒரு நன்மை இருப்பது போல மனிதனது படைப்பிலும் நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அதை நல்ல காரணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோமா? என்பதை யோசிக்க வேண்டும் நீங்கள் சொல்லுகிற இன்டர்நெட்டும், செல்போனும் நல்லது தான் நானதை மறுக்க வில்லை. ஆனால் அதே விஷயங்கள் நம்மை இளைஞர்களை எந்த அளவு தவறான பாதையில் செல்ல தூண்டி இருக்கிறது என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.  நன்மையை விட தீமை அதிகமாக இருக்கிறது என்றால் அந்த கண்டுபிடிப்பால் என்ன பலன் இருக்கிறது? ஒன்றுமே கிடையாது என்றார். முதலியார் 

ஒரு கட்டிடம் அழகாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரமும் வேண்டும் மேற்கூரையும் வேண்டும். அஸ்திவாரம் என்பது பழமை மேற்கூரை தான் நவீன கண்டுபிடிப்புகள் கூரையில்லாத கட்டிடம் கூட சில காலம் தாங்கும். ஆனால் அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் அரை நாழிகை கூட நிற்காது எனவே மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் நேற்று நான் எப்படி இருந்தேன் இன்று நான் எப்படி இருக்கிறேன் இன்றைய வளர்ச்சிக்கு நேற்றைய பொழுது தானே காரணம் என்ற விழிப்புணர்ச்சியும் பழமை மீது விசுவாசமும் வேண்டும். 
பழமையை நேசிக்கிற பண்பாடு நம் நாட்டில் மட்டும் தான் இல்லை என்று நினைக்கிறேன் மற்ற நாடுகளில் நூறு வருஷத்திய பொருள்களை கூட பொத்தி பொத்து பாதுகாக்கிறான். நம்ம நாட்டுல ஆயிரம் வருடமான கலை பொருட்கள் கூட கேட்பாரற்று கிடக்குது இந்த கொடுமை வேறு எங்கும் கிடையாது. இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் நானும் யோசித்து பார்த்து விட்டேன் ஒன்றும் பிடிபடவில்லை.  

இதில் பெரிதாக யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை வெள்ளைக்காரன் இருக்கிறானே அவன் வேண்டுமென்றே நம் வரலாற்றை திரித்து எழுதிவிட்டான். அதை உண்மை என்று நம்பி கொண்டு ஒரு அறிவாளி பெரிச்சாளிகளின் கூட்டம் இன்று கூட நாட்டில் சுற்றி திரிகிறது. அந்த பெரிச்சாளிகளின் கூவல்களுக்கு நல்ல மேடை கிடைக்கிறது விளம்பரமும் கிடைக்கிறது அப்பாவி மனிதர்கள் அவன் பேசுவதை உண்மை என்று நம்பி பழைய பொக்கிசங்களை இழந்து கொண்டே வருகிறான். அந்த வகையில் தான் நம் வரலாற்ற்று சின்னங்கள் மீது நமக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது. 

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி என்று நினைக்கிறேன். மரத்தில் உள்ள பழம் கீழே எதற்காக விழுகிறது என்று நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அது ஏன் விழுகிறது என்று ஒருவருக்குமே தோன்றவில்லையா என்ன? கொட்டுகிற அருவியும் புருஷன் மேலே பெண்டாட்டி வீசி எரிகிற பூரி கட்டையும் பூமியில் விழுவதை யாருமே பார்க்கவில்லையா என்ன? நிறையப்பேர் பார்த்திருக்கிறார்கள் எல்லா பொருளும் கீழே விழுந்தால் பூமி ஈர்த்து கொள்ளும் என்று எல்லோருக்குமே தெரியும் தெரிந்த விஷயத்தை நியூட்டன் எழுதி வைத்திருக்கிறார் அதனால் அவர் கண்டுபிடித்தார் என்று நாமும் சொல்கிறோம் 

நீங்க ஒன்னு விஷயம் தெரியாமல் பேசுறீங்க நியூட்டன் கண்டுபிடிக்கிறதற்கு பல வருஷங்களுக்கு முன்பே நம்ம பாட்டன் அதை கண்டுபிடித்து விட்டான் சூரிய சித்தாந்தம் என்ற புத்தகத்தில் அந்த விஷயம் இருக்கிறது வராகமிகிரர் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் பாஸ்கரச்சாரியார் போன்றோர்களும் கூட புவிர்ப்பு விசையை பற்றி தெளிவாக சொல்கிறார்கள் இதுவெல்லாம் நம்ம ஜனங்களுக்கு தெரியவே தெரியாது விஞ்ஞானம் கண்டுபிடிப்பு என்று வந்துவிட்டாலே அது வெள்ளைக்காரன் விவகாரம் என்று ஒதுக்கி விடுவார்கள் அது பெரிய தப்பு உலகத்திலேயே வெள்ளைக்காரன் மட்டும் தான் புத்திசாலியா என்ன?

ரொம்ப சரி ஏழாம் நூற்றாண்டுல பிரம்மகுப்தா என்று ஒரு மனிதன் வாழ்ந்தார் இவர் ஸ்புட்டா சித்தாந்தா என்ற புஸ்தகத்தில் நெருப்பு எப்போதுமே மேல் நோக்கி போகும். தண்ணீ எப்போதுமே கீழ்நோக்கி பாயும். ஏன்னா புவியீர்ப்புக்கு நெருப்பு கட்டுபடாது என்று எழுதி வைத்திருக்கிறார். நம்ம ஜெகத்குரு ஆதிசங்கரர் கூட பிரசன்ன உபநிசத்தில் மேலே தூக்கி போடுகிற பொருளை பூமி இழுப்பது போல மனித உடம்பில் உள்ள உயர்ந்த பிராண சக்தியை அபானசக்தி கீழ்நோக்கி இழுக்கிறது என்று கூறப்பட்டதாக எழுதி வைத்திருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது நியூட்டனுக்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே நம்ம ஆளு புவியிர்ப்ப இயற்கையாகவே தெரிஞ்சி வச்சிருந்தான் என்று சொல்லலாம் நம்ம ஜனங்களுடைய அறியாமை தான் வெள்ளைக்காரனுக்கு கொடி பிடிக்க வைக்குது.
  
எங்கள் உரையாடல் இப்படி போய் கொண்டிருந்த போதே ரேசன் கடைக்காரன் சீக்கிரம் கடையை மூடிடுவான். வேகமா நட! என்று யாரோ தெருவில் சத்தமாக பேசியது முதலியார் காதில் விழவும் பெரிய கொடுமை நமக்கு நடக்கு தெரியுமா? வெள்ளைக்காரனுக்கு கொடி பிடிச்சி அடங்கி போன பழக்கத்துல இன்றைக்கு நம்ம அரசு சேவர்களுக்கும் நாம தீவெட்டி தூக்க வேண்டிய நிலமையில இருக்கிறோம் சம்பளம் கொடுக்கிற முதலாளியான நாம வேலைக்காரனான அதிகாரி முன்னால கைகட்டுறோம் இதைவிட கொடும வேறென்ன இருக்க முடியும் என்று கூறி கொண்டே அரிசி வாங்குவதற்கு கிளம்பி போனார்.
 

Contact Form

Name

Email *

Message *