Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆயுளை வளர்க்கும் சித்திரை பெளர்ணமி


    மது இந்தியாவை பொறுத்தவரை பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களை புண்ணிய தினங்களாக கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. மந்திர பிரயோகங்கள் பித்ரு காரியங்கள் போன்றவைகளை செய்வதற்கு அமாவாசை உகந்த தினம் என்றால், சில நல்ல காரியங்களுக்கு பரிகாரங்கள் செய்ய பெளர்ணமி நல்ல தினமாகும். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பெளர்ணமி தினத்தில் தனித்தனியாக செய்ய கூடிய பரிகாரங்களும், அதனால் கிடைக்கும் பலன்களும் ஏராளம். ஆனால் அது இதுவரை பலருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்து வருகிறது.

சில விஷயங்களை ரகசியமாக பாதுகாப்பது சிறந்தது என்றாலும், பல விஷயங்களுக்கு அது பொருந்தி வராது. ரகசியம், ரகசியமென்று மூடி வைக்க வைக்க அது நாளா வட்டத்தில் அழிந்து போனாலும் போய்விடும். எனவே அப்படிப்பட்ட ரகசியங்களை மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டியது கடமை என்று நினைக்கிறேன். அந்த வகையில் மாத வாரியாக வருகிற பெளர்ணமி தினங்களில் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை தொடர் பதிவுகளாக தரலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சித்திரை மாத பெளர்ணமியின் சிறப்புகளை இப்போது சிந்திப்போம்.

ஒரு மனிதன் நிறைய செல்வம் படைத்தவனாக இருக்கலாம். நல்ல பலசாலியாக, அழகு பொருந்தியவனாக, ஆரோக்கியம் மிகுந்தவனாக இருக்கலாம். இவைகள் எல்லாம் இருந்தும் அவனுக்கு ஆயுள் என்பது குறைவாக இருந்தால் அதனால் என்ன பயன் ? எனவே ஆயுள் என்பது மிகவும் அவசியம் சிலருக்கு நல்ல ஆயுள் இருந்தும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இப்போது செத்துவிடுவோமோ? அப்போது இறந்துவிடுவோமோ? என்ற மரண பயம் இருந்து கொண்டே இருக்கும். மரணத்தை விட மிக கொடியது அதைபற்றிய பயம். அதனால் நீண்ட ஆயுள் பெறுவதற்கும் மரண பயம் இல்லாமல் வாழ்வதற்கும் சித்திரை மாதத்தில் விரதமும் பரிகாரமும் செய்து கொள்ளளலாம். 

சத்தியவான் சாவித்திரியை பற்றி கேள்விபடாத ஹிந்துகளே இருக்க முடியாது எனலாம். மரண கோட்டைக்குள் சென்றுவிட்ட தனது கணவனை விடா முயற்சியாலும், நுண்ணிய புத்தியாலும் எமதர்மனையே சிந்திக்க வைத்து மீட்டு வந்தவள் அவள். அப்படி, அவள் கணவனின் உயிரை மீட்டு வந்த தினம் தான் இந்த சித்திரா பெளர்ணமி. இது மட்டும் இதன் விஷேசம் அல்ல, கால தேவனையே சிவபெருமானின் காலால் உதை வாங்க வைத்தானே அந்த மார்கண்டேயேன் எமதர்மனின் பாச வலையிலிருந்து மீண்டு வந்ததும் இந்த தினத்தில் தான். 

சித்திரா பெளர்ணமி அன்று, சித்திர குப்தனை அதாவது எமலோகத்தில் மனிதர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகிற தேவதையை நோக்கி விரதமிருக்க வேண்டும். அன்றைய உணவில் கண்டிப்பாக உப்பு இருக்க கூடாது. உப்பில்லாத உணவு சாப்பிடுவது தானே விரதம் அன்று ஒருநாள் மட்டும் கார வகை உணவுகளை தள்ளி வைத்து விட்டு இனிப்புகளை சாப்பிடலாம் என்று யாராவது நினைத்தால் அது மிகவும் தவறு. வழக்கமாக நாம் எடுத்து கொள்ளும் உணவையே உப்பில்லாமல் சமைத்து சாமிக்கு படைத்து அன்று உண்ண வேண்டும்.  

அன்றைய தினம் திருவண்ணாமலை கோவிலில் இருக்கின்ற எமதர்மன் சன்னதியிலும், ஸ்ரீ வாஞ்சியம் சித்திர குப்தன் சன்னதியிலும், வழிபாடு செய்து ஏழை, எளியவர்களுக்கு நம்மால் முடிந்த தானங்களை செய்ய வேண்டும். மிக குறிப்பாக புற்று நோய் போன்ற, கொடிய நோய் ஏற்பட்ட வறியவர்களுக்கு முடிந்த மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் நமது ஆயுளும், கூடும் மரண பயமும் விலகும்.





Contact Form

Name

Email *

Message *