Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைவரும் !       உனது காரின் விலை என்னவென்று அவனிடம் கேட்டேன். மூன்றுலட்ச ரூபாய் என்று பதில் தந்தான். அவனை பார்ப்பதற்கு எனக்கு வேடிக்கையாக இருந்தது மூன்று லட்ச ரூபாய்க்கு ஒரு கார், அதை ஓட்ட இவனொரு ஆள், என் காருக்கு வாங்கி மாற்றும் சக்கரத்தின் விலையே ஐந்து லட்ச ரூபாய் இவர்களெல்லாம் கார் ஒட்டவில்லையே என்று யார் அழுதார்கள் என்று நான் யோசித்த காலம் உண்டு.

ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டி பொருட்களை வாங்கிய பிறகு சில்லறை பணத்தை வாங்குவதற்கு கூச்சப்பட்ட நேரம் உண்டு. ஐம்பதாயிரம் ரூபாயில் கோட், சட்டை வாங்கி ஒரே ஒரு நாள் மட்டும் அணிந்து விட்டு அதன்பிறகு  அதை திரும்பி பார்க்காமல் அழுக்கு மூட்டையில் போட்ட காலமும் உண்டு. ஆடம்பரம், ஆரவாரம் ஆர்ப்பரிப்பு அத்தனையும் மட்டும் தான் உலகமென்று வாழ்ந்த காலமது. பசித்தவன் குரல் காதுகளில் விழுந்ததில்லை. தேவைகளின் அருமையை உணர்ந்ததில்லை. 

காலம் அப்படியேவா போகும்? ஒருநாள் மாறியது வங்கக்கடலில் சுழன்றடித்த சூறாவளி என் வாழ்க்கையிலும் அடித்தது. கோபுரத்தின் மேலே அழகாக இருந்த கலசம் குப்பையிலே விழுந்து உடைந்து போனது. பணம் இல்லாதவன் வாழ்க்கை பிணமென்ற தத்துவம் புரிந்தது. வாழ தெரியவில்லை, வாழ முடியவில்லை வாழவும் விரும்பவில்லை உயிரை மாய்த்து கொள்ளலாம் என்றால் அதற்கும் துணிச்சலில்லை. இருண்ட வானத்தில் எங்கே ஒரு மூலையில் ஒரு சிறிய வெளிச்ச புள்ளி மின்னுவது போல் நம்பிக்கை மின்னி கொண்டே இருந்தது. கஷ்டங்கள் என்பது தற்காலிகமானது மீண்டு வருவாய் என்ற குரல் எதிரொலித்த வண்ணமே இருந்தது எதிரொலியை நம்பி தட்டு தடுமாறி நடக்க துணிந்தேன். 

நேற்றுவரை எஜமானன் என்று என்னை போற்றியவன் இன்று ஏளனமாக பார்த்தான். கைகட்டி சேவகம் செய்தவன் கைகொட்டி சிரித்தான். இவன் ஆட்டம் முடிந்தது என்று உலகமே ஆரவாரித்து ஏகடிகம் பேசியது. இன்று சிரிப்பவர்கள் சின்ன புழுவாக என்னை பார்ப்பவர்கள், இவர்களை நம்பியா நான் பிறந்தேன்? இவர்களின் பாராட்டுக்காகவா நான் வாழ்ந்தேன்? கண்டிப்பாக இல்லை. விழுந்தவனை கண்டு கழுத்து சுளுக்கும் வரை சிரிப்பவன், உலுத்து போன மரம், பழுத்து அழுகிப்போன பழம் என்று யாரெல்லாம் ஆணவத்தின் உச்சிக்கு சென்று வாழ்க்கையின் அடிவாரத்திற்கு வந்துவிட்டார்களோ அவர்களையும் கூட சோர்ந்து விடாமல் நம்பிக்கை கொடுத்து தூக்கி நிறுத்துபவன், தான் உண்மையான இலக்கியவாதி. அந்த வகையில் கண்ணதாசன் என்ற கவியரசன் மூடிசூடா மன்னன். 

பெரிய வீடு, அதனுள்ளே இரவு பகல் பாராத உறவினர்களின் கூட்டம். வடித்து கொட்டுவதையே வாழ்க்கையாக கொண்ட நளபாக மன்னர்கள். அணையாத அடுப்பு, குறையாத பந்தி, விருந்துண்ண மனிதர்கள் மட்டுமா! வந்தார்கள். தெருவில் சுற்றி திரியும் நாய்களும் அல்லவா என் வீட்டு கொல்லைப்புறத்தை ஆலவாலமிட்டது இன்று அடுப்பு அணைந்து விட்டது. விருந்து முடிந்து விட்டது பஞ்சணையில் புரண்ட நான் பாதையில் நிற்கிறேன். என்னை கடந்து சொந்தங்கள் செல்கின்றன, பந்தங்கள் போகின்றன. நரிக்கு பேர் போன நாய்கள் கூட ஒருநிமிடம் தலையை தூக்கி என்னை பார்த்து விட்டு ஓடிபோகின்றன. இதை கண்ணதாசன் தனது அழகிய தமிழால் ஒரு சித்திரம் வரைகிறான் 

பானையிலே சோறிருந்தால் 
பூனைகளும் சொந்தமடா 
சோதனையை பங்கு வைத்தால் 
சொந்தமில்லே பந்தமில்லே

-உறவுகள் என்பது ஒட்டி வருவது அது அற்றகுளத்து அறுநீர் பறவைகள் போல் ஒருநாள் இல்லை என்றாலும், இன்னொரு நாள் வெட்டி கொள்ளும். ஆனால் நாம் பெற்ற பிள்ளைகள் வெறும் உறவுகள் அல்ல, நமது இரத்தத்தில் விளைந்த சொந்தங்கள். பாதாளத்தில் நாம் கிடந்தாலும், பரிதவித்து நாம் துடித்தாலும், நமக்கு ஆறுதல் தர, நம் தாகத்திற்கு தண்ணீர் தர அருகிலேயே இருப்பார்கள். வறுமை மட்டுமல்ல, உடலையே உழுத்து போக செய்யும் பெரிய நோய்கள் நம்மை தாக்கினாலும், வஞ்சகன் நமது உடலெல்லாம் வாதம் வந்தாலும், வாய் நிறைந்த பொய்யன். நமக்கு சூலம் வந்தாலும், கையழுகி, காலழுகி காடு சேர நேர்ந்தாலும், நாட்டு மக்கள் அத்தனை பெரும் நம்மை காரி துப்பினாலும், பெற்ற பிள்ளைகள் என்னைவிட்டு போகாது என்று நம்புகிறோம், கனவு காண்கிறோம். ஆனால் அந்த பிள்ளைகளும் கூட ஒரு எல்லை வரை வந்து விட்டு, மறைந்து போகிறார்கள். இந்த நிலையை 

தென்னையை வைத்தால் இளநீரு 
பிள்ளையை பெற்றால் கண்ணீரு 
பெற்றவன் மனமே பித்தம்மா 
பிள்ளையின் மனமே கல்லம்மா
  
-என்ற வார்த்தைகளில் வடித்து தந்து, உலகம் என்பது இது தான். இதை புரிந்து கொள்ளாதவன் மூடன். புரிந்தவன் புத்திசாலி மட்டுமல்ல, உலகத்தில் வாழ தெரிந்தவனும் ஆவான் என்று கண்ணதாசன் சொல்கிறான். சரி இவ்வளவு தான் உலகமென்று விரக்தியோடு உணர்ச்சியற்று ஒரு மரக்கட்டை போல வாழ வேண்டியது தானா? மனிதர்களின் நிலை வாழ்க்கையில் ஈரமே இல்லாத சாரத்தை மட்டும் தான் சுமக்க வேண்டுமா? என்று அலுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மனிதர்கள் உருவாக்கிய பொருட்களில் குளறுபடிகள் இருக்கலாம், தேய்மானங்கள் ஆகலாம், அவ்வப்போது மராமத்தும் தேவைப்படலாம். ஆனால் இறைவன் வகுத்த விதி என்பது மாறாத சத்தியம் போன்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக சூரியன் கிழக்கே தான் உதிக்கிறான். இரவில் தான் நிலா வருகிறது. மார்கழி மாதக்குளிரும், சித்திரமாத வெயிலும் இன்னும் மாறவே இல்லை. தை பிறந்து விட்டாலே குளிர் போக போகிறது சூடு வரப் போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். வாழ்க்கை என்பதும் இயற்கையின் விதி போல பொறுமையோடு நாம் காத்திருந்தால் கசந்தகாலம் வசந்தகாலமாக மாறுவது நிச்சயம் இதை 

ஆடியிலே காத்தடிச்சா
ஐப்பசியில் மழைவரும்
தேடிவரும் காலம் வந்தால்
செல்வம் எல்லாம் ஓடிவரும்!

-என்று நமக்கு சொல்வதோடு கண்ணதாசன் நின்றிருந்தால் அவரை பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை. கவியரசு தெய்வீக கவிஞன் என்ற பெயர்கள் கூட அவருக்கு பொருத்தமில்லாமல் போயிருக்கும். ஆனால் அவர் சாதாரண கவியல்ல கம்பனை போல், காளிதாசனை போல் இறையருள் கிடைத்த மகாகவி. அதனால் தான் அவர் இயற்கை விதியை நமக்கு நினைவுபடுத்தி அதுவரை காத்திருக்க சொல்கிறார். காத்திருப்பு என்றால் எப்படி அழுகையோடும், தொழுகையோடுமா? இல்லை. இறைவனை தொழுவதில் கூட கம்பீரம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் கவிஞன். அவன் கண்ணீர் வழிந்த முகத்தோடு காத்திரு என்று ஒருபோதும் சொல்ல மாட்டான்.    

நெஞ்சமிருக்கு துணிவாக
நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீயார் நான்யார் போடா போ!

-என் முன்னால் ஓடுகின்ற காலமென்ற பாதை என்னை நோக்கி தெளிவாக வருகிறது. வறுமையிலும், வயோதிகத்திலும் உடம்பு வாடி போனாலும் என் உள்ளம் மட்டும் இன்னும் வாடவில்லை. அதிலுள்ள உறுதியான எண்ணங்கள் இன்னும் தலைசாய்த்து விடவில்லை துணிவோடு இருக்கிறேன். காலம் கனியும் அப்போது வெற்றி பெற்ற நான் யார் என்னை பார்த்து எக்காளம் பேசிய நீ யார் என்று வரலாறு கூறும் என்று தோல்வியின் விளிம்பிற்கு சென்றாலும் கம்பீரமான வரவேற்பு வளையத்தை வகுத்து கொள்ள வழி கூறுகிறான் கவிஞன். 

வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி இவர்கள் அனைவருமே சந்தேகத்திற்கே இடமில்லாமல் மா கவிஞர்கள், கவிச் சிங்கம் இவர்கள் என்றால் மிகையில்லை. ஆனால் சிங்கத்தோடு உறவு பாராட்டும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை, சிறிய முயல். எனக்கு அச்சமுண்டு, மொழியோடு விளையாடும் பாண்டித்துவம் கிடையாது. சாதாரண வட்டார தமிழின் வழக்கத்தில் உள்ளவே பழகி கிடப்பவன். நானும் கம்பனையும், வள்ளுவனையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிங்கமென்ற சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்தவன் கண்ணதாசன். அதாவது மொழியறியாத ஏழைகளுக்காக பாரதியை விட வார்த்தைகளுக்கு எளிமை கொடுத்து எளியவரின் அருகில் வந்தவன் கண்ணதாசன்.

அதனால் தான் அவர் வாழ தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்ட, தனது தமிழை தனது கவிதா விசாலத்தை, தனது மேதமையை இறைவனை விட, ஒரு தாயை விட எளிய வடிவில் நமக்கு தந்தார். அதை நம்மில் எத்தனை பேர் புரிந்திருக்கிறோம் தெரிந்திருக்கிறோம். நமது புத்தி டாலாக்கு டோல் டப்பிமா என்று வக்கரித்து போய் கொண்டிருக்கிறது. அதை தடுப்பதற்கு நம்மை வளர்ப்பதற்கு அவ்வப்போது கோவிலில் இருக்கின்ற கண்ண பரமாத்மாவை மட்டுமல்ல. இலக்கிய சோலையில் இருக்கிற கண்ணதாசனையும் தரிசிக்கலாம்.

<<<----கண்ணதாசன் இலக்கியம் படிக்க->>>

Contact Form

Name

Email *

Message *