Store
  Store
  Store
  Store
  Store
  Store

உன் மகன் டாக்டர்



   குருஜி அவர்களுக்கு வணக்கம். என் மகனின் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அவன் குழந்தையாக இருக்கும்போதிருந்தே டாக்டராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் என் குடும்பச்சூழல் அவனை மருத்துவ படிப்பில் படிக்க வைக்கும் அளவிற்கு வசதி இல்லாதது. அவன் தவிர வேறு மூன்று குழந்தைகளும் எனக்கு இருப்பதனால் அவர்களுக்கும் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தும் பொறுப்பு எனக்கு உண்டு. ஒரு குழந்தையை மட்டுமே கவனித்து மற்றவைகளை கவனிக்காமல் விடுவது பெரிய பாவம் அதே நேரம் என் மகனின் ஆசையையும் நிராசையாக விடுவதற்கு மனம் வரவில்லை. இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு, 
கருப்பசாமிபாண்டியன், 
நடுவக்குறிச்சி. 



    மேலை நாட்டு கல்வி முறை என்பது, ஒரு மனிதனை தன்னந்தனியனாக தனிமையில் மட்டுமே வாழும் தகுதி பெற்றவனாக ஆக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆனால் நமது இந்திய பண்பாட்டு கல்வி என்பது மனிதனை தனிமையாக விடுவது இல்லை. ஒருவரை சார்ந்து இன்னொருவர் என்ற நிலை சமுதாயத்தில் வளர வேண்டும் என்பதே நமது கல்வி முறையாகும். ஆனால் இன்று அந்த முறையை மாற்றுவதற்கு பல வேலைகள் நடந்து வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. மனிதனை தனிமை படுத்தும் கல்வி முயற்சியானது வெற்றி பெற்று விட்டால் நாடு முழுவதும் மன நோய் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை யாரும் மறந்து விட கூடாது. 

காரணம் ஒரு பைத்தியக்காரன், ஒரு ஞானி இவர்களை தவிர வேறு யாருமே தனிமையில் வாழ முடியாது. பைத்தியக்காரனுக்கு மற்றவர்களை தெரியாது. ஞானிக்கு மற்றவர்களின் அருகாமை பிடிக்காது. ஏனென்றால் ஞானியின் பாதை கடவுளை நோக்கியது. நம் அனைவருக்கும் கடவுளை நோக்கி பயணப்படுவதற்கு விருப்பம் தான் என்றாலும் எல்லோருமே ஞானியாகிவிட்டால் உலகத்தின் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். எனவே பலரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டும் என்பதே இயற்கையின் விதி. அப்படி இணைந்து வாழ்வதற்கு விட்டு கொடுப்பதும் சமமாக பங்கிட்டு கொள்வதும் மிகவும் அவசியம். இந்திய குடும்ப வாழ்க்கையின் ஆதார சுருதியே பங்கிட்டு கொள்வதில் தான் இருக்கிறது. 

எல்லா குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களே அதில் தான் நமது தேசத்தின் ஆத்மா எதிரொலிக்கிறது. சாதாரண மனிதன் கூட பெற்றோராக உயர்ந்து நிற்கும் போது ஓரவஞ்சனை இல்லாத புனிதனாகி விடுகிறான். உங்களது அன்பான உள்ளத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. இருந்தாலும் வறுமை துரத்தினாலும் பெற்ற பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற விரும்புகிற உங்களது எண்ணத்தை இறைவன் கண்டிப்பாக வாழ்த்துவான். 

ஒருவனது ஜாதகத்தில் லக்கினத்திற்கு, இரண்டாவது இடத்தில் சனியும், ராசிக்கு ஐந்தாவது இடத்தில் கேதுவும் இருந்தால், அந்த ஜாதகன் கண்டிப்பாக திறமைவாய்ந்த மருத்துவனாக வருவான் என்றும், நோயாளியை பார்த்தவுடனேயே அவனது வியாதிக்கு இது தான் காரணமென்று மூலத்தை கண்டுபிடித்து விடுவான் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களது மகனின் ஜாதகமும் அப்படியே இருக்கிறது எனவே அவன் ஆசை எந்தவகையிலாவது நிறைவேறியே தீரும். 

அவன் வயதுப்படி பார்க்க போனால் மருத்துவ படிப்பை தொடங்குவதற்கு இன்னும் ஐந்து வருட காலம் இருக்கிறது. இறைவன் நினைத்தால் ஒரு நிமிட நேரத்தில் மனிதனின் வாழ்க்கையை திருப்பி போட்டு விடுவான். ஆண்டியை, அரசனாக்குவதும், அரசனை ஆண்டியாக்குவதும் அவனுக்கு விளையாட்டு. எனவே உங்கள் வாழ்க்கையும் மாறலாம். மாறும் காத்திருங்கள் கடவுள் கைவிட மாட்டான்.




Contact Form

Name

Email *

Message *