Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனசாட்சிப்படி நடப்பாரா மோடி...?


    மாலை நேரம் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். பக்கத்து விடுகளில் எல்லாம் மின்சாரம் இருக்கிறது. நம் வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லை என்ன? ஏது? என்று ஆராய துவங்கினால் எதிலும் பழுது ஏற்படவில்லை. நம் வீட்டிற்கு மட்டும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது அப்போது தான் மின்சார கட்டணம் கட்டுவதற்கு மறந்து போன விஷயம் தெரிய வருகிறது. நம்முடைய அனுமதி இல்லாமலேயே மின்சாரத்தை துண்டிப்பதற்கு அதிகாரம் பெற்ற மின்சார இலாகா என்றாவது ஒருநாள் தடையற்ற மின்சாரம் தருவது தனது கடமை என்பதை நினைத்து பார்த்திருக்கிறதா? 

பொங்கல் இனாம், ஆயுதபூஜை இனாம் என்று படியேறி தலையை சொறிந்து கொண்டிருக்கும் மின்சார இலாகாவின் அடிநிலை ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டிக்கும் போது மட்டும் நம்மிடம் தெரிவிப்பதே இல்லை. இப்படி பட்ட அந்த ஊழியர்கள் திடீரென்று ஒருநாள் உங்கள் வீட்டு கதவை தட்டி நீங்கள் இத்தனை சதவிகிதம் மின்சாரத்தை சேமித்திருக்கிறீர்கள் அதனால் உங்கள் பங்கு தொகை இவ்வளவு இதை பெற்றுக்கொள்ளுங்கள் என்று பணத்தை நம் கையில் தந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் நிஜ உலகில் வாழ்வதாக நம்மால் என்ன முடியாது.

ஆனால் இந்த கற்பனை கனவு நமது தேசத்திலேயே இருக்கும் ஒரு மாநிலத்தில் நிஜமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டு மாடி தளத்திலும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை பொருத்தி அதன் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை நம் கையிலே தேடி வந்து தந்துவிடுகிறார்கள். இந்த அதிசயம் குஜராத்தில் இன்றும் நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. மின்சாரத்தில் மட்டுமா அந்த மாநிலம் மிகு தன்மையை பெற்றிருக்கிறது. மக்களுக்கு தேவையான குடிதண்ணீரை கூட விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு சில அரசாங்கங்கள் வந்த பிறகும் குஜராத்தில் நல்ல தண்ணீர், மக்களின் அடிப்படை உரிமை என்று தடையில்லாமல் தரப்படுகிறது. வேளாண்மையில் தன்னிறைவு, பொது சுகதாரத்தில் நல்ல மேம்பாடு, கல்வியில் சிறப்பான முன்னேற்றம், தொழில் வளம் மற்றும் வர்த்தகம் அனைத்திலும் மேன்மை என்று அந்த மாநிலம் சக்கைபோடு போடுகிறது.

இந்தியாவில் உள்ள வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், சுகாதார சீர்கேடு அரசியலில் ஒழுங்கின்மை, மக்களின் பொறுப்பற்றத்தனம் போன்றவைகள் குஜராத்திற்கு மட்டும் விதிவிலக்கல்ல. அந்த மாநிலமும் இந்தியாவின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது ஆனால் அங்கு மட்டும் எப்படி இத்தனை முன்னேற்றம்? மற்ற பகுதிகளில் அத்தகைய முன்னேற்றத்தின் ஒரு சிறு முனை கூட தென்படாததற்கு என்ன காரணம்? என்று யோசித்து பார்த்தால் ஒரு அழகான உண்மை நமக்கு தென்படுகிறது. சட்டங்கள், நீதிகள் மற்றும் தர்மங்கள் என்று அனைத்துமே நல்ல முறையில் இருந்தாலும், நியாயமான வழியில் சிந்தனை செய்து தீர்க்கமாக அவைகளை உருவாக்கி இருந்தாலும் அதை நடைமுறைபடுத்துபவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால், சுயநலக்காரர்களாக இருந்தால் எந்த பயனும் இல்லை என்பதும் ஒரு தனி மனிதன் நல்ல தலைவன் இருந்தால் மட்டுமே ஜனநாயக சட்டங்கள் கூட செயல்படும் என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. 

குஜராத் மாநிலத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கிய அதன் முதல்வர் நரேந்திர மோதி அவர்களை தேசத்தின் ஒரு பகுதி பாராட்டுகிறது. இன்னொரு பகுதி அவரை பார்த்து அச்சபடுகிறது நாணயத்தின் இரண்டு பக்கம் போல நரேந்திர மோதிக்கு இரண்டு முகமிருக்கிறது என்றும் பரவலாக பேசபடுகிறது. மோடி நல்லவரா? கெட்டவரா? என்பதை பற்றி நாம் பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் அவரது நிர்வாகம் வளர்ச்சியை தந்திருக்கிறது என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு அவர் இந்த நாட்டின் பிரதமராக வரலாமா? வேண்டாமா? என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

நாம் முன்னே பார்த்தது போல இந்த நாடு சாதாரண நாடு அல்ல, இங்கு இதுவரை இருந்த தலைவர்களும் சாதாரணமாணவர்கள் அல்ல. உலகமாந்தர்கள் அனைவரும் போற்றி வழிபட கூடிய, பின்பற்ற கூடிய தகுதியும், தராதரமும் வாய்ந்தவர்கள் அவர்கள். ஆனால் இன்று குபேரன் வீட்டிலேயே வறுமை தாண்டவமாடுவது போல நமது நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் நமக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத அயல் நாட்டு கொள்கைகளை, தொழில் அமைப்புகளில் மட்டுமல்ல கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகளிலும் புகுத்தி பரிசோதனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டோம் அதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் மனிதனை மனிதன் நேசிக்கும் மனிதாபிமானம் சுண்டி காய்ந்து போனதை போல, நம் நாட்டிலும் கருணைக்கு வறட்சி ஏற்பட்டு விட்டது அந்த தவறை நாம் அனைவருமே தெரிந்தே தொடர்ந்து செய்தோம் செய்தும் வருகிறோம். 

இதனால் தான் எப்போதும் இல்லாத அவமானங்களை நமது நாடு இப்போது சந்தித்து வருகிறது. சிங்கத்தை பார்த்து சிதறி ஓடுகிற சிறு நரிகளான அண்டய நாடுகள் இன்று நம்மை சீண்டி பார்க்கிறது. நமது மீனவர்களின் தொழில் உரிமையில் அனாவசியமாக மூக்கை நீட்டுவதோடு இல்லாமல் நமது மீனவர்களின் சொத்துக்களை தங்களது தேசத்தின் பொது சொத்தாக அறிவிக்கும் துணிச்சல் ஒரு நாட்டிற்கு வந்திருக்கிறது. இன்னொரு நாட்டானோ நமது எல்லைக்குள் பயமே இல்லாமல் ஊடுருவி நமது வீரர்களின் தலையை கொய்யாபழம் கொய்வது போல பறித்து கொண்டு நிற்கிறான் நாமும் பார்த்து கொண்டு நிற்கிறோம். உலகத்தில் வல்லரசு என்று தன்னை தானே பிரகடனப்படுத்தி கொண்ட தேசம் தனக்கென்று சொந்த மூளை இல்லாத ஒரு தேசம் சோம்பேறிகளையும், உடல் வெறியர்களையும் மக்களாக வைத்திருக்கிற ஒரு தேசம் நம்மை பார்த்து நம் முகத்துக்கு நேரே சிறிதும் அச்சமின்றி நீ வறுமையில் கிடப்பவன் முன்னேற முடியாத மூடன் என்று கருத்து கூறுகிறது. நாமும் அதை கேட்டுக் கொண்டு தாடியை சொறிந்த வண்ணம் இருக்கிறோம் 

இந்த நிலையில் நமது நாட்டு மானத்தை, வீரத்தை வீரியத்தை தூக்கி நிமிர்த்துகின்ற நல்ல தலைவர் தேவை அப்படி பட்டவர் யார்? அப்படி யாரவது ஒருவர் நமது கண்ணெதிரே தெரிகிறாரா? அவர் லாலுபிரசாத் யாதவா? முலாயம் சிங்கா? மாயாவதியா? ஜெயலலிதாவா? மம்தாவா? கலைஞர் கருணாநிதியா? அல்லது சோனியா காந்தியா? இவர்களில் நம்மை வழிநடத்த போகிற நல்ல தலைவர் என்று நாம் ஆராய்கின்ற போது இவர்களில் யாருமே இல்லை ஒன்று நரேந்திர மோடி அல்லது ராகுல்காந்தி என்ற பதிலை மட்டுமே நம்மால் பெற முடிகிறது. நாட்டை ஆளக்கூடிய நல்ல தகுதி பெற்ற பலர் இன்றும் இருந்தும் இவர்கள் இருவரை மட்டுமே முன்னிலைப்படுத்துவதனால் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய பரிதாபகரமான நிலை நம் மக்களுக்கு இருக்கிறது. எனவே இவர்களில் ஒருவரை விட இன்னொருவர் சிறிதளவாவது சிறந்தவராக இருக்கிறாரா? என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

நரேந்திரமோடி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர். எனவே அவரது ஆட்சி திறமை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு அனுமானிக்கலாம். ஆனால் ராகுல் காந்திக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லவே இல்லை அவர் கட்சி தான் கடந்த பத்துவருடமாக நாட்டை ஆண்டுவருகிறது என்றாலும் அதை பயன்படுத்தி கொண்டு ஒரு அமைச்சர் பதவியை கூட இன்றுவரை ராகுல் பெற்றிடவில்லை என்பதனால் அவர் செயல்பாட்டை நம்மால் அறிய முடியவில்லை. அவருக்கும் மன்மோகன் சிங் போல நெருக்குதல்களும் இடர்பாடுகளும் இல்லாத நிலையில் பதவி கிடைத்தால் ராகுலும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்று அவரது விசுவாசிகளில் பலர் கருதுகிறார்கள். ராகுல் இதுவரை ஆட்சி பொறுப்பில் இல்லையே தவிர கட்சி பொறுப்பில் இருந்து வருகிறார் கட்சி ரீதியாக அவர் எடுத்த முடிவுகளை வைத்தே அவரது நிர்வாக சக்தியை ஓரளவு தீர்மானிக்கலாம் 

அப்படி பார்க்க போனால் ராகுல் காந்திக்கு நம்மால் பாஸ் மார்க் போட முடியவில்லை. இதுவரை அவர் கட்சியை முன்னெடுத்து செல்லும் போதெல்லாம் பெரிய தோல்வியும் அவமானமுமே கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உள்ளாட்சி உட்பட நடந்து முடிந்த தேர்தல்களில் இந்தியா முழுவதுமே ராகுல் காந்திக்கு நல்ல பெயர் இல்லை என்றாலும் அவரால் கட்சிக்கு புது புது வகையில் அவமானங்கள் வந்த வண்ணமே இருக்கிறது. கட்சியை கூட வளர்க்க முடியாத ராகுல் பதவிக்கு வந்தால் அவரது தந்தையார் எப்படி ஒரு பொம்மை போல அரசாங்கம் செய்தாரோ அதே போலவோ அதை விட கீழேயோ தான் இவரால் இருக்க முடியுமென்று பலரும் சொல்கிறார்கள். 

ராகுல் காந்தியிடம் ஆட்சியை நடத்துவதற்கு தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்வதற்கு முன்னால் நரேந்திரமோடியிடம் மட்டும் அத்தகைய திறமைகளும் சாதுர்யங்களும் இருக்கிறதா என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். தன் மாநில வளர்ச்சியை விளம்பரபடுத்தி நாடு முழுவதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோடியிடம் தனது சொந்த கட்சியில் எதிர்ப்பு இல்லாத நிலையை உருவாக்கி கொள்ள முடியவில்லை. தொண்டர்களை விட்டு விடுவோம் அத்வானி போன்ற மிக மூத்த தலைவர்களையே மோடியால் திருப்தி படுத்த இயலவில்லை. தன் கட்சியும் கூட்டாளியாக இருந்த நித்திஷ் குமாரை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இதுவரையில் இவரை விமர்சிக்காத தலைமையை ஏற்றுக் கொள்ள விரும்பும் ஒரு கூட்டணி கட்சியை வரவழைக்க முடியவில்லை. மோடியின் மேலுள்ள இந்த சிறிய குறைகளை போன்ற குறைகள் தான் ராகுல் காந்தியின் மேலுள்ள குறைபாடுகளும் ஆகும். 

மேலும் இவர்கள் இருவருக்கும் மத்தியில் நல்ல ஒற்றுமை இருக்கிறது இரண்டுபேருமே தனக்கு மேலுள்ளவர்களை தன்னை விட மூத்தவர்களை மதிக்க தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ராகுல் நாட்டின் பிரதமரை அவமாமனபடுத்துகிறார். மோடியோ பிரதமரை போன்ற பல தகுதிகள் வாய்ந்த அத்வானியை வலுக்கட்டாயமாக புறம் தள்ள முயற்சிக்கிறார். இந்த வகையில் பார்க்க போனால் இவர்கள் இருவரையும் எந்த வழியிலும் நல்ல தலைவராக நல்ல முறையில் நாட்டை வழி நடத்துகிற சிறந்த மனிதனாக ஏற்றுகொள்ள முடியாது. இருவரையுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்லலாம். 

ராகுலும் சரி, மோடியும் சரி யாரும் மகாத்மா அல்ல. இருவரில் ஒருவரால் கூட காந்தி சொன்னபடி அமைதியாக வாழ முடியாது. சண்டையும், சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து என்பதை போல இவர்கள் இருவருக்கும் சண்டை என்பது போதை தருகிற சாராயமாக இருக்கிறது. அதை இவர்களால் அவ்வளவு விரைவில் விட்டு விட இயலாது. எனவே இவர்கள் இருவரையும் பிரதமராக வைத்து பார்ப்பதில் பல அபாயங்கள் இருக்கிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

திருச்சி பக்கத்தில் உள்ள அரியலூரில் ஒரு ரெயில் விபத்து ஏற்பட்டு சிலர் மட்டுமே காப்பாற்ற பட்டார்கள் மற்றவர்கள் அனைவரும் உறவினர்களை தவிக்க விட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்கள் உடனே இந்திய ரெயில்வே அமைச்சராக இருந்த ஓ.வி.அழகேசன் விபத்திற்கு முழு பொறுப்பு ஏற்று தனது வேலையை ராஜினாமா செய்தார். மனிதனை இறக்கேமே இல்லாமல் கொலை செய்கிற இலங்கை நாட்டில் கூட டட்லி சேனநாயக என்ற ஜனாதிபதி தனது ஆட்சி காலத்தில் ஒரே ஒரு ஒற்றை மனிதன் சுட்டு கொல்லப்பட்டதற்காக தனது பதவியை விட்டு கீழே இறங்கினார் இவ்வளவு ஏன் அத்வானி கூட அவர் மீது ஊழல் புகார் வந்த போது சட்டப்படி தான் நேர்மையானவன் என்று நிரூபிக்க பட்டால் ஒழிய நாடாளுமன்றத்திற்கு வரப்போவதில்லை என்று சபதம் செய்தார் அதே வழியிலும் உறுதியாக இருக்கவும் செய்தார் 

ஆனால் நல்லவர், வல்லவர், நாடு போற்றும் திறமைசாலி என்று வர்ணிக்கபடுகிற நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி காலத்தில் தான் கோத்ரா கலவரம் நடந்தது. சிறியவர்களும், பெரியவர்களும் பெண்களுமாக பல்லாயிரகணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன வீதியெங்கும் இரத்த ஆறு ஓடியது. இந்த கொலை பாதக செயலுக்கு மோடி அவர்களே முக்கிய காரணம் என்று சுட்டி காட்டப்பட்டது நேர்மை மிக்க மோடி உடனே என்ன செய்திருக்க வேண்டும்? நான் மக்களை மக்களாக மட்டுமே பார்கிறேன் மாறாக அவர்களை மதத்தின அடிப்படையில் பார்க்கவில்லை என்று கோத்ரா கலவர வழக்கின் கரை தன்னை விட்டு முற்றிலுமாக அகலும் வரை பதவிக்கு வரமால் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரும் தான் காவிய தலைவர் அல்ல சாதாரண தலைவரே என்பது போலவே நடந்து கொள்கிறார் 

அவரது கட்சி சுதேசியம் பேசுகிறது. அவரோ விதேசிய பார்வையில் சென்று தொழில் வளத்தை மேம்படுத்துவதற்கு நினைக்கிறார் இப்படி எத்தனை குறைகளையோ மோடியின் மீது நம்மால் காண முடிகிறது ஆனால் ராகுலிடம் இல்லாத சிறப்பாக மோடியிடம் நல்ல நிர்வாக திறமையை அறிய முடிகிறது என்பதனால் ராகுலை விட மோடியே சிறந்த தலைவர் அவரே இந்த நாட்டின் வருகால பிரதமராக வரலாமே என்று நாம் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதற்கு முன்னால் மோடியை பற்றிய சில அச்சங்களை ஜாக்கிரதை உணர்வோடு நாம் அணுக வேண்டிய நிலை உண்டு. மோடியின் செயல்களையும், மேடை பேச்சுகளையும் கவனிக்கும் போது அவரை இன்னொரு இந்திராகாந்தியை போலவே பார்க்க முடிகிறது. அதனால் அவர் அவரை போலவே தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தி கொள்ள சர்வதிகார போக்கை மேற்கொள்ளலாம் அத்தோடு எல்லாம் ஒன்றாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். வேற்றுமை என்பது ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை என்பதை போன்ற மேற்கத்திய மனோபாவம் மோடியிடம் இருக்கிறது. அதனால் தான் இந்தியா முழுவதும் இந்துக்கள் இருந்தால் நன்றாக இருக்குமென்று அவர் சிந்திப்பது போல் இருக்கிறது. 

எப்போதுமே ஒரே மாதிரி இருப்பதனால் வளர்ச்சி வராது. பல்வேறுபட்ட மாறுபட்ட சிந்தனை போக்குகளே வளர்ச்சி பாதையை தீர்மானிக்கும் இந்தியா இதுவரை ஓரளவு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அதனுடைய பன்முக தன்மையே காரணம் எனலாம். இந்தியாவின் அழகே இங்குள்ள இந்து, கிறிஸ்தவ, சீக்கிய இஸ்லாமிய பிணைப்புகளே ஆகும். இவைகள் அனைத்தையும் அழிக்க நினைப்பது தற்கொலை முயற்சியாகும். ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்கிற வரையிலும் இந்திய சக்தியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நமக்குள் மதகலவரங்களை, இனக்கலவரங்களை, ஜாதி சண்டைகளை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க அந்நிய சக்திகள் தயாராக இருக்கிறது. அதற்கு. நாம் பலியாகாமல் இருக்க வேண்டுமானால் மத வெறியை விட்டு விட்டு எல்லாவற்றையும் நேசிக்கும் தன்மையை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க நினைப்பவேனே நல்ல தலைவன் மோடி அதே போன்ற நல்ல தலைவராக வரவேண்டுமானால் தனது மனசாட்சியை ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் அவர் அடுத்த பிரதமர் என்பதில் நமக்கு சந்தோசமே. இல்லை என்றால் சற்று அச்சமாக இருக்கிறது நாடு மீண்டும் பாதாளத்தை நோக்கி போய்விடுமோ என்று.

Contact Form

Name

Email *

Message *