எப்போதும் சுகமாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகன்,
மதனகோபால்,
காரைக்கால்.
அறிஞனும், அசடனும், வீரனும், கோழையும், நல்லவனும், கெட்டவனும் மனிதனாக பிறந்த எவனுமே சுகமாக வாழ மட்டுமே விரும்புகிறான். சுகத்தை விரும்பியே இதுவரை உலகத்தில் சண்டை சச்சரவுகளும், மாபெரும் யுத்தங்களும் நடந்து வருகிறது. நன்மைகள் பலவற்றை செய்கின்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், ஆத்மாவை சுத்தப்படுத்துகிற மெய்ஞான வழிகளும் சுகம் என்ற ஒரு இலக்கை நோக்கியே மனிதனை அழைத்துச்செல்ல விளைகிறது.
இன்பம் ஒன்றுக்காகவே பாடுபடுகிறேன் என்ற உண்மையை, மனிதர்கள் பகிரங்கமாக ஒத்துக்கொள்வது இல்லை. அப்படி ஒத்துக்கொண்டால் அவனும், மிருகமும் ஏறக்குறைய ஒன்று என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும். அவ்வளவு தான் தன்னை உண்மையிலிருந்து மறைத்துக்கொள்ள மனிதன் விரும்புவதனால் மட்டும் தான் மிருகத்திலிருந்து அவன் வேறுபட்டவனாக இருக்கிறான்.
சுகமாக வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. இன மொழி கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு பல பாதைகள் போடப்பட்டு இருக்கின்ற, ஆனால் அனைத்திலும் பயணப்படுகிறவன் முழுமையான பலனை அடைகிறானா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் சொல்லவேண்டியது இருக்கிறது.
பாவிகளோடு சகவாசம் வைத்துக்கொள்ளாதவனாக, பிறர் மனைவியை நோக்காதவனாக, டம்பம், திருட்டு, கோள்சொல்லுதல் போன்ற தீய மன இயல்புகள் இல்லாதவனாக, மது, மாது, சூது போன்ற தீமைகள் அற்றவனாக மற்றும் பயனில்லாத பயணத்தை தவிர்ப்பவனாக இருப்பவன், சுகமாக வாழ்வான் என்று விதுர நீதியும், சுக்கிர நீதியும் சொல்கிறது. ஆனாலும் இவைகள் கூட சரியான பாதை தானா என்றால், ஆம் என்று முழுமையாக ஏற்க முடியவில்லை. அதில் எதோ ஒரு வகையில் சிறிய குறைபாடு தெரிகிறது.
இதற்கு விடை தேட சுகம் என்பது எங்கே இருந்து கிடைக்கிறது என்ற தெளிவு நமக்கு வேண்டும். சுகம் வெளியில் காண்கின்ற பொருட்களில் இருக்கிறதா? அல்லது நமது மனதில் இருக்கிறதா? பொருட்களில் தான் சுகம் இருக்கிறது என்றால் அந்த பொருளை பெற்றவுடன் சுகத்தை தேடுகிற முயற்சியை மனம் விட்டு விட வேண்டும். ஆனால் அப்படி நிகழ்வது இல்லை மனம் வேறொரு பொருளுக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது. எனவே சுகம் என்பது மனதிலிருக்கிறது என்ற முடிவை தவிர்க்க முடியவில்லை. காரணம் மனம் போதுமென்று நினைக்காத வரை சுகமென்பது கையில் கிடைக்காத வானம். அதனால் தான் நமது பெரியவர்கள் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்றார்கள்.