Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதிகளை வெறுத்தாரா காந்தி?

யார் ஞானி 7


காந்தியின் கொள்கைகளை பற்றி குருஜி மேலும் விவரிக்க துவங்கினார். 
  
    உயிர் என்பது உடலில் எல்லா பாகத்திலும் இருக்கிறது. அப்படி இருப்பதனால் தான் உடல் இயக்கமானது சமமான முறையில் நடைபெறுகிறது. எதாவது ஒரு உறுப்பில் உயிர்த்தன்மையானது, குறைந்து விட்டால் குறிப்பிட்ட அந்த உறுப்பு மட்டுமல்ல அதை தொடர்ந்து மற்ற உறுப்புகளும் கடைசியாக ஒட்டுமொத்த உடலுமே இயக்கம் இல்லாத நிலைக்கு அதாவது மரண நிலைக்கு சென்றுவிடும் இந்த தத்துவமே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்தாக இருப்பது கண்கூடு. சமூகத்தில் ஒருபக்கம் வளர்ச்சி ஒருபக்கம் தேக்கம் என்றால், நாளாவட்டத்தில் அது அழிவை நோக்கி சென்றுவிடும். 

அதனால் தான் நாட்டில் வளர்ச்சி என்பது மேலிருந்து கீழ் வராமல் கீழே இருந்து மேலே செல்ல வேண்டும் என்று மகாத்மாகாந்தி தெளிவாக கருதினார். கைத்தொழில்கள் மற்று இயற்கை சார்ந்த தொழில்கள் வளர்ந்தால் மட்டுமே பெரும் தொழில்களால் பரிபூரணமான பலன்களை பொதுமக்களுக்கு தரமுடியும். கைத்தொழில்கள் நசுங்கி போய்விடுமேயானால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையிலும், சிலநூறு மக்கள் செழுமையிலும் வாழ வேண்டிய நிலை வரும். இது ஒரு நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் சர்வதேச அரங்கில் அந்த நாட்டின் பங்களிப்பு முற்றிலும் இல்லாது போய்விடும்.

அரசு என்பதும், அரசியல் என்பதும் ஏற்றத்தாழ்வு இல்லாத தன்னிறைவை நோக்கி நடைபோடுகிற சமூதாயத்தை உருவாக்கும் கிரியா சக்தியாக இருக்க வேண்டும். இவைகள் தனது தோற்றத்திற்கான குறிக்கோளையே மறந்து செயல்பட்டால் எங்கும் குழப்பங்களும், சுரண்டல்களும் மட்டுமே காணப்படும். சுரண்டல்கள் மட்டுமே இருக்கிற நாட்டில் ஆணை இடுவது அரசாங்கத்தின் வேலை. அடங்கி நடப்பது மக்களின் கடமை என்ற அடிமைத்தனமே இருக்கும். உண்மையான அரசின் நோக்கம் இதுவல்ல மக்களே மக்களை ஆண்டுகொள்ளும் மக்களாட்சி சமூகத்தில் ஆணை இடவும், அடங்கி நடக்கவும் அவசியமில்லை. காரணம் அங்கே பொதுநலம் மட்டுமே அரசாட்சி செய்யும் அது அறத்தின் ஆட்சியாக இருக்கும் என்பது காந்தியின் முடிவான சித்தாந்தம். 

சீடர்;-

 காந்தி விரும்பிய லட்சிய சமூகம் எப்படி இருக்கும்?

குருஜி;-

லட்சிய சமுதாயம் என்று கருதப்படுகிற எந்த சமூகத்திலும் மக்கள் மத்தியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்காது சமத்துவம் நிலவும். உடல் வலிமை, மன வலிமை மற்றும் அறிவுத்திறமை ஆகிய மூன்றும் எல்லா மனிதருக்கும் சமமாக எப்போதுமே அமையாது. ஒருவன் உடல் வீரம் கொண்டவனாக இருப்பான். இன்னொருவன் அறிவில் வீரம் உடையவனாக இருப்பான். இறைவனது படைப்பு இப்படித்தான் இருக்குமே தவிர பாகுபாடு இல்லாமல் அமையாது. இயற்கையின் விதியே இப்படி இருக்கும் போது ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் சாத்தியமாகும் என்று எப்படி காந்தி நம்பினார் என்ற கேள்வி நமக்கு எழக் கூடும். 

ஒருவன் அறிவாளியாக இருப்பான், இன்னொருவன் முட்டாளாக இருப்பான் என்பது காந்தி அறியாதது அல்ல. இது தான் இயற்கையின் படைப்பு என்பதும் அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் சமத்துவமான சமூகத்தை விரும்பியதற்கு அதை உருவாக்கி விடலாம் என்று ஆழமாக நம்பியதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. மனித உடம்பில் உள்ள உறுப்புகளில் சிலவற்றை உயர்ந்ததாகவும், சிலவற்றை தாழ்ந்ததாகவும் நாம் கருதுகிறோம் உயர்ந்த உறுப்புகள் மட்டும் இருந்தால் போதும் மற்ற உறுப்புகள் அவசியமில்லை என்றால் ஒரு மனிதனால் வாழ முடியுமா? முடியாது. அவன் வாழ்வதற்கு அனைத்து உறுப்புகளும் அவசியம் தேவை அனைத்துமே தேவை எனும் போது அதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று வாதம் கற்பித்து கொண்டிருப்பது அறியாமையாகும்.

அதை போலத்தான் சமுதாயத்தில் படைக்கப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் எதோ ஒரு தேவைக்காக படைக்கப்பட்டிருக்கிறது அவற்றில் ஒன்று அழிந்தால் படைப்பின் சங்கிலி தொடர் அறுபட்டு விடும். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்று நிலை வரும் போது அனைத்துமே சமம் என்பது உறுதியாகி விடுகிறது. சமுதாயம் வளர்ச்சி நிலையை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டுமானால் வானமண்டலத்தை ஆராய்ச்சி செய்கின்ற விஞ்ஞானமும் அவசியம் வீதிகளை கூடி பெருக்கி சுத்தமாக வைத்து கொள்ளும் சுகாதாரமும் அவசியம். இதில் ஒன்று இல்லை என்றால் வளர்ச்சி என்பது நின்றுவிடும் எனவே எல்லாமே சமம். 

சீடர்;-
  
காந்தி படைக்கப்பட்டவைகள் அனைத்துமே சமம் என்று கருதினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் காந்தியை விமர்சனம் செய்கின்ற சிலர் அவர் ஜாதிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஜாதிகளை வேண்டாமென்று அவர் சொல்லவில்லை. இந்துமதம் கூறுகிற வர்ணாசிரம கொள்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார். சமூகத்தில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதை ஒத்து கொண்டார் அதனால் தான் நவீன உலகத்தில் காந்தியின் கொள்கை சிக்கலை உருவாக்கும் என்று கருதுவதாக சொல்கிறார்களே காந்தி உண்மையாகவே ஜாதிப்பிரிவுகளை ஏற்றுக்கொண்டாரா? 
  
குருஜி;- 

ஜாதி பாகுபாடுகள் தவறுதலானது என்று பலரும் சொல்ல சொல்ல அதை கேட்டு கேட்டு நாமும் ஜாதிகள் என்றாலே அறுவருக்க கூடியது என்ற முடிவிற்கு வந்துவிட்டோம். ஜாதியில் உள்ள நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்ற பேதமைகள் தவறுதலானதே தவிர மற்றபடி அடிப்படையில் ஜாதிகள் தவறுதலானது அல்ல. இன்னும் ஒருபடி மேலே சொல்வதாக இருந்தால் சமுதாய ஒற்றுமைக்கு ஜாதிப்பிரிவுகள் கண்டிப்பாக தேவை. வேற்றுமையில் தான் ஒற்றுமை உறுதியாக இருக்கும் என்பதை விளக்குவதற்காக சிறிய கதை கூட உண்டு மொத்தமாக கட்டிய விறகு சீக்கிரம் அவிழ்ந்து விழுந்து விடும். சிறு சிறு பகுதிகளாக கட்டி அதன் பிறகு எல்லாவற்றையும் ஒருங்கே கட்டினால் எப்போதுமே பிரியாது என்பது அந்த கதையாகும். இது வெறும் கதை மட்டுமல்ல வாழ்க்கையின் அனுபவமும் கூட. 

ஜாதியின் பெயரால் வன்முறை வளர்க்கப்படுகிறது அரசியல் நடத்தப்படுகிறது சலுகை என்ற இனிப்பு உருண்டையை காட்டி மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமை திட்டமிட்டே தடுக்கப்படுகிறது எல்லாவற்றிற்கும் மேலாக கொள்ளை நடக்கிறது, கொலை நடக்கிறது இது உண்மை மாற்றமில்லை. ஆனால் ஜாதி என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் கிராமங்களில் சிறிய சண்டைகள் கூட வெட்டு குத்தில் போய் முடிந்து விடும். நீதிமன்ற வாசலை ஏறி இறங்குவதே பலருக்கு பிழைப்பாகி விடும். ஜாதிகளுக்கு மத்தியில் நிலவும் ஒருவிதமான இணக்கம் மக்களுக்கு மூக்கணாம் கயிறு போட்டு வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அரசியலும் அரசியல் வாதிகளும் ஜாதி என்ற கோட்டைக்குள் நுழையும் போது தான் சிக்கல் வருகிறது. 

இணக்கமான முறையில் அவரவருக்கு உரிய தனிப்பட்ட பண்பாடுகளை வளர்த்து கொள்கின்ற வகையில் ஜாதிகள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. இதை காந்தியும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் நான் பெரிய ஜாதி, எனக்கு நீ அடிமையாக இருக்க வேண்டும் என்னை விட்டு தள்ளி நிற்க வேண்டும். உன் நிழல் கூட என்னை தீண்டி விடக் கூடாது என்று தீண்டாமை பேசுவதை காந்தி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை ஆயிரம் நன்மைகள் ஜாதியால் ஏற்பட்டாலும், அதன்மூலம் தீண்டாமை என்ற ஒரு கொடுமை வளர்கிறது எனவே ஜாதிகளே வேண்டாம் என்று தான் காந்தி விரும்பினார். அதை தவறுதலாக புரிந்து கொள்பவர்கள் காந்தியை தெரியாதவர்கள் என்றே சொல்லலாம். 

மேலும் எதற்கெடுத்தாலும் வர்ணாசிரம கோட்பாடுகளை, மனுநீதி சாஸ்திரத்தை குறை சொல்வதே பலருக்கு வாடிக்கையாகி விட்டது. உண்மையில் வர்ணாசிரம தர்மம் என்பது ஒரு சமூக விஞ்ஞானமாகும். அதில் கூறுகின்ற பிராமண, வைசிக சத்திரிய, சூத்திர பிரிவுகள் எல்லாம் ஜாதிகள் இல்லை. சமூகத்தில் தவிர்க்க முடியாத இயற்கையான படைப்புகள் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். ஜாதி பாகுபாடுகளை முதல்முறையாக தகர்த்தெறிந்து, சமதர்ம சமூகத்தை காண விரும்பிய ஜெகத் குரு ராமனுஜரையே விமர்சனம் செய்யும் இன்றைய சமூகம் காந்தியை விட்டுவிடுமா? நிச்சயம் விடாது.

பிராமணன் என்றால் ஆசிரியன், சத்திரியன் என்றால் அரசாங்கத்தை நடத்துபவன், வைசீகன் என்றால் வியாபாரி, சூத்திரன் என்றால் உற்பத்தியாளன் இந்த நான்குபேரும் இல்லாத சமூகம் என்பதே உலகத்தில் கிடையாது. இதை தான் வருணாசிரம தர்மம் வலியுறுத்துகிறது. இதை புரியாமல் பேசுபவர்கள் வேண்டுமென்றே உண்மையை புறம்தள்ளும் நபர்களாவார்கள். காந்தி உண்மையை புரிந்தவர், தெரிந்தவர் எனவே அதன் அடிப்படையில் யதார்த்தத்தை சிந்தித்தால் யதார்த்தத்தை செயல்படுத்தியும் வாழ்ந்தார். இது பலருக்கும் புரியவில்லை என்பதனால் இன்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

சீடர்;-

இன்று இருப்பவர்கள் பலருக்கும் காந்தியை போல் வாழ ஆசை இருக்கிறது. ஆனால் அவர்களால் அது முடியவில்லையே அது ஏன்?

குருஜி;-

தனிமனிதன் சமூக அமைப்புகள் அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், ஆன்மிகம் ஆகிய அனைத்தும் மானிட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகும். இந்த உறுப்புகள் அறநெறி சார்ந்த ஒழுக்கத்தை மட்டுமே மையமாக வைத்து செயல்பட வேண்டுமென்று காந்தி விரும்பினார். உலகத்தில் உள்ள மதிப்பு மிக்க பொருட்கள் அனைத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பது அறம் என்ற தர்மமே ஆகும். இந்த தர்ம உணர்வு மனிதனை வழி நடத்துகிற ஆத்மாவின் பலமும் ஆகும். இது தான் காந்தி தர்மத்தை பற்றி வைத்திருந்த ஒரே கருத்து. அதாவது இந்த தர்மமானது நமக்குள் விழுந்து நமக்குள் முளைத்து நமக்குள் வளரவேண்டுமே தவிர மற்றவர்களின் மத்தியில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்க கூடாது என்ற எண்ணத்தில் ஒழுக்கத்தை பேசுவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் உறுதியாக பிடித்து கொண்டார். இதை இன்றைய காந்தியவாதிகளின் பலருக்கு செய்ய முடியாமல் இருப்பதனாலேயே அவர்கள் காந்தியை விட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள்.

காந்தியின் கொள்கை என்பது படித்து, பார்த்து புரிந்துக் கொள்ள கூடியது அல்ல. மேடை பேச்சுகளால் அறிந்து கொள்ள கூடியதும் அல்ல. அது ஒரு வாழ்க்கை பாதை அது ஒரு சுகமான பயணம் அதை அனுபவித்தால் தான் அதனுடைய அருமை தெரியும். ஒவ்வொருவரும் அந்த அனுபவத்தில் திளைக்க முனைந்து விட்டால் இதுவரையில் மனித சமுதாயம் ஆனந்தமான உலகத்தை படிப்பதற்காக பாடுபடுவதாக, சொல்கிறதோ அந்த ஆனந்த சமூகத்தை நாம் கண்ணெதெதிரிலேயே காணலாம். அதாவது காந்தியின் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும். அதை விட்டு விட்டு அது சரியா, தப்பா என்று ஆராய்ந்து கொண்டிருப்பது வீண் வேலை. ஆதி மனிதன் ஆனந்தமாக வாழ்ந்த காலத்தில் காந்தி சொன்னபடிதான் வாழ்ந்தான் எப்போது அவன் எளியவரையும் மெலிந்தவர்களையும் ஒதுக்கி வைத்து விட்டு பலசாலிகளோடு வாழ்ந்தால் மட்டும் போதுமென்று கருதினானோ அப்போதே உலகம் கெட துவங்கிவிட்டது.

காந்தியின் தர்மகர்த்தா முறையிலான, பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் மூலையில் வைத்து விட்டு இந்திய மண்ணிற்கு அந்நியமான முதலாளித்துவம், கம்யூனிஸம் என்று போக ஆரம்பித்தானோ அன்றே வறுமையின் அரக்கன் நம்மை ஒவ்வொருவராக பிடித்து உண்ண ஆரம்பித்து விட்டான். கிடைத்ததை பகிர்ந்து கொடுத்து வாழ கற்றுக்கொள்ள முடியாதவரை சிக்கல்கள் தொடரும். அந்த சிக்கல்களை போக்கும் ஒரே அருமருந்து காந்தியின் செயல்பாடு மட்டுமே! காந்தியின் செயல்பாட்டை அவ்வளவு சுலபமாக எப்படி நாங்கள் புரிந்து கொள்வது என்று யாரும் குழப்பம் அடையவேண்டிய அவசியமே இல்லை. இருப்பவன் இல்லாதவனுக்கு மனமுவந்து கொடுப்பதே காந்தி கூறிய தர்மகர்த்தா பொருளாதார முறையாகும். மனசாட்சிப்படி ஒரு நல்ல தர்மகர்த்தாவாக காந்தி கண்ட கனவுகளை நினைவாக்கும் நோக்கத்தோடு எப்போது நல்ல அரசாங்கம் அமைகிறதோ அன்றே காந்தி யுகம் உண்மையாகவே துவங்கும்.Contact Form

Name

Email *

Message *