Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளுக்கு நான் எஜமான்!


     னந்துவுக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் வருத்தமாக இருந்தது எப்போது பார்த்தாலும் கலகலப்பாக இருப்பான். கவலை என்பதே அவன் முகத்தில் தெரியாது. தேள் கடித்த வலியை கூட தமாஷ் பேசியே சமாளிப்பான். அப்படிப்பட்டவனுக்கு நோய் வந்திருக்கிறது மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? 
  
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ஒருமுறை அனந்து புகையிலையுடன் வெற்றிலை போட்டுவிட்டான். இது அவன் அப்பாவுக்கு தெரிந்து ஒரு பிராமண பையன் இப்படி செய்யலாமா? உன்னை பார்த்து நாலுபேர் திருந்த வேண்டும் ஆனால் நீ ஏறுக்கு மாறாக இருக்கிறாயே என்று கோபத்தோடு பேசினார். அனந்து அதற்காக அலட்டி கொள்ளவில்லை. 

பிராமணன் புகையிலை போடக்கூடாது என்று ஏதாவது சட்டமிருக்கிறதா? சொல்லுங்கோ என்று தகப்பனாரை திருப்பி கேட்டான் அதற்கு அவர் சமூகத்தில் பிராமணன் உயர்ந்தவன் நாலுபேருக்கு புத்தி சொல்லும் நிலையில் இருப்பவன் அவனே தப்பு செய்தால் அவனை பார்த்து மற்றவர்களும் தப்பு செய்வார்கள் என்று பதில் சொன்னார் அமைதியாக விட்டு விடுவான் இதற்கு மேல் அவரோடு வாதம் செய்ய மாட்டான் என்று நான் நினைத்தேன் ஆனால் அனந்த்து அவரிடம் பிராமணன் உயர்ந்தவன் என்று உங்களுக்கு யார் சொன்னது? என்று திருப்பி கேட்டான் 

அவர் ஒரு நிமிடத்திற்கு ஆடி போய்விட்டார் அகங்காரத்தில் இதே கேள்வியை அவரிடம் வேறு யார் கேட்டிருந்தாலும் கதையே வேறு விதமாக இருந்திருக்கும் உபநிஷதம், வேதம் என்று பல சுலோகங்களை எடுத்து சொல்லி உபன்யாசமே நடத்தி இருப்பார் ஆனால் இப்போது கேட்டது பெற்ற மகன் இந்த பயலிடம் எதை சொன்னாலும் விதண்டாவாதம் பேசுவான் என்று அவருக்கு தெரியும் இருந்தாலும் பிள்ளை தவறு செய்யும் போது தகப்பன் திருத்தாமல் இருக்க முடியுமா? அவர் கடமையை அவர் செய்தார் அனந்துவும் தனது கடமையை செய்ய ஆரம்பித்தான் 

கூடத்து வாசல்படியில் உட்கார்ந்து அவன் அவரிடம் கேள்வி கேட்டான் கொடுப்பவன் பெரியவனா? வாங்குபவன் பெரியவனா? உங்கள் சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று. அதற்கு அவர் நீதான் பெரிய வித்வானாச்சே நீனே பதில் சொல் என்றார் நிச்சயம் கொடுப்பவன் தான் பெரியவன் வாங்குபவன் பெரியவனாக இருக்க வாய்ப்பே இல்லை ஊரார் கொடுக்கின்ற சம்பாவனையிலும் காணிக்கையிலும் வயிறு வளர்ப்பவன் பிராமணன் பிறகு எப்படி அவன் உயர்ந்தவன் ஆவான் நிச்சயம் கிடையாது. அனந்த்துவின் இந்த பதில் எனக்கு வித்தியாசமாக பட்டது.

இன்னொருமுறை இதே போன்ற ஒரு வாதம் என் தகப்பனாரிடம் அனந்த்து செய்தான். அடே பட்டாச்சாரி மகனே எல்லோரையும் குறை சொல்வதும் கேலி செய்வதும் உன் பிழைப்பாய் போச்சி எல்லோரும் தாழ்ந்தவன் என்றார் நீ மட்டும் தான் உயர்ந்தவன் என்று நினைக்கிறாய் உனக்கு வேலை தருவதற்கு யாரும் இல்லை நீ செய்வதற்கும் தகுந்த வேலை எதுவும் இல்லை பேசாமல் நீ ஜனாதிபதி ஆகிவிடு. அது தான் உனக்கு ஏற்ற வேலை. என்றார் இதற்கு அவன் என்ன பதில் சொல்வான் என்று ஆவலோடு காத்திருந்தேன் 

ஜனாதிபதி பதவி உயர்ந்தது என்று எப்படி சொல்வீங்க மாமா நீங்க நினைக்கிற மாதிரி அது ஒன்றும் உசந்த பதவி இல்லை என்றான் எனக்கு தூக்கி வாரி போட்டது அட பாவி விரல் அசைத்தால் நாடே  அசையும் அதிகாரமிக்க பதவி அது அதை போய் கிண்டல் செய்கிறானே என்று தோன்றியது என் தகப்பனாரும் எப்படி அது உயர்ந்த பதவி இல்லை என்கிறாய் என்று கேட்டார் 


ஊர் தலையாரி இருக்கிறானே அவன் யார்? அரசாங்கத்து ஊழியன் அவனை போலத்தான் ஜனாதிபதியும் அரசாங்க ஊழியன் இரண்டு பேருமே சம்பளம் வாங்குகிறார்கள் அல்லவா? இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வரிகட்டுகிற பொதுஜனம் நான் கணக்கை எப்படி கூட்டி கழித்து போட்டாலும் நான் தான் உயர்ந்தவன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பதில் சொன்னான்.

எனக்கு அவன் மேல் கோபம் வந்தது ஒரு மனிதன் தன்னை உயர்வாக நினைத்து கொள்வதில் தவறு இல்லை சில நேரங்களில் அப்படி நினைக்காவிட்டால் வாழ முடியாது மரவட்டை பூச்சி போல் சுருண்டு விடுவோம் அதற்காக எப்போது பார்த்தாலும் நான் தான் உயர்ந்தவன் என்று மார்தட்டி திரிவது நன்றாகவா இருக்கிறது? என்று நினைத்த நான் கடவுளையாவது உன்னை விட உயர்ந்தவர் என்று நினைக்கிறாயா என அவனிடம் கேட்டேன் 

சற்றும் தயங்கவில்லை அவன் அது எப்படி கடவுளை என்னைவிட உயர்ந்தவன் என்று நினைக்க முடியும்? பானை சட்டி செய்கின்ற குயவன் ஒரு தொழிலாளி குயவன் பானை செய்வது போலத்தான் கடவுளும் உலகத்தை செய்திருக்கிறான் அதனால் அவனும் ஒரு வேலைக்காரன் தான் என்னை படைக்கின்ற வேலையை அவனுக்கு நான் கொடுத்திருக்கிறேன் அப்படி என்றால் நான் கடவுளின் எஜமான் என்று முகத்தில் அறைந்தார் போல் பதில் தந்தான் ஒரு நிமிடம் ஆடிபோய்விட்டேன் என்று சொன்னால் அது மிகையில்லை 

இப்படிப்பட்ட அனந்த்து உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் கிடக்கிறான் என்றால் பார்க்காமல் இருக்க முடியுமா? எப்போதும் சிரித்து கொண்டிருந்தவன் இப்போது கவலையில் இருப்பானே என்று நினைக்கும் போதே சங்கடமாக இருந்தது அலுவலகத்திற்கு அரைநாள் விடுமுறை எடுத்து கொண்டு அவனை பார்க்க போனேன் பழைய அனந்து உடம்பு காணவில்லை கம்பீரமாக தெரியும் அவன் எலும்பில் தோல் போர்த்தியது போல மெலிந்து கண்கள் குழிவிழுந்து விகாரமாக இருந்தான் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது திடீரென்று உடம்புக்கு என்னாச்சி என்று கேட்டேன் 

வாய்விட்டு சிரித்தான் உடம்புக்கு வந்தவுடன் என் குணம் மாறிபோய் இருக்கும் மனிதன் ஒன்றுமே இல்லாதவன் அவனால் எதுவும் முடியாது உடம்பில் இரத்தஓட்டம் இருக்கும் வரை ஆடுவான் அதன்பிறகு அடங்கி விடுவான் என்று நினைத்தாயா? இந்த அனந்து எப்போதுமே மாறமாட்டான். என்று என்னை பார்த்து சொன்ன அவன் அடுத்ததாக சொன்னது எனக்கு சிரிப்பை தந்தது 

காசநோய் என்று சொல்வார்களே அது தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தது சரி போனால் போகட்டும் சிறிது நாள் தங்கி கொள் என்று என் உடம்பை அதற்கு கொடுத்தேன் அவ்வளவு தான் அனந்து எப்போதுமே கொடுத்து பழக்கப்பட்டவன் அல்லவா? அதனால் தான் நோய்க்கும் இடம் கொடுத்தேன் மருத்துவர்களுக்கும் பணம் கொடுக்கிறேன் என்று பதிலை தந்தான் இதை கேட்டு அழுவதா? சிரிப்பதா? எனக்கு புரியவில்லை.....

Contact Form

Name

Email *

Message *