Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணத்தை சாகடிக்கலாம்
ருப்பவனை போற்றி இல்லாதவனை தூற்றி 
எதையதையோ பேசுகின்றாய் 
கன்னியரை நாடி மழலையரை தேடி
வாய் வார்த்தை வீசுகின்றாய் 
பொய்யுரைகள் லட்சம் புகழ்வுரைகள் கோடி 
நிமிடம் தோறும் உதிர்க்கின்றாய் 
வீணாக பேசுவதற்கும் வீணர்களை புகழ்வதற்கும் 
மொழி கொடுத்தானா இறைவன்? 
மெய்யுரைகள் பேசு 
கண்ணன் மேன்மைகளை பேசு 
இமைபொழுதும் நிற்காமல் 
கண்ணா கண்ணாவென்று கதறி அழு 
கண்ணனை பேச கண்ணனை புகழ கண்ணனுக்காக அழ .
இருப்பதுவே உன் நாவும், வாயும்.

மங்கையரின் நடையழகை, மயக்கும் அவர் இடையழகை 
வாழை தண்டான தொடையழகை 
கண்டுகண்டு ரசிக்கிறாயே !
சித்திரம் என்றும் சிங்கார நடனமென்றும் 
இத்தரையில் பரவி கிடக்கும் 
போகப் பொருளெல்லாம் பார்கிறாயே !
கண்கள் இருப்பது அழிவதை பார்ப்பதற்கா? 
அழியாத கண்ணனின் அழகை காண்பதற்கே கண்கள் !
கண்ணனை காணாத கண்ணனை காண விரும்பாத 
கண்கள் இரண்டும் புண் என்று தெரியும் 
நீ புறப்படும் நாளில் 

வாய் இருப்பது அவனை பேச 
கண் இருப்பது அவனை காண 
கை இருப்பது அவனை வணங்க 
கால் இருப்பது அவனை நாட எனும் போது 
உடலிருப்பது மட்டும் எதற்காக? 
மதுவில் குளித்து மங்கையில் களித்து 
சதுரங்க நாடகம் ஆடுவதற்கா? 
சாரங்க பாணியின் அருள்மழையில் குளிப்பதற்கே !
சரீரம் எடுத்தோம் என்பதை மறக்கலாமா?

ஆடலாம் பாடலாம் 
ஆளுக்கொரு வேடமும் போடலாம் 
ஆண்டுகள் ஆயிரம் 
ஆளப்போவதாக வீரமும் பேசலாம் 
ஆனாலும் பக்கத்தில் மரணம் இருக்கிறது 
ஆமாம்!  
கைக்கெட்டும் தூரத்தில் அல்ல...!
நம் மூக்கிற்கு கீழே மீசையின் மேலே 
மரணம் இருக்கிறது மறக்கலாகாது 

சாவு நாயகன் கதவை தட்டும் போது 
ஆடலும் பாடலும் கூடவராது. 
பணமும் பதவியும் கூட பரிந்து நிற்காது.
மனைவி மக்களாலும் தடுக்க இயலாது. 
கற்ற இலக்கணமும் பெற்ற தலைக்கனமும் 
மரண தேவனின் விரல்களை கூட தீண்டாது 

காலம் இருக்கும் போதே உன் தேகம் ஓடும் போதே 
கண்ணனை பாடினால் கண்ணனை நாடினால் 
கண்ணனே கதி என்று சரணம் எய்தினால் 
மரணமும் வருமோ? உன் வாசல் பக்கம்.
மாதவன் நாமம் நாளும் சொன்னால் 
மாதவன் பெருமை நெஞ்சினில் நிலைத்தால் 
மரணம் உனக்கு வாழ்த்து பாடும். !
மரணத்தை நீ மரணிக்க செய்யலாம்!
http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *