Store
  Store
  Store
  Store
  Store
  Store

சுட்டது புலியை மட்டுமா...?    ந்த உலகத்தில் மிகவும் அரிதான போற்றி பாதுகாக்கத்தக்க பொருள் ஒன்று உண்டு என்றால் அது நிச்சயம் மனித உயிர் ஒன்றே ஆகும். இறைவன் படைப்பில் பலதரப்பட்ட உயிர்கள் இருந்தாலும் வாழ்ந்தாலும் மனித படைப்பு என்பது தான் மிக உயர்ந்ததாகும். புராணங்களும், சாஸ்திர நூல்களும் தேவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இறைவனின் திருவடி நிழலை அடைய வேண்டுமானால் மனிதனாக வந்து பூமியில் பிறக்க வேண்டுமென்று கூறுகின்றன. அப்படிப்பட்ட மிக உயர்ந்த சிருஷ்டியான மனித உயிரை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதில் தவறில்லை 

சமீபத்தில் தொட்டபெட்டாவில் காட்டு புலி ஒன்று ஊருக்குள் புகுந்து மனிதர்களை வேட்டையாடி இருக்கிறது எந்தவித காரணமே இல்லாமல் மனித உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கிறது சில குடும்பங்கள் குடும்ப அங்கத்தினரை இழந்து அனாதைகளாகியிருக்கின்றன. இத்தகைய துயரத்திற்கு காரணமாக இருந்த புலியை வன இலாக்காவினர் சட்டப்படி சுட்டு கொன்றிருக்கிறார்கள் இனி சிறிது காலம் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம் அதற்காக நமது அரசை பாராட்டினால் அது தவறில்லை.


ஆனால் உண்மையில் இதில் பாராட்டுவதற்கு, பாராட்டை பெறுவதற்கு மனிதர்களாகிய நமக்கோ நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கோ எந்தவிதமான தகுதியும் தராதரமும் எள் முனையளவு கூட கிடையாது மிகவும் வெட்கக்கேடான நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட அதில் தவறில்லை.

ஊட்டி என்ற வனப்பிராந்தியம் வெள்ளைக்கார முதலாளிகளால் தேயிலை தோட்டமாக ஆக்கப்பட்ட நாள்முதல் தாயின் பால்சுரக்கும் முலையை அறுப்பது போல வனச்செல்வங்களான மரம், செடி கொடிகள் வேரறுக்கப்பட்டு வணிகம் சார்ந்த நிலப்பகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது. இயற்கை தாயின் மகரந்த முகமான ஊட்டி இன்று ஏறக்குறைய அமிலம் ஊற்றப்பட்ட முகமாக இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் மனிதனின் மிகக்கொடிய பணப்பசியே காரணமாகும்.


காடுகள் என்பது யாருக்கு சொந்தம்? உல்லாச பயணத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் கொழுப்பெடுத்த நகரவாசிகளுக்காக? மரங்களை வெட்டி விற்று பிழைக்கும் கடத்தல் முதலாளிகளுக்கா? கண்ணில் கண்ட நிலத்தை எல்லாம் கட்டிடங்களாக்கி காசுபறிக்கும் கொள்ளை கும்பலுக்கா? அல்லது விவசாயம் ஏற்றுமதி என்று பொருளாதார சித்தாந்தங்களை பேசி பேசி பால்சுரக்கும் மடிகாம்பில் இரத்தத்தை உறிஞ்சுகிற  பண்ணையார்களுக்கா? இவர்கள் எவருக்குமே காடுகள் சொந்தமில்லை 

மரத்திலும் மலை இடுக்கிலும் இருக்கும் தேனை எடுத்து, மூலிகைகளை சேகரித்து அதிகரித்து போன வனவிலங்குகளை தேவைக்காக மட்டும் வேட்டையாடி வாழ்க்கையை நடத்துகிற வனவாசிகளுக்கு காடுகள் சொந்தம். குகைகளிலும், முட்புதர்களிலும், மரங்களின் மீதும் மர நிழல்களிலும் வாழுகிற பறவைகள், ஊர்வன, நடப்பன மற்றும் விலங்குகளுக்கு காடுகள் சொந்தம் கண்ணை பறிக்கும் வண்ணத்து பூச்சிகள் மலர்களில் தேனெடுத்து மகரந்தத்தை பரப்பும் இயற்கை விளையாட்டிற்கு காடுகள் சொந்தம் இத்தகைய நிஜ சொந்தகாரர்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு இன்று நாம் சட்டப்படி வனங்களை கொள்ளையடிக்கிறோம் கொலை செய்கிறோம். 


யானைகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து தோட்டங்களை அமைத்து விட்டு விவசாய நிலத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக ஒப்பாரி வைக்கிறோம். புலி, கரடி போன்ற மாமிச பட்சினிகள் வாழுகின்ற பகுதிகளை கபளீகரம் செய்து அவைகள் வேட்டையாடும் விலங்குகளை விரட்டி விட்டு அதன்பிறகு ஐயோ புலி அடிக்கிறதே கரடி வந்து காதை கடிக்கிறதே என்று பிலாக்கணம் பாடுகிறோம் மரங்கள் வளர வேண்டிய பகுதிகளில் உல்லாச மாளிகைகளை உயரமாக எழுப்பி விட்டு விலங்குகளின் வாழ்வாதாரங்களை காலடியில் போட்டு நசுக்கி விட்டு சுயநல கோட்டையில் ஏறிநின்று கொக்கறிக்கிறோம்.

விலங்குகளை அழித்தால், விலங்கினங்கள் அழிந்தால் மரங்களை, வனங்களை இயற்கை செல்வங்களை சுயநல பசிக்காக ராட்சச வேட்டையாடினால் மிக விரைவில் மூச்சு விடுவதற்கு கூட காற்று கிடைக்காமல் சாகப்போகிறோம். நுரையிரல் துடிக்கும் போது அடுத்த சுவாசத்திற்கு காற்றில்லாமல் தவிக்கும் போது செய்த தவறை எண்ணி வருந்தி எந்த பயனும் இல்லை. வெள்ளம் வருவதற்கு முன்பு அணைகட்டுபவன் தான் புத்திசாலி வந்தபிறகு ஆலாய் பறப்பதில் அர்த்தமும் இல்லை புத்திக்கு இடமும் இல்லை.

ஒருநாட்டில் புலிகளின் எண்ணிக்கையை வைத்து நாட்டினுடைய வளத்தை சொல்லிவிடலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுவார்கள் அதாவது நிறைய புலி இருந்தால் அவைகள் விருந்தாக உண்பதற்கு மான்கள் அதிகம் இருக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகப்படியாக இருந்தால் அவைகள் மேய்வதற்கு நிறைய புற்கள் வேண்டும் புல்லின் வளர்ச்சி அதிகரிப்பதற்கு முறைப்படியான மழை நாட்டில் தவறாமல் வரவேண்டும் மழை வருகிற நாட்டில் வறுமை ஏது? வயிற்று பசி ஏது?

ஆக ஊட்டியில் சாகடிக்கபட்டிருப்பது புலி அல்ல இந்த தேசத்தின் வளமை. புலியை சுட்டு வீழ்த்தி இருப்பது வன அதிகாரியின் துப்பாக்கி அல்ல மனிதர்களின் பேராசை. இப்படியே நிலைமை போனால் நாடு முழுவதும் பசுமையின் செழுமை என்பது தேய்பிறை போல மறைந்து போய் ஒருநாள் அமாவாசை இருள் எங்கும் கவ்விவிடும். இந்த புலி வந்ததும் இதை கொன்றதும் சரித்திரத்தில் கரும்புள்ளியாக நினைத்து விட்டு விடுவோம் இனியொரு புலி ஊருக்குள் வராமல் தடுக்க காடுகளை பலப்படுத்த வேண்டாம் அழிக்க நினைப்பதை அழிக்க முயல்வதை அழிப்பதை விட்டு விட்டாலே போதும் புலி மனிதனை தின்னாது.


Contact Form

Name

Email *

Message *