Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தியும் ராமரும்


யார் ஞானி 8

   காந்தியை பற்றிய உரையாடல் குருஜிக்கும் சீடருக்கும் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் அன்பர் குருஜியை சந்திக்க ஆசிரமம் வந்திருந்தார் அவரும் இந்த காந்திய உரையாடலில் கலந்து கொண்டு சில கேள்விகளை குருஜியிடம் கேட்டார் அவரது கேள்வியும் அதற்கு குருஜி தந்த பதிலும் கீழே தருகிறோம்.
  
  • இலங்கை அன்பர்:-


     யா காந்தி மதம் கடந்த மனிதனாகவே பலர் பார்க்கிறார்கள் காந்தி பக்தர்கள் பலர் இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள் ஆனால் காந்தியை அவரது செயல்பாட்டை ஆராய்கின்ற போது அவரை மதம் கடந்தவராக நினைக்கவே முடியவில்லை உண்ணாவிரதம் இருந்து உடல் சோர்வடையும் போது உடம்பிற்கு புத்துணர்ச்சி தர ராம நாமத்தை இடைவிடாது ஜெபித்ததாக காந்தி கூறுகிறார் தான் எதிர்பார்க்கும் நல்லரசு இந்தியாவில் உதயமானால் அதன் பெயர் ராமராஜ்யம் என்கிறார் எல்லாவற்றிற்கும்  மேலாக கொடியவன் ஒருவன் அவரை சுட்ட போது ராமன் பெயரையே உச்சரித்தவண்ணம் மண்ணில் சாய்ந்தார். 

இவைகள் எல்லாம் காந்திஜி ராமன் மீது கொண்ட அளப்பரிய பக்தி விசுவாசத்தை காட்டுகிறதே தவிர சமய நல்லிணக்கத்தை காட்டுவதாக கூற முடியாது. மற்ற மதங்களை அவர் தாக்கி பேசவில்லையே தவிர மதமாற்றம் செய்வதை மிக கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார் இவைகளை எல்லாம் வைத்து  பார்க்கும் போது அவரை ஒரு நல்ல ஹிந்து என்று சொல்லலாமே தவிர மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று கூற முடியவில்லை. மிக முக்கியமாக அவர் கூறிய ராம ராஜ்ஜியம் என்பது ஹிந்து ராஜ்யத்தின் மறுவடிவமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது ஹிந்து ராஜ்யமா? 

  • குருஜி:-


     காத்மா காந்தி மிக சிறந்த ஹிந்து அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. காந்தியே கூட தன்னை அப்படி அழைத்துக்கொள்வதில் பெருமை அடைவார் காரணம் உண்மையான ஹிந்துவாக இருக்கும் எவனும் மற்றவனை மற்றவனின் கொள்கைகளை, மற்றவர்களின் வழிபாட்டு முறைகளை தாழ்வானதாக கருதமாட்டான். நதிகள் பிறக்குமிடம் பலவாகும் எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும் என்று கவியரசு கண்ணதாசன் கூறுவானே அதே போலத்தான் பல தேசங்களில் பல பண்பாடுகளில் உருவான மதங்கள் அனைத்துமே இறைவன் மகாசமுத்திரத்தை சென்றடைகிறது. இதில் எந்த நதி உயர்ந்தது? எந்த நதி தாழ்ந்தது என்ற வாதங்கள் தேவையே இல்லை. 

காந்தி ஹிந்துவாக பிறந்ததனால் பிறந்த நாள் முதல் ராமனை வழிபட்டதனால் ராமன் மீது மிக தீவிரமான பாசத்தை செலுத்தினார். ராமனை வரம் தரும் தெய்வமாக மட்டும் அவர் கருதவில்லை தனது வாழ்க்கை கூடவே நடந்து வரும் தோழனாகவும் கருதினார். நண்பரிடம் மட்டும் தான் நல்லது கெட்டது அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். காந்தி அதைத்தான் செய்திருக்கிறார். துக்கம் வரும் போது சோர்வு வரும் போது இனம் புரியாத துயரங்கள் மனதை வாட்டி வதைக்கும் போது ராமனை, ராமனது திரு பெயரை திரும்ப திரும்ப அவர் கூறி இருக்கிறார். அது அவர் ஆன்ம பலத்திற்கு மிகவும் உதவி செய்திருக்கிறது. ஆனாலும் இது அவரது சொந்த விவகாரம் தனது சொந்த விருப்பத்தை ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் பொதுமக்கள் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் எப்போதுமே கருதியது கிடையாது. ஆனாலும் தான் தீர்மானித்த அரசியல் சித்தாந்தத்திற்கு ராம ராஜ்ஜியம் என்ற பெயரை ஏன் வைத்தார் என்பதை நுணுக்கமாக ஆராய வேண்டும். 

காந்தி ராமனை, தசரத குமாரனாக ஜானகி மணாளனாக அடியவருக்கு இறங்கி வரும் தீன தயாளனாக மட்டும் பார்க்கவில்லை. அவனை ராஜாராமனாக அயோத்தி ராமனாக பார்க்கிறார். ராஜா ராமன் என்பவன் எல்லோருக்கும் பொதுவானவன் அவனை நம்புபவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் அவன் ராஜாராமன் தான். அதாவது இங்கே ராஜாராமன் என்பதை ஹிந்து மத கடவுளாக பார்க்காமல் ராமன் என்ற கதாபாத்திரத்தின் மன இயல்பாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் தான் காந்தியின் ராமராஜ்யத்தை புரிந்து கொள்ள முடியும். ராமன் ஆளும் தகுதி படைத்த சத்ரிய வம்சத்தை சேர்ந்தவன் இவன் வேடனையும் அரக்கனையும் மட்டுமல்ல மனிதர்களாகவே இல்லாத குரங்குகளையும் பறவைகளையும் கூட தனது உறவாக்கி கொள்கிறான். 

அரசன் என்பதும் அரசு என்பதும் இப்படித்தான் இருக்க வேண்டும். வேண்டுபவன் வேண்டாதவன் என்று எவரையும் ஏற்றத்தாழ்வு வைத்து பார்க்க கூடாது. குடிமக்களாக இருப்பவர்கள் அனைவருமே அரசாங்கத்தினுடைய உறுப்புகள் அந்த உறுப்புகளின் தேவையை அறிந்து சமமாக செயல்படுவது அரசாங்கத்தின் கடமை என்பதாக இருந்தால் அந்த அரசின் பெயர் அது யாரால் ஆளப்பட்டாலும் கூட அது ராமராஜ்யமே காந்தி மக்களை சிறுபான்மையினர் என்றும் பெரும்பான்மையினர் என்றும் பிரித்து பார்க்கவில்லை எல்லோரையும் ஒரு தாய் மக்களாகவே கருதினார் இந்திய தேசம் என்பது எல்லோருக்குமான தேசம் இதில் இனம், மதம் என்பதெல்லாம் சமையலறை விஷயங்கள் சபையில் ஏறும் விஷயங்கள் அல்ல என்று உறுதியாக நம்பினார் நாம் என்று அவரது ராமராஜ்யத்தை கூட சந்தேக கண்களோடு பார்க்க ஆரம்பித்தோமா அன்றே அழிவு பாதையை நோக்கி நடக்க துவங்கி விட்டோம். 


Contact Form

Name

Email *

Message *