Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெள்ளையனை துறத்திய காவி மனிதர் !

யார் ஞானி 10

திகாரமிக்க அரசர்கள் பலர் இந்த உலகம் முழுவதும் ஆட்சிசெய்திருக்கிறார்கள் கடைசியில் முடிசார்ந்த மன்னர் அனைவரும் பிடிசாம்பலாகவும் மாறி இருக்கிறார்கள் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் எழுந்திருக்கின்றன பின்பு விழுந்திருக்கின்றன. அருளாளர்களும், அறிஞர்களும் ஆயிரமாயிரம் தத்துவங்களை உலகுக்கு தந்திருக்கிறார்கள் அவைகள் ஏற்கப்பட்டும் இருக்கிறது நிராகரிக்கப்பட்டும் இருக்கிறது. அந்தந்த நூற்றாண்டை புரட்டிப்போடக்கூடிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நாசாகார ஆயுதங்கள் தோன்றி இருக்கின்றன பின்ன அவைகள் உபயோகம் இல்லாமல் துருப்பிடித்து குப்பை தொட்டிகளில் வீசப்பட்டு இருக்கின்றன இப்படி சக்கரம் சுழலுவதை போல உலகில் பல மாற்றங்கள் நடந்து கொண்டே வந்தாலும் காலத்தை வென்று சில பண்பாடுகள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

மனிதர்களின் அசட்டையை கடந்து, மன்னர்களின் ஆக்கிரமிப்பை தாண்டி இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு பல்லாயிர வருடங்களாக அந்த பண்பாடுகளால் மட்டும் எப்படி வாழ முடிகிறது? நீர் மேலே எழுதிய எழுத்து மறைந்து விடும். கல்லிலே எழுதினால் அது நிலைத்து நிற்கும் என்பார்கள். அத்தகைய கல்லிலே வடித்தெடுத்த கலைநயமிக்க சிற்பங்கள் கூட ஒரு காலத்திற்கு பிறகு மண்ணோடு மண்ணாக தூள்தூளாக ஆகி விடுகிறது. ஆனால் உருவமே இல்லாத உயிரே இல்லாத பண்பாட்டால் மட்டும் எப்படி நின்று நிலைத்து வாழ முடிகிறது? நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இதன் ரகசியம் என்னவென்று அறிந்து கொள்ள ஆர்வமும் பிறக்கிறது.

ரகசியம் எதுவும் இல்லை உடம்பு உள்ளது. உயிர் உள்ளது. மறைந்தே போனாலும் இவைகள் எதுவும் இல்லாத பண்பாடு மட்டும் நிலைத்து வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும் ஆற்றல் காலங்கள் தோறும் பருவநிலை தோறும் குறிப்பாக மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்றவாறு பண்பாடுகள் வளைந்து கொடுத்து நிமிர்ந்து எழுந்து நிற்கின்றன. இப்படி எழுந்து நிற்கும் ஆற்றல் பண்பாட்டிற்கு எப்போதாவது குறைகிறது என்றால் தர்மத்தின் சக்தி அந்த ஆற்றலை மறுபடியும் புத்திளமையோடு மீண்டும் செயல்பட வைக்கிறது. இத்தகைய தர்மத்தின் சக்தி எங்கே இருந்து வருகிறது? என்ற அடுத்த கேள்வி நமது கண் முன்னால் நிற்கிறது. 

இந்த கேள்விக்கு விடை காண வரலாற்றை கூர்ந்து பார்க்க வேண்டும். அரசர்களின் அதிகாரம், ஆயுதங்களின் பலம், அறிஞர்களின் அறிவாற்றல் இவற்றிலிருந்து தர்மத்தின் சக்தி ஒருபோதும் தோன்றவில்லை மாறாக இவைகளுக்கு கூட தர்மத்தின் சக்தி தேவைப்படுகிறதே தவிர அதை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்பது தெளிவாக தெரியும். பிறகு எதிலிருந்து தர்மத்தின் சக்தி ஊற்றெடுத்து வருகிறது என்றால் அது மதத்திலிருந்தே வருகிறது என்பது நிதர்சனமாக புரியும் இந்த உலகத்தில் உயிரோடு வாழுகிற கலாச்சாரங்கள் அனைத்தும் மதத்திலிருந்தே உற்பத்தியானது. தனிமனிதர்களின் விருப்பத்தாலோ சர்வாதிகாரிகளின் அதிகாரத்தாலோ மதம் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கப்படும் போது அந்த கலாச்சாரம் தானாக செத்து விடுகிறது. 

ஒரு காலத்தில் எகிப்திய நாகரீகம் பாபிலோனிய நாகரீகம் கிரேக்க நாகரீகம் ரோம நாகரீகம் மயன் நாகரீகம் என்று புகழோடு உலக முழுவதும் கோலோச்சிய பண்பாடுகள் இன்று இருந்த இடம் கூட தெரியாமல் பூண்டற்று போனதற்கு என்ன காரணம் என்பதை யோசித்து பாருங்கள். மாறாக இந்திய நாகரீகம் சீன நாகரீகம் ஜப்பானிய நாகரீகம் போன்றவைகள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் பசுமையோடு இன்றும் வாழ்வது எப்படி என்பதையும் யோசித்து பாருங்கள். தெளிவாகவே உங்கள் மனதிற்கு தெரியும் இந்த நாகரீகங்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்ட மதம் என்ற ஒன்றின் பின்னணியாக இருப்பதனால் தான் எனவே தர்மத்தின் சக்தி மதத்தில் இருக்கிறது என்று துணிச்சலோடு சொல்லலாம். 

இதிலும் குறிப்பாக அதிசயத்திலும் அதிசயமான ஒரு பண்பாட்டை பற்றி உங்களுக்கு சொல்ல போகிறேன் ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, இரண்டாயிர வருடங்கள் அந்நிய படையெடுப்புகளால் ஆக்கிரமிப்புகளால் தாக்கப்பட்டாலும் இனி எழவே எழாது. இத்தோடு அது செத்தது என்று பல நூறு அடி பள்ளம் தோண்டி புதைத்தாலும் அத்தனையையும் கிழித்து கொண்டு எழுகின்ற உதயசூரியனை போல் எழுந்து நின்று இன்றும் இளமையோடு அரசாளுகிற ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த பண்பாடு வேறு எதுவும் அல்ல நமது இந்திய பண்பாடாகும். இன்றல்ல, நேற்றல்ல உலகத்தில் முதல் முதலாக தோன்றிய இந்திய பண்பாடு இதற்கு பிறகு தோன்றிய எத்தனையோ பண்பாடுகள் அழிந்து மறைந்து சாம்பலாகி போனபிறகும் செழுமையாக இருப்பதன் காரணம் இந்த பண்பாட்டின் மீது மிக ஆழமான அசைக்க முடியாத முத்திரை பதித்திருக்கும் மதமே எனலாம்.

மதம் என்பது தர்மத்தை உற்பத்தி செய்யும் கேந்திரம் என நீங்கள் சொல்கிறீர்கள் அது உண்மை என்றால் தர்மம் வாழுவதை போலவே மதங்களும் வாழ வேண்டும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த சௌராஷ்ட்ரிய மதம் இன்று எங்கே போனது? ஹீப்ரு மதத்தின் அடிச்சுவடி எங்கே? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அந்த மதங்கள் தங்களது சொந்த பெயரை இழந்து போயிருந்தாலும் இன்று கிறிஸ்தவம் இஸ்லாம் என்ற பெயர்களால் மக்கள் மத்தியில் வாழ்ந்து தான் வருகிறது. இப்படி அந்த மதங்கள் ஒரு காலத்திற்கு பிறகு தனது நிலையிலிருந்து மாறுபாடு அடைந்து வேறொன்றாக மாறியதை போல் நமது ஹிந்து மதம் எப்போதுமே தனது அடையாளத்தை தனது இருப்பை மாற்றிக்கொண்டதே இல்லை. அதற்கு காரணம் மதம் என்ற ஒன்று உலகத்தில் முதல் முதலாக தோன்றியது என்றால் அது ஹிந்து மதமே ஆகும். இந்த மதத்திலிருந்து தான் மற்ற மதங்கள் மஹா நதியிலிருந்து கிளை நதிகள் தோன்றுவது போல தோன்றின. 

மற்ற மதங்களை உற்பத்தி செய்யும் சக்தி ஒரு தேசத்தின் பண்பாட்டை பன்னெடுங்காலமாக தாங்கி நிற்கும் சக்தி ஹிந்து மதத்திற்கு எங்கே இருந்து கிடைத்தது? வற்றாத ஜீவ நதிபோல் தர்மத்தின் கதிர்வீச்சை அது தந்து கொண்டே இருப்பதன் மர்மம் என்ன? ஆயுதங்கள் வந்தாலும் அதிகாரங்கள் மோதினாலும் அத்தனையும் தாங்கி கொள்ளும் சக்தி அதற்கு எப்படி கிடைத்தது? இந்த கேள்விக்கான பதிலை நுனிப்புல் மேய்வது போல் பார்த்து விட முடியாது. அகண்டு ஆழ்ந்து சிந்தித்தால் தான் தக்க பதில் கிடைக்கும். 

ஹிந்து மதத்தால் வாழுகின்ற இந்திய திருநாட்டின் அரசியல் மற்ற நாடுகளின் வரலாறுகளை போலவே போர்களாலும் புரட்சிகளாலும் ஆனது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்திய மதத்தின் உண்மையான வரலாறு வேறொரு சித்திரத்தை நமக்கு வரைந்து காட்டுகிறது. அது சாந்தியின் ஓவியம் அமைதியின் காவியம் கண்ணில் காணுகின்ற அனைத்தின் மீதும் அன்பு செலுத்துகிற பூஞ்சோலை ஹிந்து மதம் மற்ற மதங்களை எப்போதுமே அழிக்க நினைத்தது இல்லை முட்டி மோதி போர் புரிந்து வேரோடு பிடுங்கி எரிய துணிந்ததில்லை மாறாக தன்மீது மோத வரும் தன்னை அழிக்க வரும் எந்த சக்தியையும் வாரி அணைந்து அரவணைத்து கொள்ளும் பண்பு பெற்றதாக இருக்கிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவிலும் மணம் இருக்கிறது என்று கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சொல்வாரே அதே போல மாற்று மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களை கூட தனதாக்கி கொள்ளும் விசால மனம்படைத்தது நமது ஹிந்து மதம் 

பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து கிடக்கிற இயற்கையை ஆராய்ந்து  இவை அனைத்தையும் இயக்குகின்ற ஒரே தெய்வம் இருக்கிறது என்று இந்து மத வேதங்கள் ஆதார சுருதியாக சொல்கின்றன. தெய்வம் ஒன்றல்ல பல என்று சொல்கின்ற ரிஷிகள் பலரின் கருத்துக்களையும் வேதங்கள் புறம் தள்ளவில்லை காலம் மாற மாற மனிதனது பகுத்தறிவு சிந்தனை வளர வளர அவனிடமிருந்து தோன்றிய புதுவிதமான கருத்துக்களையும் வேதங்கள் ஒதுக்கி விடவில்லை. கடவுளுக்காக உயிர் கொடுப்பவனையும் கடவுளே இல்லை என்று குரல் கொடுப்பவனையும்  வேதங்கள் ஒன்றாகவே நோக்குகின்றன. இந்த உயரிய பண்பாட்டின் அடையாளமாக வேத சிந்தனைகள் உபநிஷதங்கள் என்ற பெயரில் புதிய பரிணாமம் அடைந்தது.

அறிவை பயன்படுத்தி சிந்தனையை பெருக்கி உணர்வுகளை சுருக்கி வாழுகிற ஞான வாழ்க்கையும் இறைவனை அடைய செய்யும் உணர்வுகளை கொப்பளிக்க செய்து உணர்ச்சிகளை பக்திமயமாக்கி கல்லும் மண்ணும் கடவுளின் வடிவமே என்ற பாகவதநெறி உபநிஷதநெறியிலிருந்து மாறுபட்டு வளர்வதற்கும் ஹிந்து மதம் வழி செய்தது. உலகின் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணனே மனிதனாக அவதாரம் செய்து உபநிஷத தர்மத்தையும் பாகவத நெறியையும் ஒன்றாக இணைத்து ஸ்ரீமத் பகவத் கீதை என்ற ஒப்பரிய தத்துவத்தை தந்திருக்கிறான் என்றால் ஹிந்து மதத்தின் வளர்ச்சி பாதை எவ்வளவு செழுமையானது என்பது நமக்கு தெரியும். பக்தியின் பெயரால் பகட்டுகள் அதிகரித்த போது ஆடம்பரங்கள் அணிவகுத்த போது அவைகள் அனைத்தும் தவறு என்று சனாதன தர்மத்தின் இன்னொரு ஒளி விளக்கை ஏற்றி வைத்தவர் பகவான் புத்தர் 

நம்பிக்கைகள் குறைந்து வெறும் வார்த்தைகள் மட்டுமே வழிபாடு என்று மாறி பண்பாடு பாதை மாறி போய்விடுமோ என்று நல்லோர்கள் அஞ்சுகிற காலத்தில் ஆதிசங்கர பகவத் பாதாள் அவதாரம் எடுத்தார் ஜாதியாலும், இனத்தாலும் மனிதனை மனிதன் ஒதுக்கி வைத்த போது கருவறையில் தோன்றிய அனைத்து உயிருமே இறைவனின் அம்சம் என்ற ராமானுஜரும் பூமிக்கு வருகை தந்தார். மத்வர், கபீர்தாஸ், துளசிதாஸ், சைதன்யர், மீரா, ஆண்டாள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று அருளாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வந்தது இன்றும் இந்த நிமிடம் கூட வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அமைதியான கடலில் சூறாவளி வீசுவது போல சாந்தியையும் சமாதானத்தையும் மட்டுமே இதுவரை வெளிப்படுத்திய ஹிந்து மதம் கொலை வாளெடுத்த எதிரிகளை கூட அனைத்து பழகிய இந்து மதம் பண்பாடு என்றால் என்னவென்று அறியாத சில கூட்டத்தாரால் பத்தாவது நூற்றாண்டுகளுக்கு மேல் தாக்கப்பட்டது எனலாம் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தி தள்ளாடி விழுந்த ஹிந்து மதத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட வேண்டும் என்ற கொடிய நோக்கில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து கப்பலில் வந்திறங்கியது வெள்ளைக்கார கூட்டம். வெள்ளைக்காரர்களின் நவீன ஆயுதங்கள் கள்ளம் கபடம் இல்லாத இந்தியர்களின் மென்னுடலை பதம் பார்த்தது. ஆதிக்க வெறியை இந்திய நாட்டில் நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே கபட நோக்கில் இந்திய பண்பாட்டை இந்திய சுயத்தன்மையோடு இந்திய அறிவை வேரோடு கருவறுக்கும் கொடூர நாடகத்தை ஆங்கில அரசு இந்த நாட்டில் நடத்தியது .

மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை போல, கஞ்சாவிற்கு பழக்கப்பட்டு போன வெறியர்களை போல, இந்த நாட்டிலிருந்த படித்த மேதாவிகள் ஆங்கில கலாச்சாரம், ஆங்கில மொழி, ஆங்கில மதம் இவைகள் அனைத்துமே சிறந்தது இந்தியாவும் இந்துக்களும் மூடத்தனமானது என்று உபதேச மொழிகளை அள்ளி வீச செய்தார்கள். குள்ளநரிகள் ஊளையிடும் போது கன்றுக்குட்டி அம்மாவென்று அழைப்பது யார் காதில் விழும்? இந்திய தேசியவாதிகளின் பரிதாபகரமான குரல் இந்தியர்களின் காதிலே கூட விழவில்லை. மண்ணெண்ணெய் விளக்கின் பிரகாசமான வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்ட மின்மினி பூச்சிகள் அந்த விளக்கிலே விழுந்து எப்படி மாண்டு போகுமோ அதே போலவே பாரத தாயின் புதல்வர்கள் தங்கள் அடையாளங்களை ஆங்கிலத்திற்கு இரையாக கொடுக்க துவங்கினார்கள். 

இந்த நேரத்தில் பகவத் கீதையில் கண்ணன் சொல்வானே தர்மத்தை காப்பதற்கு அவ்வப்போது நான் வந்து கொண்டே இருப்பேன் அவதாரம் எடுத்து கொண்டே இருப்பேன் என்பானே அதே போல இந்திய மக்கள் மானமிழந்து மதியிழந்து முதுகெலும்பு இல்லாமல் அந்நியர்களின் கால் செருப்புகளுக்கு சாமரம் வீசி கொண்டிருந்த போது இந்திய பண்பாடு இத்தோடு முடிந்தது ஹிந்து மதத்திற்கு சவக்குழி தயாராகி விட்டது என்று ஆணவ கொக்குகள் அநாகரீக பருந்துகள் காத்துக்கொண்டிருந்த போது கங்கைக்கரையில் கல்கத்தா நகரில் ஒரு கலங்கரை விளக்கு தோன்றியது. அந்த கலங்கரை விளக்கு மட்டும் தோன்றவில்லை என்றால் என் பெயர் ராமானந்தா அல்ல. உன் பெயர் ராமனோ, கோபாலனோ அல்ல ராபர்ட் என்றோ கிறிஸ்டோபர் என்றோ மாறியிருக்கும். நமது அப்பன் பாட்டன் கூட சொந்த பெயரில் இருக்க மாட்டான். நமது பண்பாடு முற்றிலுமாக அழிந்திருக்கும் நமது நாடும் ஒரு காலனி நாடாக இன்றும் அடிமைப்பட்டு கிடந்திருக்கும்.

தாழ்வுற்று கிடந்த பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த அந்த மகாத்மா யார்? நம்மை நாமாக வாழ வைத்திருக்கும் அந்த பரமாத்மா யார்? இந்திய பண்பாட்டை இந்திய நாகரீகத்தை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கும் அந்த தர்மாத்மா யார்? என்ற கேள்விகள் உனக்கு தோன்றுவது எனக்கு புரிகிறது. வீரம் செறிந்த அந்த ஆத்மா ஆயுதம் எடுத்து போர் புரியும் வீரன் அல்ல. கோடி கோடியாக செல்வம் படைத்து வாரி வாரி வள்ளலாக எளியவருக்கு கொடுத்து அனைவரையும் தன்பால் ஈர்த்து கொள்ளும் செல்வந்தரும் அல்ல. நாவன்மையால் சிதறி ஓடும் கடுகுகளான மனங்களை ஒரே அணியில் கோர்த்து கட்டும் தத்துவ வித்தகரும் அல்ல. ஒரு சிறிய காளி கோவிலின் எளிய பூசாரி அவர். இடுப்பை மறைக்க ஒரு வேஷ்டியும் மார்பை மறைக்க ஒரு துண்டு மட்டுமே கொண்ட எளிய மனிதர் அவர். எளிமையாக தான் இருந்தாலும் எரிமலைகளாக மற்றவர்களை மாற்றும் காந்த கோபுரம் அவர். 

இப்படி உணர்ச்சி பொங்க சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்த குருஜி அந்த மஹா புருஷரின் பெயரை சொன்னவுடன் எனக்குள் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது அவரா? ஒரு வேட்டியும் ஒரு துண்டும் மட்டுமே அணிந்த அந்த எளிய மனிதரா? இந்த தேசத்தில் நடந்த மாபெரும் புரட்சிக்கு காரணம் ? கரித்துண்டையும் நெருப்பு துண்டாக மாற்றும் வல்லமை அந்த மனிதரிடம் இருந்ததா? எண்ணி பார்க்கவே வியப்பாக இருந்தது. அந்த ஞானி யார்? அவரது மற்ற உபதேசங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறதா? வாருங்கள் என்னோடு... 


Contact Form

Name

Email *

Message *