Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த வழிபாடு சிறந்தது?



     வேத மந்திரங்களை வைத்து ஹோமம் நடத்தும் சாஸ்திரிகள் அடிக்கடி அவி, ஆகுதி, சமித்துகள் என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் இவைகளுக்கு என்ன பொருள்? இவைகளுக்கு எளிமையான வகையில் விளக்கம் தந்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். 

     மிகவும் சாதாரணமான பொருள்களுக்கும், புனிதமான பொருள்களுக்கும் வெளித்தோற்றத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் மறைமுகமான வேறுபாடுகள் உண்டு. கண்ணுக்கு தெரியாத பல சக்திகள் அவற்றில் நிறைந்திருக்கும். இதை பொருட்களுக்கு மட்டுமல்ல, வேறு பலவற்றிற்கும் பொருத்தி சொல்லலாம். உதாரணமாக நானும் நீங்களும் பிறந்தால் அது சாதாரண பிறப்பு. அதுவே ஒரு பெரிய மகானோ, இறைவனோ தாயின் வயிற்றில் இருந்து பிறப்பெடுத்தால் அதன் பெயர் அவதாரம். நாம் ஒரு சாதாரண மனிதனை சென்று பார்த்தால் அதுவெறும் பார்வை தான் இறைவனையோ துறவியையோ சென்று பார்த்தால் அதை பார்த்தல் என்று கூறக்கூடாது. தரிசனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மகான் காலமாகி விட்டால் அதன் பெயர் முக்தி. நீங்களும், நானும் காலமானால் அதை இறப்பு, சாவு என்று சர்வசாதாரணமாக சொல்லலாம்.

இதே போன்றது தான் அவி, ஆகுதி, சமித்து என்ற வார்த்தைகள். சமித்து என்றால் காய்ந்த குச்சிகள் என்பது தான் பொருள். அதை குச்சி என்று சொல்லாமல் சமித்து என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. காய்ந்து போன மரக்கட்டைகளை சமைக்க பயன்படுத்தினால் அதை விறகு என்போம். அதே கட்டைகளை, குச்சிகளை யாகத்திற்கோ, ஹோமத்திற்கோ பயன்படுத்தினால் அதன் பெயர் சமித்து. அவி என்பதும் தானியங்களால் செய்யபடுகிற ஒரு வித உணவு. ஆகுதி எனப்படுவதும் உணவுகளை பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாகும். இங்கே இவை அனைத்தும் இறைவழிபாடான யாகங்களுக்கு பயன்படுவதனால், புனித பெயர்களை அடைகிறது. ஒரு பொருளை புனிதமானது என்று நம்பிக்கையோடு தொட்டாலே அதில் இல்லாத புனிதம் இறைவன் அனுகிரஹத்தால் வந்து விடுகிறது. 

 வேதங்களில் அக்னி தேவனை மிக உயர்வாக பாடுகிறார்களே அது ஏன்? காற்று, மண், தண்ணீர் மற்றும் ஆகாயம் இவைகளை போல அக்னியும் ஒரு பூதம் தானே! அதற்கு மட்டும் எதற்கு சிறப்பான இடத்தை வேதங்கள் தரவேண்டும்? 

     காற்று மேலிருந்து கீழாக வீசக்கூடியது. மண் கீழேயே இருப்பது. ஆகாயம் சொல்லவே வேண்டாம் மேலேயேதான் இருக்கிறது. தண்ணீரோ பள்ளத்தை நோக்கி மட்டுமே ஓடும் சக்தி படைத்தது. ஐந்து பூதங்களில் நெருப்பு மட்டும் தான் கீழே இருந்து மேலே நோக்கி வளர்வது. அதனால் அது சிறப்பான பூதமாகிறது அது மட்டுமல்ல, அக்னியிலிருந்து கிளம்புகிற வெப்பமானது நொடி நேரத்தில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து விடும் இயல்பு கொண்டது. வேதங்களும், வேத கால ரிஷிகளும் அக்னியில் கொடுக்கப்படும் பொருட்கள் உடனடியாக தெய்வங்களிடம் சென்று சேர்க்கப்படுகிறது. தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் தூதுவனாக அக்னி இருக்கிறது எனவே அக்னியை மிக உயர்ந்தவன் என்று கருதுகிறார்கள். 

அதனால் தான் நம்மால் கணக்கிட்டு பார்க்கமுடியாத, மிக பழைய காலத்தில் கோயில்கள், சிலைகள் அபிஷேக ஆராதனைகள் போன்ற எதுவும் இல்லாமல் அக்னி வளர்த்து செய்யப்படும் யாகங்களே மிகச்சிறந்த வழிபாடாக மக்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த காலத்து யாகங்கள், இந்த காலத்து பிரார்த்தனைகளை போலவே எதோ ஒரு தேவைக்கான வேண்டுதலுக்காகவே செய்யப்பட்டது. பதவிக்காக, மரணத்தை வெல்வதற்காக, நோயிலிருந்து விடுபட, போர்களில் வெற்றிபெற, வேளாண்மை மற்றும் குடும்ப தேவைகள் போன்ற அனைத்திற்கும் யாகங்கள் செய்யப்பட்டன. இந்த யாகங்களில் வளர்க்கப்படும் நெருப்பில் புனித ஆகுதியை மந்திர உச்சாடனத்துடன் கொடுத்தால் அதற்குரிய தெய்வம் வரம் தரும் என்பது ஐதீகம். இன்று கூட நெருப்பு வளர்த்து சொல்லப்படுகிற மந்திரங்களுக்கு இருக்கிற சக்தி மற்ற மந்திரங்களுக்கு அவ்வளவாக இல்லை எனலாம். 

அதாவது நெருப்பு அதனுடைய வெப்பத்தை எப்படி உடனுக்குடன் வெளிப்படுத்தி விடுகிறதோ அதே போல புறப்பொருள்களையும் அது பெளதீகமாக இருந்தாலும் அபெளதீகமாக இருந்தாலும் தனக்குள் ஈர்க்க வல்லது. அப்படி ஈர்த்ததை அதாவது மந்திர உச்சரிப்போடு கூடிய பிரார்த்தனையை பிரபஞ்ச வெளியில் செலுத்தி நமக்கு தேவையான பலன்களை உடனடியாக வாங்கி தருகிறது. இது தான் வேதகாலத்து மக்களின் வாழ்க்கை முறையாகவும், வழிபாட்டு முறையாகவும் இருந்தது. நம்மை விட நூறு மடங்கு அறிவின் சக்தி மிகுந்தவர்களாக அவர்கள் இருந்ததற்கு அதுவே காரணமாகும். 

   ப்படி என்றால் வேதங்கள், யாகங்கள் மூலம் நடைபெறுகிற வழிபாடு தான் சிறந்தது. மற்றது அதாவது ஆலய தரிசனங்கள் உள்ளிட்ட ஆராதனை முறைகள் சிறப்பு வாய்ந்தது அல்ல என்று சொல்கிறதா? 

    வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்தில், மிக அதிகமாக உபயோகப்படுத்துகிற வார்த்தை “யக்ஞம்” என்ற வார்த்தையே ஆகும். இதன் பொருள் யாகம் என்பதாகும் தேவர்களின் அருளை பெற எப்படி மனிதர்கள் யாகம் செய்கிறார்களோ அதே போலவே மூல பரம்பொருளின் அருளை பெறுவதற்கு தேவர்கள் யாகம் செய்வதாகவும் வேதங்கள் சொல்கின்றன. அவைகளை பார்க்கும் போது யாகம் என்ற வழிபாடே தலைசிறந்தது. மற்றவைகள் தாழ்ந்தவைகள் என்று வேதம் கருதுவதாக நமக்கு எண்ண தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. 

யாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரார்த்தனைக்கும் வேதங்கள் கொடுக்கின்றன. ரிக் வேதத்தில் என்னிடம் நெய் இல்லை, சமித்தும் இல்லை, கரையான் அரித்த குச்சிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும் தான் இருக்கிறது இதையே நெய்யாக ஏற்றுக்கொள் என்று ஒரு ரிஷி பாடுவதாக ஒரு மந்திரம் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது யாகத்தில் நெய் வார்ப்பதும் ஆகுதி வழங்குவதும் மனிதனின் பணிவின் வெளிப்புற அடையாளங்கள் என்பது தெரிகிறது. மேலும் இதே மந்திரத்தின் வேறொரு பகுதியில் யாகங்கள் எதற்காக செய்கிறோம் என்பதை புத்திப்பூர்வமாக உணர்ந்து அந்த பிரார்த்தனையை தொடர்ச்சியாக நினைத்தால் தான் குறைவில்லாத முழுமையான யாகம் நடந்தேறுமென்று வருகிறது. ஆகவே மனமது செம்மையாகி வைக்கின்ற பிரார்த்தனையையும், செய்கின்ற யாகமும் ஒன்று தான் என்று வேதம் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம். 

        தை வைத்து பார்க்கும் போது குழப்பம் வருகிறது. யாகம் வேண்டும் என்று ஒரு கருத்து என்றால், பிரார்த்தனையினால் பயனில்லை என்ற பொருள் வருகிறது. பிரார்த்தனை இல்லை என்றால் யாகம் நிறைவு பெறாது என்ற ஒரு கருத்து உள்ளதென்றால் வெறும் யாகத்தால் பிரயோஜனம் இல்லை என்பதும் பொருளாகிறது. உண்மையில் வேதம் சிறப்பித்து கூறுவதை எதை யாகத்தையா? பிரார்த்தனையையா?


    ரிக் வேதத்தை முழுமையாக படிக்கும் போது அந்த வேதத்தை உருவாக்கிய ரிஷிகள் இரண்டுவிதமான எண்ணவோட்டத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சில ரிஷிகள் யாகமே சிறந்தது என்கிறார்கள் சிலர் பிரார்த்தனையே மேன்மையானது என்கிறார்கள். வேதத்தை உணராமல் இதை படித்தால் கண்டிப்பாக குழப்பமே வரும். சில நேரங்களில் வேதங்களை வழிபாட்டுக்கான பொருள் என்ற நிலையில் வைத்து பார்க்காமல் ஆராய்வதற்கான பொருளாகவும் அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். 

உலக இலக்கியங்களில் மிகவும் பழமையானது வேதங்கள். மனித குலத்தின் முதல் இலக்கியமே வேதங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட பழமையான வேதங்கள் தோன்றுவதற்கு முன்பே வேதத்தின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அது செப்பனிடப்பட்டு ஒரு தொகுப்பாக வந்திருக்க வேண்டும். இப்படி தொகுப்பாக உருவான வேதங்களை பல ரிஷிகள் செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் கால இடைவெளி என்று பார்த்தால் பல நூறு ஆண்டுகள் கூட இருக்கும். ஒரு நூறு ஆண்டில் இருந்த கருத்து, அடுத்த நூறாவது ஆண்டில் மாறுபடலாம். புதிய கருத்துக்களும் உதயமாகி இருக்கலாம். இப்படி ஆரம்ப கால ரிஷிகளின் எண்ணம் யாகமே சிறந்த வழிபாடு என்பதாக இருந்து, படிப்படியாக அவைகள் மாறி வந்திருக்க வேண்டும். இதனால் தான் இரண்டு கருத்துக்கள் மிக உறுதியாக வேதங்களில் காணப்படுகிறது. 

நெருப்பு மூட்டி வழிபடுவது தொன்மை ரிஷிகளின் வழக்கமாக இருந்திருக்கலாம் பிறகு வந்த ரிஷிகள் அந்த கருத்தை மாற்றி பிரார்த்தனையே சிறந்தது என்று சொல்லி இருக்கலாம். யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளட்டும் என்ற உயரிய எண்ணத்தில், ஒருவர் கருத்தை ஒருவர் அழிக்கவோ, மறைக்கவோ முயற்சிக்காமல் நியாயப்படி நமக்கு தந்திருக்க வேண்டும். அதனால் தான் இரு துருவங்களான கருத்துக்கள் ஒரே வேதத்தில் காணப்படுகிறது. ஆகவே நெருப்பை மூட்டி யாகம் செய்வது எப்படி நமது பிரார்த்தனையை பிரபஞ்ச வெளியில் கலக்கிறதோ அதே போலவே நொடி நேரம் கூட ஓயாமல் மனதிற்குள் செய்யப்படும் பிரார்த்தனையும் பிரபஞ்சத்தில் கலக்கிறது. இதில் எது சிறந்தது என்று பார்ப்பதை விட எது நம்மால் முடிந்தது என்று பார்க்க வேண்டும். முடிந்ததை, விரும்பியதை செய்வதற்கு வேதங்கள் பரிபூரண அனுமதி தருகிறது. 






Contact Form

Name

Email *

Message *