Store
  Store
  Store
  Store
  Store
  Store

பைபிளோடு விளையாடிய ஆவி !


     வேடிக்கையாக பேசுவதும் தன்னை உயர்வாக மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்கு சிறிய பொய்களை கூறுவதும், மனிதர்களாகிய நமக்கு சர்வ சாதாரணம். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இப்படி நடந்து கொள்வது பெரிய அதிசயம் அல்ல. ஆனால் மனிதன் மனிதனாக வாழும் போது மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறானா? தனது மண்ணுலக வாழ்க்கை முடிந்து விண்ணுலக வாழ்வை ஏற்றுக்கொண்ட பிறகும் அதாவது இறப்புக்கு பிறகு ஆவியான பின்னரும் வேடிக்கை பேச்சும், பொய் சொல்வதும் தொடர்கிறதா என்பதை ஆராய்கிற போது அதிசயமான பல விந்தைகள் நமக்கு தெரிய வருகின்றது. 

பதினைந்து அல்லது இருபது வருடம் இருக்கும் நண்பர் ஒருவருக்காக அவரது உறவினர் ஆவியை மயக்கநிலைப்பேச்சு வழியாக அழைத்து பேசினோம். மிக முக்கியமாக அந்த ஆவியோடு பேசியதற்கு என்ன காரணம் என்றால் அந்த நண்பரின் ஐந்து வயது குழந்தை திடீரென்று ஒருநாள் ஜுரத்தில் காலமாகி விட்டது. அந்த மரணம் ஏன் ஏற்பட்டது? குழந்தையின் வாழ்நாளே அவ்வளவு தானா? தற்போது பித்ரு உலகில் குழந்தையின் ஆத்மா எப்படி இருக்கிறது? தனது குடும்பத்தை பற்றி தாய் தந்தையரை பற்றி என்ன நினைக்கிறது? என்பதை அறிந்து கொள்ளவே முயற்சி செய்தோம். 

அந்த நிகழ்விற்கு மீடியமாக இருந்தவர் எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர். அவர் நல்ல படிப்பாளி, அறிவாளி. இஸ்லாமியராக இருந்தாலும் கூட ஆன்மிகம் என்பதை மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆராய்பவர். மிக அரிதாக கடவுளுக்கும், மதங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்ற உண்மையை கண்டுணர்ந்து வாழ்க்கையை நடைமுறை படுத்துபவர், பலமுறை அவர் மீடியமாக இருந்திருக்கிறார். அவர் மூலமாக நடந்த அந்த ஆவி உரையாடலை பழைய குறிப்புகளில் வைத்திருந்தேன் அதை அப்படியே உங்கள் முன்னால் தருகிறேன். 

இஸ்லாமிய நண்பரின் உடல் வழியாக அந்த ஆவி பேசியது வணக்கம் என்ன காரணத்திற்க்காக என்னை அழைத்தீர்கள் உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்? 

நான்:- உங்கள் வணக்கத்தை அன்போடு ஏற்றுக்கொள்கிறோம். எங்களது வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறோம். வந்திருக்கும் நீங்கள் உங்களை பற்றி அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும். 

ஆவி:- அறிமுகம் செய்யும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல. அதிகம் கேள்விகளை கேட்டு என்னை துன்புறுத்தாதே என்ன வேண்டுமோ அதை கேள்?


நான்:- மன்னிக்க வேண்டும் உங்களை சிரமப்படுத்த மாட்டோம் இந்த நண்பரின் குழந்தையும், இறப்பை பற்றியும் அது தற்போது அங்கு எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளவும் விரும்புகிறோம் தயவு செய்து எங்களுக்கு விளக்கம் தாருங்கள்.

ஆவி:-  அந்த குழந்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் 1937 வது வருடம் பைபிளில் 63 ஆவது பக்கத்தை படித்துப்பார் விளங்கி கொள்வாய். 

நான்:- அந்த வருடம் அச்சான பைபிளை சொல்லுகிறீர்களா? 

ஆவியிடம் பதில் இல்லை....

நான்:- அந்த வருடம் அச்சானது என்றால் உள்நாட்டில் அச்சானதா? வெளிநாட்டில் அச்சானதா? 

ஆவியிடம் பதில் இல்லை...

நான் பொதுவாக பைபிள் என்றால் எந்த மொழியில் உள்ள பைபிள்? தமிழா? ஆங்கிலமா?

ஆவி:- தமிழ் மொழி பைபிள் 

உடனடியாக பைபிள் கொண்டுவரப்பட்டது ஆவி சொன்னபடி அந்த பக்கத்தை புரட்டி பார்த்தோம். அதில் அப்படி எந்த குறிப்பும் இல்லை. ஆவியிடம் நீங்கள் சொன்னபடி எதுவும் இல்லையே என்று கேட்டேன் 

ஆவி:-  இது அந்தவருடத்திய பைபிள் இல்லை வேறு வருஷத்தில் உள்ளது அதில் பார்த்தால் தான் இருக்கும் இதில் இருக்காது. 

நான்:- மன்னிக்க வேண்டும். பஞ்சாங்கம் மட்டுமே வருடம் தோறும் புதிதாக அச்சடிக்கப்படுவது. பைபிள் என்பது அப்படி அல்ல அன்று முதல் இன்றுவரை ஏன் இன்னும் நூறு வருடம் ஆனாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் மாற்றம் இருக்காது. 

ஆவி:- அது எனக்கு தெரியாதா? நான் என்ன முட்டாளா? மரியாதையாக சொல்வதை மட்டுமே கேள். நான் சொல்வது சத்தியம். 

நான்:- நீங்கள் கூறுவது அடிப்படையிலே தவறு. பைபிளின் கருத்துக்கள் பக்கம் சார்ந்து இருப்பது இல்லை. அதிகாரம், வசனம் என்று தான் இருக்கும். அதுவும் இல்லாமல் அப்போஸ்தலர்களின் பெயர்களை கூறினால் தான் சரியான வசனத்தை தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் அதை பற்றிய அரிச்சுவடி கூட தெரியாமல் பேசுகிறீர்கள். சத்தியத்தை பேசவில்லை என்பதை நினைத்து கொள்ளுங்கள்.

ஆவி:- நீ பெரிய மேதாவியா? என்னிடம் வாதம் செய்வதற்கு? நீ ஒரு குழந்தை பற்றி கேட்டால் நான் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? உன் வேலைக்காரனா நான்? உனக்கு பதில் சொல்வதற்காகத்தான் அவசர அவசரமாக செத்து போனேனா? 

நான்:- மீண்டும் மன்னிக்க வேண்டும் நீங்கள் முதலிலேயே விரும்பி இருந்தால் பதில் சொல்ல மாட்டேன் என்று ஒதுங்கி இருக்கலாமே? நீங்கள் அனுமதித்த பிறகு தானே கேள்வி கேட்டேன்? அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

ஆவி:- கோபித்துக்கொள்ளாதே! உன்னை மிரட்டி பார்க்கவே அப்படி பேசினேன் உண்மையில் எனக்கு நீ கேட்கும் குழந்தையை பற்றி எந்த தகவலும் தெரியாது. காரணம் குழந்தைகள் பாவம் செய்யாதவர்கள். அவர்கள் இறந்து இங்கு வந்தவுடன் உயர்ந்த உலகிற்கு அழைத்து செல்லப்பட்டு விடுவார்கள். எங்களால் அவர்களை பார்க்க முடியாது இதை முதலில் சொல்லாமல் சும்மா வேடிக்கை பேசவே வந்தேன் வருந்தாதே.

சன்யாசம் வாங்கினாலும் ஜாதிபுத்தி போகாது என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு அதாவது மனிதனது இயற்கை சுபாவம் என்பது எந்த வகையிலும் அவனிடம் இருந்து மறையவே மறையாது. பெண்களை காமமாக பார்க்க தெரிந்தவன் சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூட மோகத்தோடு தான் பார்ப்பான். அதை போலத்தான் மற்றவர்களை கிண்டலடித்து பழக்கப்பட்டவன், வம்புக்கிழுத்து பழகியவன் செத்த பிறகும் பெருங்காய டப்பாவில் வாசம் இருப்பது போல மாறாமல் இருப்பான் என்பதை இந்த சம்பவம் மூலம் அறிந்து கொண்டேன். 

Contact Form

Name

Email *

Message *