Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெண்கள் பித்ரு பூஜை செய்யலாமா?



     ஜிலாதேவி இணையதள வாசகர்களின் தனிப்பட்ட நலத்தை முன்னிட்டு குருஜி நடத்துகிற பித்ரு சாந்தி பூஜையில் கலந்து கொள்ள பல வாசகர்கள் விரும்பினாலும் பல்வேறுபட்ட வாசகர்களுக்கு இந்த பூஜையில் கலந்துகொள்வதை பற்றி பல சந்தேகமும் குழப்பங்களும் வந்தன. அவைகளை மின்னஞ்சல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் நிறைய பேர் கேட்டு துளைத்து எடுத்தார்கள். ஒரு வாசகர் தொலைபேசி அழைப்பு சரிவர கிடைக்காததனால் விபரங்களை அறிந்து கொள்ள நேரிலேயே வந்துவிட்டார். குருஜி நடத்துகிற இந்த பூஜை வாசகர்களுக்கு இந்தளவு ஆர்வத்தை கொடுத்திருப்பதை பார்க்கும் போது ஒருபக்கம் சந்தோசமாகவும் இன்னொருபக்கம் இவர்களின் குழப்பங்களை மிக கண்டிப்பாக தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் வந்தது. 

எனவே இது சம்மந்தமான பல வாசகர்களின் கேள்விகளை தொகுத்து அதற்கான பதிலை குருஜியிடம் பெற்று இங்கே வெளியிடுவது என்று தீர்மானித்தோம் இக்கேள்விகள் அனைத்தும் ஒருவர் கேட்டது அல்ல. ஒருவருக்கு உதயமானதும் அல்ல. பலருடைய கேள்விகள், பலருடைய சந்தேகங்கள். அதனால் தனிப்பட்ட வாசகர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடாமல் கேள்விகளை மட்டும் தருகிறோம். 

ஒருவர் கேட்டார். எனது தகப்பனார் சுயமரியாதை இயக்கத்தில் மிகத்தீவிரமான ஈடுபாடு கொண்டவர். வாழும் காலம் வரையிலும் கோவிலுக்கு போனது இல்லை சாமி கும்பிட்டதும் இல்லை. கடவுளை பற்றியும், மதங்களை பற்றியும் மத நம்பிக்கை உள்ளவர்களை பற்றியும் மிக கேவலமாக பேசுவார். விமர்சனம் செய்வார் ஒருமுறை காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல் புத்தகத்தை மிக அசிங்கமான அவமானப்படுத்தினார் இப்போது அவர் காலமாகி விட்டார் அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா? அவருடைய தவறுகளுக்கு தண்டனை பெற்று நரகத்தில் இருப்பாரா? நரகத்தில் இருப்பவருக்கு நாம் பித்ரு சாந்தி செய்யலாமா? செய்தாலும் பலன் பெறுமா? என்று இந்த கேள்வியை கேட்டவரின் வயது முப்பதை தாண்டாது. வயதை இங்கு சொல்வதற்கு மிக முக்கிய காரணம் கடவுள் நம்பிக்கைக்கும் வயதிற்கும் சம்மந்தமில்லை என்பதற்காகவே. 

 

    இந்த கேள்விக்கு குருஜி தனக்கே உரிய பாணியில் ஒரு அலுவலகத்தில் பத்துபேர் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் அனைவரும் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? என்பதை தான் ஒரு மேலாளர் கவனிப்பார் அதை விட்டு விட்டு அவர் பச்சை சட்டை போட்டிருக்கிறாரா? இவர் காலையில் புளியோதரை சாப்பிட்டாரா? என்பதை எல்லாம் அவர் கவனிக்க ஆரம்பித்தால் அவர் மேலாளர் பதவிக்கு அருகதை அற்றவராக ஆகிவிடுவார். கடவுள் வெறும் மேளாளர் மட்டுமல்ல முதலாளியும் கூட. ஒருபோதும் அவர் தன்னிடம் இருக்கும் தொழிலாளி தன்னை போற்றி புகழ்ந்து வழிபடுகிறானா? இல்லையா? வழிபட்டால் தான் இவனுக்கு நன்மை செய்ய வேண்டும் இல்லை என்றால் கீழே போட்டு மிதிக்க வேண்டும் என்று பார்க்க மாட்டார். செய்யும் வேலையை ஒழுங்காக செய்கிறானா? என்பதை மட்டுமே அவர் கவனிப்பார். 


கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. கடவுளை வணங்கி கொண்டே களவு செய்யும் கனவான்கள் இருப்பது போல, கடவுளை நிந்தித்து கொண்டே ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒருவனை நல்லவனா? கெட்டவனா? என்று தீர்மானிப்பது கடவுள் நம்பிக்கையை வைத்து அல்ல. அவனது ஒழுக்கத்தை வைத்து ஒழுக்கம் தவறியவன் கடவுளை நம்பினாலும், நரகத்திற்கே போவான். எனவே நாத்திகனுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம் அது தவறல்ல. மேலும் பித்ரு சாந்தி என்பது கீழ்நிலையில் இருக்கும் ஆத்மாவை கூட மேல்நிலைக்கு கொண்டு வருவதற்காக எனவே சாந்தி செய்வதில் நல்லவர் கெட்டவர் என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என பதில் சொன்னார். 

அடுத்ததாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குடும்பத்தில் ஆண்வாரிசுகள் இல்லை பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு கிரிகைகள் செய்யலாமா? என்பது தான் அந்த கேள்வி இது மிக முக்கியமான கேள்வியாகும். காரணம் நமது சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமே தர்ப்பண சடங்களில் பங்குகொள்ளும் அனுமதி கொடுக்கபட்டிருக்கிறது. பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனால் தான் எப்படியாவது ஒரு ஆண்குழந்தையை பெற்றுவிட வேண்டும் என்பது பலரும் நினைக்கிறார்கள். பெண் குழந்தைகளை சிசுவதை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து வருகிறது இந்த கேள்விக்கு குருஜி என்ன பதில் கூறினார் என்பதை பார்ப்போம் 
  
 

   ஆண் குழந்தைகள் தான் பெற்றோர்களின் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் வருடந்தோறும் தர்ப்பணம் கொடுக்கும் உரிமை அவர்களுக்கு தான் உண்டு என்று வேதங்களில் எதுவும் கூறப்படவில்லை தாய் வழி சமூக நிலை மாறி தகப்பன் வழி சமூகம் உருவான பிறகே பெண்களின் முக்கியத்துவங்களை குறைப்பதற்காக இத்தகைய சடங்கு முறைகள் மாற்றியமைக்கப்பட்டு சாஸ்திரங்களில் இடைச்செருகல்களாக இணைக்கப்பட்டன அதை எந்த கேள்வியும் கேட்காமல் இதுவரை அப்படியே பயன்படுத்தி வருகிறோம் பாதியில் நாம் கேட்க போனால் நம்மை சாஸ்திர விரோதி என்று பட்டம் கட்டி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். இருந்தாலும் உண்மையை சொல்லாமல் போனால் அது மனசாட்சியை கொன்றது போல் ஆகிவிடும். 


தற்போதைய நிலையில் ஆண்வாரிசு இல்லாத பெற்றோர்களுக்கு பெண்குழந்தைகள் இருந்தால் அவர்களின் கணவன்மார்கள் தங்களது மாமனார் மாமியாருக்காக பித்ரு சாந்தி செய்யலாம் அல்லது பேரக்குழந்தைகள் செய்யலாம் துரதிருஷ்டவசமாக இவர்கள் யாருமே இல்லை என்றால் பெண்குழந்தைகளின் அதிகாரம் பெற்ற இரத்தமுறை உறவில் உள்ளவர்கள் செய்யலாம். என்னை கேட்டால் பெண் குழந்தைகளே செய்தாலும் அதில் தவறில்லை என்று மிக தெளிவாக குருஜி பதில் தெரிவித்தார். இன்னொரு முக்கியமான கேள்வியும் வந்தது அது இந்துக்கள் மட்டும் தான் பித்ரு சாந்தி பூஜை செய்ய வேண்டுமா? மற்ற மதத்தினர் செய்ய கூடாதா? என்பது தான் அந்த கேள்வி 

கடவுளுக்கும் மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்கின்ற போது ஆத்மாவிற்கு மட்டும் மதம் எங்கிருந்து வரும்? நாம் உயிரோடு வாழுகிற வரை தான் ஹிந்து, முஸ்லீம் என்ற மதத்தோடு வாழுகிறோம் உடம்பை விட்டு உயிர் போய்விட்டால் அந்த உயிருக்கு மதமும் இல்லை. தனித்தனியான வழிபாட்டு முறையும் இல்லை. நாம் நமது செளகரியத்திற்காக பித்ரு சாந்தி சடங்கு முறையை மதத்திற்கு ஒன்றாக மாற்றி மாற்றி வைத்திருக்கிறோமே தவிர அடிப்படை தத்துவம் முன்னோர்களின் ஆன்ம மேம்பாட்டிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே ஆகும். எனவே மதம் என்பது ஒரு தடையே இல்லை. என்று குருஜி அழகான பதிலை தந்தார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒரு விஷயம் உண்டு நமது பித்ரு சாந்தி பூஜையில் பல கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும், ஜைனர்களும் கலந்திருக்கிறார்கள் என்பதை இங்கு பெருமையோடு குறிப்பிடலாம். 

நமது பெற்றோர்கள் தவிர வேறு யார் யாருக்கெல்லாம் நாம் பித்ரு பூஜை செய்யலாம் என்று பலரும் கேட்டார்கள். அதற்கு குருஜி பெற்றோருக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது நியதி அல்ல நண்பருக்காகவும், ஆசிரியருக்காகவும் முதலாளிக்காகவும் கூட செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாட்டு தலைவர்களுக்காக கூட தர்ப்பணம் கொடுக்கும் மனிதர்கள் நிறையப்பேர் உண்டு காந்தி, காமராஜ் போன்ற தேசத்தலைவர்கள் மறைந்த போது தனது உறவினர்கள் இறந்து போனால் மொட்டையடித்து, மீசையை மழித்துக்கொள்வதை நாம் கண்டிருக்கிறோம் இவைகள் தவறு அல்ல இன்னும் சொல்லப் போனால் வரவேற்கத்தக்கதே ஆகும். நாம் யார் மீதெல்லாம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் அனைவருக்காகவும் அனைவரின் ஆத்ம சாந்திக்காகவும் பித்ரு பூஜை செய்யலாம் என்று தெளிவாக பதில் சொன்னார். 


சதீஷ் குமார்.






Contact Form

Name

Email *

Message *