Store
  Store
  Store
  Store
  Store
  Store

அழுவதற்கா பிறந்தோம்...?


பிறந்த நாள் முதல் இறக்க போகும் நாள்வரை துயரங்கள் என்பதே நமக்கு துணையாக வருகிறது. துள்ளி விளையாடும் பிள்ளைப்பருவத்தில் பள்ளிக்கு செல் என்றும் பாடங்கள் படி என்றும் திரும்ப திரும்ப சொல்லி மழலை பருவத்து மகிழ்ச்சியை மண்ணுக்குள் குழிதோண்டி புதைத்துவிடுகிறார்கள். இது நமக்கு தெரிகிற முதல் துயரம். இதற்கு முன் பச்சிளம் குழந்தையாக தொட்டிலில் கிடக்கும் போது அம்மையும், அப்பனும், பாட்டனும், பாட்டியும் முத்தங்கள் கொடுக்கிறேன் என்றும், கொஞ்சி மகிழ்கிறேன் என்றும் எத்தனை கஷ்டங்கள் கொடுத்திருப்பார்கள். அவையெல்லாம் நினைவில் இல்லை. 

பள்ளியை விட்டு வெளியே வந்து வாலிப பருவத்தின் வனப்பை ரசிக்கலாம் என்றால் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றாதே குடும்பத்தை கரை சேர்க்க வேலைக்கு போ! தொழிலை செய் என்று எண்ணிலடங்காத ஆணிகளை நடக்கும் பாதையில் நட்டு வைக்கிறார்கள். ஒருநாள், ஒரே ஒருநாள் நண்பர்களோடு ஆற்றங்கரை ஓரம் கடற்கரை மணல்பரப்பில் கட்டிப்புரண்டு சடுகுடு ஆடினால் வீணாகிப்போவாய் என்று விமர்சனம் செய்கிறார்கள். வேலை ஒன்றை தேடிக்கொள் அதன் பிறகு உன் உல்லாசத்திற்கு தடை இல்லை என்கிறார்கள். 

தொழில் அமைந்தால், வேலை கிடைத்தால் நாலுகாசு சம்பாதிக்க முனைந்தால் இன்னும் தனிமரமாக எத்தனை நாட்கள் வாழ்வாய் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய வேண்டாமா? சமுதாயத்தில் நீயும் ஒரு அங்கத்தினன் என்பதை காட்ட வேண்டாமா? என்று சம்சார பந்தத்திற்குள் பிடித்து தள்ளுகிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் மனைவிக்காக பாடுபடு, குழந்தைக்காக ஓடு, குடும்பத்திற்காக ஓய்வே இல்லாமல் உழைத்திடு என்று சாட்டை கம்பால் விரட்டுகிற மாட்டை போல் காலம் முழுக்க சுற்ற விடுகிறார்கள். இதில் எப்போது நான் மகிழ்ந்திருப்பது? என்று நான் சந்தோசப்படுவது? எதற்காக நான் உற்சாகம் அடைவது? வாழ்க்கை முழுவதும் துன்பமயமாகவே இருக்கிறதே தவிர இன்பம் என்பது எள் முனை அளவிற்கு கூட இல்லை. 

நாலுபேர் மதிப்பது இன்பம். அழகிய மனையாளை பெறுவது இன்பம் அன்பான குழந்தைகளை அரவணைக்கும் சொந்தபந்தங்களை உண்டாக்கி கொண்டது இன்பம் என்று நிஜமான துயரங்களுக்கு போலியான விளக்கங்களை கொடுக்கிறார்கள். நன்றாக யோசித்து பாருங்கள் மனைவி இன்பமா? சம்பளம் இல்லை கையில் கால் காசு இல்லை என்றால் எந்த மனைவி நம்மை நேசிப்பாள்? படிக்க வைக்கவில்லை என்றால் சொத்து சுகம் சேர்த்து வைக்கவில்லை என்றால் எந்த குழந்தை நமக்கு இன்பம் தரும். விருந்துக்கு வந்தவனுக்கு சோறு போட துப்பில்லாதவனை எந்த உறவினர்கள் மதிப்பார்கள். இவர்களிடம் போலியான பாராட்டுதலை பெறவேண்டும் என்பதற்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபட வேண்டும் அதற்கு நமது இன்பத்தை பலிகொடுக்க வேண்டும் வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்த சாக்காடே தவிர பூக்காடு அல்ல என்று உலக வாழ்க்கையை துன்பமயமாக பார்பவர்கள் நிறைய பேர் உண்டு. 

ஊருக்காக உலகுக்காக உற்றார் உறவினருக்காக வாழாமல் தனக்காக மட்டும் வாழ்வது என்பதா நிஜமான இன்பம்? அப்படி வாழ்ந்தால் அதுவே பெரிய துயரம். தன்னந்தனிமையில் தனிக்காட்டு ராஜாவாக யாருடைய துணையும் இல்லாமல் எவருடைய அருகாமையும் இல்லாமல் நீ வாழ விரும்பினால் மன நல மருத்துவமனைகள் மட்டுமே உனக்கு கடைசி புகலிடமாக இருக்கும். உன் அப்பனும் பாட்டனும் உன்னை பெற்றுப்போட்டது சுயநலமாக நீ சுற்றித்திரிய வேண்டும் என்பதற்கல்ல கடமையை செய்ய தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துன்பம் என்று பார்த்தால் ரோஜா குல்கந்தை சுவைப்பது கூட துன்பம் தான் அனைத்தும் இன்பமயம் என்றால் நெருப்பாற்றில் நீச்சலடிப்பதுவே பெரிய பேரின்பம். 

இப்படி இரண்டுதரப்பு வாதங்கள் உலகில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது இதில் எது சரியென்று நமக்கு தெரியவில்லை எதை தவறென்றும் புறந்தள்ளவும் முடியவில்லை. நமது வாழ்க்கை பயணத்தில் எதிர்படும் மனிதர்களை தினசரி காண்கிறோம் சிலர் பார்க்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருக்கிறான் எனக்கு திருமணமாகி விட்டது பெண்டாட்டியை எப்படி காப்பாற்றுவேன் என்று அழுகிறான் பத்துலட்ச ரூபாய் பணம் வந்துவிட்டது வரிகட்ட வேண்டுமே என்று அழுகிறான் மந்திரி பதவி கிடைத்திருக்கிறது இது நிலைக்குமோ நிலைக்காதோ என்று அழுகிறான். இவர்களது அழுகை ஓய்ந்ததை நம்மால் காணவே முடியவில்லை 

இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஐந்து வயதில் அம்மா செத்து போய்விட்டாள் இவனை புத்திசாலியாக்குவது முடியவே முடியாது என்ற பயத்தில் இறந்துவிட்டாள் என்று தான் அனாதையாகி போனதை கூட சிரித்து கொண்டே கூறுபவர்களும் இருக்கிறார்கள். என் தொண்டையில் புற்று வந்திருக்கிறதாம் சில பாம்புகள் வந்து குடிவரட்டுமா என்று விசாரிக்கிறது என சாவைதரும் நோயை கூட நையாண்டி செய்கிறார்கள். அழவேண்டிய விஷயத்திற்கு சிரிப்பது சரியா என்ற கேள்வி பிறக்கும். சிரிக்க வேண்டிய விஷயத்திற்கு அழுபவன் இருக்கும் போது துயரத்தை கண்டு சிரிப்பதில் என்ன தவறு? 

பலபேர் நினைப்பது போல் வாழ்க்கை முழுவதும் சோகமாகவே யாருக்கும் இருப்பதில்லை என்பது வயதுவரையில் ஒருமனிதன் வாழ்கிறான் என்றால் குறைந்தபட்சம் பாதி நாட்களாவது சந்தோசமாக இருந்திருப்பான் இது கூட தவறு சில மணிநேரங்கள் மட்டுமே வந்துபோகும் துயரங்களை நாம் பல நாட்கள் நினைத்துக்கொண்டே இருப்பதனால் துயரத்தின் காலம் நீண்டதாக இருப்பதாக நமக்கு தெரிகிறது. உண்மையில் நாம் துன்பப்படும் காலத்தை விட இன்பமாக இருக்கும் காலமே அதிகம். அடிக்கடி இன்பம் வருவதனால் அதனுடைய தாக்கம் மறந்து போகிறது. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை நடத்துவது மிக சுலபமாக இருக்கும். 

முதலில் எதற்கெடுத்தாலும் துயரப்படும் பழக்கத்தை கைவிட வேண்டும் உலகத்தில் அனைவரும் இன்பமாக இருக்கிறார்கள் நான் மட்டுமே துயரங்களை அனுபவிக்கிறேன் என்று நினைப்பது பெரிய மனவியாதி பாயாசம் குடித்தாலும் கசக்கிறது என்பவனை எப்படி நிதானபுத்தி உடையவன் என்று எடுத்து கொள்வது நான் நன்றாக இருக்கிறேன் நாளையும் நன்றாக இருப்பேன் அதனால் இன்று மற்றவர்களையும் நன்றாக வைப்பேன் நன்றாக இருப்பவர்களையும் இருக்க விடுவேன் என்று செயல்படுபவன் மட்டுமே சாதனைகளை செய்யவில்லை என்றாலும் சோதனைகளை முறியடிப்பவனாக இருப்பான். 

துயரத்தால் மனிதனின் உடல் வனப்பு குறைகிறது. வீரம் வீரியம் குறைகிறது அறிவு குறைகிறது ஆற்றல் குறைகிறது அவனது செயல்கள் எல்லாமே காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகிவிடுகிறது. துயரப்பட்டு கொண்டே இருக்கும் மனிதன் நிரந்தர நோயாளியாகிவிடுகிறான் துன்பம் துன்பம் என்று சொல்லி கொண்டும் நம்பி கொண்டும் அலைவதனால் என்ன கிடைத்துவிடப்போகிறது? நீ துயரப்படுகிறாய் என்பதற்காக சூரியன் வடக்கே உதிக்க போகிறதா? அல்லிமலர் காலையில் மலர போகிறதா? உன் உடம்பு தான் கொதிக்கப்போகிறது. உன் நரம்பு தான் தளர போகிறது உன் புத்தி தான் தடுமாறப்போகிறது 

ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் இது தற்காலிகமானதே நேற்று வந்தது என்னை கடந்து போனதை போல் இன்று வந்திருப்பதும் கடந்து போகும் கட்டு கரும்பை கசக்கி பிழிந்து யானை மென்று துப்புவது போல் துயரங்களும் என்னால் ஜீரணிக்க பட்டுவிடும் என்று ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொண்டு மோதி பார் உனக்குள் ஒரு தாமரை மொட்டு புத்தம் புதியதாக இதழ் விரிப்பதை பார்ப்பாய். Contact Form

Name

Email *

Message *