( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தீராத பிணி தீர பரிகாரம் !   
பாசத்திற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது கதை மிக நீண்ட சோகக்கதை அதை முழுமையாக இங்கே கூறுவது என்றால் இடம் போதாது என்னால் முடிந்தவரை சுருக்கமாக எழுதுகிறேன். புரிந்து கொண்டால் இறைவன் என் மீது காட்டும் கருணையாக கருதுவேன்.

ஐயா எனக்கு திருமணம் முடிந்து பனிரெண்டு வருடங்கள் முடிந்து விட்டது. பத்து வயதில் ஒரு மகனும் இருக்கிறான். என் கணவர் மிகவும் நல்லவர், தனது தங்கைமார்கள் அனைவருக்கும் திருமணம் முடித்து கொடுத்துவிட்டு முப்பத்தைந்து வயதில் தான் என்னை கரம்பிடித்தார். எங்கள் திருமண வாழ்க்கை இரண்டு வருடங்கள் சந்தோஷமாக சென்றது.

பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று காலையில் கண்விழித்த அவர் படுக்கையிலிருந்து எழும்பும் போது இடுப்பில் லேசாக வலிக்கிறது எண்ணெய் போட்டு நீவி விடு என்றார். செய்தேன் ஒருநாள், இரண்டுநாள் என்று தொடர்ந்த வலி அதிகரித்து கொண்டே போனது மருத்துவரிடம் சென்றோம். பரிசோதனை சிகிச்சை என்று நாட்கள் கடந்தன.

இப்போது அவர் ஐந்து வருடமாக படுத்த படுக்கையில் இருக்கிறார். நோய் இன்னும் குறைந்தபாடில்லை. வீட்டிலுள்ள நகை, சேமிப்பு, பணம் சொந்தமான வீடு இரண்டு ஏக்கர் நிலம் எல்லாவற்றையும் விற்று மருத்துவம் பார்த்துவிட்டோம் அவரது தங்கைமார்களும் தங்களால் இயன்ற அளவு கடன் வாங்கி கொடுத்தும் வைத்தியம் பார்க்கிறோம். நோய் தீர்ந்த பாடில்லை

முன்பு படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்த அவர் ஆயுர்வேத சிகிச்சை ஆரம்பித்த பிறகு சற்று எழுந்து உட்காருகிறார். குளிப்பதற்கும் கழிவறைக்கும் தோள்கொடுத்து அழைத்தால் கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். அவர் நண்பர் ஒருவர் வாங்கி கொடுத்த கணிப்பொறியில் நண்பருக்காக பங்கு சந்தை வியாபாரத்தை படுக்கையில் இருந்தவண்ணமே செய்து கொடுத்து எங்களுக்கு இன்று சோறும் போடுகிறார்.

நகைநட்டு, புடவை அலங்காரம் இவைகளில் உள்ள ஆசை எனக்கு மறுத்து போய்விட்டது நோய் இல்லாமல் சந்தோஷமாக ஒரே ஒரு நாள், ஒரு பிடி சோறு உண்டால் அதுவே போதுமென்று மனசு கெஞ்சுகிறது. என் மகனின் ஜாதகத்தையும் அவரது பிறந்த குறிப்பையும் இத்தோடு அனுப்பி உள்ளேன். கணித்து பார்த்து இந்த ஏழை அபலை பெண்ணுக்கு நல்ல வழிகாட்டுமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். நீங்கள் மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்தாலே என் குடும்பம் வெளிச்சம் பெறுமென்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.


இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகி,
தமிழ்செல்வி சேகரன்,
உடுமலைபேட்டை.


ந்திரன் வளர்வதும், தேய்வதும் நாம் அறிந்தது. சந்திரனது ஆகர்ஷன சக்தி அதிகமாக இருக்கும் போது கடல் கொந்தளிக்கிறது. பூமி அதிர்கிறது பைத்தியக்காரனது மூளையும் தடுமாறி கொப்பளிக்கிறது. நவக்கிரகங்களில் சூரியனை சக்திமிகுந்த கிரகமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆனால் பல வேளைகளில் சூரிய சக்தியையும் சந்திர சக்தி வென்றுவிடுகிறது. பலம் பொருந்திய ஆண்மகனை அழகான பெண்ணின் புன்னகை மண்மீது சாய்த்து விடுவது போல.

ஒரு ஜாதகத்தில் சூரியன் கெட்டுவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கூட சற்று தாமதமாக வரும். சந்திரன் கெட்டுவிட்டாலோ பாதிப்புகள் கட்டைவண்டியில் வராது ராக்கெட்டில் வந்துவிடும். நிமிட நேரத்தில் கெடுதி செய்ய சந்திரன் தயங்காது. நன்மைகளையும் அதே வேகத்தில் தரும் எனலாம்.

ஆறாவது இடத்தில் உள்ள சந்திரன் நீசம் அடைந்து அவனது திசை நடக்க துவங்கினால் ஜாதகனை மிக நீண்ட நாள் நோயில் கண்டிப்பாக தள்ளிவிடும். தசையின் காலமான பத்து வருடத்தில் ஐந்து வருடங்கள் நோய் வளர்ந்து கொண்டே போகும் ஐந்து வருடம் படிப்படியாக குறையும். சந்திரன் வளர்ந்து தேய்வது போல

உங்களது கணவரது ஜாதகப்படி இப்போது சந்திர திசை முடியப்போகிறது எனவே இடுப்பில் ஏற்பட்ட நீர் பாதிப்பால் வந்த நோய் இன்னும் எட்டு மாதத்தில் வந்தது போலவே சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போகும். கம்பீரமாக பழைய தோற்றத்தில் அவர் நடந்து செல்வதை நீங்கள் கண்களால் காணப்போகிறீர்கள். இது உறுதி நிச்சயம்.

செஞ்சுடர் என்று மாணிக்க வாசகரால் பாடப்படுகிற சிவபெருமானை திங்கள்கிழமை தோறும் தேனும், தினைமாவும் வைத்து வழிபாட்டு வாருங்கள். நாள்பட்ட நோயும் தீராத பிணியும் தீருமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எல்லோருக்கும் படியளக்கும் பரமசிவன் உங்களுக்கு மட்டும் அளக்காமலா போய்விடுவான்.


Next Post Next Post Home
 
Back to Top