Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளோடு உறவாடும் நேரம் எது...?


      டவுளுக்கும், மனிதனுக்கும் எப்போது உறவு ஏற்படுகிறது? என்று கேட்டால் உறவு என்பது இல்லாமல் எப்போது இருந்தது? அப்படி ஒரு நாள் இருந்திருந்தால் மனிதன் என்பவன் உருவாகி இருப்பானா? எனவே காலையில் சூரியன் உதிப்பது முதல் அடுத்த நாள் காலையில் புதிய உதயம் வருவது வரையில் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லாமல் மனிதன் கடவுளோடு உறவாடி கொண்டிருக்கிறான் அல்லது உறவில் இருக்கலாம் என்று நமக்கு பதில் சொல்ல தோன்றும். 

தூங்குகையில் வாங்குகிற மூச்சு அது சுழிமாறி போனாலும் போச்சு என்பது போல நமது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியுமே இறைவனின் பேரருளாலும் அருள் உறவாலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரே உதாரணம் நமது நுரையீரலில் இருந்து இயங்குகிற சுவாசம் இது எப்படி நடக்கிறது? இதை நடத்தி வைப்பவர் யார்? பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் நிற்காமல் நிதானிக்காமல் இயக்கி கொண்டே இருப்பவர் யார்? என்று சிந்தித்தால் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு புரியும். 

இருந்தாலும், கடவுளுக்கும் நமக்கும் மிக நெருங்கிய உறவு எப்போது ஏற்படுகிறது? என்ற கேள்வியை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. சூரியன் வருவதும், மரம், செடிகள் துளிர்ப்பதும், மலைகள் வளர்வதும், காற்று வீசுவதும் நாம் சுவாசிப்பதும் எல்லாம் கடவுளால் தான். இதில் சந்தேகம் இல்லை ஆனால் இந்த உறவு பறவைக்கும், வானத்திற்கும் இருப்பது போல தண்ணீருக்கும், மீனுக்கும் இருப்பது போல நமக்கும் அவருக்கும் இருக்கிறது இங்கு கேட்கப்படும் கேள்வியின் பொருள் அதுவல்ல. கடவுள் எப்போதும் என்னோடு இருக்கிறார் என்பதற்கு என் உயிர்வாழ்க்கை உதாரணம் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் நான் எப்போது கடவுளோடு இருக்கிறேன் என்பது தான் என் கேள்வியின் சாராம்சம். 

என் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை நான் பரிசோதனை செய்து பார்க்கிறேன். பல நேரங்களில் நான் உண்மையாகவே கடவுளிடத்தில் இல்லை. அவரிடமிருந்து வெகுதொலைவில் இருக்கிறேன். பணத்தின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறேன் உடம்பின் மேல் ஆசைப்பட்டு மோகம் என்ற பிணத்தின் பின்னாலும் சென்றுகொண்டிருக்கிறேன். குழந்தை பாசம் நண்பர்கள் நேசம், பதவி, வெறி, புகழ் மீது பேராசை இப்படி ஒவ்வொன்றின் பின்னாலும் வருடத்தின் முன்னூறு நாட்களும் சென்றுகொண்டே இருக்கிறேன். மீதமுள்ள அறுபது நாட்களில் ஒரு சில மணிநேரம் கடவுளை பற்றி நினைத்து பார்க்கிறேனே தவிர மற்ற பொழுதில் உறக்கத்தோடும் போதையோடும் கலந்து கிடந்து விடுகிறேன். 

செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத மாடுகளை போல நான் வாழ்வது சரியா? நான் வாழ்கிற வாழ்க்கையை தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர் மனம் வாட பல செயல்கள் செய்து யமதர்மன் வருகின்ற காலத்தில் செத்துப்போகும் சாதாரண வாழ்க்கையை நான் மட்டுமா வாழ்கிறேன். என் வீட்டு நாயும் என் தோட்டத்து பன்றியும் இப்படித்தான் வாழ்கிறது. பிறகு நான் மனிதன்! உயர்ந்தவன், விண்ணை அளப்பவன், கடலை சாடுபவன் என்று ஜம்பம் பேசுவது எதற்கு? 

அவனவன் வேலையை அவனவன் பார்க்க வேண்டுமென்று கடவுள் சொல்கிறான். படைப்பதும், படைத்ததை காப்பதும், காத்ததை அழிப்பதும், கடவுளின் வேலை அதை அவர் செவ்வனே செய்கிறார். மனிதனாகிய நமக்கு என்ன வேலை? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இன்பத்தின் கடைசி சொட்டு இருக்கும் வரை துளித்துளியாக அனுபவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு கடவுள் வணக்கம், நன்றி செலுத்துதல் இதெல்லாம் என்ன பத்தாம் பசலித்தனம் என்று நமக்கு பல நல்லவர்கள் புத்திமதி சொல்கிறார்கள் மிருகங்களை போல் வாழ்வது தான் சரி என்று. 

கடவுளும் நீயும் நெருங்கி இருக்கும் நேரம் அவனை நீ மனதிற்குள் வணங்கும் நேரம், தியானிக்கும் நேரம், பிரார்த்தனை செய்யும் நேரம், அந்த நேரம் மட்டிலுமே நீ பாவம் செய்யாதவனாக சுத்தமான ஆத்மாவாக இருக்கிறாய் என்று சில பெரியவர்கள் கூறுகிறார்கள். பிரார்த்தனை என்பது என்ன? என் குறைகளை, என் அபிலாஷைகளை கடவுளிடம் முறையிடுவது தானே? எனக்குள் இருக்கும் எண்ணம் இதுவென்று என்னை படைத்தவனுக்கு தெரியாதா? அதை நான் அவனிடம் முறையிடத்தான் வேண்டுமா? நான் சொல்லி தெரிந்துகொள்ளும் அளவிற்கு அவன் அப்பாவியா? என்று பகுத்தறிவு என்ற பாதி சைத்தான் பறையறைகிறது. 

நான் கோவிலுக்கு போகிறேன். மண்டபத்தில் உட்காருகிறேன். அங்கே இரண்டு பெரியவர்கள் பேசுகிறார்கள். காதுகொடுத்து கேட்கிறேன். நீ எந்த மதத்தை சேர்ந்தவனாகவும் இரு. கோவிலின் சிலுவை முன்னே கும்பிடும் இயேசு மதத்தானாக இரு. திக்கினை வணங்கும் துலுக்கராக இரு. தீயினை வணங்கும் பார்ப்பணனாக இரு. எவனாக இருந்தாலும் கைகளை உயர்த்தியோ, மலர்த்தியோ, கூப்பியோ தான் கடவுளை வணங்குவாய். உன் கைகளில் இருக்கின்ற ஐந்து விரல்களும், ஐந்து கட்டளையை உனக்கு காட்டுகிறது. அதை புரிந்து கொள். பிரார்த்தனை என்றால் என்ன? அதன் சக்தி என்றால் என்ன? பிரார்த்தனை ஏன் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பது உனக்கு தானாக விளங்கும். 

முதலில் இருப்பது கட்டைவிரல். அது உன்னிடம் மிக நெருக்கமாக இருக்கும் விரல். இந்த விரல், உன்னை பெற்றவர்களை, உனக்கு பிறந்தவர்களை, கட்டியவளை ஒட்டிபிறந்த உடன்பிறப்புகளை, நண்பர்களை, நல்லவர்களை அருகில் மிக அருகில் உள்ள சொந்தங்களை காட்டும். இந்த கட்டை விரலை பார்க்கும் போது இவர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்.

அடுத்ததாக இருப்பது சுட்டும் விரல். என்ற ஆள்காட்டி விரல். சுட்டும் விரல் வழிகாட்டுவது போல் திக்கு தெரியாமல் தவித்து கொண்டிருக்கும் பலருக்கு நல்வழிகாட்டுகிற ஆசான்கள் நோயை சாகடித்து ஆரோக்கியத்தை தரும் மருத்துவர்கள். நீயும், நானும் சுகமாக வாழ அறிவை பயன்படுத்தி, நவீன கண்டுபிடிப்புகளை தரும் விஞ்ஞானிகள், அறிஞர்கள் இவர்களுக்காக இவர்களின் நலத்திற்காக, இவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்காக பிரார்த்தனை  செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும். 

அடுத்ததாக நடுவிரல். இது எல்லா விரல்களை விட உயர்ந்தது. அதனால் நாட்டு தலைவர்கள், இராணுவ வீரர்கள், நிறுவன அதிபர்கள், ஊர் பெரிய மனிதர்கள், நாட்டுக்கு வழிகாட்டும் தியாகிகள், இவர்களை குறிப்பதாகும். இந்த விரலை பார்க்கும் போது இப்படிப்பட்ட மகாபாக்கியசாலிகள் எப்போதும் நல்லவர்களாகவும், நாணயம்மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை  உதிக்க வேண்டும். 

தங்கத்தில் மோதிரம் செய்து அணிந்தாலும் கூட, மோதிர விரல் என்பது பலகீனமானது. விரல்களுக்கு அபாயம் வந்தால் அதில் உடனடியாக மாற்றி கொள்வது மோதிர விரல்தான். இந்த விரல் எப்போதுமே அபாயத்தை நோக்கிய வண்ணம் இருக்கிறது என்பதை பியானோ வாசிப்பவர்களும், தட்டச்சு செய்பவர்களும் நன்கு அறிவார்கள். இப்படிப்பட்ட மோதிர விரல் நிலைமையில் இருப்பவர்கள் யார்? கண்ணை மூடிக்கொண்டு யார் வேண்டுமானலும் சொல்லலாம். அப்படிப்பட்ட அப்பாவி ஜீவன்கள் சாதாரண பொது ஜனமென்று. இவர்களுக்கு தனக்கு வந்த துயரத்திற்காக முனங்ககூட தெரியாது. யாரோ ஒருவன் தான் பார்த்து குரல்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பலகீனமான மக்களை மோதிர விரலை பார்த்தவுடன் நினைவுபடுத்தி அவர்களுக்காகவும் பிரார்த்தனை  செய்ய வேண்டும். 

இப்போது கடைசியாக இருப்பது சுண்டுவிரல். இந்த சுண்டுவிரல், மற்ற விரல்களை விட சின்ன விரல் இதை பார்த்தவுடன் கடவுளின் சக்திக்கு முன்னால் நான் எவ்வளவு சிறியவன் என்ற அடக்க உணர்வு வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே அனைவருக்கும் உனது அருளை கொடுத்துவிட்டு, இறுதியாக சிறிதாவது என்னை கடைக்கண் வைத்துப்பார் என்று வேண்ட வேண்டும். தனது துயரத்தை தள்ளி வைத்து விட்டு மற்றவனின் துயரத்தை முன்னுக்கு கொண்டுவந்து அதை தீர்த்து வைப்பாய் என்று யார் கடவுளிடம் தன்னலம் மறந்து பிரார்த்தனை செய்கிறானோ அவனே கடவுளுக்கு மிக அருகில் வருவான். கடவுளோடு எப்போதும் உறவில் இருப்பான். கடவுளுக்கும் அவனுக்கும் பிரிவு என்பதே கிடையாது. 

ஒரு கைப்பிடி அளவு அரிசி கிடைத்தால் அதை சமைத்து விருந்தினருக்கு பரிமாறிய பிறகே தான் அருந்துகிற உயர்ந்த பிறப்பாளர்கள் பிறந்த இந்த பூமியில் பானையில் அரிசி இல்லை என்றாலும், பூனைக்குட்டிக்கு கால்பிடி பால்கிடைக்காதா என்று நீ உள்ளன்போடு தேடுகிறாயோ அன்றே நீ கடவுளை நோக்கி மிக நெருக்கமாக சென்றுவிட்டாய் என்பது அர்த்தமாகும். கடவுளை, கடவுளை தொட, கடவுளை நம்மை வாரி அணைக்க முதலில் மறக்க வேண்டியது சுயநலம். வளர்க்க வேண்டியது பரோபகாரம். எனவே மண்ணை தொட்டு வணங்கினால், கிருஷ்ணனை தொட்டு வணங்குவதற்கு சமம். அதற்கு பிரார்த்தனை  செய்யுங்கள் கடவுள் வருவார்.Contact Form

Name

Email *

Message *