Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிணத்தோடு வாழ்வாளா மனைவி...?


காலையில் நறுபுணலில் நீராடி 
வாசனை தைலங்கள் பூசி 
வண்ண வண்ண ஆடைகளை அணிந்து 
அருஞ்சுவை பதார்த்தம் உண்டு 
செல்வம் தன்னை சேர்க்க ஓடுகிறாய் 

சந்தனமேனி தன்னை துரும்புகூட தீண்டாமல் 
வந்தனை செய்கின்றாய் 
உடம்பு கேட்கும் சுகத்திற்காக 
நம்பிய மனிதரையும் நல்ல உயிரையும் 
செந்தணலில் கூட தள்ளுகின்றாய் 

பாட்டும் கூத்தும் பாவையர் சுகமும் 
ஊட்டும் மதுவும் ஊனின் சுவையும் 
தேட்டுப் பொருளும் தெவிட்டா பதவியும் 
காட்டுக்கு போகும் உடம்புக்காக தேடி வைக்கிறாய் 

ஒன்பது ஓட்டைக்குள் ஓடுகின்ற உயிர்காற்று 
கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் கரைந்துவிட்டால் 
பொன்னான மேனியது கட்டிலில் வீழ்ந்துவிட்டால் 
வண்ண உடம்புக்கு வாய்த்த பெயரென்ன?


வனத்தில் உயர்ந்த மரமொன்று சாய்ந்துவிட்டால் 
பட்டமரம் என்ற பெயர்தாங்கி விறகாகும். 
ஏர் உழுது உழைக்கின்ற எருது ஒன்று 
உயிர்விட்டு மாய்ந்து விட்டால் தோல்கூட மேளமாகும் 
தெருநாயும் நோய்பரப்பும் சிறு எலியும் செத்தால் 
செத்த நாய் செத்த எலி என்றே அழைக்கப்படும் 
அமைச்சனாய் நீ இருந்தாலும் உயிர் போன பின்னாடி 
செத்த மனிதன் என்று கூட பெயர் தாங்க மாட்டாய் 
பிணம் என்றே அழைக்கப்படுவாய் 

தேடி தேடி சேர்த்த பணம் 
ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் உன் மக்கள் 
காரியம் எப்போது செய்யலாம் என்று 
காத்திருப்பர் பச்சை ஓலையுடன் 
ஓடி ஓடி உறவாடிய சொந்தபந்தம் அனைவரும் 
சுடலையில் கொண்டுபோய் உன்னை சுட்டுவிட்டு 
அடுத்த பணிக்கு செல்ல ஆயத்தமாவர் 

கண்ணான கணவனென்று காதலித்து மகிழ்ந்தவள் 
வாய்பிளந்து கிடக்கும் உன் பிணத்தோடு 
ஓர் இரவு தனியாக இருக்க துணிவாளா?
கண்ணே மகனே என்று வாரி அணைத்த அன்னைக் கூட 
கட்டையில் போகும் போது துணைக்கு வருவாளா?

யாருமே வராத பயணத்தில் 
துணையாக வருவதற்கு ஒருவனுண்டு 
எப்போதும் பிரியாத உறவாக 
எந்நாளும் எல்லோருக்கும் அவனே உண்டு.
அவனே ரங்கன் திருவரங்கத்தில் உறங்குகிறான். 
மாதவா கேசவா மதுசூதனா என்று 
ஆனந்த ரங்கனை அன்போடு கூப்பிடு 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் 
அவனை மட்டுமே சலியாமல் கூப்பிடு 
மரணத்தின் போதும் மரணத்தை தாண்டியும் 
துணைக்கு வருவான் ஸ்ரீ ரங்க நாதன்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *