Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணம் உடலுக்கா? உயிருக்கா?


சித்தர் ரகசியம் - 7

   பிறப்பை கொண்டாடுகிறோம். வயதும், அனுபவமும் வளரும் போது அதை பிறந்த தினமென்று உறவினரும், நண்பர்களும் புடைசூழ கொண்டாடி மகிழ்கிறோம். ஊரிலுள்ள மனிதர்கள் அனைவரும் இறந்து போனாலும் நமக்கு மட்டும் சாவு வரவே வராது என்று உறுதியாக நம்புகிறோம். காலையில் விழித்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை நான் இன்றும் வாழ்வேன், நாளையும் வாழ்ந்திருப்பேன் என்ற நம்பிக்கையோடு இருப்பவனால் மட்டுமே வாழ்நாளை கொண்டாட முடியும். மரணம் என்பது இன்று வருமோ? நாளை வருமோ? மற்றென்று வருமோ என்று ஒவ்வொரு நாளையும் சாவை வரவேற்கும் நாளாக நினைப்பவன் மழலை மொழியின் இனிமையை ரசிக்க முடியாது. அழகிய மனையாளின் இன்ப மேனியை சுவைக்க முடியாது. தாயின் அரவணைப்பை, தகப்பனின் பாதுகாப்பை சுகிக்க முடியாது. நடைபிணம் போல வாழவேண்டியது தான் என்று பலரும் உபதேசிக்கிறார்கள்.

நமக்கும் கூட இந்த சிந்தனை சரியானதாக தோன்றுகிறது. என்றோ ஒருநாள் சாகப்போகிறோம் என்பதற்காக இன்றே சுடுகாட்டிற்கு சென்று படுத்துக்கொள்ள முடியுமா? இது வாழும் முறையாகுமா? என்று யோசிக்கிறோம். இது சரியா? அல்லது மரணத்தை எதிர்பார்ப்பது சரியா என்று நமக்கு தெரியாது. ஆனாலும் நாம் கெளதம புத்தர் சொன்னது போல நதி நீர் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக உருவாகி கொண்டே இருக்கிறது என்பது போல, ஒவ்வொரு வினாடியும் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் விரும்புகிறோமோ, இல்லையோ ஒருநாள் மரண தேவன் வந்து நமது வீட்டு கதவை தட்டத்தான் போகிறான். அன்று நாம் என்ன சமாதானம் சொன்னாலும் அதை காதில் வாங்காமல் நம்மை இழுத்து கொண்டு போகத்தான் போகிறான்.

சீறிவரும் பாம்பை கண்டு அஞ்சுகிறோம். சிலிர்த்து வரும் சிங்கத்தை கண்டு நடுங்குகிறோம். பிரம்மாண்டமான யானையை கண்டு ஓட்டமெடுக்கிறோம். ஆர்ப்பரிக்கும் கடல், அடிவயிற்றை கலக்கும் இடி மின்னல், நெருப்பை கக்கும் எரிமலைகள் எல்லாமே நமக்கு அச்சத்தை தருகிறது. இந்த அச்சம் எதற்காக? நமக்கு வருகிறது. ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் நின்று யோசித்து பார்த்தால் உண்மை தெரியும். நாம் எவைகளை பார்த்து பயப்படுகிறோமோ அவைகளால் நமக்கு மரணம் வரும். நமது அச்சம் யானையின் மீதல்ல, யானையால் வரும் மரணத்தின் மீது. இந்த மரணபயம் தோட்டியில் இருந்து தொண்டைமான் வரையில் பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் உண்டு.

மரணத்தை கண்டு அஞ்சாத மனிதனே இல்லை. சாகாமல் வாழவேண்டுமென்று ஆசைப்படுகிற மனிதன் அதற்கான வழிமுறைகளை ஆவலோடு பசியாக அழும் குழந்தை ஒன்று தாயின் முலைகாம்பை எப்படி வேகத்தோடு பற்றிக்கொள்ளுமோ அப்படி செய்ய துவங்குகிறான். மரணம் என்று வந்துவிட்டால் பேரறிஞன் கூட பச்சைக்குழந்தையாகி விடுகிறான். அறியாமை இருளில் மூழ்கி விடுகிறான். மரணத்தை சுவைபார்க்க பிறக்காமலும் இருக்கலாம். பிறந்த பிறகு இறக்காமலும் இருக்கலாம் என்ற சூட்சமத்தை தெரிந்தவன் எதற்கும் அஞ்சுவதில்லை. உடல் அழிந்து போனாலும் அதற்காக கலங்குவதில்லை இப்படி கலங்காமல் இருக்கும் யோகிகள் சிலபேரே உண்டு. மற்ற அனைவருமே கலக்கத்தின் கலங்கரை விளக்கங்களே. மரணம் இதற்கு மனிதனுக்கு இத்தனை பயத்தை தருகிறது? காரணம் மரணம் என்பது எப்படி இருக்குமென்று யாருக்கும் தெரியாது. மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்றும் எவருக்கும் தெரியாது.

மரணம் என்பது ஒரு தனிமனித அனுபவம். நமது மரணத்தை நாம் மட்டுமே உணர முடியும். மற்றவர்களுக்கு அதை உணர்த்த முடியாது. மற்றவர்களும் சாகாமல் உணர முடியாது. தற்கால விஞ்ஞானம் மரணத்தை பற்றி சிறிது விளக்கம் தர முற்படுகிறது ஆனால் அது கூட முழுமையானது அல்ல. உண்மையானது என்றும், நிரூபிக்க பட்டதும் அல்ல.மரணத்தின் போது உடம்பில் திடிரென்று ஏற்படும் வேதியல், இயற்பியல் மாற்றங்கள் வலியையும் அளவிட முடியாத துன்ப உணர்ச்சியையும் தூண்டி விடுகிறது. இதுநாள் வரை அனுபவித்து கொண்டிருந்த இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக பிரிய போகிறோமே என்ற துயரம் மரணப்படுக்கையில் இருப்பவனுக்கு ஏற்படுகிறது. இதனால் தான் அவன் அஞ்சுகிறான். மரணத்தைக் கண்டு ஓடுகிறான் என்கிறது விஞ்ஞான தத்துவம்.

ஆனால் மருத்துவம் இதை ஏற்றுக்கொள்வதில்லை. மரணம் மனிதனுக்கு பெரிய உடல் வேதனையை தருவதில்லை. சொத்தைப்பல் ஒன்றை பிடுங்கும் போது ஏற்படுகிற வலி கூட சாகும் போது ஏற்படாது. காரணம் மரணம் நெருங்க நெருங்க கரியமில வாயு நரம்பு மண்டலத்தை ஆக்கிரமித்து கொள்கிறது. மூளைக்கு செல்கிற நரம்புகளில் மறுப்பு தன்மை ஏற்படுகிறது. இதனால் மனிதனுக்கு மயக்க உணர்வே மிகுந்து நிற்கிறது. தன்னை சுற்றி நடப்பது என்ன தன்னை தாங்கி பிடித்திருப்பவன் யார்? தனக்கு என்ன நேர்கிறது? என்பதை அறியாமல் மயங்கிய நிலையிலேயே மரணம் வருகிறது. மரணம் என்பது வலி மிகுந்தது என்பது வெறும் கற்பனையே அச்சத்தின் வெளிப்பாடே என்று மருத்துவ விஞ்ஞானம் விளக்கம் தருகிறது.

மருத்துவத்தில் இரண்டுவகை உண்டு ஒன்று உடலை கூறுபோட்டு பார்ப்பது மற்றொன்று மனதை கிழித்து பார்ப்பது, மனதை பார்க்கும் மருத்துவத்தை உளவியல் என்று கூறுகிறோம். அந்த உளவியல் மரணத்திற்கு தரும் விளக்கம் சற்று விந்தையானது. சாகும் போது உயிரை பறித்து செல்ல எருமை மாட்டின் மீது எமன் வருவான். எமலோகத்தில் நீ செய்த தப்புகள் எல்லாம் குறித்து வைக்கப்பட்டு, உனக்கு தண்டனை கிடைக்கும். நெருப்பில் போடுவார்கள், எண்ணெய் சட்டியில் போட்டு வதக்கி எடுப்பார்கள், ஆணி படுக்கையில் படுக்க வைத்து சம்மட்டியால் அடிப்பார்கள். மிளகாய் வற்றலை ஆசன வாயில் பூசுவார்கள் என்பன போன்ற கட்டுக்கதைகள் மனிதன் மனதில் குழந்தை பருவத்திலேயே திணிக்கப்பட்டுவிட்டது. இந்த கட்டுகதைகளே மரணத்திற்கு ஏற்படும் நரக வேதனையே மனிதனை ஆட்டம் காண வைக்கிறது. இதனால் தான் அவன் சாவதற்கு அஞ்சுகிறான் என்று விளக்கம் தருகிறது.

மரண வேதனை என்பது உண்மையா? மரணத்திற்கு பிறகும் தண்டனை என்பது உண்மையா? அல்லது இவைகள் அனைத்துமே கற்பனையா என்று நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றும் மட்டும் நமக்கு தெரியும். மரணத்தை கண்டு மனிதன் அஞ்சுகிறான். என்று என்று வருவானோ எமன் என்று அஞ்சாதவன் ஒருவனும் இல்லை. உலகத்தையே புரட்டி போட்ட மாவீரர்கள் கூட மரணத்தின் முன்னால் மல்லாத்தி கிடத்தப்பட்ட குழந்தையை போல ஒன்றும் செய்ய முடியாமல், கைகால்கள் கட்டப்படாமல் இருந்தாலும், செயல்பட முடியாமல் ஒரு பொம்மையை போல ஆகி விடுகிறார்கள். இதனால் தான் என்றோ ஒருநாள் வருகின்ற மரணத்தை எண்ணி இன்றே பயப்பட துவங்கி விடுகிறான். ஒன்றை யோசிக்க வேண்டும் வானத்தை அளக்கும் விஞ்ஞானத்தால், வரும் முன்பே நோய்களை தடுக்கும் மருத்துவத்தால், சுகமாக வாழச்சொல்லி தரும் பொருளாதாரத்தால் மரணம் இல்லாமல் மனிதன் வாழ்வதற்கு வழிவகை செய்ய முடியுமா? மரணத்தை தடுக்க முடியுமா?

மரணம் மரணம் என்று சொல்கிறோமே இந்த மரணம் வருவது யாருக்கு? மனித உடலுக்கா? உயிருக்கா? உடலுக்கு மரணம் என்றால் பஞ்ச பூதங்களால் உருவான எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உருவான தோற்றத்திலேயே இருக்காது. அழிந்து விடும் அல்லது உருவம் மாறிவிடும் எனவே உடம்பிற்கு வருகின்ற மாற்றத்தை மரணம் என்று சொன்னாலும் அதை தவிர்க்க முடியாது. வந்தே தீரும் ஆயிரம் ஆண்டுகள் உடம்பை பக்குவப்படுத்தி வைத்தாலும் கூட ஒரு நாள் அது இற்று விழுந்தே தீரும். இப்படி செத்தே ஆகவேண்டிய உடம்பிற்காக உடம்பின் மரணத்திற்காக அச்சப்படுவதும், அழுவதும், விசனப்படுவதும், வெம்மி வெடிப்பதும் முட்டாள் தனம் அல்லாவா?

உடல் அழிந்து போகும். உயிர் அழியாது என்றால் வாள் கொண்டு வெட்டினாலும், தீயினால் சுட்டாலும், தண்ணீரால் மூழ்கடித்தாலும் ஆத்மா அழியப்போவதில்லை என்றால் எதற்காக நான் அச்சப்பட வேண்டும்? ஒரு மரத்தில் இருக்கும் பறவை இன்னொரு மரத்திற்கு வருவது போல இந்த உடம்பை விட்டு விட்டு வேறொரு உடம்பிற்கு போகப்போகிறேன். அதற்காக நான் ஏன் அழவேண்டும், நாத்திகம் பேசினாலும், நாயகனை போற்றினாலும் என் உயிருக்கு அழிவு இல்லை. உடம்போடு உயிரும் அழிந்து போகும் என்பது மூடத்தனமான விஞ்ஞானம். அழியாத அமிர்தத்தின் குழந்தை என்று வேதம் என்னை அழைக்கும் போது எனக்கு மரணமில்லை என்பது என் ஆன்மாவிற்கு முடிவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என் அப்பனும், பாட்டனும் நடந்து வந்த பாதையின் படி மரணம் என்பது முடிவல்ல ஒரு முடிவின் துவக்கம் என்பது தெளிவாகிறது.

உடல் அழிவது உறுதி. உயிர் அழியாததும் உறுதி இது மட்டும் போதுமா? நமக்கு எத்தனை முறை நோய்களாலும், மூப்பு பிணிகளாலும் பீடிக்கப்படும் சரீரத்தை எடுத்துக்கொண்டு அல்லலுறுவது. நான் என் வாழ்க்கை பயணத்தின் இலக்கு என்பது வேண்டாமா? நான் எங்கே இருந்து வந்தேன்? எங்கே போகப்போகிறேன்? எப்போது போவேன்? என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? பிறவாத நிலை, பேரின்ப நிலை ஆத்ம விடுதலை பகவான் ஐக்கியம் என்றெல்லாம் கூறுகிறார்களே அந்த முக்தியை நோக்கி வாழ்க்கையையும், மரணத்தையும் தாண்டி எப்போது நான் சென்றடைவேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சங்கிலித்தொடர் போல வருகின்ற கேள்விகள் பலவற்றிற்கு சித்தர்கள் தரும் விளக்கங்களை இனிதாக காண்போம்.


Contact Form

Name

Email *

Message *