பதினாறாவது மக்களவைத்தேர்தல் முழுமையாக முடிந்துவிட்டது. ஏறக்குறைய எண்பது கோடி வாக்காளர்கள், இருபத்தி ஒன்பது மாநிலம் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில் இருந்தும் வாக்களித்து முடித்து விட்டார்கள். வியப்பாக இருக்கிறது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில சச்சரவுகள் தவிர வேறு எந்த வன்முறையும் இல்லாத உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா ஜனநாயகப்பூர்வமாக நடந்திருக்கிறது.
லஞ்சம் வாங்குதல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல், கடமையை செய்வதற்கே காலம் கழித்தல், சுயநலம், தாதாக்களின் வெறியாட்டம், பண முதலைகளின் நாற்காலி வியாபாரம் என்று நிறைய குளறுபடிகள் இருந்தாலும் இந்திய ஜனநாயகம் என்பது உலகில் எவருக்கும் சளைத்தது அல்ல மாறாக வழிகாட்டக்கூடியது என்பதை மீண்டும் ஒருமுறை எமது மக்களும், எமது ஆட்சியாளர்களும் உலகத்தார் முகத்தில் அறைந்தார் போல சொல்லி இருக்கிறார்கள்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்று பாரதி கேட்பான். அந்த கேள்வி அடிமை இந்தியாவிற்கு மட்டுமல்ல சுதந்திர இந்தியாவில் இன்றும் கூட அர்த்தத்தோடு இருக்கின்ற கேள்விதான். முதல் பொது தேர்தலை சுகுமார்சென் என்ற தேர்தல் ஆணையர் நடத்துகிற போது சுமார் எண்பது லட்சம் வாக்களர்களுக்கு வாக்களிக்க உரிமையை மறுத்து தேர்தலை நடத்தினார் அதை கேள்விப்பட்டவுடன், அயல்நாட்டு ஊடகங்கள், குறிப்பாக ஐரோப்பிய ஊடகங்கள் இந்தியாவின் முதலும் கடைசியுமான தேர்தல் இதுதான். இனி அங்கே ஜனநாயகம் ஊஞ்சலாடாது, ஊசலாடும் என்று கருத்து சொல்லி சிரித்து மகிழ்ந்தன.
சர்வேதேச சமூகத்தின் குரூர எதிர்பார்ப்புகளை பாரத தேசம் என்றுமே நிறைவேற்றியது கிடையாது. அதற்கு மிக சரியான உதாரணம் தான் பதினாறு மக்களவை தேர்தல்களை சந்தித்து இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு நடத்துகிற வல்லமை எங்களுக்கு உண்டு என்று பறை சாற்றும் கம்பீரமாகும். நமக்கு எதிரி நாடுகளும் நம்மை எதிரிகளாக நினைத்து கொண்டிருக்கிற நாடுகளும் இந்தியாவின் ஆத்மா எப்போதுமே சிலிர்த்து கொண்டிருக்கும் சீறி கொண்டிருக்கும் என்ற எண்ணத்தில் சற்று நடுக்கத்தோடு இருப்பதற்கு ஒரே காரணம் எமது மக்களின் ஜனநாயகத்தின் மீதான பாசம்.
தேர்தல் முடிவுகள் வரப்போகிறது. மதவாதி என்று கருதப்படுகிற நரேந்திரமோடியா? முஸ்லிம்லீக் போன்ற மதவாத கட்சிகளோடு உறவு வைத்து கொண்டு மதசார்பற்றவர்கள் என்று பவனி வருகிற காங்கிரஸ்காரர்களா? யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். ஒருவேளை இவர்கள் இருவருமே இல்லாமல் பொதுவுடைமைவாதிகள் கனவு காணுகிற மூன்றாவது அணிக்கு கூட ஆட்சி பொறுப்புக்கு வரும் வாய்ப்பு கிடைக்கலாம் யார் வந்தாலும் அவர்கள் இந்தியாவை திறம்பட ஆள வேண்டும் என்பது நமது ஆசை. அதற்காக அவர்களை கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது பொறுப்பு.
இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். நமது கடந்த கால அரசியல் நிகழ்வுகள் சில கசப்பான தழும்புகளை நமக்கு தந்திருப்பதனால் அதை சிந்தித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். ஒருவேளை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று நடைமுறைக்கு ஒத்துவராத சித்தாந்தங்களை பேசியவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை கொடுக்கலாமே தவிர தேசத்தை உண்மையாக நேசிப்பவர்கள் நிச்சயம் மகிழ மாட்டார்கள். காங்கிரஸ் ஆண்டாலும், கம்யூனிஸ்ட் ஆண்டாலும் அல்லது எல்லோரும் அச்சப்படுகிற பாரதியஜனதா கட்சியே ஆண்டாலும் அவர்கள் முழுமையான சொந்த பலத்தோடு ஆட்சி நடத்த வேண்டும்.
கூட்டணி கட்சிகளோடு ஒப்பந்தம் போட்டு ஆட்சி நடத்தும் சூழல் ஏற்பட்டால் நான்கு குதிரைகள் ஒரு ரதத்தை நான்கு திசையில் இழுப்பது போல இருக்குமே தவிர சரியான இலக்கில் பயணம் செய்ய முடியாது. விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் ஆட்சி துவங்கி மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி வரையிலும் கூட்டணி மந்திரி சபையின் குளறுபடிகளை கனகச்சிதமாக பார்த்துவிட்டோம். கூக்குரலும், கூச்சலும் கேட்கின்ற அளவிற்கு வளர்ச்சியின் சிரிப்பொலி கேட்கவே இல்லை. கூட்டணி ஆட்சியால் வளர்ச்சியே இல்லையா? என்று சிலர் கேட்கலாம். வளர்ச்சி இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சி மாநில கட்சிகளின் மதமதப்பான தனி வளர்ச்சியாக இருந்ததே தவிர மக்கள் வளர்ச்சியாக இல்லை.
இப்படி நான் சொன்னவுடன் மாநில கட்சிகள் தேசத்தை ஆள கூடாதா? அவைகளுக்கு அந்த தகுதி இல்லையா? என்று நீங்கள் கேட்கத்தோன்றும். தேசிய கட்சிகளே பல நேரங்களில் மாநில பிரச்சனைகளில் பதுங்கி பம்மாத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் போது மாநில கட்சிகள் கதை இன்னும் சிக்கலாக இருக்கும். அவர்களால் தேசம் தழுவிய திட்டங்களை திறம்பட நிறைவேற்றுவதில் மாநில நலன்கள் பாதிக்கப்படுமானால் அதில் தயக்கம் காட்ட கூடும். அதனால் எப்போதுமே குறைந்தபட்சம் நாடு முழுவதும் உள்ள நூறு தொகுதிகளிலாவது வேட்பாளர்களை நிறுத்தும் தகுதி உள்ள கட்சிகளுக்கு மட்டுமே மத்திய அரசியலில் பங்கு கொடுத்தால் தொலைநோக்கு பார்வையில் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
ஆனால் இன்றைய யதார்த்த நிலை முழுமையான மெஜாரிட்டி என்பது யாருக்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இன்றைய சூழலுக்கும், வருங்கால தேச வளர்ச்சிக்கும் ஆதாரமாக கொண்டு சில சிந்தனைகளை நாம் உருவாக்கி பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு கிராமத்தின் நன்மைக்காக, ஒரு மனிதனை பலிகொடுத்தல் பாவமில்லை. என்று அரசியல் ஞானி சாணக்கியன் சொல்வான் அதாவது பொது நன்மையை முன்னிட்டு தன்னலத்தை கூட தியாகம் செய்ய வேண்டும் என்பதே சாணக்கியனின் தத்துவம். இதை இன்றைய அரசியல் கட்சிகள் மனதில் வைத்து நாட்டு நலனுக்காக சில சமரசங்களை செய்து கொள்ள தயாராக வரவேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல், பொருளாதார, வெளிவிவகார கொள்கைகளுக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் கிடையாது. ஒருகாலத்தின் இருவரும் சுதேசியம் பேசினார்கள் என்றாலும், இன்று அவர்கள் காந்தியின் கொள்கைகளை காற்றில் விட்டு விட்டு சர்வதேச பொருளாதார மையம் என்ற மைய புள்ளிக்கு வந்துவிட்டார்கள். இவர்களிடத்தில் தலைவர்களின் தனிப்பட்ட அறிவாற்றலில், செயல் திறமையில் வேற்றுமை இருக்கிறதே தவிர பெரியதாக வேறு எதையும் கூறி விட முடியாது.
எனவே இவர்கள் நாட்டு நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மாநில கட்சிகளின் தயவை நாடாமல் இருவரும் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி நடத்தினால் அது உலகத்திற்கே வழிகாட்ட கூடியதாக இருக்கும். இன்று நான் கூறுவது நகைக்க கூடியதாக விஷயமாக இருந்தாலும் ஜனநாயக தொட்டில்கள் என்று அழைக்கப்படுகிற பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு கட்சி ஆட்சி முறையே இருக்கிறது. அந்த முறைக்கு நாமும் முன்னேறி செல்ல இத்தகைய கூட்டணி முயற்சிகள் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.
நான் கூறுவது இப்போது நடக்குமென்று பச்சை குழந்தை கூட நம்பாது ஆனால் வருங்காலத்தில் இது சாத்தியமற்றது என்று நான் நினைக்கவில்லை பல கட்சிகளின் கலவையாக நடைபெறுகின்ற பாராளுமன்றங்கள் நாடக மேடைகளாகவே இருந்து வருவதை பார்க்கிறோம் அது மாறவேண்டுமானால் பாராளுமன்றம் உண்மையாகவே மக்களுக்காக இயங்க வேண்டுமானால் ஆட்சி நடத்தும் அதிகாரம் ஜனநாயக முறைப்படி கும்பல்களின் கைவசம் செல்லாமல் சிந்தனைவாதிகளிடமும் செயலாளர்களிடமும், வருவதற்கு கட்சிகளின் எண்ணிக்கையை குறைத்து ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும்.