Store
  Store
  Store
  Store
  Store
  Store

தங்கம் செய்யுமா சிவப்பு கற்றாழை ?


    சித்தர்கள் ரகசியம் என்ற தொடரை ஆரம்பித்தவுடன் சித்தர்களின் மேல் ஆர்வம் கொண்ட பலரும் என்னோடு தொடர்பு கொண்டார்கள். சித்தர்கள் கடைபிடித்த ரகசிய வழிமுறைகளை நீங்கள் ஒருபுறம் சொன்னாலும், இன்னொருபுறத்தில் அவர்கள் கையாண்ட, அவர்கள் பயன்படுத்திய, அவர்களால் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தபட்ட பல மூலிகைகளை அதன் ரகசிய அர்த்தங்களோடு தனி பதிவுகளாக எழுதலாமே என்று ஆலோசனை கூறினார்கள். மூலிகைகளை பற்றிய உண்மையான விழிப்புணர்வு மங்கி கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் அப்படி ஒரு தொடர் பதிவு அவசியம் என்று நானும் நினைத்தேன். அதனால் சிறியதாகவும், அதே நேரத்தில் வீரியம் உள்ளதாகவும் சில மூலிகை தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

சில வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து வந்த அன்பர், சிவப்பு கற்றாழையை பற்றி என்னிடம் கூறினார். அதற்கு முன்பே அதைப்பற்றி சிறு விபரங்களை நான் அறிந்து வைத்திருந்தாலும் அவர் சொன்ன தகவல் ஒன்று எனக்கு வியப்பாக இருந்தது. சிவப்பு கற்றாழையை முறைப்படி கற்பம் செய்து ஆறுமாத காலம் தொடர்ந்து உண்டு வந்தால் அதை உண்டவன் எதாவது ஒரு பொருளில் எச்சில் துப்பினால் கூட அது தங்கமாகி விடும் என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. ஒரு மனிதன் எச்சில் துப்பி அது தங்கமாக மாறுகிறது என்றால் நிமிட நேரத்தில் நடக்க கூடிய மாயஜால வித்தையாக இருக்குமே தவிர உண்மையாக இருக்காது. 

நாம் அடிக்கடி கண்களால் பார்க்க முடியாத மூலிகைகளின் பெயர்களை சொல்லி அவற்றின் அதிதீவிரமான பயன்களை கற்பனை கலந்து சொல்வது சிலரின் வாடிக்கை. இதை நான் பல நாட்டு வைத்தியர்களிடம் பார்த்திருக்கிறேன். அவர்கள் வார்த்தைகளில் கொட்டுகிற ஜாலத்தை, மருந்தின் செயல்பாட்டில் காணமுடியாமல் பல நேரம் ஏமாந்தும் இருக்கிறேன். அப்படித்தான் இதுவும் ஒரு கட்டுக்கதையாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால் சித்தர்களோடு நேரடி தொடர்பு வைத்திருந்த சிலர் சிவப்பு கற்றாழை கல்லைக்கூட தங்கமாக்கும் என்று கூறினார்கள் அவர்களிடம் நான் அதை நேரடியாக காட்ட முடியுமா? என்று கேட்டேன். பல காரணங்களை சொல்லி அவர்கள் மறுத்து விட்டார்கள் ஆனால் மழுப்பி நழுவி விட்டார்கள் என்று என்னால் கூற முடியாது. 

இந்த நிலையில் தான் மூலிகையோடு நல்ல தொடர்புடைய ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் சிவப்பு கற்றாழையின் பயன்பாடுகளை மிக அழகாக சொன்னார் சிவப்பு கற்றாழையை பயன்படுத்தினால் தங்கமாக எல்லாம் ஆகி விடும் என்பது சுத்தப்பொய் அது அரிதான பொருளாக அவ்வளவு சீக்கிரம் கிடைக்க முடியாத பொருளாக இருப்பதனால் அந்த மாதிரியான கதை கட்டிவிடப்பட்டிருக்கிறது. உண்மையில் சிவப்பு கற்றாழையை முறைப்படி கற்பம் செய்து சாப்பிட்டால் முதுமையான தோற்றம் படிப்படியாக மறையும். வெளுவெளுப்பான முடிகள் கூட கருப்பாக உடலில் நல்ல பலமும் ஆண்மை விருத்தியும் ஏற்படும். உடம்பு தங்கம் போல ஜொலிக்கும் என்று கூறினார். 

சிவப்பு கற்றாழையின் மடல்கள் பசுமை கலந்த செம்மை நிறத்தில் சுமார் பதினெட்டு அங்குலம் நீளத்தில் நல்ல சதைப்பற்றோடு இருக்கும். மடல்களில் மிகச்சிறிய வெள்ளை புள்ளிகள் தென்படும். ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் இருக்கும். கத்தியால் வெட்டினாலோ, ஒடித்தாலோ அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து அதிலிருந்து அசல் இரத்தம் போன்ற திரவம் வடியும். அதன் சோற்றுப்பகுதி சாதாரண கற்றாழை சோற்றை போல கசப்பாக இருக்காது. நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல இருக்கும். அதிகப்படியான செம்மண் எங்கே இருக்கிறதோ அங்கே தான் இந்த கற்றாழை வளரும். இதில் செம்பு சத்தும், தங்க சத்தும் அதிகம் என்று கூடுதலான தகவல்களையும் அவர் கூறினார். எனக்கு அப்போது தான் நினைப்பு வந்தது. களக்காடு மலைப்பகுதிகளில் இத்தகைய கற்றாழை ஒரு காலத்தில் நிறைய இருந்தது இப்போது அது அறுகிவிட்டது என்பது. 

இன்றும் சில நம்பிக்கை மிகுந்த மூலிகை தேடுபவர்களிடம் கூறினால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்து சிவப்பு கற்றாழை கொண்டு தருகிறார்கள். ஆனால் அது மிகவும் குறைவான அளவில் மட்டுமே கிடைக்கிறது. சிறு துண்டு கூட நிறைய விலை கூறுகிறார்கள் அதை வாங்கி நாம் பயன்படுத்துவது நடக்க கூடியதாக இருக்குமோ இல்லையோ கற்றாழை என்பது பச்சை நிறத்தில் மட்டும் இல்லை சிவப்பு நிறத்திலும் இருக்கிறது என்ற தகவலை மட்டுமாவது தெரிந்து கொள்ளலாம்.


 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434Contact Form

Name

Email *

Message *