Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழன் மயக்கத்தில் இருக்கிறான்


கேள்வி 2


    ன்மீக வாழ்விலும், தர்மத்தின் பாதையிலும் சிறந்து விளங்குபவர் யாராக இருந்தாலும் அவரை ஆரியன் என்ற வார்த்தையில் அழைக்கலாம் என்று குருஜி கூறியவுடன் திராவிடன் என்றால் யார்? திராவிடன் என்ற வார்த்தையின் பொருள் என்ன? என்று ஒருவர் கேள்வி கேட்டதை சென்ற பதிவில் கண்டோம் அதற்கு குருஜியின் பதிலிலிருந்து இந்த பதிவை தொடர்வோம்.

வேதங்களும் அழகானது, அவற்றின் மொழிநடையும் அழகானது அவைகள் கூறும் நயமான கருத்துக்களும், உதாரண யுத்திகளும் அழகானவைகள். வேதங்களில் அழகும், ஆன்மீகத்தை பழகும் விதமும் மட்டும் கூறப்படவில்லை அதில் பல சரித்திர சம்பவங்களும், சம்பவங்களுக்கான விளக்கங்களும் பல புதிய தகவல்களும் கூறப்பட்டு இருக்கின்றன. இன்று இமயம் முதல் குமரி வரை என்று நாம் கூறுகிறோமே அந்த வார்த்தை வேதங்களில் இமயம் முதல் சேது பந்தம் வரையில் என்று கூறப்படுகிறது. அதாவது வேத காலத்தில் இந்திய பரப்பளவானது இன்று ராமர் பாலம் என்று கடலுக்குள் மூழ்கி கிடக்கும் சர்ச்சைக்குரிய ஒரு பாலம் இருக்கிறதே அது வரையிலும் நிலம் இருந்திருக்கிறது. அதனால் தான் இமயம் முதல் சேது பந்தம் வரையில் என்ற வார்த்தை பிரயோகம் வேதத்தில் காணப்படுகிறது.

அப்படி சேது வரையிலும், வங்காளம் முதல் குஜராத் வரையிலான பகுதிகளையும் விந்திய மலைத்தொடரை அடிப்படையாக வைத்து கெளடதேசம் என்றும், அவற்றிற்கு அப்பாற்பட்ட பகுதியை திராவிட தேசம் என்றும் இரண்டு பிரிவாக அழைத்தார்கள். விந்தியத்தில் இருந்து இமயம் வரையிலான நிலப்பரப்பினை ஐந்து பிரிவுகளாக பிரித்து பஞ்ச கெளட என்றும் அழைத்து வந்தார்கள். அதை போல விந்தியம் முதல் தெற்கு கடற்கரை வரையில் உள்ள பகுதிகளை ஐந்து பிரிவுகளாக பிரித்து பஞ்ச திராவிட அல்லது தஷ்ணாத்யம் என்றும் அழைத்தார்கள். இதை வைத்து பார்க்கும் போது விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதிகளை திராவிடம் என்ற பொது பெயரில் அழைத்தது தெரிகிறது.

ஆந்திராவில் ரெட்டியார் இருக்கிறார்கள், நாயுடுகள் இருக்கிறார்கள், பிராமணர்களும், ஹரிஜன மக்களும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களை மொத்தமாக அழைக்கும் போது ஆந்திரர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ அழைக்கிறோம். அதைப் போலவே கேரளாவில் இருப்பவர்களை ஈழவர், நம்பூதிரி, நாயர் என்று பிரித்து பிரித்து அழைக்காமல் மலையாளி என்ற ஒரே பதத்தில் அழைக்கிறோம். அதே போலதான் திராவிடம் என்ற வார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பெயராகவும் நிலம் சார்ந்த மக்களின் பெயராகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். எனவே திராவிடன் என்பது நிலத்தின் பெயரே தவிர இனத்தின் பெயரே இல்லை.

வேறொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிடம் என்பதை தமிழகத்தில் மட்டும் தான் இனம் சார்ந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிற பகுதிகளில் அப்படி யாரும் பார்க்க வில்லை. அவரவர் அவரவரின் மாநிலம் மற்றும் மொழி அடையாளத்தையே தங்களது பண்பாட்டின் அடையாளமாக பெருமையோடு காட்டுகிறார்கள். ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பாகுபாடும் பகுத்தறிவு வாதங்களும் சென்னையை தாண்டி பெங்களூரை கூட தொட்டது இல்லை பக்கத்தில் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு கூட அடியெடுத்து வைத்ததில்லை. நாம் மட்டுமே இன்னும் கால்டுவெல்லின் கற்பனை குதிரையில் பயணப்பட்டு கொண்டே இருக்கிறோம்.

காடுகளில் வாழுகிற மிருகங்கள் சண்டைபோட்டு ஒன்றை ஒன்று தாக்கி அழித்து கொள்ள முனைவது போல, மனிதனும் சண்டைபோடும் இயல்பு பெற்றவனே ஆவான். ஒரு கூட்டமாக வாழும் போதே தங்களுக்குள் சண்டைபோட்டு கொள்ளும் இயல்பு பெற்ற மனிதன், மற்றொரு கூட்டத்தார் உள்ளே நுழையும் போது சண்டை போடாமல் இருப்பானா? அவனால் இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. இந்த நாட்டில் திராவிடன் என்ற ஒரு இனமும், ஆரியன் என்ற இனமும் இருந்தது என்றால் அவர்கள் நிச்சயமாக ஒட்டி உறவாடி இருக்க முடியாது. என்றாவது ஒரு சண்டை போட்டிருக்க வேண்டும். அது ஆதிகாலம் என்பதனால் பல்லாயிரம் உயிர்கள் அந்த படுகளத்தில் பலிவாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு சண்டை நடந்ததாக எந்த குறிப்புகளிலும் அதாவது வேதங்கள் புராணங்கள் மற்றும் பண்டையகால இலக்கியங்கள் வெளிநாட்டின் வரலாற்று குறிப்புகள் எவற்றிலும் ஒரு சிறு தடயம் கூட இல்லை.

தேவாசுர போர்கள் என்ற போர்களை பற்றி வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்புகள் இருக்கிறது. இவற்றில் வரும் தேவர்கள் என்பவர்கள் ஆரியர்கள் என்றும் அசுரர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் கூற்றை தவிர, அல்லது இவர்களின் அனுமானத்தை தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. இவர்கள் அனுமானம் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. தங்களது ஆரிய, திராவிட பிரிவுகளை பலப்படுத்துவதற்காக வலிந்து கூறும் போலி ஆதாரங்கள் என்று மிக சுலபமாக கூறி விடலாம்.

கேள்வி:-   ஆரியனும் இல்லை, திராவிடனும் இல்லை இப்படி இல்லவே இல்லாத இரண்டு இனத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? கற்பனையான இனங்களை உருவாக்குவதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்து விடப்போகிறது? எவ்வளவு தான் சிந்தித்து பார்த்தாலும் இதற்கான முகாந்திரம் கிடைக்கவே இல்லை. நீங்களே அதன் காரணத்தை சொல்லுங்கள்.

குருஜி:- விவிலியம் காலம் துவங்கி பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் இருந்து பலவிதமான பொருட்களை இறக்குமதி செய்தது தான் ஐரோப்பிய சமூகம். அவர்களிடம் கிடைக்காத அவர்களால் எண்ணிப்பார்க்க கூட முடியாத மிக அபூர்வமான பொருட்கள் ஏலம், மிளகு, கடல் முத்து போன்றவைகள் அவர்களுக்கு நம்மால் கிடைத்தது. இந்தியாவை பற்றிய ஐரோப்பிய சிந்தனை என்பது அதி அமானுஷ்ய கற்பனை என்று கூறினால் கூட அதில் வியப்பில்லை. இந்தியாவில் தங்க நதி ஓடுகிறது, மரங்களில் தங்க கனிகள் கொத்து கொத்தாக தொங்குகின்றன இங்கு தோட்டத்தில் மேய்கின்ற வாத்து கூட தங்க முட்டை தான் போடும் குதிரையின் லாடம் இரும்பால் அடிக்கபடவில்லை, தங்கத்தால் அடிக்கப்படுகிறது என்றெல்லாம் அவர்கள் வியந்தார்கள். இதில் பாதி உண்மை இருந்தது பாதியில் கற்பனை இருந்தது.

தங்கமே வடிவான இந்தியாவை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் தங்க ஆற்றில் மூழ்கி குளிக்க வேண்டுமென்று ஏங்கிய வெள்ளைக்காரர்கள் நிறைய பேர். அதில் முக்கால்வாசி பேர் இந்தியாவில் இருந்து தங்கத்தை வாரிக்கொண்டு தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட வேண்டுமென்று ஆசைப்பட்டனர். அதற்காக கையில் கிடைத்த படகுகளை எல்லாம் தூக்கிக்கொண்டு இந்தியாவை தேடி புற்றீசல் போல புறப்பட்டு வந்தனர். அப்படி வந்தவர்களில் பலர் இங்கே இருக்கும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, அதிகார வர்க்கத்தின் ஆலோசகர்களாக மாறினார்கள். பிறகு இவர்கள் இந்தியாவையே குத்தகைக்கு எடுத்ததை நம்மால் மறுக்க முடியாது.

வெள்ளைக்காரன் எப்போதுமே சுரண்டி பிழைப்பதில் கெட்டிக்காரன் தான். சுரண்ட வேண்டும் தான்மட்டுமே சுரண்ட வேண்டும் தன்னைத்தவிர வேறு யாரும் சுரண்டி விடாதபடி அடியோடு சுரண்ட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பான். இந்தியர்கள் மத்தியில் ஒற்றுமை உருவாகி விட்டால் கொல்லன் பட்டறையில் ஊசி விற்க முடியாது. என்பதை தெரிந்து கொண்ட அவன் நமக்குள் இருந்த ஜாதி பாகுபாட்டை தனக்கு சாதகமாக திருப்பிக்கொண்டு இனபாகுபாட்டை விதைத்தான் வடக்கு, தெற்கு, ஆரியன், திராவிடன் என்ற போராட்டம் அதிகரித்து விட்டால் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம் குறைந்து விடும். தன்னுடைய சந்தோஷம் பெருகிவிடும் என்பதற்காக இந்தியர்களை எப்போதுமே அடிமைகளாக வைத்திருப்பதற்கு இங்கிலாந்து நாட்டிலிருந்து படித்த அதே நேரம் இங்கிலாந்து அரசுக்கு, மதத்திற்கு விசுவாசமான அறிஞர்களை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தான்.

அது மட்டுமல்ல ஐரோப்பாவில் மண்டிக்கிடந்த ஐரோப்பிய-ஜெர்மானிய யூத எதிர்ப்பு இன உணர்வுகளை இந்திய மக்களோடு தொடர்புப்படுத்தி இந்திய இலக்கியங்களை திரிபுப்படுத்தி ஆரியம் என்ற வார்த்தைக்கு புது புது விளக்கங்களை கூறி வார்த்தை ஜால மாளிகைகளை எழுப்பினார்கள். ஆரிய என்ற வார்த்தை சமஸ்கிருத இலக்கியங்கள் நன்றாக அறிந்த சொல். நன்றாக பயன்படுத்தும் சொல் 1900 வருடம் வரையில் சமஸ்கிருத இலக்கியங்களை, ஆரிய இலக்கியங்கள் என்று அழைத்தனர். ஆனால் வெகு விரைவிலேயே ஆரியன் என்பதை ஒரு இனத்தின் பெயராக மாற்றி அழைக்க ஆரம்பித்தனர். வரலாற்றை மிக நுணுக்கமாக அறிந்தவர்கள் இதை திட்டமிட்ட சதி என்று மிக தெளிவாக கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆரியம், திராவிடம் என்பது குணம் சார்ந்த, நிலம் சார்ந்த, வார்த்தைகளாக இல்லாமல் இனம் சார்ந்ததாக மாற்றப்பட்டதற்கு ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் அரசியல் உறுதித்தன்மையை இந்தியாவில் மிக அழுத்தமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். தெற்கே குறிப்பாக தமிழ்நாட்டில் மையம் கொண்டிருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மத பிரச்சார அமைப்புகள், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தியாவின் வடக்குபகுதியில் வாழும் மக்களை இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பிரித்ததை போலவே தெற்கு பகுதி மக்களை ஆரியர், திராவிடர் என்று பிரித்து அழகு பார்த்தனர். இரண்டு ஆடுகள் சண்டைபோட்டால் குள்ளநரிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்நாட்டில் திராவிடர்களை, ஆரியர்கள் அடிமைப்படுத்தி விட்டதாகவும் அதை மீட்பதற்காக இங்கிலாந்து சீமையில் இருந்து வெள்ளைக்கார துரைமார்கள் வந்திருப்பதாகவும், முதலை கண்ணீர் வடித்தார்கள். இதை அப்பாவி தமிழர்களும் நம்பினார்கள். இன்றும் நம்பி கழகங்களிடம் மயங்கி கிடக்கிறார்கள்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *