Store
  Store
  Store
  Store
  Store
  Store

பசியை மறக்கும் சித்தர் முறை

சித்தர் ரகசியம் - 10


    வெளிநாட்டுக்காரன் சிந்தனைக்கும், நம்ம ஊர் சிந்தனைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நாம் அமெரிக்கா, ஐரோப்பா, ரோமாபுரி, கிரேக்கம் என்றெல்லாம் சொல்கிறோமே அந்த நாடுகளில் அப்போது வாழ்ந்தவர்களும், இப்போது வாழ்கிறவர்களும் உலகத்து பொருட்களை பயன்படுத்தி எப்படியெல்லாம் உடல் சுகத்தை அனுபவிக்கலாம் என்று சிந்தித்தார்கள். அதற்காகவே இரவும் பகலும், ஓய்வு ஒழிச்சல் இன்றி செயல்பட்டும் வருகிறார்கள். ஆனால் இந்தியர்களாகிய நாம் எப்போதுமே அழியக்கூடிய பொருட்களால் கிடைக்கும் இன்பம் நிரந்தரம் இல்லாதது, அழியாத பேரின்ப நிலையை நித்தியமானது என்று நம்பி உலகத்தை கடந்து செல்ல முனைப்போடு செயல்படுகிறோம். இதனால் தான் இந்தியா நவீனத்துவம் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட இயற்கையோடு இணைந்த இன்பமான வாழ்வை முற்றிலும் இழக்காமல் அனுபவித்து வருகிறது.

சென்ற பதிவில் இறந்துபோன மனித உடலை பாதுகாத்து வைப்பதற்கு எகிப்தியர்கள் எப்படியெல்லாம் கவனம் செலுத்தினார்கள், அதற்காக உழைத்தார்கள், என்பதை கண்டோம். அதற்கான மூலகாரணம் அவர்களது உயிர், ஒருநாள் உடலைத்தேடி வரும் என்ற அவர்களது மத நம்பிக்கை தான் என்றாலும், அதற்குள் மிக ஆழமாக வேரூன்றி இருப்பது உடலின் மேல் உள்ள இச்சையே ஆகும். உடம்பு என்ற ஒன்று இருந்தால் தான் மது, மாது போன்ற சுகபோகங்களை அனுபவிக்க முடியும். அதனால் உடம்பை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் கருதினார்கள் சுகபோகத்தை அனுபவிக்க மீண்டும் பூமிக்கு வருவோம் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

நமது மக்களும், உடலை விரும்பினார்கள், உடம்பை பாதுகாத்தார்கள், உடம்பிற்கு ஒரு சிறு கேடு கூட ஏற்படக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் நாம் உடம்பை பாதுகாக்க நினைத்தது சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உடம்பை பயன்படுத்தி மனதை கட்டி, கர்மாவை வெட்டி, ஆத்மாவை இறைவனின் பாதங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக. உடம்பு இல்லை என்றால் தவம் செய்ய முடியாது. தவம் இல்லை என்றால் இறைவனை அடைய முடியாது. எனவே உடம்பை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர உயிர் போனாலும் உடம்பை தேடி மீண்டும் அது வருமென்று அவர்கள் நினைக்கவில்லை. உயிர்கள் மீண்டும் பூமிக்கு வரவேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்படவில்லை மீண்டும் மீண்டும் கருவறையில் வருவது மாபெரும் துயரம் என்பது நம்மவர்களின் எண்ணம் எனவே தற்போது பெற்றிருக்கும் உணவை செம்மையாக பாதுகாத்து கொள்வதில் மட்டுமே மிக அதிகமான கவனம் செலுத்தப்பட்டது.

நமது சித்தர்களும், ஞானிகளும் பலநூறு வருடங்கள் வாழ்ந்ததாக அறிகிறோம். முழுமையாக அறுபது ஆண்டுகள் கூட வாழமுடியாத நமக்கு நூறு வயதிலும் கரும்பை கடித்து மெல்லும் மனிதனை பற்றிய செய்தி கேட்டாலே அதிசயமாக இருக்கிறது. இந்த நிலையில் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்களை பார்த்தால் அரண்டு போய்விடுவோம். இந்த இடத்தில் ஒரு சிந்தனை நமக்கு வருகிறது. ஒரு மனிதனால் இத்தனை நூறு வருடங்கள் வாழ முடியுமா? அது சாத்தியமா? என்பதே அந்த சிந்தனையாகும். சித்தர்களின் வாழ்வை யோகநெறியின் முறையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெரிந்து கொண்டால் இதை பற்றிய ஐயம் நமக்கு வரவே வராது. எனக்கு ஆயிரம் வயது முடிந்தது என்று ஒரு மனிதன் நேரில் வந்து சொன்னால் கூட அப்படியா அதனால் என்ன? என்று தான் கேட்போமே தவிர ஆச்சரியப்படமாட்டோம்.

நூறு வயது வாழ்வது என்பது இருக்கட்டும். பலநாட்கள் உணவு என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து, ஆடாமல், அசையாமல் தவம் செய்யும் சித்தர்களை பற்றி கேள்விபட்டவுடன் பசியே இல்லாமல் எப்படி இருக்க முடியும்? என்று நமக்கு தோன்றுகிறது. இந்த கேள்விக்கான விடையை நாம் பெற்று விட்டால் மனிதர்களால் நூறு வருடமென்ன அதற்கு மேலும் வாழ முடியும். அழிந்து போகும் இந்த உடம்பை பயன்படுத்தி பல்லாண்டுகள் பாடுபட்டு முக்தி நிலையை அடைய முடியும் என்பது தெளிவாக தெரிந்து விடும். உணவு உண்ணாமல் இருப்பது பெரிய விஷயம் அல்ல. உணவு இல்லை என்றாலும், உணவு உண்டதனால் உடம்பு பெறுகின்ற சக்தியை உணவு இல்லாமலும் பெற்று இருப்பது தான் மிகமுக்கிய விசேஷம். அப்படி சித்தர்களால் எப்படி இருக்க முடிகிறது? நம்மாலும் இருக்க முடியுமா? என்ற கேள்வி ஆசையாக தோன்றுகிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எனக்கும் அந்த கேள்வி உதித்தது. சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா? அதற்கு என்ன வழி? என்று யோசித்து தேட ஆரம்பித்தேன்.  அப்போது தற்செயலாக ஒரு வயதான சித்த வைத்தியரை சந்தித்தேன். பொதுவாக வைத்தியர்கள் என்றாலே தான் கற்ற வித்தையை அது சரியானதோ, தவறானதோ மற்றவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். தன்னால் மட்டும் தான் அப்படிப்பட்ட வித்தையை கற்றுக்கொள்ள முடியும் என்று ஜம்பம் பேசி அதை பற்றி வெளிப்படையாக பேசுவதை கூட தவிர்த்து விடுவார்கள். ஆனால் நான் சந்தித்த அந்த வைத்தியர் முதியவராக இருந்தாலும் பல முற்போக்கான கருத்துக்களை கொண்டவராக இருந்தார். அவர் பசிதாகம் இல்லாமல் பல மணிநேரம் நம்மாலும் இருக்க முடியும் என்று கூறி ஒரு மூலிகை முறையை எனக்கு சொன்னார்.

குளத்து தாமரையை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான். அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார். அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார். கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.

உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன். உண்மையில் அன்றைய  பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன் இருந்தாலும் எனக்கொரு சந்தேகம் இருந்தது. இதை ஊறவைத்து காத்திருக்க வேண்டுமே சித்தர்கள் அப்படி காத்திருப்பவர்களா? அல்லது அவர்களுக்காக வேறு யாராவது பதம் செய்து கொடுப்பார்களா? என்பது தான் எனது அடுத்த கேள்வி.

அந்த கேள்விக்கான பதிலை வேறொருவர் எனக்கு தீர்த்து வைத்தார் ஆவாரம் பூ இருக்கிறது அல்லவா! அந்த ஆவாரம்பூவையும் மூலிகை பரிபாஷையில் கறுப்பு என்று சொல்லபடுகிற ஒருவித போதை தருகின்ற இலையையும் ஒன்றாக சேர்த்து கசக்கி ஜர்தா புகையிலையை எப்படி உதடுகளுக்கு அடியில் வைத்துக் கொள்வார்களோ அப்படி இந்த பொருளை வைத்துக்கொண்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கூட பசிதாகம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொன்னார். ஆனால் இந்த கலவையில் அனுபவம் இல்லாமல் செய்தால் மூளை பாதிப்பு போன்ற பின்விளைவுகளும் ஏற்படும் என்று எச்சரிக்கவும் செய்தார். ஒருவர் எச்சரித்த பிறகு அதை பரிசோதித்து பார்ப்பதற்கு நான் என்ன பித்தனா?

எது எப்படியோ? சில மணிநேரங்களாவது பசி இல்லாமல் இருக்கும் சித்தர் முறையை அறிந்து கொண்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. இப்படி பசி மறப்பதற்கே வழிகளை வைத்த சித்தர்கள் நூறு வயதிற்கு மேலும் வாழ்வதற்கு என்ன வழி வைத்திருப்பார்கள்? என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது அல்லவா? அதே ஆர்வம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் மிக நுணுக்கமான விபரங்களை பல வருடங்கள் துருவித்துருவி என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதை இன்று மிகவும் மகிழ்ச்சியோடு உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. எகிப்தியர்கள் இறந்து போன உடலை பராமரிப்பதற்கு வழி கண்டுபிடித்ததை போல சித்தர்கள் உடல்கள் இறந்து போகாமல் இருக்க பல வழிகளை கண்டறிந்து கூறி உள்ளார்கள் அவற்றில் மிக முக்கியமானது காய சித்தி முறையாகும்.

மரணம் என்பது உடல், மனம், சுவாசம், நினைவுகள், பரிமாணங்கள் போன்ற ஐந்தையும் தனித்தனியாக பிரிக்கும் முறையே ஆகும். அப்படி மரணமானது எதையும் பிரிக்காமல் கட்டுடைக்காமல் இருக்க வேண்டுமானால் முதலில் உடலை அழிவில் இருந்து மீட்க வேண்டும். கப்பல் கட்டுவதற்கு, வீடு கட்டுவதற்கு, மாட்டுவண்டி கட்டுவதற்கு தனித்தனி தொழில்நுட்பங்கள் இருப்பது போல, உடம்பை அழியாமல் மீட்டு எடுப்பதற்கு சித்தர்கள் ஒரு தொழில்நுட்பத்தை கண்டார்கள் அதன் பெயர் தான் காயசித்தி.

உடலை காப்பதற்கு எப்படி காயசித்தியை உருவாக்கினார்களோ அதே போல மனதையும், சுவாசத்தையும் கட்டி காப்பதற்கு யோகசித்தி என்ற ஒரு முறையையும், நினைவுகளை நிர்மூலம் ஆக்குவதற்கு ஞானசித்தி என்ற ஒரு முறையையும், ஆத்மாவின் பரிணாம வளர்ச்சியை வளர்ப்பதற்கு சமாதிசித்தி என்ற ஒரு முறையையும் சித்தர்கள் கண்டுபிடித்தார்கள். இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி நாம் தனித்தனியாக ஆராயப்போகிறோம். அதற்கு முதற்படியாக காய சித்தியை அறிந்து கொண்டால், புரிந்து கொண்டால் நல்லது என்ற எண்ணத்தில் சித்தர்கள் இரகசியத்தை முறைப்படி காயசித்தியில் இருந்து துவங்கலாம் என்று நினைக்கிறேன். இந்த காயசித்தியில் முதற்படியாக இருப்பதும், முக்கியப்படியாக இருப்பதும் நித்திய சுத்தியாகும் அது என்னவென்று அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...

Contact Form

Name

Email *

Message *