Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெள்ளையனின் சீடரா வள்ளுவர்...?

கேள்வி 3


     திராவிடம் என்பது இனத்தை குறிக்கும் வார்த்தை அல்ல, நிலத்தை குறிக்கும் வார்த்தை என்பது புரிகிறது. அப்படி இருந்தாலும், அதை இனம் சார்ந்த வார்த்தையாக வடிவமைப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமலே உருவாக்கிவிட முடியுமா? என்று அந்த இளைஞர்கள் குருஜியிடம் அடுத்தகட்ட கேள்வியை கேட்டார்கள்.

குருஜி:-   இந்த கேள்வியை நீங்கள் இப்படி கேட்பதை விட ஆரியன் என்ற வார்த்தையில் மட்டும் மனித பண்புகளோடு இணைத்து சொல்கிறீர்கள். திராவிடன் என்று வரும் போது அதை இடம் சார்ந்த பெயராக சொல்கிறீர்கள். எப்படி திராவிடம் என்பது இடம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதோ, அப்படியே ஆரியன் என்பதற்கும் இடம் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதே என்று நீங்கள் கேட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். நீங்கள் இப்போது கேட்டிருக்கும் கேள்விக்கு பதிலும் கிடைத்திருக்கும். வடமொழி இலக்கியங்களில் ஆரிவர்த்தம் என்ற வார்த்தை அடிக்கடி வரும். வேதங்களில், புராணங்களில் மற்றும் பல சமஸ்கிருத இலக்கியங்களில் இந்த சொல் நடைமுறையில் இருப்பதை அறிந்திருக்கலாம்.

திராவிடம் என்பது எப்படி இடமாக இருக்கிறதோ, அப்படியே ஆரிவர்த்தம் என்பதும் ஆரியர்களின் இடம், ஆரியர்களின் நாடு என்ற பொருளை கொண்டதாக இருக்கிறது. இதற்கு வரலாற்றுரீதியிலும், மொழியியல்ரீதியிலும் விடைதேடினால் அது கிடைக்காது. ஆன்மீகப்பாதையில், ஆன்மீக சிந்தனை என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே இதற்கான உண்மை விடை கிடைக்கும். பல வரலாற்று வல்லுனர்களும், தற்கால ஆய்வாளர்களும், சமயத்திற்கும், சரித்திரத்திற்கும் சம்மந்தபடுத்தி பார்க்ககூடாது. சமயம் என்பது கற்பனை கலந்தது. அதீத எதிர்பார்ப்பினால் உருவானது. சரித்திரம் அப்படிப்பட்டது அல்ல என்கிறார்கள். இந்த கருத்து மற்ற நாடுகளுக்கு சரியானதாக இருக்கலாம் நம் நாட்டிற்கு சரியானதாக ஒருபோதும் இருக்காது.

ஜப்பான்காரனின் ஆத்மா உழைப்பில் இருக்கிறது. பிரிட்டீஷ்காரனின் ஆத்மா அதிகாரத்தில் இருக்கிறது. அமெரிக்ககாரனின் ஆத்மா வியாபாரத்தில் இருக்கிறது என்பார்கள். அதேபோல இந்தியாவின் ஆத்மா சமயத்தில் அதாவது மதத்தில் இருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டால் பல புதிர்களுக்கு மிக சுலபமாக விடை தேடிவிட முடியும். ஆரியன், திராவிடன் என்ற குழப்பவாதங்களுக்கு சரித்திரம் மட்டுமல்ல, சமயமும் நல்ல பதிலை தருகிறது. மனுநீதி சாஸ்திரம் இரண்டாம் அத்தியாயம் இருபத்தி இரண்டாம் சுலோகம் என்ன சொல்கிறது என்றால் ஆரிய வர்த்தத்தில் ஜீவன் முக்தர்கள் இருக்கிறார்கள் என்கிறது.

அதாவது கங்கைக்கரை, இமயமலை, காஷ்மீரின் பனிக்குகைகள் போன்றவற்றில் அந்தகரணங்களை ஒடுக்கி தவம் செய்கிற ஞானிகள் பலர் வாழ்கிறார்கள். இறைவனின் அவதாரங்கள் என்பது இந்த பகுதிகளிலேயே அதிகம் நிகழ்ந்திருப்பதனால், ஞானிகளும் இவ்விடத்தை நாடி வருகிறார்கள். இங்கே சாதாரண மனிதர்களை விட சாதுக்கள், சன்யாசிகள் மிக அதிகமாக தென்படுகிறார்கள் எனவே இது ஆரியவர்த்தம் ஆகிறது என்பது இதன் மைய பொருளாகும். மனுநீதி சாஸ்திரத்தை விமர்சனத்திற்குரிய நூல் என்று பார்க்காமல், ஆய்வுக்குரிய நூல் என்று அணுகினால் அதில் பல கடந்தகால சரித்திர பதிவுகள் இருப்பதை மிகத்தெளிவாக அறியலாம்.

இவற்றை எல்லாம் மையமாக வைத்து காணும் போது ஆரியம் என்பது குணநலன் மட்டுமே! அந்த குணாம்சம் பொருந்தியவர்கள் அதிகமாக அந்த நிலப்பரப்பில் வாழ்ந்ததனால் அதை ஆரியவர்த்தம் என்று சொன்னார்களே தவிர இடத்தின் தன்மையை வைத்து சொல்லவில்லை என்பது நன்றாக புரிகிறது. ஆனால் திராவிடம் என்பது மிக தெளிவாக பஞ்சதிராவிட என்ற பெயரில் அழைக்கப்படுவதினால் நிலத்தை மட்டுமே குறிக்கும் பெயர் என்பது தெரியவரும். இதை மிக சுலபமாக கால்டுவெல் மாற்றி விட்டார் அதையும் நம்மவர்கள் நம்பிவிட்டார்கள்.

கேள்வி:- கால்டுவெல் அவர்களின் பெயரை சொல்லும் போதெல்லாம் ஒருவிதமான வெறுப்புத்தன்மை உங்கள் வார்த்தையில் தென்படுகிறது. நீங்கள் கால்டுவெல்லை வெறுப்பது ஏன்? அவர் கிறிஸ்தவ மத பிரச்சாரகர் என்பதனாலா? அல்லது வேறு காரணம் உண்டா?

குருஜி:-    ஒரு கிறிஸ்தவ போதகரை தான் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு என் மதத்தை சிறப்பித்து கூற எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பது எனக்கும் தெரியும். எனக்கு பல கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பெந்தே கொஸ்தே சபையை சேர்ந்த பலரும் என் நண்பர்களாக இன்று வரையிலும் இருக்கிறார்கள். நான் கால்டுவெல் என்ற மத பிரச்சாரகரை வெறுத்தால் இவர்களையும் வெறுக்க வேண்டும். உண்மையில் எனக்கு கால்டுவெல் மீது வெறுப்பு கிடையாது கோபம் உண்டு. திட்டமிட்டு வரலாறுகளை புனைந்து சொல்வதிலும், கற்பனையான ஆதாரங்களை விஞ்ஞானப்பூர்வமானது என்று வாதிடுவதிலும், அவருக்கு நிகர் அவரே தான். அதனால் தான் அவர் மீது எனக்கு கோபம்.

பொதுவுடைமை கட்சிகளின் மீது பொதுவாகவே எனக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு. சரியோ? தவறோ? தங்களது சித்தாந்தத்தில் உறுதியாக நிற்பார்கள். வசதிபடைத்தவன் தரமாட்டான், வயிறு பசித்தவன் விட மாட்டான் என்று அவர்கள் யதார்த்தத்தை பேசுவது மிகவும் பிடிக்கும். உண்மையை, உண்மைக்காக பேசுபவர்கள் என்று நேற்றுவரை அவர்களை பற்றி நம்பி இருந்தேன். ஆனால் செம்மலர் புத்தகத்தில் கால்டுவெல் அவர்களை குறிப்பிடும் போது தமிழுக்கு அடையாளம் தந்தவர் என்ற சொல்லை பயன்படுத்தி புகழ்ந்திருக்கிறார்கள். இது மிகவும் வேதனையான விஷயம் தமிழுக்கு அடையாளம் தந்த வள்ளுவரை, இளங்கோவை, பாரதியை ஏன் பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கீழே தள்ளி சம்மந்தமே இல்லாமல் கால்டுவெல்லை புகழ்ந்திருப்பது மிக சரியான அரசியல் என்பதை புரிந்து வெட்கப்பட்டேன்.

கால்டுவெல் தமிழரை பற்றி குறிப்பிடுவதை அறிந்தால், அனைவரின் இரத்தமும் கொதிக்கும். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு இருநூறு வருடத்திற்கு பிறகே அவரை பற்றிய விபரங்களை உலகம் அறிந்து கொண்டது. அதன் பிறகே அவரின் கருத்துக்கள் பரப்பட்டது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் கால்டுவெல் அதை முற்றிலுமாக மறுக்கிறார். ஏசு சிலுவையில் அறையப்பட்டதும், அவரது சீடர்களில் பலர், பல நாடுகளுக்கு சென்று மதம் பரப்பினார்கள் என்றும், அவர்களில் தோமர் என்பவர் தமிழ்நாட்டு பரங்கிமலையில் வந்து தங்கினார் என்றும் குறிப்பிடுகிறார். இந்த தோமர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் நாகரீகம் அற்றவர்களாக, ஆடை அணியாதவர்களாக இருந்ததாகவும் அவர்களுக்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்து ஆடை அணிய பழக்கப்படுத்தியவர் தோமர் தானாம்.

தோமரின் சேவை இத்தோடு நிற்கவில்லை. ஒரு தமிழ் இளைஞரை பழக்கப்படுத்தி அவருக்கு ஏசுவின் மலை பிரசங்கத்தை உபதேசித்து ஏசுவின் கருத்துக்களை வலியுறுத்தி ஒரு நூல் எழுத சொன்னாராம். தோமரின் சொல் கேட்டு அந்த இளைஞரும் நூல் எழுதினாராம். அந்த நூலின் பெயர் திருக்குறள். அதை எழுதிய இளைஞர் திருவள்ளுவர். எப்படி இருக்கிறது கதை. திருக்குறளின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு நூறு வருடத்திற்கு முந்தையது என்பது வரலாற்று ஆய்வு. ஆனால் கால்டுவெல்லின் கற்பனையோ வள்ளுவரை தோமரின் சீடராக்கி பார்க்கிறது. இப்படிப்பட்ட கால்டுவெல் தமிழுக்கு அடையாளம் தந்தவர் என்று சொன்னால் கோபம்வராமல் சந்தோசமா வரும்?  இதனால் தான் ஆரியர், திராவிடர் என்பது அப்பட்டமான பொய் என்று துணிந்து கூறுகிறேன்.

திராவிடம் என்பது நிலம் தான் என்பதற்கும், ஆரியன் என்பது குணம் தான் என்பதற்கும், வேதங்களிலிருந்தும், தமிழ் இலக்கியங்களிலிருந்தும் நிறைய உதாரணங்களை குருஜி எடுத்துக்காட்டினார். அதை அடுத்த பதிவில் படித்து பார்ப்போம்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *