Store
  Store
  Store
  Store
  Store
  Store

தைரியம் இல்லாத ஜாதகம் !



    ன்புள்ள குருஜி அவர்களுக்கு எழுதுகிற கடிதம் என்னவென்றால் நான் சென்னையில் மயிலாப்பூரை பிறப்பிடமாக கொண்டு வாழ்ந்து வருபவன். எனக்கு வயது நாற்பது முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது தகப்பனார் திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழிலை நடத்திவந்தார். அவருக்குப்பிறகு அந்தத்தொழிலை நான் சிலகாலம் நடத்தினேன். பிறகு என்னால் நடத்த முடியவில்லை. காரணம் என் மனதில் ஏற்படுகின்ற இனம்புரியாத குழப்பமாகும். தொழிலில் நான் நஷ்டம் அடைந்துவிடுவேன். எனக்கு தொழில் தெரியாது. வாடிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டு அவதிப்படுவேன் என்ற அச்சம் அடிக்கடி ஏற்படும். இதனால் யாரையும் வேலைக்கு வைத்து, வேலை வாங்குவதற்கும் பயந்து சொந்தமாக வேலை செய்வதற்கும் முடியாமல் தொழிலை விட்டுவிட்டேன். இன்று வேறொரு சமையல் காரரிடம் வேலைக்குப்போகிறேன்.

இங்கும் எனக்கு யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. இவர்களை நம்பலாமா? வேண்டாமா? வேலைக்கு போகலாமா? கூடாதா? என்ற குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் மனைவி மற்றும் தாயார் போன்றவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்கள் என் பெண்டாட்டி என்னை கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டுவிட்டார். மற்றவர்கள் பேசும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் எனக்குள் எழுகின்ற அச்சத்தையும், குழப்பத்தையும் தடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய சூழலும் வருகிறது. சின்ன வயதிலிருந்தே நான் இப்படித்தான். கிறிஸ்தவ மதபோதகர்கள் உலகம் அழிந்துவிடப்போகிறது, மலைகள், நதிகள் எல்லாம் நெருப்பில் உருகிவிட போகிறது என்று ஒருமுறை அதாவது, எனது சிறியவயதில் எங்கள் தெருவில் பிரச்சாரம் செய்வதைக்கேட்டேன்.

அப்போது எனக்கு என்ன வயதிருக்கும் என்று எனக்கு சரிவரத்தெரியாது. இருந்தாலும் ஒன்றாம்வகுப்பு சேருவதற்கு முன்பு தான் அதை கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். அன்று முதல் வானம் இடிந்து தலைமீது விழுந்து விடுமோ? வண்டி சக்கரத்தின் அச்சாணி கலந்தவுடன் வண்டி எப்படி குடை சாய்ந்து விடுமோ அப்படி பெரிய மலைகளும், குன்றுகளும் உருண்டு வந்து என்னை நசிக்கிவிடுமோ என்று தொடர்ந்து பயந்து வருகிறேன். இடி, மின்னல் போராட்டம், ஆரவாரம் என்று எதை பார்த்தாலும் உடம்பு நடுங்குகிறது. இதனால் பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இதிலிருந்து விடுதலை பெற்றால் பரிபூரண வாழ்வை என்னால் அமைத்து கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். குழப்பம் இல்லாத மனநிலை எனக்கு வருமா? வராதா? என்று தயவுசெய்து, கணித்துக்கூறுமாறு வேண்டுகிறேன். இந்த கடிதத்தை கூட நேராக எழுத அச்சப்பட்டு என் நண்பர் கண்ணன் என்பவர் மூலம் எழுதுகிறேன். அவர் ஆசிரியர் என்பதனால் என் உணர்ச்சிகளை சரியாக உங்களுக்கு தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,
சேஷசாய்,
சென்னை.



   ரு மனிதனுடைய புத்தி எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும். அதே நேரம் அவன் தைரிய சாலியா? கோழையா? என்பதை அறிந்து கொள்ள மூன்றாம் இடத்தை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களும் கெட்டுவிடாமல் இருந்தால் நல்ல புத்தியும், குழப்பம் இல்லாத தைரியமும் இருக்கும். கெட்டுவிட்டால் நிச்சயம் மனதில் எப்போதும் அவனுக்கு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எந்த காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்காத பயமும் இருந்து கொண்டே இருக்கும். இது இயற்கை நியதி மட்டுமல்ல. ஜோதிட சாஸ்திர விதியும் கூட.

மூன்றாம் இடமும், ஐந்தாம் இடமும் கெட்டுவிட்டால் இன்னொரு அபாயம் இருக்கிறது. இவர்கள் நெருப்பில் வைத்துச்சுட்டாலும் கூட, சொந்த புத்திப்படி நடக்க மாட்டார்கள். வேறு யாராவது ஒருவர் சிந்தித்து வழிகாட்டினால் அதை நம்பி, அடிமை போல வாழுகின்ற மனோநிலை ஏற்பட்டுவிடும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை தவறு என்றோ? அதன்படி நடக்கக்கூடாது என்றோ நான் சொல்லவில்லை. ஆயிரம் தான் மற்றவர்கள் சொன்னாலும் கூட, இது நல்லதா? கெட்டதா? என்பதை ஆராய்ந்து பார்க்கக்கூடிய புத்திசாலித்தனம் தனக்கென்று இல்லை என்றால், ஒரு மனிதனால் எப்படி சந்தோசமாக வாழ இயலும்? உங்கள் ஜாதகம் மூன்றும், ஐந்தும் கெட்டுப்போனதாகவே காட்டுகிறது. அதனால் தான் உங்களது சுயத்தன்மையை மதிக்காமல் கீழே போட்டு நசுக்கி அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.

இப்படி ஜாதகம் அமைந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் இதே சாபத்தோடு தான் வாழவேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கையாக இவர்களுக்கு பிரபஞ்ச சக்தியோடு இணைந்து போராடும் வல்லமை இல்லை என்பதனால் அதைப்பெறுவதற்கு அதிகாலையில் கண்விழித்து சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தினசரி அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்தின் வெளியே இருக்கும் திக்கற்றவர்களுக்கு தன்னால் முடிந்த தர்மங்களை செய்ய வேண்டும். இப்படி செய்து வருவதனால் சிறிது சிறிதான மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்திற்குள் சாதாரணமான மனோநிலையை பெற்றுவிடலாம். வீரனாக ஒரே ஒருநாள் வாழ்வதற்கும், கோழையாக பல யுகங்கள் வாழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே பெருமாளை வழிபடுங்கள் மன தைரியத்தை கண்டிப்பாக அவன் தருவான்.


Contact Form

Name

Email *

Message *