வந்தமழை நிற்கவில்லை
வானம் இன்னும் காயவில்லை
ஈரமான பட்டாசுகளை
வறுக்கப்போனேன் வாணலிலே
பிரம்பை எடுத்த அப்பா
துரத்தத் வந்தார் என்னை
தெருவினிலே
வெடித்து சிதறிய பட்டாசுகளை
வேடிக்கை பார்க்கும் வேளையிலே
வெடிக்காமல் கிடக்கும் சிலதுகளை
பொறுக்கி எடுத்து கால்சட்டையில்
பதுக்கும் போது வெடித்ததனால்
ஓடி விழுந்தேன் ஓடையிலே
புதுத்துணி வாசம் முகர்ந்து பார்க்க
கண்ணில் எண்ணெய் ஊற்றி
சீயக்காய் அள்ளி தலைபூசி
நடுங்கும் குளிரில் குளித்து வந்து
கண்ணாடி முன்னால் அழகு பார்ப்பேன்
முறுக்கு, அதிரசம், உளுத்தம்வடை
வகைக்கு ஒன்றாய் கடித்துக்கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிவிட்டு
ஓடிப்போவேன் தெருமுனைக்கு
காக்கா கடி பலகாரம்
தலைக்கு நான்காய் ருசியேறும்
கழுதை வாலில் சரவெடியும்
ஓணான் வாயில் ஊசிவெடியும்
சிரட்டை மூடி அணுகுண்டும்
பாட்டில் கழுத்தில் ராக்கெட்டும்
அரக்க பரக்க வெடி வெடித்து
அடித்து புரண்டு சண்டையிட்டு
புதிய சட்டையை கிழித்துக்கொண்டு
பதுங்கிப்போவேன் வீட்டோடு
அப்பா கண்ணை மறைத்தபடி
அம்மா தருவாள் பணியாரம்
ஆட்டுக்குடல் வறுவலும்
அயிர மீனு பொறியலும்
ரேஷன் அரிசி சோற்றோடு
தின்னும் போது வாய்மணக்கும்
லட்டு, ஜாங்கரி, பாதுஷா
தின்று பார்க்க ஆசை வரும்
அண்டை வீட்டார் அவை தந்தால்
அதற்கும் போட்டி சண்டை வரும்
அப்பாவின் அதட்டல் மெளனமாக்கும்
இத்தனை சுகங்கள் இன்று
எங்கே சென்று மறைந்தது?
அத்தனையையும் மீண்டும் பெறுவோமா?
ஆனந்த தீபாவளி காண்போமா?