குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் உண்டு. முறைப்படி சங்கீதம் கற்றிருக்கிறேன். என் சொந்த கற்பனையில் மெட்டுகள் அமைக்கும் திறமை எனக்கு உண்டு. நான் திரைப்படத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு இப்போது நான் செய்துவரும் வங்கிப்பணியை விட்டுவிட்டு முற்றிலும் அந்த முயற்சியில் இறங்கலாம் என்றிருக்கிறேன். கடைசியில் உங்களை கேட்டுவிட்டு நீங்கள் கூறுகிறபடி முடிவெடுப்பது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன். நான் இசையமைப்பாளராக வரமுடியுமா? துணிச்சலாக அரசுப்பணியை அதற்காக ராஜினாமா செய்யலாமா? என்பதை கூறவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
சாய்குமார்,
சென்னை.
இசை என்பது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் கலை. சாம கானத்தை கேட்டு பரமேஸ்வரனே உருகி நிற்பதாக வேதம் சொல்கிறது. இறைவன் திசையாக இருக்கிறான். இசை, இறைவனிடம் நம்மைக்கொண்டு சேர்க்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
இசைவானனாக, இசை அறிஞனாக வாழ்வது என்பது வேறு. இசையால் வாழ்வது என்பது வேறு. புரியும் படியாகவே சொல்கிறேன். இசையை மட்டுமே வைத்து பொருளாதாரத்தேவைகளை பூர்த்தி செய்வது என்பது அனைவருக்கும் இயலாது. யாரோ ஒருவருக்கு மட்டுமே அத்தகைய பலன் கிடைக்கிறது.
அப்படிப்பட்டவர்களே பாடகர்களாக, இசையமைப்பாளர்களாக இருக்க இயலும். அதற்கு அவர்கள் ஜாதகத்தில், குரு இருக்கும் இடத்திலிருந்து ஒன்று – ஐந்து - ஒன்பது அல்லது மூன்று – ஏழு - பதினொன்று அல்லது இரண்டு - பனிரெண்டு ஆகிய இடங்களில் சுக்கிரனும்,சூரியனும் இணைந்து இருக்க வேண்டும்.
இப்படி இல்லை என்றால் குருவிற்கு ஒன்று - ஐந்து - ஒன்பது அல்லது இரண்டு - ஆறு - பத்து ஆகிய இடங்களில் சுக்கிரனும், ராகுவும் இணைந்து இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்கள் மட்டுமே வணிக ரீதியில் இசையின் மூலம் வெற்றி பெறலாம். உங்கள் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே நீங்கள் வங்கிப்பணியை விட வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தாலும், உங்கள் இசை ஆர்வத்தை நிவர்த்தி செய்ய இசைத்தட்டுகள் தனியாக வெளியிடலாம். அது உங்களுக்கு மனதிருப்தியையும் நல்ல பெயரையும் வாங்கி தரும். நீங்கள் விரும்பிய பதிலை கூற முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். எல்லாம் வல்ல நாராயணன் உங்களுக்கு நன்மையையே செய்வான்.