Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாகும் போது சங்கரனை கூப்பிடு



குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். கடந்த ஒருவருடமாக உங்கள் தளத்தை படித்து வருகிறேன். ஆக்கப்பூர்வமான விஷயங்களும், அறிவுப்பூர்வமான கருத்துக்களும் நிறைய சொல்கிறீர்கள். படிப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் வீட்டில் பெரியவர்கள் இருந்து இதைச்செய் அதை செய்யாதே என்று வழிகாட்டுவது போல இணையதளத்தின் வழியாக நீங்கள் எங்களுக்கெல்லாம் நல்ல பாதையை காட்டி வருகிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியும், உங்களை அறிய வைத்த இறைவனுக்கு வணக்கத்தையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.

குருஜி எனக்கொரு கேள்வி இருக்கிறது. சிறிய வயதில் எனது தாயார் இரவில் படுக்கப்போகும் முன் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டே உறங்குங்கள். அப்போது தீய சக்திகள் எதுவும் உங்களை அணுகாது என்று சொல்வார். அவர் கூறியபடி செய்து வந்ததனால் இன்றுவரை அது இயல்பான பழக்கமாகி விட்டது. இதில் சந்தேகம் என்னவென்றால் இப்படி இறைவனின் பெயரை கூறுவதனால் தீய சக்திகள் மட்டும் தான் அருகில் வராதா? அல்லது இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள மிகவும் விரும்புகிறேன் தாங்கள் தயவு செய்து விளக்கம் தருமாறு பணிந்து வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சாவித்திரி சுகுமாரன்,
சென்னை.



   நாம் வாழுகின்ற காலத்தில், ஆழமான முறையில் எந்த பழக்கத்தை கைகொண்டு வாழுகிறோமோ அது தான் கடைசி காலத்திலும் கூட வருமென்று பெரியவர்கள் சொல்வார்கள். திடீரென்று இடையில் வருகின்ற பழக்கங்கள் எல்லாம் மரண காலம் வரையிலும் நிச்சயம் கூட வராது.

ஒரு மகரிஷி தனது ஆஸ்ரமத்தில் மான்குட்டி ஒன்றை வளர்த்தாராம். அவரது உடம்பில் இருந்து உயிர் பிரிகின்ற நேரத்தில், இனி அந்த மான்குட்டிக்கு யார் உணவு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு அதாவது மானை நினைத்தபடியே உயிரை விட்டாராம் அப்படி உயிர் விட்டதனால் அவர் பூமியில் மீண்டும் மானாக பிறந்தாராம். இந்த கதை எதற்காக சொல்லப்படுகிறது என்றால் சாகும் போது நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே அடுத்த ஜென்மத்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

உறக்கம் என்பதும் ஒருவகையில் மரணம் தான். உறங்குவது போல் சாக்காடு உறங்கி விழிப்பது போல் பிறப்பென்று ஜனன மரணத்தை பற்றி சித்தர்கள் கூறுவதிலிருந்தும் நித்திய பிரளயம் அதாவது தினசரி அழிவு என்று சாஸ்திரங்கள் தூக்கத்தைப்பற்றி கூறுவதிலிருந்தும் மரணம் என்பதும் உறக்கம் என்பதும் பெரிய வித்தியாசத்தில் உள்ளது அல்ல என்பது தெரிகிறது. சாவுக்கும் உறக்கத்திற்கும் மிகச்சிறிய வேறுபாடே இருக்கிறது. உறங்கி விழிக்கும் போது இதே உடம்பில் விழிக்கிறோம். இறந்து விழிக்கும் போது அதாவது செத்து மறுபிறப்பு எடுக்கும் போது வேறொரு உடம்பில் விழிக்கிறோம்.

ஆக மரணம் என்பதும், உறக்கம் என்பதும் தண்டவாளத்தின் இரண்டு கோடுகள் என்பது நன்றாக தெரிகிறது. தினசரி உறங்கும் போது கடவுளின் பெயரைச்சொல்லி பழக்கப்படுத்தி கொண்டால் கடைசி நேர உறக்கத்திலும் மிகச்சுலபமாக கடவுளின் பெயரை சொல்லலாம். கடவுளைப்பற்றி நினைக்கலாம். கடவுளின் பெயரை சொல்வது பழக்கம் இல்லாமல் இருந்தால் சாகும் நேரத்தில் அவ்வளவு சுலபத்தில் வராது.

நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு கூட, கடவுளின் பெயரை வைத்தது இதற்காகத்தான். கடவுளையே நம்பாத நாத்திகன் கூட மரணப்படுக்கையில் தனது பேரனை பார்த்து கிருஷ்ணா வந்துவிட்டாயா? முருகா பக்கத்தில் வா சங்கரா என்னை தாங்கிப்பிடி என்று அழைத்தால் கூட அவனுக்கு கடவுளின் மேல் பக்தியோ நம்பிக்கையோ இல்லாவிட்டாலும் கூட, கடவுளின் பெயரை கூறினான் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நல்ல கதி கிடைக்கும் என்பதற்காகத்தான் என்பதை நாம் உணர்ந்தால் கடவுளை நினைப்பதில் உள்ள சுகம் தெரியும்.


Contact Form

Name

Email *

Message *