குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது நண்பர் நான்கு வருடத்திற்கு முன்பு வீடு ஒன்று கட்டினார். அந்த வீட்டை இன்னும் உள்ளேயும்,வெளியேயும் பூசி முடிக்கவில்லை. ஆனால் தளம் போட்டுவிட்டார். என்ன காரணத்தினாலோ வீட்டு வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இந்த நிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவர் வேலை முடியவில்லை என்றாலும் கிரகப்பிரவேசம் நடத்துங்கள். அதன் பிறகு வேலை முடியும் என்கிறார். எங்களுக்கு அவர் கூறுவதில் குழப்பம் இருக்கிறது. வீடு பூசாமல் குடிபோகலாமா? வேண்டாமா? என்பதற்கு தயவு செய்து விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
மாணிக்கவேலு,
விருத்தாசலம்.
வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வது என்பது மிக முக்கியமான சடங்காகும். வீட்டு வேலை முழுமையாக முடிந்த பிறகு தான் அந்த சடங்கை செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. தொண்ணூறு பங்கு வேலை முடிந்தாலே கிரகப்பிரவேசம் செய்யலாம்.
ஆனால் எந்த நிலையிலும் மேற்கூரை போடாமலும், கதவு வைக்காமலும், சுவர்களும், தரையும் பூசாமலும் புதுமனை புகுவிழா நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் அமானுஷ்யமான பிரச்சனைகள் வீட்டில் எழும் என்று வாஸ்து சாஸ்திரம் தெளிவாக சொல்கிறது. எனவே அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.