Store
  Store
  Store
  Store
  Store
  Store

குடைக்குள் இருக்கிறது மந்திர ரகசியம் !


சித்தர் ரகசியம் - 15

    சிந்தனை செய்கின்ற ஆற்றல், மனித உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று இதுவரை முடிவாக தெரியவில்லை என்றாலும், மூளையின் ஒரு பகுதியிலிருந்து சிந்தனைத்திறன் செயல்படுகிறது என்று அறிவுலகம் நம்பி ஏற்று வருகிறது. இப்படி மூளையிலிருந்து உற்பத்தியாகுகின்ற சிந்தனை என்ற எண்ணங்களை உடல் முழுவதும் எடுத்துச்செல்லும் பொறுப்பு நாடிகளுக்கு இருக்கிறது. இந்த நாடிகள் மூலமாகவே குண்டலி சக்தியும் கீழே இருந்து மேலே ஏறிச்செல்கிறது.

நாடிகள் என்பது மிகவும் நுட்பமானது. சாதாரண கண்களுக்கு தட்டுப்படாதது. மனித உடம்பிற்குள் இருக்கும் எலும்புகளை பார்க்கலாம். உள் உறுப்புகளை பார்க்கலாம். நரம்புகளையும் பார்க்கலாம். நாடிகளை மட்டும் பார்க்க முடியாது. நவீன உலகம் கண்டுபிடித்துள்ள மிக நுட்பமான பூதக் கண்ணாடிகளின் துணை கொண்டு கூட நாடிகளை கண்டறிய முடியாது. இப்படி கண்ணுக்கே தெரியாத நாடிகள் இருக்கிறது இவைகள் தான் மனித உடலை ஆட்சி செய்கிறது. உயிர் உடலில் தங்குவதற்கு ஆதாரமாக இருக்கிறது என்று உலகிற்கு முதல்முறையாக உணர்த்தியவர்கள் நமது சித்தர்களே ஆவார்கள்.

“பூத சுத்தி சம்ஹிதை” என்ற பழமையான வடமொழி வைத்திய சாஸ்திர நூல் நாடிகளின் எண்ணிக்கை எழுபத்தி இரண்டாயிரம் என்கிறது. பிரபஞ்ச சாரம் என்ற நூலோ மூன்றுலட்சம் நாடிகள் உடம்பில் இருப்பதாக கூறுகிறது. சிவசம்ஹிதை என்ற அருமையான வைத்திய நூல் மூன்றரை லட்சம் என்றும் சொல்கிறது. எத்தனை இலட்சம், எத்தனை ஆயிரம் நாடிகள் இருந்தாலும் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லஷ்மி, மேதா, காந்தாரி, அலம்புடை, சந்குனி, குரு என்ற பத்து நாடிகளே முக்கியமானது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

மேலே கூறப்பட்ட பத்து நாடிகளில் சுழுமுனை நாடியும், மேதா நாடியும் சிறப்பான யோக நாடிகள் என்று தெரிகிறது. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாகவே மூலாதாரத்தில் இருந்து சகஸ்ரத்தை நோக்கி பயன்படுகிறது. முறைப்படியான யோக பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே சுழுமுனை நாடி தெளிவாக பேசும். சுழுமுனை நாடி தாமரை தண்டின் நூல் போல முதுகெலும்பு அடியில் உள்ள மூலாதாரத்தில் குண்டலினி சக்தியின் நடுவில் பொருந்தி நின்று முதுகுத்தண்டு உட்புறம் வழியாக மேல் நோக்கி ஊடுருவிச்செல்கிறது. அப்போது இந்த நாடியோடு ஒரு நதி எப்படி கிளை நதிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு சர்வ வேகத்தோடு செல்லுமோ அதே போல சித்திர நாடி, வஜ்ர நாடி என்ற இரண்டு நாடிகளை இணைத்து கொண்டு பயணத்தை நடத்துகிறது.

இடைகளை நாடியும், பிங்கலை நாடியும் தண்டுவடத்தின் வெளியே இடது பக்கமும், வடது பக்கமும் பின்னிப்பிணைந்து இரண்டு நாகங்கள் போல நிற்கின்றன. இவைகள் சுவாதிஸ்தானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, அக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களை தொடும்போது மட்டும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்து கொள்கிறது. கத்தரிகோல் போன்று மேலே வருகின்ற இரு நாடிகளும் புருவமத்தியில் வந்து பிரிந்து, இடகலை நாடி இடது மூக்கையும், பிங்கலை நாடி, வலது மூக்கையும் ஆதாரமாக கொண்டு நிற்கிறது.

இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய நாடிகளுக்குள் இடைகலையிலிருந்து இரண்டு நாடிகளும் பிங்கலையிலிருந்து இரண்டு நாடிகளும் உருவாகி வடமாகவும், இடமாகவும் சென்று இரண்டு கண்களையும், இரண்டு செவிகளையும் செயல்படச்செய்கிறது சுழுமுனையிலிருந்து தோன்றுகிற ஒரு நாடி நாவின் அடிப்பகுதியில் நிற்கிறது. இந்த நாடிக்கு சிகுவை அல்லது சிங்குவை என்று சித்தர்கள் பெயர் சொல்கிறார்கள். சுவாதிஸ்தானத்தில் இருந்தும் இரண்டு நாடிகள் புறப்படுகிறது. இவை கீழ்நோக்கி சென்று ஆண்குறியை தொடுகிறது. இதற்கு சங்கிலி என்று பெயர். எருவாயை தொடுகின்ற இன்னொரு நாடிக்கு குரு என்று பெயர்.

இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய நாடிகள் கடவுளோடு மனிதனை இணைக்கும் நாடிகள் என்றால் சரஸ்வதி, லஷ்மி, மேதா ஆகிய நாடிகள் இந்த உலகின் வாழ்க்கையை மனிதனுக்கு செம்மையாக்கி தர உதவுகிறது. இடகலை நாடிக்கும், சரஸ்வதி நாடிக்கும் உறவு உண்டு அதே போல சுழுமுனை நாடிக்கும், மேதா நாடிக்கும் நெருக்கம் உண்டு சரஸ்வதி நாடி மூளையோடு தொடர்பு கொண்டது. மனிதனது சிந்தனையாற்றல் சரஸ்வதி நாடியின் வழியாகவே செயல்படுகிறது. இதனால் தான் கல்வி மற்றும் கலைகளின் கடவுளாக சரஸ்வதி தேவியை ஞானிகளும், முனிவர்களும் கண்டார்கள்.

லஷ்மி நாடி, சுழுமுனை நாடி, சரஸ்வதி நாடி மற்றும் மேதா நாடி ஆகிய நாடிகள் எல்லா மனிதர்களுக்கும் சமமாக செயல்படுவது கிடையாது. தனிமனிதனின் தன்மைகளுக்கு ஏற்ப கூட்டியோ, குறைத்தோ செயல்படுகிறது. இதன் செயல்பாட்டிற்கு வம்சா வழியும், பரம்பரையும் மற்றும் சுற்றுப்புறச் சூழலும் சுயசிந்தனையும் வெகுவான காரணங்களாக இருக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால், மனிதன் திறமையானவனாக இருப்பதற்கும், திறமையற்று இருப்பதற்கும் இந்த நாடிகளே ஆதாரங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

கடவுளிடம் மனிதனை அழைத்து செல்லும் நாடிகளாக இடகலை, பிங்கலை நாடிகள் இருப்பதனால் அவைகள் பேதம் இல்லாமல் அனைவருக்கும் செயல்படுவதாக இருக்கிறது. பிராண சக்தியை உடம்பில் கட்டுப்படுத்தி, உடல் இயக்கத்திற்கு எந்த நேரத்தில், எது தேவை என்பதை கண்டறிந்து இந்த நாடிகள் செயல்படுகின்றன. அதனால் இவைகளை சூரியகலை என்றும் சந்திர கலை என்றும் சித்தர்கள் அழைக்கிறார்கள். சூரியகலை என்கிற பிங்கள நாடி செயல்படும் போது இடது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சந்திர கலை என்ற இடகலை நாடி செயல்படும் போது சுவாசம் வலது மூக்கில் நடைபெறுகிறது. சந்திரகலை செயல்பட்டால் சூரியகலை நின்றுவிடும். சூரியகலை இயங்கும் போது சந்திரகலை அசையாது. சந்திர கலை சுவாசம் குளிர்ச்சியையும், சூரியகலை சுவாசம் வெப்பத்தையும் உடம்புக்கு தரும். இந்த தட்பவெப்ப நிலையை பயன்படுத்தியே குண்டலினி சக்தி மனித உடம்பின் வெப்பத்தை சீரான நிலையில் வைக்கிறது.

சுவாசம் என்பது, மனித உடம்பில் பல இந்திர கலைகளை நடத்துவதாக இருக்கிறது. உடம்பு, உயிரோடு இருப்பதற்கு பிராணவாயுவை உள் வாங்கி வெளியே விடுவதோடு மட்டும் சுவாசத்தின் பணிகள் முடிவடைவது கிடையாது. அருள்நிலை என்ற ஆன்மீக பாதைக்கு நம்மை அழைத்து செல்வதற்கும், சுவாசம் பயன்படுகிறது. பொருள் நிலை என்ற இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையானதை பெற்றுக்கொள்வதற்கும் சுவாசம் பயன்படுகிறது. சுவாச ஓட்டத்தில் நமது ஆயுள் அளவு அடங்கி இருக்கிறது என்று வாசியோகம் குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல நாம் எதை விரும்புகிறோமோ அதை மிகச்சுலபமாக சுவாசத்தை நம் விருப்பபடி மாற்றி அமைத்துக்கொள்வதனால் பெறலாம் என்று ஹடயோகம் சொல்கிறது.

அந்த காலத்தில் பெரியவர்கள் பலர் கையில் குடை இல்லாமல் வெளியே போக மாட்டார்கள். மழை வெயில் இவற்றிடமிருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு மட்டும் குடை பயன்படுவது கிடையாது. அதன் பயன் எல்லைகளை கடந்தது. வெகு நாட்களாக முடிவுக்கே வராமல் ஒருகாரியம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்றால் அந்த காரியத்தை முடிக்க செல்லும் போது இடது கக்கத்தில் குடையை நன்றாக அழுத்தி கொண்டு செல்வார்கள் அப்படி அழுத்தும் போது வலது மூக்கில் மட்டுமே சுவாசம் ஓடும். இது சூரிய சக்தியை நமக்குள் இழுத்து தருவதனால் நமது பேச்சை மற்றவர்கள் மந்திரம் போல கேட்பார்கள். முடியாத காரியம் சுபமாக முடியும்.

நாள் கணக்காக படிக்கிறேன், மணிக்கணக்காக விழித்திருந்தும் படித்து பார்க்கிறேன். உறக்கம் கெடுகிறதே தவிர, படித்தது எதுவும் மனதில் தங்குவதில்லை என்று பலருக்கும் குறையுண்டு. இவர்கள் மிகச்சுலபமான பயிற்சியின் மூலம் வலதுநாசி வழியாக சுவாசத்தை நடத்துவதற்கு கற்றுக் கொண்டால் படித்தது அனைத்தும் பச்சைமரத்தில் ஆணி அடித்தது போல மனதில் ஒட்டிக்கொள்ளும். இந்த பயிற்சி ஒன்றும் கடினமான பயிற்சி இல்லை. நாற்காலியில் அமர்ந்த நிலையிலோ, படுக்கையில் சாய்ந்த நிலையிலோ செய்யலாம். இடதுபகுதி பிருஷ்டத்தை நன்றாக அழுத்திக் கொண்டு உட்கார்ந்தால் வலது சுவாசம் சுகமாக நடக்கும். இப்படி சுவாசத்தில் எத்தனையோ சாதனைகளை செய்யலாம். சித்தர்களின் தலைவரான திருமூலர், தமது திருமந்திரத்தில் சுவாசத்தை மாற்றி அமைத்துக்கொண்டு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் என்ன குழந்தை வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை பெறலாம் என்று வழிவகை சொல்லி இருக்கிறார். இப்படி சுவாசத்தின் பயன்கள் விரிந்து கொண்டே செல்கிறது.



Contact Form

Name

Email *

Message *