Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிறுநீரை தங்கமாக்கும் ஜோதிமரம் !   ரங்களை விரும்பாத மனிதர்கள் இருப்பது மிகவும் அரிது. தினசரி விறகு வெட்டி பிழைப்பு நடத்துபவன் துவங்கி திருட்டுத்தனமாக மரங்களை விற்று வயிறு பெருத்தவனும் சரி, மரங்களின் அழகை ஒரு நிமிடமாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டான். மரங்களை கொலை செய்கின்ற இவர்களே ரசிக்கும் போது அதற்கு தண்ணீர் விட்டு வளர்க்கும் நீங்களும் நானும் ரசிக்காமல் எப்படி இருப்போம். எனக்கு சிறிய வயது முதற்கொண்டே தென்னை மரத்தின் மீதும், அரசமரத்தின் மீதும் மிகுந்த பற்றுதல் உண்டு. ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னை மரம் அந்தி வானத்தில் ஓவியம் வரைய துடிக்கும் தூரிகை போல எனக்கு தோன்றும். பரந்து நிழலை தந்து அனைவருக்கும் இளைப்பாறுதலை தரும் அரசமரம் அன்னையை போல எனக்கு காட்சி தரும்.

மரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று ஜெகதீஷ்சந்திரபோஸ் கண்டுபிடித்து உலகத்தாருக்கு விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தாராம். அவர் அப்படி நிரூபிப்பதற்கு முன்னால் உலகம் அதாவது உலகம் என்றால் அதில் நான் இந்த விஷயத்தை பொறுத்தவரை இந்தியாவை சேர்த்துக்கொள்ளவில்லை. வெள்ளைக்காரர்கள் வாழுகிற ஐரோப்பாவை தான் குறிப்பிடுகிறேன். இந்த உலகம் மரங்களுக்கு உயிர் இருப்பதாக நம்பவில்லை. மரங்கள் ஒரே இடத்தில் நிற்கும் ஜடம். அதற்கு உயிரும் இல்லை, உணர்வும் இல்லை என்று நினைத்தார்களாம். அவர்கள் மண்டையில் ஓங்கி அடிப்பது போல நமது கல்கத்தா விஞ்ஞானி பார்முலாக்களை விவரித்துக்காட்டி முட்டாள்தனமான வெள்ளைக்கார உலகத்தை நம்பவைத்திருக்கிறார். ஆனால் நமது ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் மரங்களை உயிரற்ற பொருளாக யாருமே நினைத்தது இல்லை.

ஒரு பழம், தமிழ் இலக்கியம் காதலி ஒருத்தி தனது காதலனை கட்டிப் பிடிப்பதற்கு தயங்கி எட்டி நின்றாளாம். காதலன் தயக்கம் ஏன் என்று கேட்டபோது இங்கே இருக்கின்ற மரம் எனக்கு அக்கா முறை வேண்டும் அக்காவின் முன்னால் ஆடவன் ஒருவனை எப்படி கட்டி அணைப்பது என்று சொன்னாளாம். அதாவது மரத்தை தனது சகோதரியாக கருதும் அளவிற்கு நமது நாட்டு பண்பாடு வளர்ந்திருந்தது. மரங்களை நாம் உண்மையாக நேசித்ததனால் தான் மரத்தில் தெய்வம் இருப்பதாகவும், மரமே தெய்வமாக இருப்பதாகவும் போற்றி வழிபட்டோம். அப்படிப்பட்ட மரங்கள் இன்று எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகிறது என்பது உண்மைதான் என்றாலும், மரங்களை நேசிக்கும் இயல்பு வளர்ந்து கொண்டே போகிறது என்பதும் உண்மையாகும்.

மரங்களில் தான் எத்தனை வகை கனிகளை கிளைகளில் தந்தால் சுவை சற்று குறையும். அதே கனிகளை வேர்களில் பழுத்து மண்ணுக்குள் புதைத்து கொடுத்தால் எவ்வளவு சுவை கூடும் என்று நமக்கு காட்டும் வேர்பலா  தான் பழுத்து உதிர்த்த கனிகளையே தானே மீண்டும் எடுத்து கிளைகளில் ஒட்டிக் கொள்ளும், ஏரழிஞ்சல் மனிதர்கள் அருகில் வந்துவிட்டால் திருடன் வருகிறான் ஜாக்கிரதை என்று எச்சரிப்பது போல மனித வாசனை பட்டாலே எருமை போல சத்தம் எழுப்பும். கன எருமை விருட்சம், இப்படி வகை வகையாக சொல்லலாம். இந்த வரிசையில் மிகவும் விந்தையான மரத்தை பற்றி சித்தர்கள் சொல்கிறார்கள் அதன் பெயர் ஜோதி மரம்.

நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது ஒரு தாத்தா எனது நண்பராக இருந்தார். அவர் வேடிக்கையாக பேசுவார், வினோதமான செயல்களை செய்வார். அவர் சொல்வதும் செய்வதும் கற்பனை போல் இருந்தாலும் அனைத்தும் உண்மையாக இருக்கும். அவர் ஒருமுறை என் நண்பன் ஒருவனை பார்த்து நீ மூத்திரம் அடித்தால் இரும்பை பொன்னாக்கும் ஜாதியா? பேசாமல் கிட என்றார். எனக்கு மூத்திரம் அடித்தால் இரும்பு பொன்னாகுமா? அது எப்படி முடியும்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று அறிந்து கொள்ள ஆசை அப்போதே வந்துவிட்டது. அதனால் அந்த தாத்தாவிடமே கேட்டேன் நீங்கள் கூறுவது போல யாராவது இருக்கிறார்களா? என்று அவர் சிரித்து கொண்டே சொன்னார். இப்போது இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள் அதைப்பற்றி போகர் என்ற சித்தர் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறினார்.

அவர் கூறியது அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. போகர் எழுதிய நூல்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட துவங்கினேன். அந்த ஆசை எனது முப்பதாவது வயதில்தான் நிறைவேறியது. போக முனிவரின் மலைவாகடம் என்ற பழமையான நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பழையகாலத்து தாத்தா சொன்ன ஜோதி மரத்தை பற்றிய குறிப்புகள் இருந்தது. இந்த மரத்தின் பட்டையை எடுத்து வந்து குழித்தைலம் எடுத்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தியவுடன் மயக்கம் வருமாம். மயங்கி விழுந்தவரை வாழைப்பழமும், நெய்யும் கலந்து பிசைந்து ஊட்டி விட்டு நீட்டி படுக்க வைத்துவிட வேண்டுமாம். கால் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து வைத்து இறந்தவர்களுக்கு கட்டுவது போல் கட்ட வேண்டுமாம்.

அவர்கள் ஏழு நாட்கள் மயக்கத்தில் இருப்பார்களாம். பின் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், சுத்தமான பசும்பாலில் பனைவெல்லம் கலந்து கொடுக்க வேண்டுமாம். அதன் பிறகு பாசிப்பயிறு சாம்பாரும், பச்சரிசி சாதமும் சாப்பிட வேண்டுமாம். அதன்பிறகு சகஜ நிலைக்கு வந்துவிடும் அந்த மனிதன் தனது இயற்கை உபாதையை எதில் கழித்தாலும், அவைகளில் எது பட்டாலும் தங்கமாக மாறிவிடுமாம் இப்படி போகர் கூறுகிறார். போகர் மட்டுமல்ல சுந்தரானந்தர் குறுநூல் என்ற புத்தகமும் இதையே சொல்கிறது. இந்த ஜோதி மரம் அடி பெருத்தும், இலைகள் வட்டமாகவும் மலர்கள் ஊமத்தம் பூ வடிவிலும் இருக்குமாம். மரத்தை கொத்தினால் கள்ளிச்செடியில் வடிவது போல் பால் வடியுமாம். சந்திரன் வராத அமாவாசை பொழுதில் மின்மினி பூச்சிகள் ஒட்டி உள்ளது போல வெளிச்சமாக தெரியுமாம். இத்தகைய மரம் கொல்லிமலை, சதுரகிரிமலை,பொதிகைமலை போன்ற இடங்களில் முன்பு இருந்ததாம். இப்போது யாரும் அதை பார்த்ததாக தகவல் இல்லை.

ஆனால் நான் இருட்டிலும் வெளிச்சமாக தெரியும் ஜோதி புல்லை பார்த்திருக்கிறே.ன் இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். நான்கு விரல் உயரம் வரையிலும் இது வளரக்கூடியது. இரவிலே இதைப்பார்த்தால் தீப்பற்றி எரிவது போல இருக்கும். இந்த புல்லை செந்தூரம் செய்து நெல்மணி அளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தியானம், யோகம் இவைகள் கைகூடும் என்று பெரியவர்கள் சொன்னதனால் மிகவும் சிரமப்பட்டு அதை கண்டடைந்தேன். இப்போது ஜோதிப்புல் எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. ஆனாலும் அதை நான் பார்த்திருக்கிறேன் பலனை அடைந்திருக்கிறேன் எனும் போது நமது சித்தர்கள் ஒருநாளும் இல்லாதததை பேசவில்லை இருப்பதை தான் பேசினார்கள். நாம் தான் இருப்பதை இல்லாது செய்துவிட்டு வறியவர்களாக நிற்கிறோம்.

இன்று நம்மிடையே வாழுகின்ற பல மரங்களில் இப்படி எத்தனையோ சக்திகள் மறைந்து கிடக்கலாம். அவைகள் நமக்கு தெரியவில்லை என்பதனால் மரங்களை அழித்து அதன் சக்திகளை கெடுத்துவிடக்கூடாது. அதனால் மரங்களை நேசிக்கும் பண்பை நமது சுயநலத்தை முன்னிறுத்தியாவது வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.


 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434Contact Form

Name

Email *

Message *